Mind without Fear
நாம் நேர்மையாக நடக்கின்றோம் ,கடமைகளைச் சரியாகச் செய்கின்றோம் ,எதையெல்லாம் விரும்பி வென்றெடுக்க ஆசைப்பட்டோமோ அதற்கான தகுதிகளை வளரும் போதே வளர்த்துக் கொண்டோம் என்ற எண்ணம் இளமையில் இருந்தால் வாழ்கையின் எந்தக் காலகட்டத்திலும் ஆரோக்கியமற்ற பயம் அத்துமீறி மனதில் குடியேறுவதற்கு வழியேயில்லை .தகுதிப்பாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எல்லோரிடத்திலும் இருக்கும் எல்லாவிதமான தகுதிகளையும் ஒருசேரப் பெறவேண்டும் என்று முயன்றால் அது வீண் முயற்சியாகவே அமையும்.அப்படிப் பலர் கருதுவதாலும் ,கருதுமாறு தூண்டுவதாலும் பலர் அதில் வெற்றி பெறாமல் பயத்தை உள்ளுக்குள் குடியேற அனுமதித்து விடுகின்றார்கள் . நாம் எதிர்காலத்தில் என்ன செய்யப்போகின்றோம் என்பதை மிகச் சரியாக இல்லாவிட்டாலும் ஓரளவு ஏறக்குறைய முன் திட்டமிடத் தெரிந்திருந்தால் போதும் வளரும் பயத்தைப் பெருமளவு தவிர்த்துக்கொள்ள முடியும் .அது தொடர்பான தகுதிகளை மட்டும் வளர்த்துக் கொண்டால் அவர் வாழ்க்கையில் தான் விரும்பியதைப் பயமின்றிச் செய்து முடித்து வெற்றி நடை போடமுடியும்.ஒருவன் இசைக் கலைஞனாக வரவிரும்பினால் ,குவாண்டம் கொள்கையைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொண்டு என்ன ஆகப் போகின்றது. அவனுக்கு முதல் மற்றும் முக்கியத் தேவை இசைக் கருவிகளில் பயிற்சி,ராகங்கள்,தாளங்கள் பற்றிய இசைப்பாடங்கள் மட்டுமே நோக்கங்கொள்ளும் போதே தேடவேண்டிய தை விட்டுவிட்டு தேவையில்லாத பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது ஒன்றின் மேல் இருக்கவேண்டிய தனிக் கவனம் குறைந்து தேவையானவற்றில் தேவையான தேர்ச்சி பெறமுடியாமல் போய்விடுகின்றது .நாம் எப்போதும் ஒரு குறிப்பிட்ட வேலைக்கு நம்மை முழுத் தகுதிப் படுத்திக் கொண்டு தயாராவதில்லை பலவிதமான வேலைகளுக்குத் தகுதியுடையவர்களாக இருக்கின்றோம் என்று காட்டவிரும்பி சராசரிக்கும் குறைவாக அரைகுறைவான தகுதிகளையே வளர்த்துக் கொண்டுவருகின்றோம் .இப்படிப் பட்ட தகுதிகள் உண்மையானவைகளாக இருப்பதில்லை .அதனால் பின்னாளில் அவர் எந்தவொருவேலைக்கும் தகுதியில்லாதவராக இருக்கின்றார் .எதிர்காலத்தைப் பற்றி வளமான கற்பனையும் அதில் முழு நம்பிக்கையும் இல்லாததால் ஒவ்வொருவரும் தங்கள் இளமைக் காலத்தில் பல திறமைகளை வளர்கின்றோம் என்று அரைகுறையான தகுதிகளை மட்டுமே பெறுகின்றார்கள்.ஆரோக்கியமற்ற பயம் மனதில் நிலைப்படுவதற்கு மாணவர்களின் இம்மனப்போக்கே காரணம்.சரியாக முன் திட்டமிட்டுச் சரியாகச் செய்யவேண்டிய செயல்களைச் செய்தால் வாழ்கையின் எந்த நிலையிலும் பயம் வருவதற்கு வழியில்லை .பயம் பயந்து நம்மை விட்டு விலகிச் செல்லும் .
No comments:
Post a Comment