Mind
without Fear
மதிப்புடைய மனிதனாக நம்மை நாமே உயர்த்திக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடும் போது வெறும் வெற்றியை மட்டுமே எட்டவேண்டிய இலக்காகக் கொண்டு விடுகின்றோம் .மதிப்பு ஒருவருடைய வெற்றியால் மட்டுமே மதிப்பிடப் படுவதில்லை .இதை ஆங்கிலத்தில் " It is more
important to be a man of value than to be a man of success " என்று அழகாகக் கூறுவார்கள்
வெற்றியை மட்டும் எட்டவேண்டிய இலக்காகக் கொண்டு முயலும் போது தோல்விகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.ஏனெனில் அதே வெற்றியை எட்ட பலரும் போட்டி போட்டுக் கொண்டிருப்பதை நாம் மறந்து விடுகின்றோம் அல்லது முந்திச் செல்லும் அவசரத்தில் தவறைச் செய்துவிடுகின்றோம் .அதனால் தேக்கி வைத்த சிந்தனைகள் சிதறிப் போய்விடுகின்றன .கவனமும் கலங்கிப் போக,நம்பிக்கை நசுங்கிப் போக, முயற்சிகள் முடங்கிப் போக,எல்லாவற்றையும் இழந்து விட்டோம்,இனி வாழ்க்கையைத் தொடர வழியேயில்லை என்ற மனப்பிரமை ஏற்படுகின்றது .இந்த மனவுறுத் தோற்றம் வளர்ந்து பூதாகரமாக உருப் பெறும் போது மனதில் இனம்புரியாத அச்சம் ஏற்பட்டுவிடுகின்றது .இது நிலைப்படும்போது சிலசமயங்களில் தற்கொலை உணர்வைத் தூண்டிவிடுகின்றது .இந்தப் பிறப்பில் கிடைக்காத வெற்றி அடுத்த பிறப்பில் கிடைக்கும் என்ற தவறான முடிவு அந்த உணர்வுக்கு ஊக்கம் கொடுப்பதால் தவறான செயல்களில் விரைவு ஏற்பட ,தற்கொலையை யாராலும் தடுக்க முடியாது போகின்றது.இந்தப் பிறப்பில் தோல்விகளைச் சந்திக்கத் துணிவில்லாமல் தற்கொலை செய்து கொள்வதால் அடுத்த பிறப்பில் தோல்விகளை வெற்றியை எட்டும் படிக்கட்டுகளாக மாற்றும் திறமை வந்துவிடுவதில்லை.இருக்கும் வாய்ப்பை நழுவ விட்டுவிட்டு ,இல்லாத வாய்ப்பில் சாதனைபடைத்த ஒரு வெற்றிச் சிந்தனையாளராக நினைத்துக் கொள்வது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு செயலாகும் .
வாழ்கையின் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து வெற்றியை மட்டுமே சந்தித்தவர்கள் உலகில் யாருமில்லை.தொடர் வெற்றியை இப்பொழுது சந்திக்கின்றவர்கள் முன்னொரு காலத்தில் தோல்விகள் பலவற்றைச் சந்தித்தவர்களாகத்தான் இருந்திருப்பார்கள்.
என்ன செய்யவேண்டும் என்பதை மிகச் சரியாகத் தெரிந்துகொண்டு செயல்படுவதற்கு என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதையும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதை வெகு சிலரே புரிந்து வைத்திருக்கின்றார்கள் .இவர்களால் மட்டுமே வெற்றியை எட்டும் முயற்சிகளில் தோல்விகளைத் தவிர்த்துக் கொள்ள முடிகின்றது .எந்தத் தோல்வியையும் பாடமாக எடுத்துக் கொண்டு புதிய அனுபவத்தை கற்றுக் கொள்ள முடியும் .இந்தப் பாடத்தை பெரும்பாலானோர் பிறரிடமிருந்து அறிந்து கொள்வதில் மெத்தனமாக இருந்து விடுவதால் ,ஒவ்வொரு முறையும் சுய அனுபவங்களின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டியதாக இருக்கின்றது .இதனால் கூடுதல் தோல்விகளைத் தவிர்த்துக் கொள்ள முடியாதிருக்கின்றது.
No comments:
Post a Comment