Tuesday, September 11, 2012

Eluthatha kaditham


எழுதாத கடிதம் வாழ்கைப் போராட்டத்தில் அந்த இனம் ஒரு நெடிய பயணத்தை மேற்கொண்டது.வயதான கிழடுகளுடனும்,அன்றைக்குத்தான் பிறந்த இளம் குட்டிகளுடனும் எல்லாவற்றையும் துறந்து ஊரையே காலி செய்து விட்டு புறப்பட்டார்கள். அவர்களுக்குப் போக வேண்டும் என்று தெரிகிறது ஆனால் எங்கே போகிறோம் என்பது மட்டும் தெரியாது . பல ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டு மையில் நெடுகச் சென்றன இந்தியா -பாகிஸ்தான் பிரிவினையின் போது மக்கள் இடம்பெயர்ந்ததைதான் அது நினைவூட்டியது. பயணமோ திக்குத் தெரியாத காட்டில் இலக்குத் தெரியாத நெடுந்தூரம். வழியோ காடும் மேடும்,கல்லும் முள்ளும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆறும் புதைகுழிச்சேறும்.வழியெங்கும் வழிப்பறி கொலைகாரர்கள்,காட்டு வழியில் மட்டுமின்றி, ஆற்று நீரிலும் கூட. வழியில் எவ்வளவோ இடர்பாடுகள் - புலி ,சிங்கம் போன்ற காட்டு விலங்குகளால் கொல்லப்பட்டும்,ஆற்றைக் கடக்கும் போது முதலைகளால் கொல்லப்பட்டும் இறந்தனர் பலர். இனத்தின் வாழ்க்கைப் போராட்டத்திற்காக தன் உயிரைத் தியாகமாகத் தந்தனர்.அந்தத் தியாக உணர்வு எல்லோரிடமும் இருந்ததால் அச்சமின்றி வாழ்கைப் பயணம் காலமெல்லாம் தொடரப்பட்டது,ஒரு முறையல்ல ஒவ்வொரு முறையும். இனம் வாழ ஒரு சிலராவது தியாகம் புரியாவிட்டால் வாழ்க்கைப் பயணத்தில் எதிரிகளிடம் சிக்கி இனம் மொத்தமும் அழிய நேரிடலாம். காட்டு மாடுகள் பருவ காலம் மாறும்போதெல்லாம் நெடுந் தூரம் கூட்டம் கூட்டமாய் இடம்பெயர்ந்து செல்வதும் உயிரைத் தியாகம் செய்வதும் அதைதான் சுட்டிக் காட்டுகின்றது. தன் இனத்திற்காக தான் ஈன்ற குட்டியை புலிக்கும்,சிங்கத்திற்கும் உணவாகக் கொடுக்கின்றன ,ஆற்றைக் கடக்கும் போது மற்றவர்கள் உயிர் பிழைத்து கரையேற தானே முதலைக்கு உணவாகிப் போகின்றன.தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தும் தன் இனம் வாழ அவை செய்யும் தியாகம் ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு எங்கே புரியப்போகிறது.இதுவல்லவோ சமுதாய வாழ்க்கை.காட்டு மாடே உனக்கு இருக்கும் இதயம் இங்கே ஒரு அரசியல் வாதிக்காவது இருக்கக் கூடாதா? இடம்பெயர்ந்து செல்லும் ஆப்ரிக்க மாடுகளே,நீங்கள் கடல்தாண்டி ஒரு முறையாவது இந்தியாவிற்கு வரமாட்டீர்களா? இந்திய மக்களுக்கு உங்களைப் போன்ற உணர்வுள்ள தலைவர்களே வேண்டும். Thanks to Animal Planet for the amazing documentary on migration of wild animals.

No comments:

Post a Comment