Thursday, September 13, 2012

Mind Without Fear


Mind without fear இந்த உலகில் எதை எடுத்துக்கொண்டாலும் அதில் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு.வெறும் நன்மைகள் மட்டுமே கொண்டபொருள் அல்லது தீமைகள் மட்டுமே கொண்ட பொருள் என்று ஒன்றும் இல்லை.நன்மையையும் தீமையும் நாம் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது நன்மைகளும் தீமைகளும் சார்பிலாதவை அல்ல.அவை ஒருவரின் தோற்ற முடிவுகளே.அதனால் ஒருவருக்கு ஒரு சமயம் நல்லதாகத் தோன்றியது மற்றொரு சமயம் கெட்டதாகத் தோன்றலாம்,கெட்டது நல்லதாக மாறலாம்.உலகில் உள்ள எல்லாப் பொருட்களுக்கும் நிறையும் குறையும்,பலமும் பலவீனமும்,ஆக்கமும் அழிவும்,அனுகூலமும் அனுகூலமின்மையும் சேர்ந்தே இருக்கிறது.ஒரு மனிதனை எது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதைப் பொறுத்து அப் பொருளின் தோற்றம் அவனால் விவரிக்கப்படுகிறது. நெருப்பு சமைக்கப் பயன்படுகிறது,உலோகங்களை உருக்க உதவுகிறது என்பது அதன் நன்மையானால்,தீவிபத்துகளுக்கும் அதுவே காரணமாக இருக்கிறது என்பது அதன் தீமையாகும்.நீரின்றி அமையாது உலகு ஆனால் நீருக்குள் மூழ்கி விட்டால் மூச்சே விடமுடியாது போதிய செல்வம் இருந்தால் மகிழ்ச்சி அதுவே அதிகமாக இருந்தால் அதனால் வரும் தொல்லைகள் அதிகம்.சிங்கமும் புலியும் கொடிய மிருகங்கள்.அவை இல்லாவிட்டால் மான்களும்,காட்டு மாடுகளும் வரம்பு மீறிப் பெருகி அதுவே ஒரு தொல்லை. கதிர்வீச்சும்,கொடிய பாம்பின் நஞ்சும் மனிதனைக் கொல்லும் ஆனால் ஒரு சில தீராத வியாதிகளுக்கு இவையே அருமருந்தாக இருக்கின்றன. நிறை-குறை கலப்பு என்பது பொருட்களுக்கு மட்டுமின்றி உலகில் வாழும் மனிதர்களுக்கும் பொருந்தும்.ஒவ்வொரு மனிதனிடத்திலும் நிறைகளும் உண்டு,குறைகளும் உண்டு.குறைகளே இல்லாத மனிதர்களே இல்லை .பொதுவாக மனிதர்கள் தன் நிறைகளை மிகைப்படுத்திக் காட்டுவார்கள்,குறைகளை மறைத்து வைத்திருப்பார்கள்.நிறைகளை வளப்படுத்திக் கொண்ட ஒரு சிலருடைய திறமை தொடர்ந்து புறக்கணிக்கப்படும்போதும் அல்லது அவர்களே தங்களுடைய குறைகளை மிகைப்படுத்திக் கொண்டு வருத்தப்படும் போதும் அவர்கள் மனச் சோர்வடைந்து வெகு விரைவில் தவறான முடிவுக்கு வந்து விடுவார்கள்.நிறைகளை வளர்த்துக் கொள்ளும் போது அதை வெவ்வேறு வழிகளில் பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளைப் பற்றி சிந்திக்காததின் விளைவே இது.
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்.பார்வையின் எல்லையை விரித்து விட்டால் ஒருவருக்கு எவ்வளவோ வழிகள் தானாகப் புலப்படும்.பலவீனங்களையும் பலமாக்கிக் கொள்ளும் வழி முறைகளை இது நமக்குக் கற்றுக் கொடுக்கும்.வாஸ் கோடா காமா கடலில் எல்லை தாண்டியதால் இந்தியாவைக் கண்டு பிடித்தார்,கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்தார்.விஞ்ஞானிகள் மன வெளியில் எல்லை தாண்டியதால் புதிய புதிய கண்டுபிடிப்புகளைப் படைத்தனர்.ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிறைப்படுத்திக் கொண்டு விட்டால் நம்மை நாமே முன்னேற்றிக் கொள்வது கடினம் என்பதை உணர்த்த இது போதுமானது. பரந்த பிரபஞ்ச வெளியில் எதுவெல்லாம் நிஜமோ அதுவெல்லாம் மன வெளியில் நிழல்.நிழலை நிஜப்படுத்துவதற்காகவே மனிதர்கள் இயற்கையால் படைக்கப்பட்டிருக்கின்றார்கள்.அதைப் புரிந்து கொண்டு வாழப் புறப்பட்டால் நாம் வாழ்கையில் எவ்வளவோ சாதிக்கலாம் அங்கே துயர் வர ஒரு பாதையும் இல்லை. மனக் கலக்கத்தை விட்டொழி,மாற்றி யோசித்துப் பார்,ஒரு புதிய உலகத்திற்கே நீ சொந்தக்காரனாகிவிடுவாய் என்று நம் மீது கனிவு கொண்ட அறிஞர்கள் சொல்கிறார்கள்.நமக்காகச் சொல்லப்பட்ட அந்த வார்த்தைகளில் நாமும் கொஞ்சம் நம்பிக்கை வைப்போமே.

No comments:

Post a Comment