விண்வெளியில் உலா -மோனோசிரோஸ்(Monoceros)
இது ஓரியன் மற்றும் கானிஸ் மைனர் வட்டாரங்களுக்கு இடையில் பேரண்ட நடுவரைக் கோட்டுக்கு அருகாமையில் இருக்கின்ற ஒரு நவீன வட்டார விண்மீன் கூட்டமாகும்.இப் பகுதியில் 85 விண்மீன்கள் இருப்பதை இனமறிந்துள்ளனர்.டச்சு நாட்டின் பெட்ரஸ் பிளான்சியஸ்(Petrus Plancius) என்பார் 17 ம் நூற்றாண்டில் இதை அறிமுகப் படுத்தினார் இது புராணக் கதைகளில் வரும் கொம்புள்ள குதிரையாக (Unicorn) கற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதிலுள்ள பிரகாசமிக்க ஆல்பா மோனோசிரோடிஸ் சின் தோற்ற ஒளிப் பொலி வெண் 3.93 அருகாமையிலுள்ள பிரகாசமாய் மினுமினுக்கின்ற வட்டார விண்மீன்களினால் இது பெரும்பாலும் பெரும்பாலானவர்களால் தவறவிடப்படுகின்றது.இது பால் வெளி மண்டலத்தில் அமைந்துள்ளது.
ஒரு விண்மீன் போலத் தோன்றும் பீட்டா மோனோசிரோடிஸ் உண்மையில் ஒரு மும்மீனாகும் முக்கோணம் போல நிலையாகத் தோன்றும் இதை முதன் முதலாக வில்லியம் ஹெர்சல் கண்டுபிடித்தார். இவற்றின் தோற்ற ஒளிப் பொலி வெண் முறையே 4.7,5.2,6.1 ஆக உள்ளது.ஆல்பா, பீட்டா மோனோசிரோடிஸ் க்கு மிகச் சரியாக நடுவில் M.50 என்று பதிவு செய்யப்பட்ட ஒரு கொத்து விண்மீன் கூட்டம் உள்ளது. இதைச் சுற்றி எல்லையாக சற்று கருமையான புற வெளி உள்ளதால் இதை எளிதாகக் காண முடிகிறது.
எப்சிலான் (ε) மோனோசிரோடிஸ் ஓர் இரட்டை விண்மீனாகும். இவற்றின் ஒளிப் பொலி வெண் முறையே 4.4 மற்றும் 6.7 ஆக உள்ளன இவ் வட்டாரத்தில் பிளாஸ்கெட் விண்மீன் (Plaskett 's star) என்ற நிறைமிக்க ஒரு இரட்டை விண்மீன் உள்ளது.இதன் மொத்த நிறை 100 சூரிய நிறையாகும் .S மோனோசிரோடிஸ் நீலங் கலந்த வெண்ணிற விண்மீனாக உள்ளது. இது NGC 2264 என்ற அண்டவெளி கொத்து விண்மீன் கூட்டத்தின் மையத்தில் உள்ளது.இது ஒரு மாறொளிர் விண்மீனாகும் .இதன் ஒளிப் பொலிவெண் மாற்றம் மிகவும் குறைவு.v838 மோனோசிரோடிஸ் செந்நிற, மாபெரும் மாறொளிர் (super giant) விண்மீனாகும்.இது ஜனவரி 2002 ல் வெடித்துச் சிதறி ஆற்றலை வெளியில் உமிழத் தொடங்கியது.பிப்ரவரி மாதத்தில் இதன் ஒளிப்பொலிவெண் ஒரே நாளில் பத்தாயிரம் மடங்கு அதிகரித்தது.ஹபுல் தொலைநோக்கி இதை ஆராய்ந்து இந்த விண்மீனைச் சுற்றியுள்ள தூசிப் படலத்தை புலப்படுத்திக் காட்டியது.NGC 2264,100 ஒளி ஆண்டுகள் தொலைவில் நெருக்கமாக அமைந்த 50 விண்மீன்களால் ஆன கூட்டமாக உள்ளது .
இப் பகுதியில் குழி உருவ (Socket ) நெபுலா உள்ளது .இது சற்றேறக் குறைய கோள் வடிவ நெபுலா போல இருக்கிறது.இது ஒரு பரவல் (diffuse) வகை நெபுலாவாகும்.இதன் மையப் பகுதியில் உள்ள 'o' வகை விண்மீன்களினால் இது ஒளியூட்டப்படுகின்றது.இது 3600 ஒளி ஆண்டுகள் தொலைவில் விண்ணில் தோற்ற விட்டம் முழு நிலைவைப் போல இரண்டு மடங்காகத் தெரிகின்றது.
No comments:
Post a Comment