லினெக்ஸ் (Lynx)
போலந்து நாட்டு வானவியலாரான ஜோகன்ஸ் ஹெவிலியஸ் இந்த புதிய வட்டார விண்மீன் கூட்டத்தை 17 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார். இது வடக்குப் பக்க வானத்தில் அரசா மேஜருக்கும்,ஔரிகாவிற்கும் இடையில் அமைந்துள்ளது தோற்றத்தில் ஜெமினியை விட அதிக அளவு பரப்புக் கொண்டிருந்தாலும் வெறும் கணகளுக்குப் புலப்பட்டுத் தெரிவதில்லை லினக்ஸ் என்பது ஒரு வகையான காட்டுப் பூனையாகும்.இது கூர்மையாகப் பார்க்கும் இயல்புடையது. லினக்ஸ் போன்று கூர்மையான கண்பார்வை உள்ளவர்களால் மட்டுமே இவ்வட்டாரத்தை இனமறியமுடியும். என்பதால் இதற்கு லினக்ஸ் என்று பெயரிட்டதாக ஹெவிலியஸ் கூறுவார். இதில் 60 விண்மீன்கள் இருப்பதை அறிந்துள்ளனர்.
ஆல்பா லின்சிஸ் ஆரஞ்சு நிறமும் 3 .2 தோற்ற ஒளிப்பொலிவெண்ணும் கொண்டு அர்சா மேஜரின் கற்பனைக் கரடி உருவத்தின் நீட்சி பெற்ற முன்னங் காலிற்கு அருகாமையில் 165 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. 12 லின்சிஸ் ஒரு பல் விண்மீனாகும்.தொலை நோக்கி இதைப் பகுத்து ஒளிப்பொலிவெண் 4 .9 மற்றும் 7 .3 கொண்ட இரட்டை விண்மீனாகக் காட்டியுள்ளது. பகுதிறன் மிக்க தொலை நோக்கி இதிலுள்ள பிரகாசமான விண்மீன் ஒளிப்பொலிவெண் 6 உடைய ஒரு துணை விண்மீனுடன் 700 ஆண்டுகள் சுற்றுக் காலத்துடன் சுற்றி வருகிறது என்பதைத் தெரியப் படுத்தியுள்ளது.19 லின்சிஸ் ஒரு மும்மீனாகும். இதில் ஒளிப்பொலிவெண் 5.8 மற்றும் 6.9 கொண்டு ஓரளவு நெருக்கமாக உடைய ஓர் இரட்டை விண்மீனைச் சுற்றி நெடுந்தொலைவு விலகி ஒளிப்பொலிவெண் 8 கொண்ட ஒரு விண்மீன் சுற்றி வருகிறது .38 லின்சிஸ்சும் ஒரு நெருக்கமான இரட்டை விண்மீன் .இதன் ஒளிப்பொலிவெண் 3.9 மற்றும் 6.3 ஆக உள்ளது. NGC
2419 என்று பதிவு செய்யப்பட்ட ஒரு கோளகக் கொத்து விண்மீன் கூட்டம் ஏறக்குறைய 300000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருபதாகக் கண்டுபிடித்துள்ளனர். இது மெக்லானிக் மேகத்தை விடக் கூடுதலான தொலைவில் இருப்பதால் மிக நுண்ணியதாகவும் ஒளிப்பொலிவெண் 10 கொண்டதாகவும் தெரிகிறது.
No comments:
Post a Comment