Thursday, September 27, 2012

Mind without fear


Mind Without Fear

தன்னால் எதுவுமே சாதிக்க முடியவில்லை என்றும் தான் வாழ்வதால் இனி ஒரு பயனும் விளையப் போவதில்லை என்றும் தப்புத் தப்பாகவும் அவசரமாகவும் முடிவு செய்துகொண்டு தொடர்ந்து அல்லல்பட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்த எண்ணம் காலப் போக்கில் மனதில் ஒருவிதமான பயத்தை ஏற்படுத்தி விடுகிறது. மன உளைச்சலால் நொந்து நூலாகி இந்த உலகில் நாம் வாழத் தகுதி இல்லாதவர்கள் என்ற முடிவைக் கூட எடுப்பார்கள்.

நம்மைக் கவனித்துக் கொள்ள பெற்றோர்கள்,உறவினர்கள்,நண்பர்கள்

இருந்தும்,உலகைப் பார்த்து கற்றுக் கொண்டு வாழ கண்கள் இருந்தும், சிந்தித்துச் செயல்பட உதவிகள் இருந்தும், உழைத்து முன்னேற கை,கால்கள் இருந்தும் நாம் பெறமுடியாத ,இழந்து விட்ட அந்த  நம்பிக்கையை  குருடாகவும் ஊமையாகவும் குழந்தைப் பருவத்திலிருந்தே வாழ்ந்த ஒரு பெண்மணி பெற்றிருந்தார் என்று சொன்னால் நம்புவீர்களா ? குருடர்களும் கல்வி கற்கும் வழிமுறையை நிறுவி சாதனைகள் பல படைத்து உலகப் புகழ் பெற  ஊனமாய் இருந்தும்   அவரால் முடிந்த போது, ஊனமின்றிப் பிறந்த நம்மால் ஏன் முடியாது ? நம்முடைய சுயமுயற்சி இல்லாமலேயே எல்லாம் தானாக நடக்கவேண்டும் என்றும், தவறாக நினைத்து தவறாகச் செயல்பட்டாலும் எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்றும் நினைப்பதாலும்,நம்முடைய பங்களிப்பு இல்லாமலேயே சாதனைகள் படைத்த பேறு கிடைக்க வேண்டும் என்றும் எண்ணுவதால் பல சந்தர்ப்பங்களில் நாம் ஏமாந்து போகின்றோம் என்பதே உண்மை.

ஒரு பத்து நிமிடம் கண்களை இறுக்க மூடிக்கொண்டு ,உங்களுடைய வீட்டில் யாருடைய உதவியுமின்றி செயல்பட முடியுமா என்று பாருங்கள். நிச்சியமாக எதிலாவது முட்டிக் கொண்டு அல்லது தடுக்கி விழுந்து காயப்படுவீர்கள் எந்தச் செயலையும் சரியாகச் செய்ய முடியாது தடுமாறி மேலும் பல தவறுகளைச் செய்வீர்கள்,உலக அனுபவத்தால் பெற்ற பட்டறிவும், கற்றறிவும் இருந்தும் பத்து நிமிடத்திற்கே  நம்முடைய நிலை இதுவென்றால் வாழ்க்கை முழுதும் ஊமையாகவும் குருடாகவும் இருந்த ஹெலன் கெல்லரின்(Helen Keller) நிலையைச் சற்று கற்பனை செய்து பாருங்கள் நிறை இல்லாமை வேறு குறை என்பது வேறு. பலவீனம் கொண்டிருப்பது வேறு பலம் இல்லாதிருப்பது வேறு. தன்னிடம் நிறை இல்லாததையே குறையாகக் கருதுவதால் இதுபோன்ற மனநிலை உருவாகிறது. என்பதைக் ஹெலன் கெல்லரின் வாழ்க்கை நமக்குச் சித்தரித்துக் கூறுகின்றது இதைப் புரிந்து கொண்டால் நாமும் நம்முடைய வாழ்கையில் அரும் பெரும் சாதனைகள் செய்யலாம்.

அமெரிக்காவில் அலபாமாவில் பிறந்த ஹெலன் கெல்லர் 19 மாதக் குழந்தையாக இருந்த போது வந்த காய்ச்சலால் (Scarlet fever and meningities) கண் பார்வையையும் ,கேட்கும் திறனையும் இழந்தார்.ஆனால் உடலைப் பாதித்த ஊனம் அவர் மனதைப் பாதிக்கவில்லை.குருடர் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார் பிறர் உதவியுடன் படித்துப் பட்டம் பெற்றார் உலகிலேயே முதன்முதலாக குருடான, ஊமையான ஒருவர் பட்டம் பெற்றது இவராகத்தான் இருக்கும்.அவருக்கு Anne Sullivan என்ற ஒரு நல்ல பயிற்சியாளர்/தோழி  கிடைத்தார்.அதுவே ஹெலன் கெல்லரின் தலை விதியை மாற்றி அமைக்கக் காரணமாகியது .88 வயது வரை வாழ்ந்த  ஹெலன் கெல்லர் குருடர்களுக்காகவே வாழ்ந்தார். உலகம் முழுவதிலும் உள்ள குருடர்களுக்காக நிதி திரட்டிக் கொடுத்தார். அவருடைய வாழ்க்கைக்கு அர்த்தம் இருந்தது. அதனால் அவர் இன்றைக்கும் போற்றப்படுகின்றார். ஹெலன் கெல்லர் போல நாமும் வாழ்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்வோமே.

இதிலிருந்து நாம் ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ள முடிகிறது. நாம் வாழ்கையில் முன்னேற வேண்டுமானால் நம்மீது அக்கறையும் ஆர்வமும் கொண்ட ஒரு சரியான நபரைத் தேர்தெடுத்தாக வேண்டும்.பெரும்பாலானவர்கள் இதில் பெரும் பிழை செய்து விடுகின்றார்கள்.இதை அவர்கள் காலங் கடந்தே தெரிந்து கொள்கின்றார்கள் அல்லது தெரிந்து கொள்ளாமலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றார்கள்.இதனால் அவர்களுடைய வாழ்க்கை சாதனைகளின்றி வேதனையுடன் முடிகிறது.

No comments:

Post a Comment