Micro aspects of developing inherent potential
ஒரே நாளில் நாம் நம்முடைய வாழ்கையை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் .அதற்கு முதலில் மாற வேண்டும் என்பதில் உறுதியாகவும் உற்சாகமாகவும் தீர்மானமாகவும் திடமாகவும் இருக்கவேண்டும் என்று தெரிந்து கொண்டோம்.அப்படி இருக்கும் போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தானாகவே சிந்தனையில் தோன்ற ஆரம்பிக்கின்றன திக்குத் தெரியாத காட்டில் வழிகாட்டி போல அவை வழிநடத்திச் செல்வதால் தடுமாற்றங்களும் ஏமாற்றங்களும் பெரிய அளவில் ஏற்படுவதில்லை.எனினும் முயற்சியினால் வாழ்கையில் மகத்தான மாற்றங்களைக் காண வேண்டுமானால் அதற்கு சுயஒழுக்கமும் மிகமிக அவசியம்.
ஒழுக்கம் பிறப்பிலிருந்து இறப்பு வரை முதல் மூச்சிலிருந்து இறுதி மூச்சு வரை இருக்க வேண்டிய ஒன்று. ஒரு விதையை விதைத்து விட்டால் முதலில் முளைப்பது அதன் வேர் தான். வேர் செடியை நிலத்தில் நிலைகொள்ளச் செய்வதுடன் அது மேற்கொண்டு வளர்வதற்கு வேண்டிய ஆற்றலை உணவு மூலம் பெற்றுத் தருகிறது. ஒரு மரத்திற்கு வேர் எவ்வளவு முக்கியமோ அது போல மனிதனுக்கு ஒழுக்கம் முக்கியம்.நிலத்திற்கு அடியில் இருக்கும் வேரை நாம் காணமுடியாததைப் போல ஒரு மனிதனின் ஒழுக்கத்தையும் புறத்தோற்றத்தால் தெரிந்து கொள்ள முடிவதில்லை.வேர் ஆழமாகவும் விசாலமாகவும் இருந்தால் மரம் உறுதியாகவும் செழிப்பாகவும் வளரும் என்பதைப் போல ஒழுக்கத்தால் மனிதன் மென்மேலும் சிறந்து விளங்குவான்.ஒழுக்கமில்லாத கல்வி,உழைப்பு,பொருள் சமுதாயத்திற்கு நற்பயன் அளிப்பதில்லை.அவை பரிணாம வளர்ச்சியில் எதிர் மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதால் தனிமனிதன் மட்டுமின்றி முழு சமுதாயமும் சீரழிந்து போகும் அபாயம் உள்ளது. தவறான ஒழுக்கம் தற்காலியமாக மகிழ்ச்சி தரலாம்.ஆனால் நீண்ட காலப் போக்கில் அது உறுதியான தீமைகளையே நல்கும் .அது மட்டுமன்று சாகாத சமுதயாத்தில் நிலைத்து நின்றும் பரிணாம வளர்ச்சியால் புத்துருவம் கொண்டும் தொடர்வதால் அடுத்தடுத்த பிறவிகளிலும் அதன் தாக்கம் கூடுதல் வலிமையோடு தோன்றும்.அதனால் தான் தவறான ஒழுக்கத்தை மறந்தும் கற்பித்து விடாதீர்கள் என்று சான்றோர்கள் கூறுகின்றார்கள்
ஒழுக்கத்தின் சிறப்பை ஒருவருக்கு உணர்த்த அவருடைய உடம்பே போதும். உயிர் வாழ உடம்பின் உள்ளே உள்ள ஒவ்வொரு உறுப்பும் வரம்பு மீறாமல் சுய கட்டுப்பாடோடு ஒருங்கிணைந்து தொடர்ந்து இயங்கி வரவேண்டும்.இதில் எதாவது ஒரு உறுப்பு வரம்பு மீறிச் செயல்பட்டால் உடல் நலம் பாதிக்கப் பட்டு உயிர் போகும் நிலைக்கும் ஆளாகலாம். அது போலத்தான் சமுதாயம் என்ற உடம்பில் வாழும் மனிதன் என்ற உறுப்பும்.
தீயொழுக்கம் இருந்தால் வாழ்கையில் சரிவு அப்பொழுதிலிருந்தே தொடக்கி விடுகிறது.நல்லொழுக்கம் இருந்தால் முன்னேற்றத்திற்கான வழிகாட்டல் எளிதாக,வெகு இயல்பாக கிடைக்கின்றது.
ஒருவருடைய ஒழுக்கம் என்பது சமுதாயத்தின் ஒழுக்கத்தையும் பொறுத்தது.சமுதாயத்தில் ஒழுக்கமின்றி வளரும் ஒருவருடைய நல்லொழுக்கம் உடனடியாகப் பலன் தருவதில்லை ஊழல் மிகுந்த சமுதாயத்தில் லஞ்சம் கொடுக்கக் கூடாது என்ற நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிப்பதை போல.கால தாமதம் இருப்பதால் ஒருவர் நல்லொழுக்கத்தைப் பின்பற்ற அகமனதில் ஒரு விதத்தயக்கத்தைப் பெற்றிருப்பது இயல்பாகின்றது.தீய ஒழுக்கத்தில் இந்நிலை இல்லை என்பதால் அவை வெகு எளிதாக மனிதர்களைத் தொற்றிக் கொண்டு விடுகிறது.
ஒழுக்கத்தை எப்படி வளர்த்துக் கொள்ளவது என்று பலருக்குத் தெரிவதில்லை. சமுதாயத்திற்குப் பயன்படும் காலம் வரை இயன்ற வழிகளில் ஏதாவது திறமைகளையும் தகுதிப் பாட்டையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.இதற்கு ஒருவர் மேற்கொள்ளும்,பிறராலும் பின்பற்றத் தகுந்த வழிமுறைகளே ஒழுக்கம் என்றும் வரையறை செய்யலாம்.
புற ஒழுக்கத்திற்கு அக ஒழுக்கமே அடிப்படையாக இருக்கிறது. அக வொழுக்கம் என்பது வெறும் அந்தப்புர நடவடிக்கைகள் மட்டுமே இல்லை.அகத்தே விளையும் எண்ணங்களும் சிந்தனைகளும் அதைத் தீர்மானிக்கின்றன. எண்ணங்களே மனிதர்களை உருவாக்குகின்றன என்று சொல்வார்கள்.நல்ல எண்ணங்கள் சிறந்த மனிதர்கள் உருவாவதற்கு காரணமாய் இருக்கின்றன.
No comments:
Post a Comment