Sunday, September 30, 2012

Kavithai


கவிதை

ஓர்ஊரில் ஓர் ஏழைக் குடியானவன்

அழகான ஆண்குதிரை இருந்தது அவனிடம்

அரசன் ஒருநாள் நகர்வலம் வந்தான்  

ஆசைப்பட்டான் அந்த அசுவம் கண்டு

குறைவின்றி பொருள் தருவதாய்ச் சொன்னான் .

குடியானவன் குதிரையைக் கொடுக்க  மறுக்க

கொற்றவன் காரணம் யாதென வினவினான்

இன்னொரு பிள்ளைபோல இந்தக் குதிரை

இதைவிட்டுப் பிரிய  மனமில்லை என்றான்

குடிசையில் வாழ்ந்தவன் குதிரையை விற்று

கோட்டையில் வாழும் வாய்ப்பை கோட்டைவிட்டான்

ஊரார் அவனைப் போல எண்ணவில்லை

உலகம் நினைத்ததையே அவனும் நினைக்கவில்லை

 

நாட்டியக் குதிரை தோட்டத்தில் மேய்ந்தபோது

நச்சுப் பாம்பொன்று மிதிபட்டு இறந்தது

குதிரையே குலக்கடவுள் போல வந்து

அவன் குடும்பத்தைக் காத்தது  என்றும்  

அன்றைக்கு அரசனிடம் விற்றிருந்தால் இன்றைக்கு

இல்லாதிருப்பான் என்றும் சொல்லக் கேட்டான்  

ஒருமாதம் ஓடிய பின் ஒருநாள்

ஓடி மறைந்தது  அந்தக் குதிரை

எங்கு தேடியும் கிடைக்கவில்லை  .

ஏமாளி இவனைப் போல எவனுமில்லை

என்று எல்லோரும் எள்ளி நகைத்தனர்

ஊரார் அவனைப் போல எண்ணவில்லை

உலகம் நினைத்ததையே அவனும் நினைக்கவில்லை

 

ஓடிப்போன குதிரை திரும்பி வந்தது.

இன்னொரு குதிரையையும் கூட்டிவந்தது  

அறிவிலி என்றோர் அப்பொழுது ஆய்ந்தோனென்றார்

புதிதாய் வந்த  குதிரையை அடக்க முயன்ற

புதல்வன் தவறி விழுந்து நொண்டியானான்

ஆன்றவன் என்றோர் அப்பொழுது  அறிவிலியென்றார்

நாட்டியக் குதிரையால் நாட்டில் வித்தைகாட்டி

நற்பொருள் ஈட்டி நாளும் உயர்ந்தபோது

அறிவிலி மீண்டும் அதிபுத்திசாலியானான்

உழைத்துக் களைத்த குதிரை உடன் இறந்தது

உலகம் அவனை  அதிருஷ்டமில்லாதவன் என்றது

ஊரார் அவனைப் போல எண்ணவில்லை

உலகம் நினைத்ததையே அவனும் நினைக்கவில்லை

 

அண்டை நாட்டான் போர் தொடுத்தான்

அகநகர் காக்க வீட்டுக்கு ஒருபிள்ளை கேட்டான்

முதியவர் நொண்டி குழந்தைகள் வேண்டாமென்ற

முடிவால் நொண்டி மகன் வீட்டில் இருந்தான்

பெற்ற பிள்ளைகளை மற்றவர் அனுப்பி வைத்து

பெயரன் திரும்பி வருவானா மாட்டானா

நாட்கணக்கில் மனம்மறுகித்  தவித்தபோது

அதிருஷ்டமில்லாதவன் என்றவன் அதிருஷ்டசாலியானான்

ஊரார் அவனைப் போல எண்ணவில்லை

உலகம் நினைத்ததையே அவனும் நினைக்கவில்லை

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்

சொல்லுவார் சொன்னதால் வெல்லுவார் ஒருநாளும்

வெல்லாமற் போனதில்லை என்பதே இயற்கை

No comments:

Post a Comment