Monday, September 24, 2012

Eluthatha kaditham


எழுதாத கடிதம்

பல் பொருள் அங்காடிகளில் அந்நிய முதலீடுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.காரசாரமான விவாதங்கள் தந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னரே,அவசர அவசரமாக வால்மார்ட் நிறுவனத்திற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது எதோ வால்மார்ட்டுக்காகவே முடிவெடுத்தது போல இருந்தது .வால்மார்ட் நிறுவனம் ஒரு பொருளை வாங்கும் போது மிக அதிக எண்ணிக்கையில் வாங்குவார்கள் .அதனால் உற்பத்தியாளர்கள் நிறுவனத்திற்கு நல்ல கமிஷன் கொடுப்பதோடு ,பொருளைத் தங்கள் செலவிலேயே அனுப்பி வைப்பார்கள் . மேலும் அதற்கான பில் தொகையை ஒரு குறிப்பிட்ட காலம் கழித்தே பெறுவதற்கும் சம்மதிப்பார்கள். இதனால் உற்பத்தியாளர்கள் -போட்டி உற்பத்தியாளர்களிடையே ஒரு போட்டி மனப்பான்மை உருவாகி தங்களை நிலைப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக எதிரியை அழித்துவிடுவதிலேயே குறியாக இருப்பார்கள்.அப்போது நம்பமுடியாத அளவிற்கு நிறுவனத்திற்கு கமிஷன் கொடுக்க முன்வருவார்கள். வால்மார்ட் இந்திய உற்பத்தியாளர்களிடமிருந்து இப்படிப் பொருட்களை வாங்கலாம்.ஆனால் வால்மார்ட் க்குத் தொடர்ந்து அதிகமாவும் ,குறைந்த விலைக்கும், புதுமையாகவும் விநியோகித்து வரும் சீன நிறுவனங்களுக்கு முன்னே இந்திய நிறுவனங்கள் நிலைத்து நின்று தாக்குப் பிடிக்க முடியுமா என்பது சந்தேகமே .மின்சாரம் பற்றாக் குறை,ஊதிய உயர்வும் கடமை உணர்வு இல்லாத ஊழியர்களும்,அடிக்கடி வரும் ஊழியர்கள் போராட்டம், கதவடைப்பு ,பொதுச்சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல்,எங்கும் நிறைந்திருக்கும் ஊழல்கள், சிவப்பு நாடவினால் ஏற்படும் தாமதம், ஆராய்ச்சியும் புதுமையாக்கமும் இல்லாமை, தொடக்கத்தில் இருக்கும் தரம் வர வரக் குறையும் நிலை,மோசமான போக்குவரத்து வசதிகள் ,திருட்டுகள் ,மோசடிகள் போன்ற பல காரணங்கள் நம்முடைய உற்சாகமான ஈடுபாட்டை மெல்ல மெல்ல சீர்குலைத்து விடும்.இறுதியில் சீன நாட்டுப் பொருட்களே வால்மார்ட் மூலம் இந்தியாவில் சந்தைப் படுத்தப்படும் நிலை உருவாகும்.நம் நாட்டின் உற்பத்திச் சூழல் நமக்கு அனுகூலமாக இல்லாததால் பொருளின் விலையை ஓரளவிற்கு அப்பாற்பட்டு குறைக்க முடியாது.வியாபாரப் போட்டியில்  தோற்றுப்போகும் சூழ்நிலையே உருவாகும். நீண்ட காலத்திக்குப் பிறகு இந்தியா அந்நிய நாட்டுப் பொருட்களுக்கு ஒரு நம்பகரமான சந்தையாகி விடும்.மேலும் அமெரிக்காவில் அலுத்துப் போன விற்காத பொருட்களை எல்லாம் இந்தியர்கள் தலையில் கட்டி விட அனுகூலமும் வால்மார்ட் நிறுவனத்திற்குக் கிடைக்கிறது.சொல்லப் போனால் வால்மார்ட் நிறுவனத்திற்கு இது ஒரே காலில் பல மாங்காய்.வால்மார்டின் நுழைவு கிழக்கிந்திய கம்பெனியாரிடம் இந்தியா வசமாக மாட்டிக் கொண்டதைத்தான் நினைவு படுத்துகிறது.அப்பொழுது குறுநில மன்னர்களிடம் ஒற்றுமை இல்லை.இப்பொழுது அரசியல் தலைமைகளிடம் ஒற்றுமை இல்லை.

No comments:

Post a Comment