பப்பிஸ்(Puppis)
இது பால் வெளி மண்டலத்தின் செறிவான பகுதியில் அமைந்திருக்கின்ற ஒரு வட்டார விண்மீன் கூட்டமாகும்.இது கிரேக்க காலத்தில் போர் வீரர்கள் பயன்படுத்திய அர்கோ என்ற பாய்மரக் கப்பலின் பின் பக்கப் பீடப் பகுதியாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தக் கப்பலை ஜாசன்(Jason) மற்றும் அவன் தோழர்களும் சேர்ந்து தங்கத்தாலான உடையைத் திருடும் முயற்சியில் பயன்படுத்தியதாக கூறுவார்கள்.பழங் காலத்திய கிரேக்க வானவியலார் கப்பலின் முழுப் பகுதியையும் 'அர்கோ நாவிஸ்' என்ற ஒரே வட்டார விண்மீன் கூட்டமாகக் குறிப்பிட்டார்கள். இது பிற்காலத்தில் மூன்றாகப் பிரிக்கப்பட்டு 140 விண்மீன்கள் கொண்ட ஒரு பெரும் பகுதி பப்பிஸ் எனப்பட்டது மற்றவை வேலா மற்றும் கரீனா என அழைக்கப்பட்டன. ஒரு வட்டாரம் மூன்று வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டதால் பப்பிஸ்ஸில் ஆல்பா(α),பீட்டா(β),காமா(γ), டெல்டா(δ) மற்றும் எப்சிலான்(ε) போன்ற குறியீடுகளுடன் கூடிய விண்மீன்கள் இல்லை. அரேபியர்கள் இந்த வட்டாரத்தை இரு பகுதிகளாக வகுத்து அவற்றை ஒட்டகங்கள் போலக் கற்பனை செய்துள்ளனர்
1400 ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ள நயோஸ்(Naos) எனப்படும் சீட்டா பப்பிஸ் இந்த வட்டாரத்தின் மிகப் பிரகாசமிக்க விண்மீனாகும் இது வெப்ப மிக்க,ஒளிர் திறன் மிக்க,வெண் நீல நிறம் கொண்ட மாபெரும் விண்மீனாக உள்ளது நயோஸ் என்றால் கிரேக்க மொழியில் கப்பல் என அர்த்தம்
v பப்பிஸ் (v) மறைப்பு வகை இரட்டை விண்மீனாகும் .1 நாள் 11 மணிக்கு ஒரு முறை இதன் ஒளிப் பொலிவெண் 4.4 லிருந்து 4.6 வரை மாற்றம் பெறுகிறது .இது 423 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது துராயிஸ் (Turais) என்றழைக்கப்படும் ரோ (ρ) பப்பிஸ் ஒரு மாறொளிர் விண்மீனாக 63 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்திருக்கிறது.184 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3.25 ஒளிப் பொலிவெண்னுடன் சிக்மா (σ) பப்பிஸ் உள்ளது. சை (ξ) பப்பிஸ் 3.34 ஒளி பொலிவெண்னுடன் 1350 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. பை(π) பப்பிஸ் 1090 ஒளி ஆண்டுகள் தொலைவில் 2 .71 ஒளிப் பொலி வெண்னுடன் இருக்கிறது .
இவ்வட்டாரத்தில் பல கொத்து விண்மீன் கூட்டங்கள் இருப்பதை அறிந்துள்ளனர்.M.46 (NGC 2437) என்று பதிவு பெற்ற வெறும் கண்களுக்குத் தெரியக்கூடிய,விண்ணில் முழு நிலவின் பரிமாணம் கொண்ட ஒரு தனித்த கொத்து விண்மீன் கூட்டமாகும். 5000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதில் ஒளிப் பொலி வெண் 6.1 கொண்ட 500 விண்மீன்கள் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர் இதற்கு சற்று அருகாமையில் M.47 (NGC 2422) என்று பதிவு செய்யப்பட்ட சிதறியவாறு உள்ள ஒரு தனிக் கொத்து விண்மீன் கூட்டமாகும்.
இது M.46 ஐ விட சற்று பெரியது.எனினும் அதைவிட நமக்கு அருகாமையில் 1500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இதில் பிரகாசமான ஒளிப் பொலி வெண் 4 .4 உடைய பல விண்மீன்கள் உள்ளன.850 ஒளி ஆண்டுகள் தொலைவில் NGC 2451 என்ற தனித்த கொத்து விண்மீன் கூட்டமும் 4200 ஒளி ஆண்டுகள் தொலைவில் NGC 2477 என்ற தனித்த கொத்து விண்மீன் கூட்டமும் உள்ளன.
இவை இரண்டும் சீட்டா பப்பிசுக்கு அருகாமையில் அமைந்திருக்கின்றன. முன்னதில் விண்மீன்கள் சிதறியவாறு உள்ளன. அதன் மையத்தில் ஒளிப்பொலி வெண் 2.8 உடைய C பப்பிஸ் என்ற ஆரஞ்சு நிறமுடைய மாபெரும் விண்மீனைக் காணலாம். பின்னதில் 300 விண்மீன்கள் சராசரி ஒளிப் பொலிவெண் 5.8 உடன் நிறைந்திருகின்றன. பப்பிஸ் A என்பது எக்ஸ் கதிர் மற்றும் ரேடியோ அலைகளை உமிழும் ஒரு விண்மீன் .இது உடனழிவு விண்மீனாக இருந்து வடித்து எஞ்சிய எச்சமாக இருக்கலாம் என்று கருதுகின்றார்கள்.இதன் மூலப் பொருள் அதைச் சுற்றியுள்ள விண்வெளியில் நெடுந்தொலைவு வரை விரிந்திருகிறது. விண்மீன் இடை ஊடகத்தின் அடர்த்தியை விட இப் பகுதியின் அடர்த்தி சற்று அதிகமாக இருக்கிறது .
No comments:
Post a Comment