நேர்மையும் வெல்லும்
வயதான மன்னனுக்கு வந்தது மனக்கவலை
வாரிசு நாடாள பிள்ளை பிறக்கவில்லையென்று
மக்கள் வருந்தினால் மன்னனிடம் செல்வர்
மன்னன் கவலைகொண்டால் யாரிடம் சொல்வர்
வழி காண வரவழைத்தான் அரசகுருவை
மொழி வேண்டி நின்றான் பலதடவை
மதிமிகு வீரனைத் தேர்ந்து தத்தெடுத்து
மன்றத்தில் முடிசூட்டி மன்னனாய் அமர்த்தலாம்
வஞ்சகரிடம் நாடு வசப்பட்டு வருந்தலாகாதென்று
வழிசொன்ன அரசகுரு விதியும் சொன்னார்
மறைவிற்கு முன்பே முடிசூட்டுவிழாவை
முன்னின்று கண்குளிரக் கண்டு மகிழ
வித்தை பல கற்றோரை வரவழைத்து
வடிகட்டி சிலரைத் தேர்வுசெய்தான்
மண்ணாள வந்த மாநிலத்து மறவர் கையில்
மாங்கொட்டை ஒன்று கொடுத்து அவரவர்
வீட்டுத் தோட்டத்தில் மரம் வளர்க்கச் சொன்னான்
வந்து பார்க்கும் நாளில் மரத்தின் செழிப்பே
மாற்றமில்லாத் தீர்ப்பை முடிவு செய்யுமென்றான்
மாமரம் ஒருவர் வீட்டிலும் முளைக்கவில்லை
வந்த வாய்ப்பு விலகிப் போய்விடுமென்று
விலைக்குச் செடி வாங்கி வீட்டில் நட்டனர்
மாதங்கள் உருண்டு செல்ல ஒருநாள்
மள்ளர் வளர்த்த மாமரங்களை மன்னனும்
வளமை கண்டு வர வலம் வந்தான்
வீரிய விதை விரைந்து வளர்ந்ததென
மெய்யின்றிப் பொய்யாய் எல்லோரும் எடுத்தியம்ப
மாசிலா மனத்தோன் ஒருவன் மட்டும்
விதைத்த விதை விளையவில்லை என்று
வருந்தி வருந்தி உண்மை சொன்னான்
மேதகை இவனே இனி மேய்ப்பவனும் இவனே
மன்னனும் அக்கணமே மனதில் முடிவு செய்தான்
வெந்து போன விதைகள் எப்படி முளைக்கும்
விவரம் மன்னன் மட்டுமறிந்த இரகசியம்
நல்லவன் ஒருவன் நாடாண்டால் நாட்டிற்கு
நலமே விளையும் என்னாளுமென்று
நன்னாளில் சான்றோர்கள் எங்கும் சூழ்ந்திருக்க
நேர்மையாளனுக்கு முடிசூட்டி முத்தமிட்டான்
No comments:
Post a Comment