Thursday, January 31, 2013

Kavithai


வேலையின்றி விளையாட்டு வேண்டாமே

 

முத்து முத்தாய் வியர்வைத் துளிகள்

கொத்துக் கொத்தாய் நிலத்தில் விழ

உடன் செய்ய வேலை இல்லாமலில்லை

உடல் சோர்ந்து போகவில்லை இருந்தும்

உழைப்பின்றி ஓய்வு தேடும் உள்ளங்கள்

உயர்ந்து வரும் பொல்லாத காலமிது

 

ஒருலட்சம் பேர் ஒன்றுகூடிப் பார்க்க

ஒன்பது கோடி சின்னத் திரையில் நோக்க

ஒவ்வொரு மைதானாமாய் கிரிக்கெட் போட்டிகள்

உலகைச் சுற்றி  ஊர்வலமாய் ஒவ்வொருநாளும்

எழுபத்தியிரண்டு கோடியே எட்டு லட்சம் மணித்துளிகள்

எவருக்கும் பயனின்றி பாழாய்ப்போனதே

 

 மனிதஉழைப்பு மட்டுமா இல்லாமற் போனது

மின்சாரமும் பயனுக்கின்றி அங்கே வீணானது

ஆக்கத்தில் முதலீடின்றி ஆற்றலை இழப்பது

எதிர்காலத்தை இருளில் அல்லவா மூழ்கடிக்கும்

விளையாட்டின்றி வேலை இருக்கலாம்

வேலையின்றி விளையாட்டிருக்கலாமோ

 

இழந்த செல்வதை மீட்டுப் பெறலாம்

இறந்த உயிரைக்கூட மீண்டும் பெறலாம்

இறந்த காலம் யாருக்கும் கிடைப்பதில்லை

இறைவனேயானாலும் அவருக்கும் விலக்கில்லை

காலம் பொன்னானது பொன்னைவிட மேலானது

காலம் தவறி உணர்வதை விடவே மாட்டோமா

 

Wednesday, January 30, 2013

Eluthatha Kaditham


எழுதாத கடிதம்

முன்னேற்றப் பாதையில் முன்னேறிச் செல்ல நம்மை நாமே தகுதிப் படுத்திக் கொள்ளும் போது அதற்கு மற்றவர்களின் உதவியைப் பெறலாம் ஆனால் முழுப் பொறுப்பையும் மற்றவர்களிடமே விட்டு விடக்கூடாது .முன்னேறுவதற்கு நேர்மையான வழிமுறையைத் தேர்வு செய்ய விருப்பமில்லாதவர்கள் மற்றும்  குறுகிய காலத்திலேயே முன்னேறி விடவேண்டும் என்று தகுதியை வளர்த்துக் கொள்ளாமல் துடிப்பவர்கள்  தவறான வழிமுறைகளினால் முன்னேறியவர்களைத் தலைவர்களாகக் கொண்டு விடுகின்றார்கள் .இதனால் அவர்கள் தங்கள் சுயபுத்தியை வெகு சீக்கிரத்திலேயே இழந்துவிடுகின்றார்கள்.தவறான வழியில் தொடர்ந்து பிழைப்பதற்கு இவர்களைத் தலைவர்கள் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.அவனால் தான் பிழைத்ததை விடத் தன்னால் அவன் பெற்றதே அதிகம் என்பதைப் பெரும்பாலும் காலங் கடந்து உணர்வதால் திருந்தவோ அல்லது ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளவோ தவறிவிடு கின்றார்கள். எதிர்ப்புகளைச் சமாளித்து மக்களை ஏமாற்றிப் பிழைக்க இதுவே பாதுகாப்பான வழி  என்பதால் பெரும்பாலான தலைவர்கள் இந்தப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றார்கள். தாங்களாகவே அடிமையாகிக் கொள்ளும் இவர்களால் நாடு வெகுவாகச் சீரழிந்து வருகிறது .

மற்றொரு வகையினர் மிக எளிதில் உணர்ச்சி வயப்பட்டு தங்களை இழந்துவிடுவார்கள்.உணர்ச்சி வயப்படுதல் என்பது ஒரு வகையான பலவீனம்.உணர்ச்சிகள் எளிதில் வசப்படக் கூடியதாக இருப்பின் வாழ்க்கை முழுதும் பாதுகாப்பின்றி இருக்கும் .நம்மை மற்றவர்கள் ஏமாற்றுவதற்கு நாமே ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்தது போலாகிவிடும் .

வாழ்கையில் ஒவ்வொருவரும் அவர்களே ஹீரோவாக இருக்க வேண்டும் மற்றவர்களை ஹீரோவாக்கிக் கொண்டாடக் கூடாது என்பதை உணர்ச்சி வசப்படும் போதெல்லாம் நினைவு படுத்திக் கொண்டால் தப்பிப் பிழைக்கலாம்.

Mind Without Fear


Mind Without Fear

முன்னேற்றப் பாதையில் பயம் என்பது நாம் நம்மைப் பற்றி சரியாக அறிந்தும் புரிந்தும் வைத்திருக்காததின் விளைவே .நம்மை மிகைப்படுத்தி மதிப்படுவதாலும் ,மிகவும் தாழ்வாக மதிப்படுவதாலும் பயம் மனதில் தொற்றிக்கொள்கிறது முன்னேறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளும் போது தேவையில்லாத பயம் ஒரு தடையாக இல்லாமலிருக்க ஒவ்வொரு முறையும் நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டிய சில அறிவுரைகள் இருக்கின்றன." நான் சாதிக்கப் பிறந்தவன் ,சாதிக்க வேண்டும் சாதித்தே ஆகவேண்டும் ,சாதனையை முடிக்கும் வரை இதில் பின்வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.பிறந்தோம்,எதோ வாழ்ந்தோம் பின் ஒரு சுவடுமில்லாமல் இறந்தோம் என்றில்லாமல் மறைவிற்குப் பிறகும் இந்த உலகம் நம்மைப் பற்றி நினைக்க வேண்டும். அதுவே தோன்றிற் புகழோடு தோன்றுதலாகும் .நானும் அப்படி வரலாற்றுப் பதிவுகளில் இடம் பெறவேண்டும்" இப்படி அறிவுறுத்திக் கொள்ளும் போது முன்னேற்றப் பாதையில் சோர்வுற்று திசை மாறுவதை நாம் தவிர்த்துக் கொள்ளமுடியும் .இந்த வழிமுறையை எல்லோரும் அறிவார்கள் என்றாலும் நடைமுறைப்படுத்திப் பயன் துய்ப்பவர்கள் வெகு சிலரே.அதற்குக் காரணம் ஒவ்வொருவரும் தனக்குத் தானே அறிவுரை சொல்லிக்கொள்ளும் முழுத் தகுதியுடையவர்களாக இருப்பதில்லை .

நாம் மற்றவர்களுக்காவே வாழும் போது சாதனை படைப்பது என்பது இயல்பாகவே நம் வாழ்கையில் நிகழ்ந்து விடுகிறது.மற்றவர்களுக்காக வாழ வேண்டும் என்ற எண்ணம் சிந்தனையில் இடம் பெற்றிருந்தால் முன்னேற்றப் பாதையில் தேவையில்லாத பயம் வருவதில்லை.ஆர்வம் குறையாமலிருந்தால் அதாவது குறிக்கோளில் தடுமாற்றம் இல்லாமலிருந்தால் சாதனையைத்தேடி ஒருவர் போகவேண்டியதில்லை ,சாதனைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவரைத் தேடிவரும். எல்லோரும் மற்றவர்களுக்காக வாழும் போது உலகில் எல்லோரும் சுகமாய் வாழ்கின்றார்கள் .ஆனால் எல்லோரும் தங்களுக்காக மட்டுமே வாழ நினைக்கும் போது பலர் வாழ வழியின்றி துன்பப் படுகின்றார்கள்.எல்லோரும் துன்பமின்றி வாழும் போது தனி ஒருவருக்குத் துயர் வரக் காரணமில்லை.சிலர் சுகமாகவும்,சிலர் சோகமாகவும் வாழும் நிலை நிலைப்படும் போதுதான் சுகத்தை நிலைப்படுத்திக் கொள்ள சிலரும் அதே சுகத்தைப் பெற சிலரும் போராடுகின்றார்கள்.பகைமை வளர இதுவே காரணமாக அமைந்துவிடுகின்றது.புரியாத பகைமை நிலையான பயத்திற்கு ஒரு காரணம் என்பதால் வாழ்க்கை முழுவதையும் பயத்திலேயே 
வீ ணடித்துவிடுகின்றோம்.சாதனைகள் மலர அங்கே வழியில்லாது போகின்றது

Monday, January 28, 2013

Sonnathum Sollaathathum-12


சொன்னதும் சொல்லாததும் -12

1804 -1851 ல் வாழ்ந்த ஜெர்மன் நாட்டு கணிதவியல் அறிஞர் ஜாகோபி (Jacobi ).அவர் காலத்தில் அவரே மிகச் சிறந்த ஆசிரியராகவும் ,கணித மேதையாகவும் திகழ்ந்தார் .அவர் எப்பொழுதும் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபடுவதால் தன் உடல் நலம் கெடுவதில் அதிகம் அக்கறை காட்டமாட்டார் .இது பற்றி ஒரு சமயம் அவரிடம் கேட்ட போது." கணித ஆராய்ச்சியில் கொண்ட ஆர்வத்தால் சிலசமங்களில் என் உடல் நலத்தை நானே கெடுத்துக் கொள்வதுண்டு .ஆனால் இது எதற்காக ? முட்டைக்கோசுக்கு நரம்புகள் இல்லை ,கவலைகளுமில்லை .அவை அழகாக அடுக்கடுக்காகத் தோன்றியிருந்து என்ன சுகம் கண்டன ? " என்று கூறுவார் . "கணிதம் என்பது தனக்குத் தானே தூய்மையாக விளங்குகின்ற ஒரு மேன்மையான அறிவியலாகும்” என்றும்அறிவியலின் உண்மையான முடிவு என்பது மனித மனத்தின் நன்மதிப்பாகும்” என்றும் கணிதத்தைப் பற்றி எப்போதும் உயர்வாகக் குறிப்பிடுவார். ஒரு சமயம் ஜகோபியிடம் ஆராய்ச்சி செய்ய ஒரு மாணவர் வந்து சேர்ந்தார் .சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் ஜாகோபி அந்த மாணவரைப் பார்த்து "என்ன ஆராய்ச்சியெல்லாம் எப்படிப் போய்க் கொண்டிருக்கின்றது ?" என்று கேட்டார் .அதற்கு அந்த மாணவரும் "ஐயா ,நான் இன்னும் ஆராய்ச்சியைத் தொடங்கவில்லையே " என்றார் ."ஆராய்ச்சியை இன்னுமா தொடங்கவில்லை .ஆறு மாதங்களில் என்ன செய்தாய் ? என்று ஜகோபி வினவினார் .அதற்கு அந்த மாணவர்,"ஐயா நான் ஆராய்ச்சி செய்ய வேண்டிய பொருளைப் பற்றிய அறிவை ஆழமாகப் பெற விரும்பு கின்றேன் . அப்போதுதான் என்னால் இதுவரை யாருமே கண்டுபிடிக்காத ஒன்றைக் கண்டுபிடிக்க முடியும் .அதற்காக யார் யார் என்னென்ன ஆராய்சிகள் இன்றுவரை செய்து முடித்துள்ளார்கள் என்ற விவரங்களைச் சேகரித்து வருகின்றேன் அவர்களால் விட்டுப் போன ஆராய்ச்சியை அடுத்து தொடங்கிவிடுவேன் " என்று என்று கூறினார் ஜகோபியும் "தம்பி  அப்படியெல்லாம் செய்து காலத்தை வீணாக்கிவிடாதே ,காலம் பொன்னானது ,பொன்னை விட மேலானது .  ஆராய்ச்சி செய்யவேண்டும்  என்பது உன் உண்மையான விருப்பமாயிருந்தால் அதைத் தொடங்குவதற்கு முன்னரே இது போன்ற விவரங்களைச் சேகரித்து வைத்திருக்க வேண்டும் .அவைகளே உனக்கொரு குறிக்கோளை தந்திருக்கும் .குறிக்கோள்கள் எப்போதும் செயல்களுக்கு முந்தி இருக்கவேண்டும் .ஆனால் நீயோ ஆராய்ச்சி செய்ய வந்த பிறகு குறிக்கோளைத் தேடுகின்றாய் .உன் தந்தை ஊரில் உள்ள எல்லாப் பெண்களையும் பார்த்து விட்டு அதில் நல்ல அழகான பெண் யார் என்று முடிவு செய்த பிறகு திருமணம் செய்து கொள்ளவில்லை .அப்படிச் செய்திருப்பாரே யானால் நீ இப்போது இங்கே ஆய்வு செய்ய வந்திருக்கவே முடியாது .எனவே உடனே ஆராய்ச்சியைத் தொடங்கு .இடையிடையே ஐயங்கள் எழும் .தேவையானவை ,தேவையில்லாதவை எவை என்பது பற்றி சரியாகத் தீர்மானிக்க முடியும் .இதனால் கால தாமதம் தவிர்க்கப்படும் என்று அம் மாணவருக்கு அறிவுரை கூறினார் .

வேலை செய்வதற்கு நல்ல காலம் என்பது அது பற்றி எண்ணிய பின் வரும் அடுத்த நிமிடமே .நாளை நாளை என்று நாட்களைத் தள்ளிக் கொண்டே போனால் நாளை ஒருவருக்கு விடியாமற் கூடப் போகலாம் .எனவே அன்றே அப்பொழுதே செய்ய வேண்டிய செயலைச் செய்து முடிப்பதே வெற்றிச் சிந்தனையாளர்களுக்கு அழகு .