எழுதாத கடிதம்
ஸ்ரீலங்காவின் போர் குற்றங்கள் பற்றி ஐ.நா சபைதான் அவ்வப்போது தெரிவித்து உலக நலனுக்காக கண்டனக் குரல் செய்கின்றது.ஐ.நா வின் பிரதிநிதியாகச் சென்ற நவநீதம் பிள்ளையையே கேலி செய்து அனுப்பி வைத்திருக்கின்றார்கள் .இது அவர்கள் குற்றவாளிகள் என்று உறுதிசெய்வதற்குப் போதுமானதாகும்.ஆனால் இந்தியாவோ அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல பொறுமையாக இருந்துவருகின்றது. பொருளில்லாத பொறுமை. காந்தியடிகளின் அகிம்சையை வெளிநாட்டுப் பிரச்சனைகளில் காட்டுபவர்கள் உள்நாட்டுப் பிரச்சனைகளில் முற்றிலும் மாறுபட்டவர்களாக இருக்கின்றார்கள்.
இனப் படுகொலை,தமிழர்களின் உடைமை மற்றும் உரிமைப் பறிப்பு ,தமிழ்ப் பெண்களுக்கு பாதுகாப்பின்மை ,தமிழர்களை அடிமைகளாகப் பயன்படுத்துதல்,இராணுவத்தைக் கொண்டு அடக்குமுறை,போதிய உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதி வழங்காமை போன்றவை நீங்கலாக இந்திய மீனவர்களுக்கு ஒவ்வொருநாளும் இழைக்கும் கொடுமைகள் எனப் பலப்பல
குற்றங்களைச் செய்துவிட்டு ஏதுமறியாப் பிள்ளைப்போல
ஸ்ரீலங்கா இருக்கின்றது.வல்லரசாகப் போகின்றோம் என வீர வசனம் பேசுகின்ற இந்தியா மௌனம் சாதிக்கின்றது.அவசரம் காட்டக் கூடாதுதான் அதற்காக ஏதும் செய்யாமல் சும்மா இருப்பதும் கூடாது.சும்மாவே இருப்பதும்,அவசரப்படாமல் இருப்பதும் ஒன்றல்ல.ஒரு தீயவனுக்கு தீய எண்ணம் கொண்டவன்தான் உதவி செய்வான் என்பார்கள் ,இது நாம் அரசியல்வாதிகள் விஷயத்தில் உண்மையாகி விடக்கூடாது.
இன்னும்
ஐ.நா வால் அறிக்கை சமர்ப்பிக்கப் படாத நிலையில்
கூட சிரியாவின் ராசாயன ஆயுதங்களால் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் இருக்கின்றது என்று அமெரிக்கா சிரியா மீது போர் தொடுக்க நினைக்கின்றது. ஸ்ரீலங்காவால் நாம் மீனவர்களின் வாழ் வாதாரமே கேள்விக்குறியாகி விட்டபோதும் இந்தியா மௌனமாய் இருப்பது வேடிக்கையாக இருக்கின்றது.
இராணுவம் அரசியல்வாதிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கும் சுதந்திர தினம்,குடியரசு தினங்களில் வீரநடை போடுவதற்கும்.நாட்டின்
எல்லையைக் காப்பதற்கும் மட்டுமில்லை.நாடு முக்கியம், நாட்டு மக்கள் அதைவிட முக்கியம்.நாட்டு மக்களை விட்டுவிட்டு நாட்டை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகின்றீர்கள் ?
No comments:
Post a Comment