Friday, August 30, 2013

Eluthatha Kaditham

எழுதாத கடிதம் 

உருப்படியாகச் செயல் ஏதும் இல்லாமல்,இந்தியாவை வல்லரசு நாடுகளுக்கு இணையாக முன்னேற்றுவோம் என்று வெறும் கற்பனைக் கருத்துகளாலும்,வார்த்தை ஜாலங்களினாலும் சொல்லிக்கொண்டு காலத்தை ஜாலியாக ஓட்டிக் கொண்டிருந்த ஆளும் இந்திய அரசியல்வாதிகளின் சாயம் இந்திய ரூபாய் மதிப்பின் கடுமையான வீழ்ச்சியினால் வெளுக்கத் தொடங்கியிருக்கின்றது.இதை மறைக்க
பரிபாடல் பாடத் தொடங்கியிருக்கின்றார்கள்.ஒவ்வொருவரும் எதேதோ காரணங்களைத் தேடிக் கண்டுபிடித்து சொல்ல ஆரம்பித்திருக்கின்றார்கள்.இந்தியாவின் பொருளாதாரத் தாழ்வுக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லையாம்.இதைப்பற்றி நாங்கள் அச்சப்படவில்லை,நீங்களும் அச்சப்படாதீர்கள் என்று கூறுகின்றார்கள். இதில் கூட இந்திய அரசியல்வாதிகளிடம் கருத்தொற்றுமையில்லை. தங்களே ஒரு பொருளாதார மேதை போல பேசிவருகின்றார்கள் .
ஐந்தாண்டுகள் இல்லை,ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் நிலை,முக்கியமாக தொழில் மற்றும் பொருளாதார ,சமுதாய நிலைகள் எப்படி இருக்கும் என்ற மதிப்பீடு மைய அரசுக்கு இருக்கவேண்டும். நாளைக்கு நிலை எப்படி இருக்கும் என்பதைக் கூட சரியாக அறியாதவர்களாக இருக்கும் இந்திய அரசியல்வாதிகளின் கைகளில் இந்தியா மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றது .
வெறும் ராஜநடையும் ஆணவப் பேச்சும்,அதிகார தோரணையும் நாட்டைப் பலப்படுத்திவிடுவதில்லை.அதனால் யாதொரு பயனுமில்லை .ரூபாய் மதிப்பின் சரிவிற்கு மேம்படுத்தப்படும் நாட்டின் உள் கட்டமைப்பும் ஒரு காரணம் என்று நிதி அமைச்சர் சொல்கின்றார்.ஒரு ழையைக்கூட தாங்காமல் குண்டும் குழியுமான தார்ச் சாலைகள்,  அலுவலங்கள் ,வனக் காடுகள்,பெட்ரோல் நிலையங்கள் அடிக்கடி தீப்பிடிப்பதும் ,வானுயர்ந்த கட்டடங்கள் இடிந்து விழுவதும் ,விமான நிலையக் கூரை சரிவதும்,கழிவு நீர் ,குடிநீரோடு கலப்பதும் ,போதிய மறுத்துவ மனைகள் இல்லாமல் திறந்த வெளியிலேயே  பிரசவிப்பதும்,உயர் ஆராய்ச்சி மையங்கள் இல்லாததால் உயர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த முடியாமல் தொழில் வளர்ச்சி மந்தப்படுவதும் ,விவசாயத்திற்குப் போதிய நீர் இல்லாமையும் ,கழிவுகளை அகற்றி புணராக்கம் செய்யத் தெரியாமையும்தான் நாட்டின் மேம்படுத்தப் பட்ட உள்கட்டமைப்பா ?
இந்திய மக்களில் சிலர் வெளிநாடு சென்றிருக்கலாம்.ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் கட்டமைப்புக்களை உண்மையாக ஒப்பிட்டுப் பார்க்கத் தெரியாததால் அது பற்றி ஏதும் அறியாதவர்களாக இருக்கின்றார்கள்.இன்னும் இந்திய மக்களை ஏமாற்றிப் பிழைக்கவே இந்திய அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள் என்பதற்கு இதைவிட வேறு ஒரு எடுத்துக்காட்டு இல்லை.


No comments:

Post a Comment