Mind without fear
நம்முடைய எதிர்காலத்தை நாமே ஏன் முடக்கி வைக்கவேண்டும்? தலைவிதியின் காலடியில் மண்டியிட்டு அடிமையாக ஏன் இருக்கவேண்டும்? உண்மையான எதிர்பார்ப்புகள் நம்முடைய எதிர்காலத்தை சிறப்பாக அமைக்குமே .
தலைவிதி என்றால் உன் வாழ்க்கையை ஊர் பேர் தெரியாத அடையாளம் காணமுடியாத ஒருவரிடம் அடமானம் வைத்துவிட்டாய் என்று பொருள்.தலைவிதி மனிதனின் சோம்பல் ,முயற்சியின்மை. அதனால் முன்னேற்றம் தாமதப்படுவதுடன் இல்லாமலும் போய்விடலாம். எதிர்பார்ப்புகள் எண்ணங்களின் நாற்றாங்கால்.
புதிய வார்ப்புகளுக்கு உருவங் கொடுக்கக் கூடிய பட்டறை, நம்மை நாமே தூண்டிக் கொள்ள உதவும் நெம்புகோல். தலைவிதி என்றால் மாற்றமில்லாத பழைய,முன் திட்டமிட்ட மாற்றங்களுக்கு நீ, எதிர்பார்ப்பு என்றால் உனக்கு புதுப் புது அர்த்தமுள்ள மாற்றங்கள். தலைவிதியால் நொந்து கொள்பவர்கள் முன்னேற்றத் தடைகளை எதிர்க்கத் துணிவில்லாதவர்கள்.
தங்கள் தோல்விக்கு தலைவிதியே காரணம் என்று சமாதானம் கூறுவார்கள். தான் எதைச் செய்வதற்குத் தகுதியுடைவன் என்பதை முடிவு செய்வது தலைவிதியே என்பர்.என்ன முயன்றாலும் தலைவிதிக்கு மீறி எதுவும் செய்ய இயலாது என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதோடு மற்றவர்களையும் தடுப்பார்கள். அரியணையில் அமர வேண்டிய முயற்சியை கீழே தள்ளிவிட்டு தானே அமர்ந்து முடி சூட்டிக் கொள்ள நினைக்கும் தலைவிதி ஒன்றும் நலங் காக்கும் காவலன் இல்லை.முயற்சி விட்டுக் கொடுத்ததால்தான் தலைவிதி முயன்று பார்க்கின்றது .
வாழ்வின் ஒரு பகுதியில் முக்கியமாகப் படித்து முடித்து விட்டு சம்பாதிக்கத் தொடங்கும் காலத்தில் நாம் கண்ணோட்டத்தை மாற்ற முடிந்தால் அதுவே மகத்தான தொடர் மாற்றங்களுக்கு ஒரு முன்னோடியாக அமையும்.
No comments:
Post a Comment