எழுதாத கடிதம்
எந்த நாடாக இருந்தாலும்,அந்நாட்டு அரசாங்கம் போடும் திட்டங்களும் அதற்காக ஆகும் செலவுகளும் எப்போதும் வருவாயை விடக் கூடுதலாகவே இருக்கும்.ஆனால் உண்மையில் வருவாய் போதுமானதாகத்தான் இருக்கின்றது.திட்டங்களுக்குத் திட்டமில்லாச் செலவுகளால் பற்றாக்குறை ஏற்படுகின்றது.அதனால் பட்ஜெட் எப்போதும் பற்றாக்குறைதான். குடும்பத் தலைவனாக இருந்து குடும்பச் செலவுகளைத் திட்டமிட்ட அனுபவத்தைப் பெறாமல் நேரடியாக அரசியலுக்கு வந்துவிட்டதால் அவர்களுடைய மேலாண்மை இப்படி இருக்கிறது போலும். திட்டங்களை
ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் முன்மொழியலாம். நாட்டின் வளர்ச்சியை எல்லாத் திட்டங்களும் தருவதில்லை.எவை வளர்ச்சியைத் தருகின்றனவோ அதற்கே முன்னுரிமை தரவேண்டும் என்ற அடிப்படை அரசியல்வாதிகளிடம் கொஞ்சமாவது இருக்கவேண்டும்.இவர்கள் குறிப்பிடும் திட்டங்கள் இல்லாமலேயே நாம் வெகு காலம் வாழ்ந்துவிட்டோம் என்றால் அத் திட்டங்கள் எவ்வளவு அவசியமானவை என்பது புரியும்.நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சி,வளர்ச்சியை முடுக்கி விடக் கூடிய திட்டங்கள் என மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
திட்டச் செலவுகளை வரும் வருமானத்திற்குள் அடக்க வேண்டும் என்பது குடும்பத் தலைவர்களுக்கு மட்டுமில்லை ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கும் பொருந்தும். பொருளாதாரக் கொள்கையில் வரவு செலவு என்பது தனி மனிதனுக்கும் அரசாங்கத்திற்கும் ஒன்றுதான்.
வருவாயை மக்களிடமிருந்து ஈட்டுவதை விட நாட்டின் வளத்திலிருந்து பெறுவதே ஒரு நல்ல அரசாங்கத்திற்கு அடையாளம்.நாட்டின் வளத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாத அரசே, அல்லது அவற்றைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் அரசே திட்டச் செலவுகளுக்கு கையை விரிக்கின்றன.திட்டத்தை அரைகுறையாக நிறைவேற்றி மக்களைத் திருப்திப்படுத்துவதற்கு வரியை உயர்த்துவதையே நம் அரசாங்கம் வழக்கமாகக் கொண்டுள்ளது.
நிர்வாகக் குறைபாட்டால் ஏற்படும் வருவாய் இழப்பைத் தவிர்த்தாலே பற்றாக்குறையைப் பெருமளவு குறைக்கமுடியும் இது சாதாரண மக்களுக்குக் கூட புரிகிறது.ஆனால் அரசாங்கம் புரியாதது போல் நடிக்கிறது என்றால் அது மக்கள் நலனை விட ,நாட்டு நலனை விட தங்கள் சொந்த நலனையே அதிகம் பேணிக்கொள்கின்றார்கள் என்பதே உண்மையாகிறது.
நாட்டுக்கு ஏற்படும் இழப்பைத் தடுத்து நிறுத்தாமல் எவ்வளவு வருமானத்தைப் பெருக்கினாலும் அது ஒருபோதும் நிறைக்காது. ஓட்டைப் பாணையை வைத்துக் கொண்டு விவசாயம் பண்ணும் முயற்சி போலாகிவிடும்.
No comments:
Post a Comment