சிறு கதை
ஒரு நாள்
இரவு என்
கனவில் கடவுள்
தோன்றினார். அது
நிழலா அல்லது
நிஜமா என்பது
எனக்குச் சரியாகத்
தெரியாது.ஆனால்
நான் ஏதோ
அவரிடம் பேசியது
போல அந்த
சந்திப்பு இருந்தது.யாராலும்
காண முடியாத
கடவுளை நான்
பார்த்துவிட்டேன் என்ற
பெருமிதத்தில் நான்
தூக்கத்திலும்
சிரித்தது போல
நினைவு.கடவுள் மறைவதற்குள் அவரிடம் நான் கேட்டுப் பெறவேண்டியதைப் பெற்றுவிட வேண்டும், இந்த அரிய வாய்ப்பை நழுவ விட்டுவிடக் கூடாது என்று தூக்கத்திலும் நினைத்தேன்.
நான்: ஐயா நான் வரும் பொதுத் தேர்வில் 1200 க்கு 1198 மதிப்பெண் வாங்கி மாநிலத்திலேயே முதல் மாணவனாக வரவேண்டும்.அதற்கு நீங்கள் அருள் புரிய வேண்டும் அய்யனே.
கடவுள்: உனக்கு மட்டுமல்ல,எல்லோருக்கும் அவர்கள் பிறப்பதற்கு முன்பே அவர்களுடைய தேவைகளை அவர்களே நிறைவேற்றிக் கொள்ள என்னென்ன தேவையோ அவற்றையெல்லாம் அளித்துவிட்டேன்.
நான்:ஐயா,நீங்கள் எல்லாம் தந்துவிட்டதாகக்
கூறுகின்றீர்கள்.ஆனால் வகுப்புத் தேர்வுகளில் நான் நல்ல மதிப்பெண் வாங்கவில்லையே.
கடவுள்: கேட்டு அறிவதற்கு காதுகளையும்,பார்த்து அறிவதற்கு கண்களையும்,சுவைத்து அறிவதற்கு நாக்கையும்,முகர்ந்து அறிவதற்கு மூக்கையும்,உணர்ந்து அறிவதற்கு தோலையும் எல்லோருக்கும் பாரபட்சமின்றி கொடுத்திருக்கின்றேன்.அவற்றின் மூலம் தெரிந்து கொண்டதைப் பதிவு செய்து வைத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள மூளையையும் கொடுத்திருக்கின்றேன்.அவற்றை
யெல்லாம் நீ பயன்படுத்திக் கொள்ளவில்லையா?
நான்: படிக்கின்றேன்,ஆனால் உடனே மறந்து விடுகின்றேன்.அதனால் என்னால் வெற்றி பெறமுடியவில்லை.
கல்வியால் சிறக்க கல்வியை முழுமையாகப் பெற என்ன வழி?
கடவுள்: அறிவு அஃறிணை,நீ உயர்திணை. நீதான் அதைத் நாடிச் செல்ல வேண்டும் என்பது இயற்கை விதி.அதற்காகத்தான் உனக்கு இரண்டு கால்களையும்,இரண்டு கைகளையும் அதில் விரல்களையும் தந்திருக்கின்றேன்.உணவைத் தேடுவதைப் போல அறிவைத் தேடுவதற்கும் இக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது உனக்குத் தெரியாதா?
நான்:எங்களோடு நீங்கள் அறிவையும் சேர்த்துப் படைத்திருக்கலாமே .இதனால் அறிவைத் தேடும் வேலையும் நேரமும் எங்களுக்கு மிச்சமாகுமே.
கடவுள்: அப்படிப் படைத்திருந்தால் நீ வாழ்வதற்கு ஒரு உந்து சக்தி இல்லாதிருக்கும்.நீ தேடினால் அது வளர்ச்சி, நான் கொடுத்து விட்டால் அது விலையில்லாப் பொருள். அப்போது நீ உழைப்பை மறந்து விடுவாய்.கருவிகளைக் கொண்டு பயனீட்டத் தெரியாதவன், பயன் கொடுக்கத் தெரியாதவனாகவே இருப்பான்.
ஒருவனிடம் ஒரு எழுது கோலைக் கொடுத்தால் அவன் தன் விருப்பம் போல எதை வேண்டுமானாலும் படைக்கலாம். நானே ஒரு கவிதை எழுதி அவனிடம் கொடுத்து விட்டால் அதைச் சபையில் சரியாகப் படிக்கக் கூட அவனுக்குத் தெரிவதில்லை.ஒரு தச்சனிடம் சில கருவிகளைக் கொடுத்தால் அவன் தன் விருப்பம் போல தேவையறிந்து மரச் சாமான்களைப் படைப்பான். நானே ஒரு சிம்மாசனத்தை அவனிடம் கொடுத்து விட்டால் அவன் அதில் ஏறி அமரக் கூட பயப்படுவான். ஒரு மனிதனுக்கு பிற்காலத்திற்கு என்ன தேவையோ அவற்றையெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள போதுமான கருவிகளை அவன் பிறக்கும் போதே கொடுத்தனுப்பியிருக்கின்றேன். அவை போதாதென்று மேலும் மேலும் எதையாவது கேட்டுக் கொண்டிருந்தால் நான் உன்னைப் படைக்காமலேயே இருந்திருக்கலாம்.
யாரோ சூடு போட்டது போல நான் திடீரென்று விழித்துக் கொண்டேன் . உடலில் சுட்ட புண்
எங்குமில்லை.அது உள்ளதில் இருந்தது.ஒரு கனவு எனக்கு வாழ்க்கையின் மெய்ப்பொருளை உணர்த்திவிட்டது.நான் இறைவன் கொடுத்த கருவிகளைச் சரியாகப் பயன்படுத்தி வரும் தேர்வில்
மட்டுமில்லை வாழ்க்கையிலும் வெற்றி பெறுவேன் என்று அப்போது தீர்மானித்துக் கொண்டேன்.
No comments:
Post a Comment