எழுதாத கடிதம்
உலகிலேயே மிகவும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாமல், நம்பிக்கையின்றி வாழ்கின்ற மக்கள் யாரென்று கேட்டால் தயங்காமல் இந்தியர்கள் என்றுதான் விஷயம் தெரிந்தவர்கள் கூறுவார்கள்.விவரம் கேட்டால் விளக்கமாகப் பதில் சொல்லி நம்மை வாயடைக்கச் செய்வார்கள்.
அரசியல்வாதிகளுக்கு நாளைக்கு பதவியில் இருப்போமா,செல்வாக்கு தொடர்ந்து இருக்குமா என்ற நம்பிக்கையில்லை.
அந்த அளவிற்கு அவர்கள் மக்களின் நன்மதிப்பைச் சம்பாதித்து வைத்திருக்கின்றார்கள்.தவறாகப் பொருள் சம்பாதிக்கும் ஒவ்வொருமுறையும் மக்களின் வெறுப்பையும் சேர்த்துத்தான் சம்பாதிக்கின்றோம் என்பதை மறந்துவிடுகின்றார்கள்.அரசியல் வாதிகளுக்கு நாட்டு நலனில் அக்கறையில்லை.அவர்கள் நிர்வாகத்தில் அவர்களுக்கே நம்பிக்கையில்லாததால் ,அரசுடமைகளையெல்லாம் தனியார்மயமாக்க நினைக்கின்றார்கள் .இப்படியே தொடர்ந்தால் ஒரு காலகட்டத் தில் ஆட்சியையும் கூட தனியாருக்கு குத்தகைக்கு விட்டாலும் விட்டு விடுவார்கள். சில நகராட்சிகளில் நிர்வாகம் இப்படித்தான் நடக்கின்றது.இதை நம்ம ஊர் சிபிஐ யினால் கண்டுபிடிக்கவே முடியாது.வரி வசூலித்தல்,நிதி நிர்வாகம்,பயனில்லாத ஆட்சிக் குழு கூட் டங்கள்,தேவையில்லாத உலக நாடுகள் சுற்றுப்பயணம், விளம்பரத்திற்காக கட்சிக் கூட்டங்கள் போன்ற முக்கியமான வேலைகளை மட்டும் அதிகாரிகளையும், தொண்டர்களையும்
வைத்துக் கொண்டு செய்வதைத் தவிர வேறு பொறுப்புக்களை எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
அதிகாரிகளுக்கு உண்மையான,நேர்மையான உழைப்பில் நம்பிக்கையில்லை.வாங்கும் சம்பளம் வாழப் போதுமானது என்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள்.முக்கியமான மக்களை விட்டுவிட்டு அரசியல் வாதிகளைத் திருப்திப் படுத்துவதில் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டதால் சுய எண்ணங்களையும் திறமைகளையும் இழந்துவிட்டவர்கள் .
கலப்படம்,தரக்குறைவு,அளவு மற்றும் எடை குறைவு போன்றவற்றில் கொண்டுள்ள நம்பிக்கையால் வியாபாரிகள் நேர்மையான வர்த்தகத்தின் மீது நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவில்லை.
மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தில் நம்பிக்கையில்லை .அந்த அவநம்பிக்கை அவர்கள் படிப்பிலும்,செயலிலும் வெளிப்பட்டுத் தெரிகின்றது.
மக்கள் ஒவ்வொருவரிடமும் அவர்கள் மீதே நம்பிக்கையில்லை .நாளைக்கே இந்த உலகம் அழிந்துவிடப் போகின்றது என்பது போல வாழ்கின்றார்கள்.
அவநம்பிக்கையை மனதில் வளர்த்துக் கொண்டு நம்பிக்கை பற்றிப் பேசும் இந்தியர்களால் ,இந்தியா மிகவும் பின்னடைந்து வருகின்றது. விழிப்புணர்ச்சி வேண்டும் .எங்கே.எப்போது ,எப்படி என்பதுதான் பெரிய கேள்விக்குறி .
No comments:
Post a Comment