Micro aspects of developing inherent potentials
எந்த வேலையைச் செய்யத் தொடங்கினாலும் இடையிடையே பிரச்சனைகள் வராமல் இருப்பதில்லை. பொதுவாகப் பிரச்சனைகள் அவருடைய அறியாமையாலும் பிறருடைய பொறாமையாலும் வருகின்றன .அறிவைத் தேடாமல் சும்மா இருக்கும்போதும் சுகம் தேடி அலையும் போதும் இந்த அறியாமை அரியணையில் ஏறி அமர்ந்து கொண்டு விடுகின்றது.விரட்ட விரட்ட அது நம்மையே மிரட்டும் .இந்தியாவில் அறிவு நுட்பம் மற்றும் அறிவு நுட்பத்தாலான வேலைகளை விட உடல் உழைப்பு மற்றும் இயந்திரம் போன்ற நெடு நேர உழைப்பாலான வேலைகளே அதிகம் என்பதால் உழைப்பின் பயனுறுதிறனின்மையால் ஏற்படும் இழப்பு அதிகமிருந்தாலும் இருக்கும் அறியாமை நம் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. பிரச்சனைகள் அச்சுறுத்துகின்றதே என்று செய்யத் தொடங்கிய வேலையை முடிக்காமல் இருப்பதும் அல்லது தவறுகளைச் செய்யத் தொடங்கி தவறான பாதையில் முன்னேறுவதும்,காலதாமதம் செய்வதும் நாம் செய்யும் கூடுதல் தவறுகளாகும்.இதைவிட அந்த வேலையைத் தொடங்காமல் இருப்பதே மேலானதாகும் .தள்ளிப் போடுவதால் பிரச்சனைகள் தீர்வாவதில்லை .பிரச்சனைகள் உயிர்ப்புடன் இருக்கும் வரை மனம் வேலையில் கவனமாக இருப்பதில்லை என்பதால் பிரச்சனைகளை சந்திப்பதே எல்லாவகையிலும் நல்லது .நாம் நேர்மையில்லாமல் செயல்படும்போதுதான் பிரச்சனைகளைச் சந்திக்க நாம் அச்சப்படுவோம்.நேர்மை எப்போதும் ஒரு இனம் புரியாத துணிவைத் தரும்.நேர்மையும் துணிவும் இருந்தால் பிரச்சனைகளைத் தள்ளிப் போடாமல் எதிர்கொள்ளும் மனப்போக்கை வழக்கப்படுத்தும். தற்காலியமான தீர்வுகளை விட நிரந்தரமான தீர்வுகளே எல்லோருக்கும் எல்லாக் காலத்திலும் நற்பயனளிக்கும் .இதில் நாம் செய்யும் பிழைகள், ஒரே பிரச்சனை மீண்டும் மீண்டும் தலைதூக்குவதற்கும் .வெவ்வேறிடங்களில் வெவேறு காலங்களில் புதுப்பிக்கப்படுவதற்கும் காரணமாகிவிடுகின்றன.பிரச்சனைகளைத் தீர்வு செய்வதில் நாம் எப்போதும் முன் உதாரணமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும் .
பிரச்சனைகள் நமக்கு புதிய அனுபவங்களைத்தான் தரும். அதனால் ஒருவருடைய ஆளுமைத் திறன் மிகும்.பிரச்சனைகளைச் சந்திக்காதவர்களை விட சந்தித்தவர்களே சிறந்த நிர்வாகிகளாக இருந்திருக்கின்றாகள் .வாழ்க்கையில் அதிகமாகப் பிரச்சனைகளைச் சந்தித்தவர்களே தங்கள் அனுபவங்களை பிறரோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று சுய சரிதை எழுதுகின்றார்கள் .அது போன்ற நூல்கள் சமுதாயத்திற்கு வழிகாட்டிகளாக இருக்கின்றன .
No comments:
Post a Comment