தத்துவம்
அலையும் மனத்தைக் கட்டுப்படுத்தி சமுதாயத்தில் மக்களின் ஒழுக்கத்தை நிலை நிறுத்த மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு அற்புதமான கற்பிதக் கொள்கையின் கண்ணுறு வடிவமே கடவுள். .இதை நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் கடவுள் ஒரு குற்றவாளியாகி விடுவார்.
பொதுவாக மக்கள் தங்கள் தகுதிக்கும் ,திறமைக்கும் அப்பாற்பட்டு ஒன்றை விரும்பிக் கேட்பார்கள்.அதைக் கொடுக்காவிட்டால் கடவுளை மனதிற்குள்ளே திட்டித் தீர்பார்கள் .கடவுளைப் புரிந்து கொள்ளாததால் கடவுள்கொள்கையால் முறையாகப் பயன் துய்ப்பவர்களை விடப் பயன் பெறாதவர்களே அதிகம்.
மக்கள் பெருகிப் போனாலும் ஒழுக்கம் தவறாது வாழவேண்டும் ,வேற்றுமைகள் பல இருந்தாலும் ஒற்றுமையாய் கூடி வாழவேண்டும் ,ஆசைகளின் தூண்டுதலினால் ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழாது,உதவி செய்து வாழ வேண்டும் ,தவறு செய்தால் தண்டனை நிச்சியம் உண்டு ,இம்மையில் தப்பிவிட்டாலும் மறுமையில் தொடரும் என்று அறிவுறுத்தி மக்களை நல்வழிப்படுத்தும் மகத்தான பணியை மௌனமாய் காலங்காலமாய் செய்துவருவது கடவுள் கொள்கையே .இக் கொள்கை இல்லாதிருந்தால் மனிதசமுதாயம் எப்போதோ மாண்டுபோயிருக்கும் .
ஒருசமயம் ஒரு பெரிய மனிதர் கோயிலுக்கு வந்து கடவுளிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார் .”முதல் மனைவியைப் பறித்துக் கொண்டாய் ,இரண்டாம் தாரத்திற்கு நீண்டநாள் குழந்தையில்லை.
தத்தெடுத்துக் கொண்டேன் .விபத்தில் அவர்கள் இருவரையுமே பறித்துக் கொண்டாய்..பின் எனக்கு சக்கரைநோய்,இரத்த அழுத்தம் ,புற்று நோய் எனப் பல நோய்களை த் தந்தாய், வியாபாரத்தில் பெருத்த நஷ்டம்,.வீடு வாசலை இழந்தேன்.குடியிருந்த வீட்டில் திருடர்கள் வந்து மீதியிருந்த பொருட்களையெல்லாம் எடுத்துச் சென்றுவிட்டனர்.நான் என்ன தவறு செய்தேன்,யாருக்கு என்ன கெடுதல் செய்தேன்,கருணை காட்டாமல் என்னை ஏன் வதைக்கின்றாய் ?” என்று புலம்பினார்
.இடையிடையே கடவுளையும் மனம்போன போக்கில் திட்டினார் .எதுவும் நடக்காததால் அழுதார் .
அதைப் பார்த்த ஒரு துறவி அவருக்கு ஆறுதலாகச் சில வார்தைகைக் கூறினார்
முற்பிறப்பில் செய்த பாவங்களின் பலனையே இம்மையில் நீ அனுபவிக்கின்றாய் உன்னுடைய துன்பங்களுக்கு நீயே காரணம் என்பதால் யார் மீதும் கோபம் கொள்வது அழகல்ல,
அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்பது விதி. என்றார் .முற்பிறப்பில் என்ன பாவங்கள் செய்தோம் என்று தெரியாமலேயே ஒருவர் தண்டனையை அனுபவிப்பது அதே பாவத்தை மீண்டும் செய்யாதிருக்க அறிவுறுத்துவதில்லை .செய்யாத குற்றத்திற்கு அல்லது தெரியாத குற்றத்திற்கு
தண்டனை வழங்கினால் அது யாருடைய குற்றம் ? மனிதர்கள் மனிதர்களை மேலும் பகைவர்களாக்கிக் கொள்ளக்கூடா து என்பதற்காக உருவாக்கப்பட்ட கொள்கையே கடவுள் .அதில் உண்மையில்லா விட்டாலும் நன்மை உண்டு என்பதை வெகு சிலரே புரிந்து வைத்திருக்கின்றார்கள் .
No comments:
Post a Comment