Thursday, June 20, 2013

Mind without Fear

Mind without Fear

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட வாழ்க்கை என்பது உனக்குக் கொடுக்கப்பட்ட வாழ்நாளைப் பயனுள்ளவாறு செலவழிக்க அளிக்கப்பட்ட ஓர் அரிய வாய்ப்பு .இந்த வாய்ப்பை அனுகூலமாக்கிக் கொள்ள அறிவையும்,அனுபவங்களையும் பெற்றுத் தகுதியுடையவனாக இருக்க வேண்டியது அவசியமாகும்.அதனால் இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் ஒரு தடையுமின்றி வளமான ,சாகாத சமுதாயம் முடிவில்லாத எதிர்காலத்திலும் சாத்தியமாகின்றது.

ஒருவருடைய அக மற்றும் புறச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாழ்க்கை சிலருக்கு எளிதாகவும் வேறு சிலருக்கு கஷ்டமாகவும் அமைகின்றது. வாழ்க்கை என்பது போராட்டங்களின் முடிவுகளால் தீர்மானிக்கப்படுகின்றது. வாழ்வதற்குப் போராடுதல் எல்லா உயிரினங்களுக்கும் இயல்பு.அதனால் வெல்லக்கூடிய எதையுமே ஒருவர் போராடி பெற்று விட முடியும்.ஆனால் எளிதாக ஆதாயம் அடைந்தவனைப் பார்த்து தனக்கும் அதுபோல அல்லது அதைவிடக் கூடுதலாக ஆதாயம் பெறவேண்டும் என்று ஆசைப்படும்போது போராடும் எண்ணம் கைவிடப்படுகின்றது. 
முயற்சி,உழைப்பு ஏதுமின்றி குறுக்கு வழியில் புகுந்து பிறருடைய ஆதாயங்களை அபகரித்துக் கொள்வதால் பகைமை ,எதிர்ப்பு ,போட்டி, பொறாமை போன்ற எதிர் மறையான பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி வருகின்றது.சரியாகத் தகுதிகளை வளர்த்துக் கொள்ளாமல் பலன்களை மட்டும் அனுபவிக்க அவசரப்படும்போது பிரச்சனைகளைத் தீர்வு செய்யும் திறமையும் இருப்பதில்லை.

எந்த அளவிற்குத் தகுதிகளை வளர்த்துக் கொள்கின்றோமோ அந்த அளவிற்கு எதையும் அனுபவிக்க தகுதி உண்டாகும். தகுதியில்லாமலேயே அனுபவிக்க முயலும்போதுதான் சிக்கல் ஏற்படுகின்றது.

படிப்புக்கேத்த வேலை கிடைக்கவில்லை என்று பலர் புலம்புவார்கள் .திருப்தியின்றி வேலை தேடிக்கொண்டே இருப்பார்கள் .(அவர்களுடைய படிப்பு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கின்றது என்பது வேறு விஷயம்.)
வேலை என்பது உங்களை ஒரு செயலில் ஈடுபடுத்திக் கொள்வதாகும் .அது மற்றவர்க்கும் பயனுள்ளவாறு இருக்கும் போது நீங்கள் சமுதாயத்திற்கு மிகவும் தேவையானவர்களாகி விடுகின்றீர்கள். 
தேவைக்கு மேல் சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பும்போது வேலை ஒரு பிரச்சனையாகி விடுகின்றது.


மக்கள் தொகை மிகுந்த நம் நாட்டில் வேலைக்குப் பஞ்சமில்லை. அரசாங்கம் வேலை வாய்ப்புக்களை சீராக உருவாகிக் கொடுக்காவிட்டாலும் சுய வேலை வாய்ப்புகள் இங்கே அதிகம் .நாம் சுய தொழில்களைப் பற்றி சிந்திப்பதேயில்லை.ஏனெனில் நாம் போராடத் தயாராகயில்லை ,தைரியமும் இல்லை.படிக்கும் போதே சுய தொழிலில் ஈடுபடுவதற்கான ஆர்வம்,வாய்ப்புக்களை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் நேர்மையாகச் செய்தால் எந்தத் தொழிலிலும் முன்னேறமுடியும் .ஏனெனில் இந்தியாவில் தொழில் நேர்மை காணாமற் போய்க்கொண்டிருக்கின்றது .தொழிலில் போட்டி இருக்கலாம் ஆனால் நேர்மையான தொழிலில் போட்டியில்லை. அளவாகச் சம்பாதிப்பது போதுமானது என்றால் நேர்மையான தொழிலே சிறந்த வழி.

No comments:

Post a Comment