சொன்னதும் சொல்லாததும்
படைப்பாற்றல் மிக்கோர் எதையாவது சாதிக்கவேண்டும் என்ற துடிப்பில் தினமும் தூண்டப்படுகின்றார்கள்.மற்றவர்களை வென்று முன்னால் நிற்கவேண்டும் என்று பேராசையால் வேலை செய்வதில்லை.ஒரு நாடு முன்னேற அங்கே படைப்பாற்றல் மிக்கோர் உருவாக்கப்படவேண்டும். மக்களிடம் உண்மையாக உழைக்கும் மனப்பான்மையும்,அரசிடம் சுயநலமில்லாத சேவை செய்யும் மனப்பான்மையும் இருந்தால் மட்டுமே இது சாத்தியப்படும்.இவையிரண்டும் இல்லாதபோது ஒரு நாடு எவ்வளவு இயற்கை வளத்தைக் கொண்டிருந்தாலும் காலத்தால் வீழ்ச்சியடையும் .
பிற நாடுகளுக்காக கம்பியூட்டரில் வேலை செய்து சம்பாதிப்பது பொருளாதார வளர்ச்சி இல்லை .ஏனெனில் அது தற்காலியமானது. கம்பியூட்டர் அடிமைகள் தங்கள் மூளையை நிரந்தரமாக கம்பியூட்டருக்கு இடமாற்றம் செய்துவிடுவதால் சுயமாக சிந்திக்கும் பழக்கத்தை இழந்திருப்பார்கள் இந்தியாவில் கம்பியூட்டர் அடிமைகளே அதிகரித்து வருகின்றார்கள் .இவர்கள் காலப்போக்கில் மூளையின் ஆற்றலை இழப்பதோடு பலவிதமான உடல்நலக் கோளாறுகளுக்கும் ஆளாகின்றார்கள் .
யானையை அடக்கி ஆளத் தெரிந்தவனுக்கு கழுதையைக் கூட மேய்க்கத் தெரியாது என்பார்பார்கள்.அது இந்த கம்பியூட்டர் அடிமைகளுக்கு சாலப் பொருந்தும்.சுய சிந்தனை நம் மாணவர்களிடம் வளராமல் போனதால் நாட்டில் அடிப்படை ஆராய்ச்சிகள் வளர்சியடையாமலேயே பின் தங்கிவிட்டது.அணு யுகம்,புதுமைப் பொருள் யுகம்,விண்வெளி யுகம் என உலகெங்கும் அறிவியல் புரட்சிகள் தூண்டப்பட்டு வருகின்றன.ஆனால் நம் நாட்டில் ஏனோ இன்னும் அடிப்படை வசதிகளுக்கே போராட வேண்டிய நிலைமையே நீடித்திருக்கின்றது.
மாணவர்களே, தொலை நோக்குப் பார்வையற்ற அரசை மறந்து விடுங்கள்.அது உங்களுக்காக எதுவும் செய்யப்போவதில்லை .உங்கள் முயற்சிகளை நாட்டு மக்களின் நலனுக்காக மேற்கொள்ளுங்கள்.நீங்கள் செய்யப்போகும் சாதனையே உங்களுக்கு மகத்தான பரிசு .
21 ம் நூற்றாண்டில் பெரும் மாற்றத்தை கிராபீன் (Graphene) என்ற நுண்மப் பொருள் செய்யும் என்றும் அது இன்னும் எவ்வளவு வியத்தகு பண்புகளைக் கொண்டிருக்கின்றது என்பதை இன்னும் முழுமையாக அறியேன் என்றும் அதன் கண்டுபிடிப்பாளரான ஆண்ட்ரே ஜெம் (Andre Geim) என்ற ரஷ்யாவில் பிறந்து,இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற இயற்பியல் விஞ்ஞானி கூறியுள்ளார்
1958 ல் பிறந்த இவர் கிராபீன் கண்டுபிடிப்புக்காக 2010 ல் நோபெல் பரிசு பெற்றார் .கிராபீன் கார்பனின் ஒரு வேற்றுறுப் பொருள் .இதில் கார்பன் அணுக்கள் தேன் கூட்டின் குறுக்குவெட்டுத் தோற்றம் போல சீரான அறுபக்க வடிவத்தில் அமைந்துள்ளன .இது இலேசானது என்றாலும் உறுதியானது. இதே தடிப்புள்ள எஃ கை விட 100 மடங்கு வலிமையாது .அதனால் கட்டமைப்பில் பொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்தி பொருள் ஆதாயம் பெறமுடியும். இதன் மின் கடத்து திறன் மிகவும் அதிகம்,மேலும் இது ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலை நெடுக்கையில் வெப்பநிலையைச் சார்ந்திருப்பதில்லை.மின் தொகுப்புச் சுற்றுக்கள்(Integrated Circuits) ,சூரிய மின்கலன்கள்(Solar cells) ,டிரான்சிஸ்டர்கள்((Transistors) ,கடல் நீரிலிருந்து உப்பு நீக்கம்(Desalination) ,எனப் பல நூற்றுக்கணக்காண பயன்பாடுகைக் கொண்டுள்ளது. இதில் வெற்றி கொள்ளும் நாடே இனி உலகை ஆளும் என்பாதால் நம் மாணவர்கள் இத் துறையில் ஆராய்ச்சி செய்ய முன் வரவேண்டும். அரசும், பல்கலைக் கழகங்களும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் .
No comments:
Post a Comment