Tuesday, June 25, 2013

Eluthaatha Kaditham

எழுதாத கடிதம் 
ஒருவர் ஒரு கருத்தைக் கூறுவதால் அதன் பலன் கிடைத்து விடுவதில்லை.ஒருவர்  கூறும் கருத்து உண்மையிலேயே  அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதா ,என்பது ஐயப்பாட்டிற்கு உட்படும்போது அவரும் அவருடைய கருத்தும் பெரும்பாலும் விவாதத்திற்கு ஒரு பொருளாகவே இருக்கும் .தான் நல்லவன் சிந்தனையாளன் சிறந்தவன் என்று மற்றவர் நம்புவதற்கும் ,அவர்களைத் திருப்திப் படுத்துவதற்கும் கருத்துகள் அடிக்கடி சொல்லப்படுகின்றன .தான் ஒரு சமுதாய  ச் சிற்பி என்று விளம்பரப் படுத்திக் கொள்வதற்காகப் போட்ட வேஷத்திற்கு இப்படிச் சொல்லும் கருத்துக்கள் வெறும் நாடக வசனங்களே .
இந்தியாவில் பெரும்பாலான அரசியல்வாதிகள் இப்படித்தான் இருக்கின்றார்கள்.இந்திய மக்களும் இதிலொருநேர்மறையான  மாற்றத்தை ஏற்படுத்த மனப் பூர்வமாக விரும்புவதில்லை.இருக்கும் எதிர்மறையான மாற்றத்தோடு கைகோர்த்துச் செல்ல வாய்ப்புக்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்கள் போல வாழ்கின்றார்கள் .
முதலில் நாம் எல்லோரும் ஓர் உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும் .இந்தியர்கள் இந்தியர்களாகத்தான் வாழமுடியும் .இந்தியா ,இந்தியச் சூழ்நிலைகளுக்கு ஏற்பவே முன்னேறமுடியும் .அதற்கு மீறிய நிலைகள் வெறும் வார்த்தைகளாக வேண்டுமானால் இருக்கலாம்,ஒருபோதும் நேர்மறையான மாற்றமின்றி எட்டவே முடியாது.ஒரு புதிய எல்லையைத் தொடவேண்டுமானால் நாம் நம்முடைய நிறம் மாறிப்போன மரபு வழியிலான சூழல்களை மாற்றிக் கொள்ளவேண்டும்,புறச் சூழல்களை மட்டுமில்லை அகச் சூழலையும் சேர்த்துத்தான் .அகச் சூழல் மாறாமல் புறச் சூழல் உண்மையான மாற்றத்தைப் பெறுவதில்லை .போலியான தற்காலியமான புறச் சூழல் மாற்றங்கள் அகச் சூழலில் மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை .புறச் சூழல் மாற்றங்கள் என்பது நல்ல எண்ணங்களின் உச்சரிப்பு ,வார்த்தைகளின் வர்ணனை .அகச் சூழல் என்பது அதை ஏற்றுக்கொண்டு செயல்படுவது.செயல்களின்றி வெறும் வார்த்தைகளால் மட்டும் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய முடியாது. 


No comments:

Post a Comment