Sunday, June 9, 2013

Vethith Thanimangal-Chemistry

வேதித்தனிமங்கள்-ரூத்தெனியம் -கண்டுபிடிப்பு 
ரூத்தெனியம் இரஷ்ய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வேதித் தனிமம் .பிளாட்டினத் தொகுதி உலோகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இருடியத்திற்குப் பின் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அறியப்பட்ட கடைசி உலோகமாகும் .
ஓசன்(G.V.Ozann)என்ற விஞ்ஞானி 1828 ல் கச்சா பிளாட்டினத்தை இராஜ திராவகத்தில் கரைத்து மூன்று தனிமங்களை - புளுரானியம் (Pluranium) , பொலினியம் (Polinium),ரூத்தெனியம்(Ruthenium) கண்டுபிடித்ததாக அறிவித்தார் .ஆனால் இது பெர்சீலியஸ் என்ற ஜெர்மன் நாட்டு விஞ்ஞானியால் ஒப்புக் கொள்ளப்படவில்லை .
1844 ல் இருஷ்ய நாட்டு விஞ்ஞானியான கிளாஸ் (K.Klaus) கச்சா பிளாட்டினத்தின் கழிவிலிருந்து இருடியம்(Iridium),ரோடியம்(Rhodium) ஆஸ்மியம்(Osmium),பல்லாடியம்(Palladium) இவற்றுடன் 10 % பிளாட்டினமும் பிரித்தெடுத்தார் .இதனுடன் ஒரு உலோகக் கலவையையும் தனித்துப் பெற்றார் .இது எதோ ஒரு புதிய உலோகத்தின் சேர்மானமாக இருக்கலாம் என்று நம்பினார்.அதிலிருந்து கடிய முயற்சிக்குப் பின் ரூத்தெனியம் என்ற புதிய உலோகத்தைப் பிரித்துக் காட்டினார். லத்தீன் மொழியில் இரஷ்யாவிற்கு ரூத்தெனியா என்று பெயர்.தன் தாய்நாட்டின் பெயரையே அவர் கண்டுபிடித்த தனிமத்திற்குச் சூட்டினார் .
பண்புகள் 
Ru  என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய ரூத்தெனியத்தின் அணுவெண் 44 ,அணு நிறை 101.07, அடர்த்தி 12410 கிகி /கமீ .இதன் உருகு நிலையும் ,கொதி நிலையும் முறையே 2573 K ,4373 K .
ரூத்தெனியப் பொடியை ஆர்கான் மின் வில்லின்(Electric arc) வெப்பத்தில் உருக்கி உலோகமாக மாற்றுகின்றார்கள் .இது கடினமானதாகவும் வெண்ணிறங் கொண்டதாகவும் ,நான்கு படிக வேற்றுருக்களைக் கொண்டதாகவும் இருக்கிறது .அறை வெப்பநிலையில் காற்று வெளியில் ஆக்சிஜனேற்றம் பெற்று பொலிவு மங்கிப் போவதில்லை. ஆனால் 800 டிகிரி C வெப்ப நிலையில் காற்று வெளியில் ஆக்சினேற்றம் பெறுகிறது .இது குளிர்ந்த மற்றும் சூடுபடுத்தப்பட்ட அமிலங்களாலும்,ராஜ திராவ கத்தாலும் பாதிக்கப்படுவதில்லை.ஆனால் கரைசலில் பொட்டசியம் குளோரேட்டைச் சேர்க்க அது வெடிச் சத்தத்துடன் ஆக்சிஜனேற்றம் பெறுகிறது. 

இது ஹாலஜன்களாலும் ,ஹைட்ராக்ஸைடுகளாலும் பாதிக்கப்படுகிறது .மின்னார் படிவு(electrodeposition) அல்லது வெப்பப் பகுப்பாக்க முறை (thermal decomposition) மூலம் உலோகப் பரப்புகளில் ரூத்தெனியப் பூச்சைச் செய்யமுடியும் .
பயன்கள் 
ரூத்தெனியம் ,பிளாட்டினம் மற்றும் பல்லாடிய உலோகங்களுக்கு வலிமையூட்டியாகக் கொள்ளப்படுகின்றது .இவற்றுடன் ஆன கலப்பு உலோகங்கள் தேய்மானத் தடை காரணமாக மின்னினைப்புச் சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன .டைட்டானியத்தின் அரிமானத்தை ரூத்தெனியச் சேர்மானம் பெருமளவு குறைக்கின்றது 
ருத்தெனியம் -மாலிப்பிடினம் கலப்பு உலோகம் 10.6 K வெப்ப நிலை வரை மீக்கடத்துகிறது .ரூத்தெனியம் வேதி வினைகளில் பல்திறமிக்க வினையூக்கியாகப் பயன் தருகின்றது.
ருத்தேனியம் டெட்ராக்ஸைடு ஆஸ்மியம் டெட்ராக்ஸைடு போல நச்சுத் தன்மை கொண்டது .பல ரூத்தெனியச் சேர்மங்கள் பெரும்பாலும் அதற்கு இணையான சேர்மங்களுடன் ஒத்திருக்கின்றன. 


No comments:

Post a Comment