எழுதாத கடிதம்
எந்தப் பதவியைப் பெற்றாலும் அப் பதவியைத் தன் சுயநலத்திற்காகவே பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் அரசியல் வாதிகள்,அதிகாரிகள் இருக்கும் வரை இந்தியாவின் முன்னேற்றம் என்பது உண்மையில் பின்னேற்றமாகத் தான் இருக்கும்.நல்ல சிந்தனையும்,செயல் திறனும் உடையவர்கள் அரசியலுக்கு வருவதே இல்லை. ஏனெனில் அரசியலில் சிறுபான்மையினராக இருக்கும் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை.அவர்களைப் பெரும்பான்மையினராக ஆக்குவதொன்றே மக்கள் இனிச் செய்ய முடியும் ஒரே நல்வழி. இது நன்னெறியும் கூட ஆகும். இதைச் செய்ய மக்கள் தவறுவார்களேயானால் இனி நல்ல காலம் என்பதே இல்லை.ஒவ்வொரு நிமிடமும் தீமைகளை எதிர்த்துப் போராட வேண்டியதாகத் தான் இருக்கும்.
மக்களுக்கு ஒன்றைச் செய்ய வேண்டும் என்று அடம் பிடித்து நிதி ஒதுக்கீட்டை வாங்குவது தான் அரசியல்வாதிகளுடைய பணிக்கால சாதனையாக இருக்கும். இதற்குள்ளேயே அவர்களுடைய நோக்கங்கள் நிறைவேறி விடுகின்றன. மக்களுக்குப் பணிபுரிவது என்ற சிந்தனை அவர்களிடம் சிறிதுமில்லை. மக்களே தங்கள் முதலாளிகள் என்ற எண்ணம் தேர்தல் வரும்போது மட்டும் தோன்றுகின்றது. மற்ற நேரங்களில் மக்களை அவர்கள் முட்டாளாக்கி ஏமாற்றுகின்றார்கள்.நீதி கிடைக்கவில்லை என்று உயர் அதிகாரிகளிடம் போனால் அவர்கள் ஊழியர்களின் சொல்லை மட்டுமே கேட்டு நடக்கின்றார்கள். தப்பு செய்யும் ஊழியர்களைத் தட்டிக் கேட்காத இவர்கள் பெரும் குற்றவாளிகளாகத்தான் இருப்பார்கள்.அதனால் தான் அப்படி நடந்து கொள்கின்றார்கள்.இக் கூட்டணியால் இந்தியா வெகு விரைவில் சீரழியப் போகின்றது என்பது எனக்கு முன் கூட்டியே தெரிகின்றது.ஊழல் ஒழிப்பு என்பது அரசின் ஒரு கொள்கை என்பதைக் காட்டுவதற்காக ஒரு சிலவற்றை மட்டுமே தடுக்கின்றார்கள். மற்றபடி ஊழல் எங்கும் தலை விரித்து ஆடுகின்றது கூட்டணியின் அசுர பலத்தால்.அரசு அலுவலகங்களில் ஊழியர்களும்,அதிகாரிகளும் மக்களிடம் நடந்து கொள்ளும் முறையே இதைப் படம் பிடித்துக் காட்டுகின்றது..
No comments:
Post a Comment