வேதித் தனிமங்கள்- -கண்டுபிடிப்பு
வேதித் தனிமங்கள்
–நியோடைமியம் (Neodymium)-கண்டுபிடிப்பு
1841 ல் மொசான்டெர்
(C.Mosander) என்ற ஸ்வீடன் நாட்டு வேதியியல் அறிஞர் (இவர் டெர்பியம், யெர்பியம் லாந்தனம் போன்ற அருமண் தனிமங்களைக் கண்டுபிடித்தவர்) .ரோஸ் நிறமுடைய ஒரு ஆக்சைடை சிரைட் என்ற கனிமத்திலிருந்து பிரித்தெடுத்தார் .அதன் புதுமையான நிறமே அவருக்கு அதிலொரு புதிய தனிமம் இருக்கக் கூடும் என்பதைச் சுட்டிக் காட்டியது.அதில் ஒன்று ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட லாந்தனம்.மற்றொன்றுக்கு அவர் டிடைமியம்(didymium) எனப் பெயரிட்டிருந்தார்.இரட்டையர் என்ற சொல்லுக்குரிய கிரேக்க மொழிச் சொல்லே இதற்குப் பெயராக அமைந்தது. லாந்தனமும்,டிடைமியமும் ஒன்று போல இருந்தாலும் அவையிரண்டும் வெவ்வேறானவை என்பதை மொசான்டெர் நிறுவினார். நீண்ட நாட்களுக்கு டிடைமியம் ஒரு தனிமம் என்றே கொள்ளப்பட்டது .1878 ல் பிரான்சு நாட்டு
நிறமாலையியல் வல்லுநர் டிடைமியத்தில் இரு புதிய நிறமாலை வரிகளைக் கண்டார்.இதற்கு டிடைமியத்தில்
உள்ள பெயர் தெரியாத ஒரு தனிமமே காரணமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.இதற்கு அவர் டெசிபியம்(decipium) எனப் பெயரிட்டார். ஆனால் இதுவும் சில அருமண் தனிமங்களின் கலவை என்று பின்னால் அறியப்பட்டது
இதன் பிறகு பாய்ஸ் பௌட்ரன் என்ற பிரான்சு நாட்டு விஞ்ஞானி டிடைமியத்திலிருந்து ஒரு புதிய தனிமத்தைப் பிரித்தெடுத்தார்.அதற்கு அவர் சமேரியம் எனவும் பெயரிட்டார்.ஆனால் அதுவும் அருமண் உலோகங்களின் கலவை என்று பிற்பாடு அறியப்பட்டது .
1885 ல் ஆயர் வான் வால்ஸ் பேக் என்பார் டிடைமியத்திலிருந்து இரு கூறுகளைக் பிரித்தெடுத்தார் அதை பிராசியோடைமியம் (இதற்கு
பச்சை நிற இரட்டையர் என்று பொருள்) என்றும் நியோடைமியம் (இதற்கு புதிய இரட்டையர் என்று பொருள்) என்றும் பெயரிட்டார்..சீரியம் என்பது சீரியம் ,லாந்தனமாகவும், லாந்தனம் என்பது லாந்தனம், டிடைமியமாகவும்,டிடைமியம் என்பது சமேரியம் டிடைமியமாகவும்,டிடைமியம் பிராசியோடைமியம் நியோ டைமியமாகவும் விரிந்தது.அமோனியம் டிடைமியம் நைட்ரேட்டை மீண்டும் மீண்டும் காய்ச்சி வடித்து இப் புதிய தனிமங்களைப் பிரித்தெடுத்தார்.எனினும் இந்த உலோகம் 1925 வரை தூய
நிலையில் பெறப்படவில்லை.இது மொனோசைட் பாஸ்ட்னாசைட் போன்ற கனிமங்களில் சேர்ந்துள்ளது. அயனிப் பரிமாற்றம் மூலம் இவ்வுலோகத்தை நியோடைமிய சேர்மங்களிலிருந்து எளிதாகப் பிரித்தெடுக்கலாம்.
பண்புகள்
Nd என்ற வேதிக் குறியீட்டுடன் கூடியநியோடைமியத்தின் அணு வெண் 60, அணு எடை 144.24 அடர்த்தி 7000 கிகி/கமீ.இதன் உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 1297 K,3373 K ஆகும்.இது வெள்ளி போன்ற பளபளப்புடன் கூடிய உலோகமாகும். நியோடைமியம் அருமண் உலோகங்களுள் தீவிரமாக வினை புரியக் கூடிய தனிமமாகும்.காற்று வெளியில் பொலிவு மங்கிப் போகின்றது இரும்பு போலத் துருப் பிடித்து செதில் செதிலாக உதிர உட்புறமும் அரிக்கப்படுகின்றது. இதனால் இந்த உலோகத்தை மண்ணெண்ணையில் முக்கி வைத்திருப்பார்கள் அல்லது நெகிழ்மத்தினுள் புதைத்து வைத்திருப்பார்கள்.
நியோடைமியம் இரு வேற்றுருக்களைக் கொண்டுள்ளது.இரட்டை ஆறுமுகிக் கட்டமைப்பு 860o C
வெப்பநிலையில் உடல் மையக் கனச் சதுரக் கட்டமைப்பாக உருமாறுகின்றது
பயன்கள்
நியோடைமியம் சேர்ந்துள்ள டிடைமியம் கண்ணாடிக்கு நிறமூட்டப் பயன்படுகின்றது.பற்றவைப்புச் செய்யும் பணியார்களுக்கு பாதுகாப்புக் கண்ணாடியாக இது விளங்குகின்றது. நியோடைமியத்தின் சேர்க்கை விகிதத்தை மாற்றி கண்ணாடிக்கு அவுரி நீலம் முதல் சிவப்பு நிறம் வரை ஊட்ட முடியும்.இதன் வழியே ஊடுருவும் ஒளி குறுகிய உட்கவர் ஆற்றல் பட்டையைக் கொண்டுள்ளது.இதனால் நிறமாலை வரிகளைத் திருத்தம் செய்து மதிப்பிட முடிகின்றது.இவ்வகைச் சாதனங்கள் விண்வெளி ஆய்வுகளுக்குப் பெரிதும் அனுகூலமாயிருக்கின்றன.நியோடைமிய உப்புக்கள் எனாமலுக்கு நிறமூட்டவும் பயன்தருகின்றன.நியோடைமியம் யெட்ரியம் அலுமினியம் சேர்ந்த கலவைப் பொருள் லேசர் ஒளி தரும் ஊடகப் பொருளாக விளங்குகிறது.இதில் நியோடைமிய அயனி கிளர்ச்சி நிலைக்குத் தூண்டப்பட்டு ஒரே நேரத்தில் அடிநிலைக்கு பரிமாற்றம் செய்து லேசர் ஒளியைப் பெறுகின்றார்கள்.இதன் அலைநீளம்1.064 மைக்ரோ மீட்டர் .வெளியீட்டு ஆற்றல் 2x104 வாட் என்றாலும் தொடர்ச்சியாக இன்றி விட்டுவிட்டுக் கிடைக்கின்றது.இது சமிக்கை அலைகளை ஒளி பரப்புவதற்கும் அகநோக்கி(endoscope) பயன்பாட்டிற்கும் தொலைக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கும் பயன்படுகின்றது
No comments:
Post a Comment