எழுதாத கடிதம்
வாழ்க்கையில் நம்பிக்கை வேண்டும். நம்பிக்கையே நமக்குத் தும்பிக்கை ,நம்பினார் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு என்றெல்லாம் பலர் நம்பிக்கையைப் பற்றிப் பல விதமாகச் சொல்லியிருக்கின்றார்கள்.என் அப்படிச் சொன்னார்கள் ?
உன்னை நீ நம்புவது வேறு நீ பிறரை நம்புவது வேறு.உனக்குப் பொருந்தும் நம்பிக்கை பற்றிய எண்ணம் மற்றவர்களுக்குப் பொருந்துவதில்லை. இதில் நாம் பெரும்பாலும் தவறு செய்துவிடுகின்றோம். நம்மை நாம் மிகையாக நம்பி ஏமாற்றமடைகின்றோம்.வெளியே காட்டப்படும் நம்பிக்கை உள்ளே இருப்பதில்லை.பிறரை மிகையாக நம்பி ஏமாந்துபோகின்றோம் பொதுவாக காரணமில்லாத அதிக நம்பிக்கை என்றால் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் தான் இருக்க வேண்டும். நம் மீது நாம் கொள்ளும் நம்பிக்கை என்பது நாம் எந்த அளவிற்குத் தகுதிப்பாட்டை வளர்த்துக் கொண்டுள்ளோம் என்பதை பொருத்தது. அதில் பிழை செய்வது நாமாகவே இருப்பதால் அதை ஒப்புக் கொண்டு தவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. பிறர் மீது கொள்ளும் நம்பிக்கை என்பது நாம் எந்த அளவிற்கு மற்றவர்களை எடைபோடுகின்றோம் என்பதைப் பொருத்தது. உடல் எடையை அவ்வப்போது மதிப்பிடுவதைப் போல இதையும் அவ்வப்போது மறுமதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம்.
இயற்கையை பெருமளவிற்கு நம்பலாம்.ஆனால் மனிதர்களை அப்படியே நம்புவதற்கு இல்லை. அலைபாயும் மனதோடு மனம் மாறும் மனிதர்களை நம்புமுடியாது. இதற்குக் காரணம் மனிதர்கள் மாறுபடும் சிந்தனைகளால் செயல்பாடுகளைச் சட்டென மாற்றிக் கொள்ளும் மனப்பான்மை உடையவர்களாக இருக்கின்றார்கள்.
சில நாட்களுக்கு முன்பு ஒரு நகை வியாபாரி பல ஆண்டுகள் தன்னிடம் பணியாற்றிய நண்பனிடம் 42 லட்ச ரூபாயைக் கொடுத்து ஏமாந்தார். ஓர் ஆசிரியை கள்ளக் காதலனுடன் சேர்ந்து பல காலம் சேர்ந்து வாழ்ந்த கணவனையே கொலை செய்யக் காரணமானார். ஆசிரியரை நம்பி கற்பிழந்த மாணவிகள் ,சீட்டுக் கம்பெனியில் பணம் போட்டு இழந்தவர்கள்,வேலைக்குப் பணம்கொடுத்து ஏமாந்தவர்கள்-- நம்பி வாழ்வோரை விட நம்பிக் கெட்டவர்களே இக் காலத்தில் அதிகரித்துக் கொண்டு வருகின்றார்கள்.
No comments:
Post a Comment