Creative
thoughts
மாற்றம் எதுவானாலும் அதற்கான திறவுகோல் ஒவ்வொருவருக்கும் அவர்களிடத்தில்தான் இருக்கிறது. மனம் உண்மையாகவே சாவியைத் தேடுமானால் அது நமக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் கூட கிடைத்து
விடும்.எல்லாம் மனத்தின் பக்குவத்தில் இருக்கிறது.
மனம் பூட்டிக்கிடந்தால் உள்ளே ஏதோ ரகசியம் இருக்கிறது என்று பொருள் பூட்டிக்கிடக்கும் மனத்தைத் திறக்கத்தான் சாவி வேண்டும். எப்போதும் திறந்த மனமாய் இருந்தால் அதற்குச் சாவி ஏதும் தேவையில்லை.
எந்தச் சூழ்நிலையிலும் தன் மனப் போக்கைத் தீர்மானிக்கும் சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது. பிறருக்குத் தெரியாமல் இந்த சுதந்திரத்தை அனுபவிக்கமுடியும் என்பதால் இந்தச் சுதந்திரத்தை யாரும் யாருக்காவும் விட்டுக் கொடுப்பதில்லை.
சில பண்புகள் நம்முள் நேர்மறையான சிந்தனைகளை மட்டுமே தூண்டிவிடும்.நேர்மறையான நிகழ்வுகளைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கும்.நன்றி கூறல்,நல்லோரைப் பாராட்டுதல்,எளியோருக்கு உதவுதல், மன்னித்தல் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
சமதளத்திலிருந்து கொஞ்சம் சிரமப்பட்டால், மேட்டு நிலத்திற்குச்
சென்றுவிடமுடியும். பள்ளத்தாக்கில் வீழ்ந்து கிடந்தால் சமதளத்தை மீண்டும் அடைவதற்குக் கூட கடிய முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கும் .இந்த உண்மை நாம் வாழ்க்கை நிலைக்கும் பொருந்தும்.நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்டவன் வாழ்க்கையை வெற்றி கொள்கிறான்.தீய பழக்கங்களுக்கு அடிமையானவனால் அது முடிவதில்லை.
சமுதாயப் பொறுப்பின்றி சுதந்திரத்தை அனுபவிக்க முயன்றால் அதை விடப் பெரிய பேரிழப்பு ஒரு நாட்டிற்கு வேறெதுவுமில்லை,அதைப்போல பொறுப்பில்லாத வாழ்க்கை சுதந்திரம் தனி மனித வளர்ச்சிக்கு கண்ணுக்குத் தெரியாத ஒரு பெரிய தடையாகும்.
எது சுதந்திரம் என்று பொருள் புரியாதவர்களால் தனி மனித வாழ்க்கை சீரழிந்து போவதுடன் சமுதாயமும் சீர்கெட்டுப் போகின்றது.
சூழல்கள் நம்மை ஒரு போதும் பயமுறுத்துவதில்லை. நாம்தான் சூழல்களைக் கண்டு பயப்படுகின்றோம். சூழல்களை நாம்தான் உருவாக்குகின்றோம் என்பதால் எந்தச் சூழல்களையும் நாம் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். அந்தத் திறமை நம்மிடம் இருக்கிறது என்பதை மறந்துவிடுவதால் தான் அந்தப் பயம் மனதில் தோன்றுகின்றது
No comments:
Post a Comment