எழுதாத கடிதம்
குற்றப் பின்னணி உடைய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் ஒரு காலத்திலும் நல்லாட்சி தரமுடியாது. ஒரு சில அடிவருடிகளுக்கு சில காலம் தவறான வழியில் லாபம் இருக்கலாம் ஆனால் குடிமக்களுக்கு நிரந்தரமான நன்மைகள் விளைவதில்லை. அரசியல்வாதிகளால் லாபம் பெறும் நபராக தான் வந்துவிடமாட்டோமா என்ற முயற்சியில் மக்கள் தொடர்ந்து ஈடுபட்டுத் தங்களைத் தங்களே ஏமாற்றிக் கொள்கின்றார்கள். மக்களின் இந்த மனப்பான்மையே அரசியல் வாதிகளுக்குச் சாதகமாக அமைந்து விடுகின்றது. அவர்கள் மக்களை மேலும் மேலும் ஏமாற்றிப் பிழைத்திருக்கவே முயல்வதால் நம்பிக்கை தரும் நல்ல மாற்றங்கள் வெறும் கானல் நீர் போலக் காட்சியளிக்கின்றது.
வரி மூலம் கிடைக்கும் மொத்த வருவாயில் ஏறக்குறைய 10 சதவீதம் ஆலோசனைக் கூட்டங்கள்,போக்குவரத்து,விழா எடுத்தல்,விளக்கக் கூட்டம் என பல வீண்செலவுகளால் கரைக்கப்பட்டு விடுகின்றது.மீதமுள்ள 90 சதவீதத்தில் 60 சதவீதம் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் பங்கு போட்டு எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அதில் எஞ்சியுள்ள 36 சதவீதத்தில் பாதி மட்டும் உண்மையில் திட்டத்திற்காகச் செலவழிக்கப்படுகின்றது.மீதிப் பாதி பயனற்ற வீண் செலவாகி விடுகின்றது.பயனற்ற வீண் செலவுகளினால் திட்டம் முழுமையடையாமல் மக்கள் பயனுக்கு வருவதில்லை.மீண்டும் கூடுதல் ஒதுக்கீட்டை எதிர்பார்த்து காத்துக்கிடக்கும்.
திட்டங்களை திட்டங்களுக்காகத் தீட்டுவதில்லை.தன் தோற்ற மதிப்பை உயர்த்திக் கொள்வதற்காக கவர்ச்சிகரமான திட்டங்களை முன் மொழிவதோடு சரி.அப்புறம் திட்ட ஒதுக்கீட்டை தன் வசப்படுத்திக் கொண்டு ஆதாயம் அடையவே முயல்வார்கள்.ஒரு திட்டத்தை முழுமையாக முடித்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதைவிட அதில் மீண்டும் மீண்டும் முதலீடு செய்யும் நிலைக்கு அரசைக் கட்டாயப் படுத்துவதினால் தொடர்ந்து புதிய முயற்சிகள் இன்றி மேலும் மேலும் ஆதாயம் ஈட்ட முடியும் என்பதால் இந்நிலையை அவர்களே உருவாகிக் கொள்கின்றார்கள்,
No comments:
Post a Comment