பகவத் கீதை-என் பார்வையில்
இதயத்தாக்கம் (Heart
attack) ஏற்பட்டு சில மாதங்கள் படுக்கையில் இருந்த போது எனக்கு பகவத்கீதை நூலொன்றை படிக்கக் கொடுத்தார் என் நண்பரொருவர். எனக்கு இலக்கியங்களில் ஈடுபாடு குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லையென்றாலும் அப்போது எனக்கு படிப்பதற்கும் எழுதுவதற்கும் நிறைய நேரம் கிடைத்தது. கையில் கிடத்த புத்தகங்களையெல்லாம் படித்தேன்.கீதையையும் குறளையும் ஒப்பிட்டு 1996 ல் “தெய்வீக கீதையில் திருவள்ளுவம்” என்னும் ஒரு நூலை எழுதி வானதிப் பதிப்பகம் மூலம் வெளியிட்டேன்.எனக்கு இந்த இரு நூல்களிலும் மிகுந்த புலமை இல்லையென்றாலும் அவற்றைத் தொடர்ந்து படிப்பதையும் சிந்திப்பதையும் விரும்புகின்றேன்.
தத்துவங்களை கசடறக் கற்று அவற்றை மனம் ஒப்பி மனதார ஏற்றுக் கொள்ளும் போது மனத்தில் இனம் புரியாத ஒரு அமைதி ஏற்படுகின்றது. அறிவில் தானாகவே ஒரு தெளிவு திடீரெனத் தோன்றுகின்றது.அந்த அமைதியும் அறிவும் ஒருவனை மிக மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்கின்றது. அந்த எண்ணத்திற்கு முன்னே செல்வச் செழிப்பும் ஆடம்பரமும் கேலிப் பொருளாகி விடுகின்றன.இந்த நிலை, பிரபஞ்ச வெளியில் எங்கும் காணப்படும் அமைதியைப் போல ,கடின உழைப்புக்கு பின் வேண்டப்படும் ஓய்வைப் போல இருப்பதால் உடலும் மனமும் ஒன்றிணைந்து ஒத்தியங்கும் நிலைக்கு உள்ளாகின்றன. எழும் எண்ணத்திலும்,செய்யும் செயல்களிலும் பிழைகள் ஏற்படுவதில்லை. வாழ்க்கையின் உண்மையான மெய்ப்பொருளை வெகு இயல்பாக உணரும் நிலைக்கு சென்றுவிட முடிகின்றது. பொருள் ரீதியாக ஒன்றுமில்லாவிட்டாலும் உலகை மட்டுமில்லை இந்த பிரபஞ்சத்தையே வென்றுவிட்ட ஆனந்தத்தில் திழைக்கின்றோம்.
பகவத் கீதை ‘நான்’ என்ற அகந்தையை விட்டொழியுமாறு சொல்கின்றது. நான் என்ற வரம்பிற்குட்பட்டு உன்னை நீ எண்ணிக் கொள்ளும் போது உன் மனமும் அறிவும் ஒரு குறுகிய கட்டுண்ட எல்லைக்குள் சுருங்கி விடுகின்றன. பரந்து விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தின் மொத்த மனதுடனும் மொத்த அறிவுடனும் உன்னை நீ இணைத்துக் கொள்ளும் போது நீ பிரபஞ்சம் போல மிகுந்த,அளவில்லாத ஆற்றலுடையவனாகின்றாய்.அப்போது மனம் வலிமையும் உடல் அளவில்லாத திறமையையும் பெறுகின்றன.தனிமனிதனாக இருப்பதை விட சமுதாயத்தில் இருக்கும் போதுதான் பாதுகாப்பு அதிகமிருக்கின்றது என்று நாம் நினைக்கின்றோம், விலங்கினங்களும் அப்படித்தான் நினைக்கின்றன..
No comments:
Post a Comment