எழுதாத கடிதம்
இன்றைக்கு நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளின் மூலத்தையும்,பரிணாம வளர்ச்சியின் போக்கையும் புள்ளி விவரங்களுடன் அலசி ஆராயும் போது எண்ணும் மனத்தில் ஒரு விதமான இனம்புரியாத அச்சம் துளிர்க்காமலில்லை. வளரும் தீமைகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுக்கவும், தடுக்க முடியாமல் எதிர்க்கவும் துணிவின்றி அதன் போக்கிலேயே அறிந்தும் அறியாமலும் நெடுங்காலமாக வளரவிட்டுவிட்டார்கள். இரண்டு குதிரைகளில் ஒரே சமயத்தில் சவாரி செய்ய நினைத்தால் சமத்தனேயானாலும் வெற்றி பெறமுடியாது என்று தெரியாமலா சொன்னார்கள்.
குற்றம் புரியத் தயங்காத அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் நேர்மையைத் துறந்து வெகு நாளாகி விட்டது.தனித்து தவறு செய்தவர்கள் கூட்டணியை அமைத்துக் கொண்டு செய்த,செய்கின்ற, செய்யப் போகும் எல்லாத் தவறுகளுக்கும் நிரந்தரமான ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். திருந்த விரும்பவில்லை என்பதையே இது சுட்டிக் கட்டுகின்றது.
குற்றவாளிகளே ஆள்பவர்களாக இருந்தால் நாடு வளர்ச்சிப் பாதையில் நடைபோடுவதில்லை.
குற்றவாளிகள், குற்றப் புரியத் தயங்காத ஆளும் வர்க்கத்தினர் எண்ணிக்கையாலும் வலிமையாலும் மிகுந்தும், அதைத் தட்டிக் கேட்க தைரியமுள்ள குடிமக்கள் எண்ணிகாகையாலும், வலிமையாலும் குறைந்தும் வருவது அதன் மோசமான பரிணாம வளர்ச்சியைக் காட்டுகின்றது.
பாதுகாப்பின்மையால் ஏற்படும் அச்சுறுத்தல் ,தேவையில்லாத மன உளைச்சல், மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுத் தொடரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருவதால் நல்லோரின் ஈடுபாடு நாளுக்குநாள் குறைந்து வருகின்றது. தீயோர் கண்ணெதிரே வாழ்வதைப் பார்த்து நல்லோரும் மனம் மாறுகின்றனர் என்பது ஆராச்சியாளர்கள் கண்டறிந்த உண்மை.
நாட்டின் உண்மையான பாதுகாப்பு என்பது அரணும்,தளவாடளங்களும் அவற்றைக் கையாளும் இராணுவமும் இல்லை,நாட்டு மக்களும் அவர்களின் மன நல்லிணக்கமும்தான் என்பதை உணராத ஆளும் வர்க்கத்தினர் இருக்கும் வரை நாடு முன்னேற்றப் பாதையில் நடை போடமுடியாது.
ஆளும் வர்க்கத்தினர் ஓர் எல்லையைத் தாண்டி குற்றங்களைச் செய்ய முடிவதில்லை என்பது மட்டுமே குடிமக்களுக்கு இருக்கும் ஒரே ஒரு குறைந்தபட்ச அனுகூலம்.இதற்கும் காரணம் குடிமக்களில்லை.ஆளும் வர்க்கத்தினருக்கு ஆளும் வர்க்கத்தினரே எதிரிகளாக காலப்போக்கில் உருவாவதால் அவர்களுடைய மன வேற்றுமையே குற்றங்களை வெளிக்காட்டி விடுகின்றது..
அரசியல்வாதிகள் செய்த பெரும்பாலான குற்றங்கள் காவல் துறை, கண்காணிப்புத் துறை,வருவாய்த் துறை, தணிக்கைத் துறைகளினால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதில்லை.எதிரி அரசியல்வாதியினால் வீசி எறியப்பட்ட வார்த்தைகளே விஸ்வரூபம் எடுக்கின்றது.இந் நிலை நம் அரசியல் அமைப்பின் பலவீனத்தை அம்பலப்படுத்திக் காட்டுகின்றது.
No comments:
Post a Comment