எழுதாத கடிதம்
ஒரு நாடு முன்னேற்றத்தால் எழுச்சி காணப்போகின்றது என்றாலும் அல்லது பின்னேற்றத்தால் வீழ்ச்சி யடையப் போகின்றது என்றாலும் அதற்கான முன் அறிகுறிகள் எப்போதும் காணப்படும். எல்லோராலும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வரவேற்கப்படும் போதுதான் அது முழுமையாக நிறைவேறும் வாய்ப்பைப் பெறுகின்றது. முன்னேற்றத்தில் பின்னேற்றம் காண்பதும் பின்னேற்றத்தில் முன்னேற்றம் காண்பதும் பெரும்பாலானா மக்களின் எதிரொலிப்புத்தான் என்பதால் சமுதாய முன்னேற்றம் என்பது நாடு தழுவியதாக இருக்கின்றது.தவறு செய்பவர்கள் தனி மனிதனாக இருந்தாலும் அதற்குப் பொறுப்பு சமுதாயம் தான். சமுதாயம் என்பது மக்களின் கூட்டுக் குடும்பம். தனி மனிதர்கள் மட்டுமின்றி எல்லோரும் தவறு செய்யாமல் இருந்தால்தான் சமுதாயத்தின் நலன் காக்கப்படும்..தனி மனிதனைப் பொருத்த மட்டில் அவன் சமுதாயத்திற்குச் செய்யும் தீங்குகளின் பங்களிப்பு பிறர் செய்யும் தீங்குகளின் பங்களிப்பை விட மிகவும் சொற்பமே. என்றாலும் அது பல தனி மனிதர்களின் சிறு சிறு பங்களிப்பின் மொத்தமே. மக்கள் தொகை அதிகம் என்பதால் இதன் சதவீதம் அதிகமாக இருக்கின்றது. இதனால் ஒரு மனிதன் தான் தவறு செய்யாமல் கட்டுப்பாடோடு இருப்பதோடு,பிறர் தவறு செய்யாமல் இருக்கவேண்டும் என்பதிலும் சமுதாயப் பொறுப்புணர்வோடு இருக்கவும் வேண்டும். பொதுவாக மக்கள் தீங்குகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதை விட்டுவிட்டார்கள் அதற்குப் பல காரணங்கள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. சமுதாயத் தவறுகளைத் தட்டிக் கேட்போரின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதும்,அதனால் கால விரயம் ,பணச் செலவு போன்ற பல இடர்பாடுகளைச் சந்திக்க வேண்டியிருப்பதும் தான். காவல் துறையும் நீதித் துறையும் சமுதாய நலங் கருதி செய்யவேண்டிய பொதுப் பணிகளைச் சரிவரச் செய்து வந்தால் தனி மனிதர்கள் இத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டு அல்லல் படவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. நாடு எங்கோ போய்க் கொண்டிருக்கின்றது.சினிமா வசனம் போல முன்னேற்றம் வரும் ஆனால் வராது என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது .
No comments:
Post a Comment