விஞ்ஞானி ஆவோம் வாரீர் -ஓர் அறிவியல் ஆசிரியரும் இரண்டு மாணவர்களும்
தலைப்பு : விஞ்ஞானி ஆவோம் வாரீர் -ஓர் அறிவியல் ஆசிரியரும் இரண்டு மாணவர்களும்
வெளியீட்டாளர்: தனலட்சுமி வெளியீடு (சுய வெளியீடு )
ஆண்டு டிசம்பர் 2001
மொழி : தமிழ்
கருப்பொருள் பொது அறிவியல் ,இயற்பியல்
பக்கங்கள் 180 விலை Rs.60
இயற்பியல் பயிலும் மாணவர்களுக்கு அடிப்படை
அறிவியலில் ஏற்படும் ஐயங்களுக்கெல்லாம் விளக்கம் கொடுத்து ஒரு நூல் எழுதவேண்டும் என்று
எனக்குள் நீண்ட நாள் ஆசை இயற்பியல் மாணவர்களுக்கு பல ஆண்டுகள் அடிப்படை இயற்பியல் பாடங்களை
இளமறிவியல் மற்றும் மூதறிவியல் மாணவர்களுக்குத் தொடர்ந்து உள்ளார்ந்த ஆர்வத்துடன் நடத்தி
வந்ததாலும் ,பொறியியல் சேர் விரும்பும் மாணவர்களுக்கும்
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் MIT ல் சேர விரும்பும் மாணவர்களுக்கும் நுழைவுத்
தேர்வுக்கு பயிற்சி அளித்ததாலும் இது எனக்கு எளிதாக வந்தது இதில் வட்டப்பாதை இயக்கம்
,ஈர்ப்பு ,எடையற்ற நிலை,உராய்வு ,நேர்கோட்டு உந்தம்,நிலைமத் திருப்புத் திறன் ,கோண
உந்தம் .ஆர்க்கிமிடிஸ் தந்துவம், மிதத்தல் விதி ,சீரிசை அலைவியக்கம் போன்ற 10 தலைப்புகளில் ஐயங்களையும் விளக்கங்களையும் ஐன்ஸ்டின்
என்ற ஒரு ஆசிரியருக்கும் ராமன் மற்றும் பாபா என்ற இரண்டு மாணவர்களுக்கும் இடையே நிகழும் கலந்துரையாடல்
மூலம் விவரித்துள்ளேன். இது இயல்பான நூலைப்போலன்றி
வித்தியாசமாக இருந்ததாலும் ,கூறப்பட்டுள்ள விவரங்கள் அறிவியலின் இயற்கையைப் புரியும்
விதத்தில் கணித மொழிகளுடன் விளக்குவதாக இருந்ததாலும் மைசூரில் உள்ள இந்திய மைய மொழியியல்
கழகம் ஆய்வுக்குரிய ஒரு நூலாக எடுத்துக்கொண்டு சிறப்புச் செய்தது
நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1968 ஜூலை முதல் 1971 ஜுலை வரை முனைவர் பட்டத்துக்காக ஆய்வு
செய்தேன். எனக்கு முனைவர் V .சண்முகசுந்தரம்
வழிகாட்டியாக இருந்தார். அவருடைய நெருக்கமான நண்பர் ,முனைவர் R .சபேசன் எனக்கு
நிறைய உதவிகள் செய்திருக்கின்றார் .இருவரும் எனக்கு மூதறிவியல் வகுப்புகள் நடத்திய
ஆசிரியர்கள்..அதை நினைவு கூறும் விதத்தில் இந்நூலை அவர்கள் இருவருக்கும் அன்பளிப்புச்
செய்து வெளியிட்டேன் . அது எனக்கு பரிபூர்ண மன நிறைவைத் தந்திருக்கின்றது.
இந்நூலை வெளியீட்டாளர் மூல வெளியிட்டால் காலதாமதம்
ஆகலாம் என்று நினைத்து நானே வெளியிட்டேன் . மாணவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்பி 1000 பிரதிகள் அச்சிட்டேன். அதன் பிறகுதான்
தெரிந்தது நூலை சந்தைப்படுத்துவது எவ்வளவு கஷ்டம் என்று . .என்னுடைய் வழிகாட்டி அப்போது
ஒரு பள்ளிக்கு நிர்வாக மேலாளராக இருந்தார். என்னுடைய சிக்கலைப் புரிந்து கொண்டு அவருடைய
பள்ளிக்கு 6 பிரதிகளை விலைக்கு வாங்கியது இப்போதும் மனதிற்கு நெகிழ்ச்சியாக இருக்கின்றது. அதன் பிறகு தமிழக அரசு
பொது நூலகங்களுக்கு வாங்குமாறு விண்ணப்பம் கொடுத்தேன். அது ஏற்றுக்கொள்ளப் பட்டு இந்த
நூலை அதிகம் வாங்கிக்கொண்டார்கள் .அனுப்பும் செலவை நம்மிடமே கட்டிவிடுவதால் இந்த முயற்சியால் லாபம் இல்லை அதிக நஷ்டமும் இல்லை. சிறந்த அறிவியல் தமிழ் நூலுக்கு வழங்கும் தமிழக அரசின் பரிசு
இந்நூலுக்குக் கிடைக்கும் என்று நினைத்தேன்
ஆனால் அந்த நினைப்பு தமிழ் வளர்ச்சித் துறைக்கு எழவில்லை. நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் வேறு இல்லை என்ற பாடல் வரிகளை மனதிற்குள்லேயே வாசித்துவிட்டு அமைதியாக இருந்தேன்
No comments:
Post a Comment