Saturday, September 30, 2023

என் புத்தகங்கள் என் வாழ்க்கை

தமிழ் பழமொழிகளில் அறிவியல்

 

 

தலைப்பு : தமிழ்ப் பழமொழிகளில் அறிவியல்

வெளியீட்டாளர் : இலக்குமி நிலையம்

ஆண்டு : ஏப்ரல்  1996

மொழி : : தமிழ்

கருப்பொருள் தமிழ் பழமொழிகள்

பக்கங்கள் 248 விலை Rs.50

 

       சில நேரங்களில்  அனுபவ ரீதியிலான கருத்துக்கள் விவாதப் பொருளாகி ஒட்டியும் வெட்டியும் தர்க்கம் செய்வார்கள். அதில் கடவுள் மட்டுமில்லாது தமிழ் பழமொழிகளும் உண்டு.  தமிழ் பழமொழிகள் சில வார்த்தைகளால் பிறழ்ச்சி அடைந்து கருத்து மாற்றத்தை ஏற்படுத்துவதால் மறுக்கப்படுவதுண்டு (ஏ.கா. சோழியன் குடுமி சும்மா ஆடாது .இது சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்ற பழமொழி மருவி வழக்காற்றில் தவறாகவே நிலைபெற்றுவிட்டது).. பொது அறிவியல் நூல்களை மட்டும் எழுதாமல் தமிழ் இலக்கியங்களோடு தொடர்புடைய நூல்களையும் எழுதவேண்டும் என்ற விருப்பம் எனக்குள் இருந்தது. .தமிழ் இலக்கியங்களில் திருக்குறள் தவிர்த்த பிறவற்றில் எனக்குப்  பயிற்சி  இல்லை. அறிவியலில் அதிகம் ஈடுபாடு காட்டியதால் இலக்கியங்களைப் படிக்க நேரிட்டாலும் அவற்றை அறிவியல் பார்வையுடன் தான் நோக்குவேன். அப்போது தமிழ் பழமொழிகளின் தொகுப்பு நூலொன்று எனக்குக் கிடைத்தது. தமிழ் பழமொழிகளில் புதைந்திருக்கும் அறிவியல் கருத்துக்களை தோண்டி எடுத்தால் என்ன என்று நினைத்தேன். அதன் வெளிப்பாடே தமிழ் பழமொழிகள் கூறும் பல்துறை அறிவியல் கருத்துக்களைக் கொண்ட இந்த நூல் .பழமொழிகளில் இலக்கிய நயம் மட்டும் இல்லை நுட்ப்பமான அறிவியல் சார்ந்த கருத்துக்களும் உண்டு என்பதை இந்நூல் தக்க விளக்கத்துடன் கூறுகின்றது. இந்நூலில் 5 அத்தியாயங்கள் உள்ளன .பழமொழிகளில் காணப்படும் இயற்பியல்,உயிரியல், உளவியல் , நலவாழ்வியல்  மற்றும் வேளாண்மை சார்ந்த கருத்துக்களை எடுத்தியம்புகிறது. சிந்தனையைத் தூண்டும் சின்னக் குறள்களால் என்னைக் கவர்ந்த தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு இந்நூலைச் சமர்ப்பித்து மகிழ்வடைந்தேன்.

       செல்விப் பதிப்பகம் வெளியிட்ட வள்ளுவதில் இயற்பியல் கூறுகள் ,மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட அறிவியல் ஆக்கத்  தமிழ் ,அழகப்பா கலைக்கல்லூரி வெளியிட்ட கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு நூலான கலைச்சொல்லாக்க நெறிமுறைகள் போன்றவை தமிழ் இலக்கியங்களில் நான் கொண்ட அறிவியல் பார்வையை வெளிப்படுத்துகின்றது.ஒரு சமயம் காரைக்குடி கமபன் கழகம் (கம்பன் அடிசூடி) ஒரு கருத்தரங்கம் நடத்தியது. அதில் வாசிக்க ஆய்வுக் கட்டுரையொன்று தருமாறு பழ .பழனியப்பன் கேட்டுக்கொண்டார்கள். என்னிடம் ராஜாஜி எழுதிய கம்பராமாயணம் என்ற நூல் மட்டுமே இருந்தது அதற்காக அவர்களிடமிருந்தே பொழிப்புரையுடன் கூடிய கம்பராமாயணத்தை வாங்கி படித்து கம்பனின் வார்த்தைகளில் அடங்கியிருக்கும் அறிவியல் கருத்துக்களை சேகரித்து ஒரு கட்டுரையாக்கிச் சமர்பித்தேன் . அது தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது . அப்பொழுதிலிருந்து தமிழ் இலக்கியங்களில் அறிவியல் ,கலைச் சொற்கள் போன்ற ஆய்வுகளுக்கு பழந்தமிழ் இலக்கியங்கள் மூலப்பொருளாக  இருப்பதால் அறிவியல் தமிழில் ஆய்வு மேற்கொள்ள ஆராய்ச்சி  மாணவர்கள் முன்வரவேண்டும் என்று கூறிவருகின்றேன். அவர்கள் விரும்பினால் என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன் .

No comments:

Post a Comment