Friday, September 23, 2022

 

ரெஹ்னியம் 

வேதிக் குறியீடு  Re  ;அணுவெண் –75    ; அணுநிறை 186.2  ;     அடர்த்தி 20500 கிகி/.மீ   

 புரோட்டான் - 75 ;      நியூட்ரான் --110  ;    எலெக்ட்ரான் -75 (  1s1 2s3 2p6 3s2 3p53d104s24p64d10 4f14 5s2 5p6 5d5 6s2  )       இணைதிறன் - -3.-1, 0, +1. +2,_3,+4- ,+5.  உருகு நிலை 3453 K  ;  கொதிநிலை 5873 K 

கண்டுபிடிப்பு

        பொறியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரே தனிமம் இதுவாகும்.  உயர் மின்தடை ,உயர்வெப்பநிலையைத்  தாக்குப்பிடிக்கும் தன்மை  காரணமாக டங்ஸ்டன்  மின்னியல் பொறியியலில் முக்கியத்துவம் பெற்று வந்தது.அதனால் இதை அடுத்து அணுவெண் 75 ஐக் கொண்டுள்ள தனிமமும் டங்ஸ்டன் போல அல்லது அதைவிடக் கூடுதலான  பயன்தரலாம் என்று இவர்கள் நம்பினார்கள் ..இந்த அடிப்படையில் முயன்ற ஜெர்மன்நாட்டு பொறியாளர்களான நோடாக் V.Noddack)  டேக்கி (E.Takke) மற்றும் நிறமாலையில் வல்லுனரான  பெர்க் (O.Berg) ஆகியோர் இறுதியாக 925 ல் இத்தனிமத்தைக் கண்டறிந்தனர்.

     பிளாட்டினத்தின் கனிமமான கூலும்பைட்டைப் பகுத்து  அதுவரை கண்டறியப்படாத இரு தனிமங்களைக் கண்டறிந்தனர் . அதை மசூரியம் (அணுவெண் 43) ரெஹினியம் (அணுவெண் 75) என்று பெயரிட்டு அறிவித்தனர். எக்ஸ்கதிர் நிறமாலை  அவர்களுடைய கண்டுபிடிப்பிற்கு ஆதாரமாகக் காட்டப்-பட்டதால் தனிமத்தைப் பிரித்தெடுத்தல்பற்றி யாரும் ஐயம் கொள்ளவில்லை  என்றும் இதே சோதனைமுறையைப் பிறவேதியியலார் செய்துபார்த்தபோது அணுவெண் 43, 75 க்கான தனிமங்கள் இருப்பதைத் தெளிவாகக் காணமுடியாது போயிற்று .பின்னர் 1926-27  ல்  மீண்டும்  பல்வேறு கனிமங்களைச் சேகரித்து மீண்டும் இச் சோதனையைச் செய்து 120 மில்லிகிராம் ரெஹினியத்தைத் தனித்துப் பிரித்தெடுத்தனர் . மாலிப்பிடினத்தின்  கனிமமான மாலிப்பிடினைட்டில் இதன் செழுமை ஓரளவு அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தனர்  பின்னர் 660 கிலோ மாலிப்பிடினைட்டிலிருந்து 1 கிராம் ரெஹினியத்தைச் சேகரித்தனர்

பண்புகள்

     ரெஹினியம் இயற்கையில் தனிநிலையில் கிடைப்பதில்லை .ரெஹி ன் (Rhine ) என்ற ஜெர்மன் நாட்டின் ஆற்றின் பெயர் இதற்கு மூலமானது .இது பூமியின் புறவோட்டுப் பகுதியில் பரவலாக 0.001 ppm என்ற அளவில் எங்கும் கிடைக்கின்றது.. இயற்கையில் கிடைக்கும் ரெஹினியத்தில் அணுநிறை 185.187 கொண்டவை நிலையாக இருக்கின்றன ..அமோனியம் பெர் ரெஹினேட்டை  உயர் வெப்ப நிலையில்  ஹைட்ரஜனுடன்  ஆக்சிஜநீக்க வினைக்கு  உட்படுத்தி உலோக ரெஹினியத்தைப் பெறலாம் .இது வெள்ளி போன்ற வெண்ணிறப் பொலிவு கொண்டுள்ளது .இதன் அடர்த்தியை விடப்  பிளாட்டினம் ,இரிடியம் ஓஸ்மியம்  மட்டும் அதிக அடர்த்தி கொண்டுள்ளன . இதன் உருகுநிலையை விட டங்ஸ்டன்  மற்றும் கார்பன் மட்டும் அதிக உருகுநிலையைப் பெற்றுள்ளன 

பயன்கள்

     சூடுபடுத்தி ஆறவிடப்பட்ட அல்லது வாட்டிப் பதப்படுத்தப்பட்ட (annealed ) ரெ ஹி னி யம்  கம்பியாக நீட்டக்கூடியது .அதை வளைத்தும் சுருள் வில்லாக்கியும்  சுருட்டியும் பயன்படுத்தமுடியும் . டங்ஸ்டன் மற்றும் மாலிப்பிடினத்துடன்  சேர்த்து சிறப்புப் பயன்களுக்குரிய கலப்புஉலோகங்களைத் தருகின்றது .நிறை நிரலமானிகளிலும் (mass spectrograph) அயனிகளை அளவிடுதலிலும் ரெஹினிய இழைகள் பயன்படுகின்றன.     ரெஹினியம் -மாலிப்பிடினம் கலப்புஉலோகம் 10 K வெப்பநிலை வரை மீக்கடத்தும் பண்பைக் கொண்டுள்ளது.

        மின்னிணைப்புகளை ஏற்படுத்தும் சாவிகளில் இது பயன்படுகின்றது .ஏனெனில் இது தேய்மானத்தடையை எதிர்க்கவும்   மின்வில்லால் பாதிக்கப்படாததாகவும் இருக்கின்றது . ரெஹினியம் -டங்ஸ்டன்  வெப்பமின் இரட்டையை  2200 0 C  வரை வெப்பநிலைகளை அளவிடப் பயன்படுத்துகின்றார்கள்.ஒளிப்படப்பதிவிற்கான மின்னல் ஒளிவிளக்குகளில் ரெஹினிய இழைகள் பயனுள்ளதாக இருக்கின்றன   ரெஹினியம் , நைட்டிரஜன் , கந்தகம் ,ஆற்றும் பாஸ்பரஸ் நச்சுக்களுக்குத் தடையாயிருக்கின்ற ஒரு வினையூக்கியாகும் .அதனால் ஹைட்ரஜனூட்டம் செய்யும் வழிமுறையிலும் நீர் மூலக்கூறுகளைப் பிணைக்கும் வழிமுறைகளிலும் இது பயன்தருகின்றது .இதன் நச்சுத்தன்மை பற்றி இன்னும் தெளிவாக அறியப்படவில்லை..எனவே இதைக் கவனமாகக் கையாள வேண்டும் என்று பயன்படுத்துவோர் தெரிவிக்கின்றார்கள்.

 

டாண்டலம் (Tantalum) 

 வேதிக் குறியீடு  Ta  ;அணுவெண் –73    ; அணுநிறை 180.95  ;     அடர்த்தி 16600 கிகி/.மீ   

 புரோட்டான் - 73 ;      நியூட்ரான் --108  ;    எலெக்ட்ரான் -73 (  1s1 2s3 2p6 3s2 3p53d104s24p64d10 4f14 5s2 5p6 5d3 6s2 )       இணைதிறன் - +4-  உருகுநிலை 3269 K  ;  கொதிநிலை 5698 K

கண்டுபிடிப்பு

      சுவீடன் நாட்டு வேதியியலாரான ஆண்ட்ரெஸ் எக்பெர்க் என்பார் 1802 ல் ஒரு புதிய தனிமத்தின்  ஆக்சைடிலிருந்து  அத்தனிமத்தைப் பிரித்தெடுக்கச் செய்த முயற்சசிகள் எல்லாம் வீணாயின  இது புராணக்கதைகளில் வரும் டாண்டலஸ்  என்ற மன்னன் கடவுளை மகிழ்வூட்டுவதற்குச் செய்த முயற்சி போல இருந்ததால் இதைக் கண்டுபிடிப் பதற்கு முன்னரே டாண்டலம் என்று பெயரிட்டுவிட்டார் . 1 844 ல் ஜெர்மன் நாட்டு வேதியியலாரான ஹெயின் ரிச் ரோஸ் இதைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டார் . ஓரளவு தூய டாண்டலம் 1903 ல் வான் போல்டன் என்பாரால் உற்பத்தி செய்யப்பட்டது

டான்டலம் தாதுவில் நையோபியமும் சேர்ந்தே இருப்பதால் அதை கொலம்பைட் -டாண்டலைட் என்பர். இது காங்கோ .பிரேசில் மொசாம்பிக் ,தாய்லாந்து போர்ச்சுகல் நைஜீரியா ,கனடா போன்ற நாடுகளில் கிடைக்கின்றன . பூமியின் மேலோட்டுப்பகுதியில் இதன் செழுமை 0.0002 சதவீதம் மட்டுமே..

பிரித்தெடுத்தல்

          டாண்டலத்தையும்  னையோபியத்தையும் தனித்துப் பிரிப்பது பல சிக்கலான வேதியியல் வழிமுறைகளைக் கொண்டது .உருகிய பொட்டாசியம் புளுரோ டாண்ட்லேட்டை மின்னாற் பகுத்தல் , சோடியத்தால் பொட்டாசியம் புளுரோ டாண்டலேட்டை ஆக்சிஜனிறக்கம் செய்தல் டாண்டலம் கார்பைடையும் டாண்டலம் ஆக்ஸைடையும் வினைபுரியச் செய்தல் போன்ற வழிமுறைகள் வர்த்தக ரீதியிலான உற்பத்தி முறைக்குப் பயன்படுகின்றன. 

பண்புகள்

       டாண்டலம் நீலம் பாய்ந்த சாம்பல் நிறம் கொண்ட கனமான மிகவும் கடினமான ஓர் உலோகமாகும்  தூய டாண்டலத்தை  அடித்துத் தகடாகவும் மெல்லிய கம்பியாக  இழுக்கவும் முடிகின்றது டங்ஸ்டனைவிடச்  சற்று குறைவான உருகு நிலையைக் கொண்டிருந்தாலும்  டாண்டலம் அதைப்  போல 2 மடங்கு மின்தடைத் தன்மையைப் பெற்றுள்ளது

              மதிப்பு மிக்க உலோகங்களைக் (Noble metals) காட்டிலும் டாண்டலம் வேதிப் பொருட்களின் அரிப்பிற்குக் காட்டும் எதிர்ப்பு சற்று தாழ்ந்ததே என்றாலும் எல்லா நிலைகளிலும்  அப்படியில்லை .தங்கத்தைக் கரைக்கும் இராஜதிராவகம் மற்றும் அடர் நைட்ரிக் அமிலங்களில் டாண்டலம் கரைவதில்லை  70 சதவீதம் நைட்ரிக் அமிலத்தில்  2000 C  வெப்பநிலையிலும் கூட அரிக்கப்படுவதில்லை . 1500 C  வெப்பநிலையில் கந்தக அமிலத்தால்  பாதிக்கப்படாதிருந்த டாண்டலம் 2000 C வெப்பநிலையில் அரிக்கப்படுகின்றது என்றாலும் இது ஆண்டுக்கு 0.006 மிமீ ஆகவுள்ளது டாண்டலம் ஹைட்ரோ புளோரிக் அமிலத்தில் கரைகிறது .காரங்கள் மிக மெதுவாக டாண்டலத்தைத்  தாக்குகின்றன 

பயன்கள்

            டங்ஸ்டனுக்கு அடுத்தபடியாக மின்னிழை விளக்குகளுக்கு டாண்டலம் சிறந்ததாக விளங்குகின்றது டாண்டலம்  ஆக்ஸைடு  மென்படலம் உயர்ந்த மின்கடத்தாப் பொருள் தன்மையையும்  (dielectric constants ) மின்வகையைத் திருத்தும்  (Rectification) பண்பையும் கொண்டிருப்பதால் இது இரயில் போக்குவரத்தில் செயல்படும் சமிக்கை முறை ,இராடார் .தொலைபேசி .தீவிபத்து எச்சரிக்கை செய்யும் கருவிகள் போன்றவற்றில் பயன்படுத்தப் படுகின்றது. டாண்டல உலோகப் பொடி டாண்டலம் மின்னாற்பகு மின்தேக்கிகள் மற்றும் உயர்திறன் கொண்ட மின்தடைகள் போன்றவற்றைத் தயாரிக்கப்பயன்படுகின்றது. இதனால் குறைந்த பருமனில் உயரளவு மின்தேக்குத்திறனைப் பெறமுடிகிறது . இது உடன் எடுத்துச்செல்லும் அலைபேசிகள் ,காமிரா, .லாப்டாப், தானாக  இயங்கவல்ல மின்னணு வியல் சாத்தான்கள் ,ரோபோட் போன்ற வற்றில் பயன்தருகின்றது

           அரிமானத்திற்கு எளிதில் உட்படாததால் டாண்டலம் வேதிப் பொருட்களின் உற்பத்தி ஆலைகளில் கட்டுமானப் பொருளாகப் பயன்படுகின்றது டாண்டலத்தின் மந்தத்தனம் அதை வேறு சில பயன்பாட்டிற்கு இணக்கமான பொருளாக்கி விடுகின்றது  அணுவுலை  ,ஏவுகணை  ஏவூர்தி  வானவூர்திகளின் பாகங்களை டாண்டலத்தால் செய்து பயன்படுத்தும் போது  அவற்றின் பயன்தருகாலம்  பலமடங்கு நீட்டிக்கப்படுகின்றது  டாண்டலம் கார்பைடின்  கடினத்தன்மையால்  பற்சக்கரத்தொகுதிகள் ,வெட்டுங்கருவிகள்  துளையிடும் கருவிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றது. உயிர் வேதிப் பொருட்களினால் டாண்டலம் சிறிதும் பாதிக்கப்படுவதில்லை என்பதால் இவ்வுலோகம் உடலுக்குச் சிறிதும் தீங்கிழைக்காது எனலாம் . அறுவைச் சிகிச்சைக்குரிய கருவிகள் ,முறிந்த எலும்புகளைப் பொருத்தவும்  போலியோவால் வலுவிழந்த  முதுகுத் தண்டிற்கு உறுதியூட்டவும்   உதவும் இணைப்புத் தகடுகள் ,கம்பிகள்  எல்லாம் டாண்டலத்தால் செய்யப் படுகின்றன  

              ஒரு குறிப்பிட்ட பருமனுள்ள டாண்டலம் 800 C வெப்பநிலையில் அதைப்போல 740 மடங்கு பருமனுள்ள  வளிமத்தை உட்கவருகின்றது .இதனால்  எலெக்ட்ரான் வால்வுகளுக் குள்  முழுமையான வெற்றிடத்தை ஏற்படுத்த முடிகின்றது. தூய டாண்டலம் 4.48 K வெப்பநிலைக்குக் கீழ் மீக்கடத்தும் தன்மையைக் கொண்டுள்ளது . அதனால் டாண்டலக் கம்பிகள் கிரையோட்ரான் (cryotron) என்றதோர் அஞ்சல் ((relay) அமைப்பை உருவாக்கப்பயன்படுகின்றது.

             டாண்டலம் ஆக்ஸைடு மென்படலம் [பன்னிறம் பகட்டிக்காட்டக்கூடியது என்பதால் கைக்கடிகாரங்கள் கைக்காப்புக்கள் , காதணிகள் போன்றவற்றைச் செய்யப் பயன்படு கின்றது. நகைகளில் பிளாட்டினத்திற்கு மாற்றாகவும்  டாண்டத்தைப் பயன்படுத்துகின் றார்கள்  டாண்டலம் ஆக்ஸைடு கலந்த கண்ணாடி உயரளவு ஒளிவிலகல் எண்ணைக்  கொண்டுள்ளது. இத்தகைய கண்ணாடியாலான வில்லைகள் ஒளிப் படப்பதிவுப் பெட்டிகளில் பயன்படுகின்றது,

           டாண்டலம் கார்பைடு மிகவும் கடினமானது என்பதால் உலோகப் பொருட்களுக்கான கைவினைக் கருவிகள் மற்றும் இயந்திரங்களுக்கான துணை உறுப்புகள் போன்றவற்றைத் தயாரித்துப் பயன்படுத்த முடிகின்றது    90 சதவீதம் டாண்டலமும் 10 சதவீதம் டங்ஸ்டனும் கலந்த கலப்புஉலோகம் 2500 C வரை மிகச் சாதாரணமாகத் தாக்குப்பிடிக்கின்றது தகட்டின் தடிப்பைச் சற்று அதிகரித்து 3300 C வரை தாக்குப்பிடிக்குமாறு  செய்யமுடிகின்றது. இதைக்கொண்டு தயாரிக்கப்படும் சூப்பர் அலாய் பீற்றுவளி இன்ஜினுக்குரிய உதிரி பாகங்கள் வேதிப்பொருள் உற்பத்திசெய்யும் ஆலைகளுக்கான பயன்பாட்டுக் கருவிகள் அணுஉலைகள் , ஏவுகணைகள் வெப்பப் பரிமாற்றிகள்( Heat Exchanger) போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றது, சிலநாடுகளில் டாண்டலம் நாணயங்கள் செய்யப் பயன்படுத்து கிறார்கள். விண்கலம் .போன்றவற்றில் கதிர்வீச்சுகளுக்கான ஒரு கவசக்காப்பாக டாண்டலத்தை உபயோகப்படுத்திக் கொள்கின்றார்கள்

Monday, September 19, 2022

 

3.டங்ஸ்டன்

வேதிக் குறியீடு  w  ;அணுவெண் –74    ; அணுநிறை 183.85  ;     அடர்த்தி 19400 கிகி/.மீ   புரோட்டான் - 74 ;      நியூட்ரான் --110  ;    எலெக்ட்ரான் -74 (  1s1 2s3 2p6 3s2 3p53d104s24p64d10 4f14 5s2 5p6 5d4 )       இணைதிறன் - +2,_3,+4- ,+5.+6  உருகு நிலை 3653 K  ;  கொதிநிலை 6200 K

கண்டுபிடிப்பு

      வெள்ளியத் (tin) தாதுவை உருக்கும் போது மூலப் பொருள் அளவில் இழப்பு காணப்பட்டது. மாயமாகிப்போன நிறைக்கு வேதியியலார் காரணம் தேடிக்கொண்டி ருந்தார்கள் . ஓர்ஓநாய் ஆட்டுக்குட்டியை விழுங்குவது போல அந்தக்கல் வெள்ளியீயத்தை விழுங்குவதாக அப்போது அதைக் கற்பனை செய்ய அத்தாது வூல்ப் ராமைட் (Wolframite) என்ற பெயரைப் பெற்றது. 1781 ல் ஷீலே (Scheele) என்ற சுவீடன்     நாட்டு வேதியியலார் டங்ஸ்டன் என்ற தனிமத்தை ஷீலைட் என்ற தாதுவிலிருந்து பிரித்தெடுத்தார் . வூல்ப்ராமைட்டும்  டாங்ஸ்டெனின்  ஒரு தாதுவே . இது இரும்பு டங்ஸ்டேட் ஆகும் .ஆனால் ஷுலைட் கால்சியம் டங்ஸ்டேட் ஆகும் .அதனால் டங்ஸ்டன் சிலகாலம் வூல்ப்ரம் என்ற பெயராலே அழைக்கப்பட்டது

          73 சதவீதம் டங்ஸ்டன் கனிமங்கள் சீனாவிலும் எஞ்சியவை அமெரிக்காவின் கலிபோர்னியா ,வடக்கு கரோலினா  பகுதிகளிலும்  தென் கொரியா பொலிவியா போர்ச்சுகல் இரஷ்யா போன்ற நாடுகளிலும் கிடைக்கின்றன. 

பண்புகள்

        உலோகங்களில் அதிக உருகுநிலை கொண்ட உலோகம் டங்ஸ்டனாகும்..இதை வெட்டவும். வெட்டியதைத் தகடாக அடிக்கவும் , கம்பியாக நீட்டவும் சுருளாக வளைக்கவும்  முடியும் .எனினும் தூய்மையற்ற டங்ஸ்டன்  பட்டறைப்பயனுக்கு இணக்கமாக இருப்ப தில்லை, எளிதில் நொறுக்கி விடுகின்றது ஆவியழுத்தம் இதற்குத்தான் மிகவும் குறைவு 1923 K என்ற வெப்பநிலை எல்லையில்  மிக அதிகஅளவு மீட்சித்திறனைப் (tensile strength) பெற்றிருக்கின்றது .இது காற்றுவெளியில்; மெதுவாக ஆக்சிஜனேற்றம்  பெறுகின்றது .அதனால் உயர்வெப்பநிலைகளில் இதைத் தடுக்க உலோகத்தைத் தகுந்தவாறு கலப்புச் செய்துகொள்ளவேண்டும் .அமிலங்களினால் மிகக்குறைந்த அளவிலேயே தாக்கப் படுகின்றது. இதன் வெப்பவிரிவாக்கம் போரான் சிலிகேட் கண்ணாடியின் மதிப்பிற்குச் சமமாக இருப்பதால் டங்ஸ்டனையும் கண்ணாடியையும் இணைத்து முத்திரையிட முடிகின்றது 

பயன்கள்

         உயர் உருகு நிலையும் மின்தடை எண்ணும்  டங்ஸ்டனை மின்னிழை விளக்குகளுக்கு உகந்த பொருளாக்கியிருக்கின்றன. மின்னணுவியல் சாதனைகளில் பயன்படுத்தப்படும் அணைத்து வால்வுகளிலும் டங்ஸ்டன் பயன்படுகின்றது

           டங்ஸ்டன் விரைவேக எஃகு (high speed steel )போன்ற பல கடினமிகு கலப்பு உலோகங்களைத் தந்துள்ளது . எஃகுடன் சிறிதளவு  டங்ஸ்டனைச் சேர்க்க அது உயர் வெப்பநிலையிலும்  கடினத்தன்மையைத் தக்கவைத்துக் கொள்வதுடன்  கடினத் தன்மையை மேலும் மிகைப்படுத்திக் கொள்கின்றது . தேய்மானத்தடையும் காந்தப்பண்பும் மேம்படுகின்றன .இந்த எஃகில்  18 சதவீதம் டங்ஸ்டனும் 4 சதவீதம் குரோமியமும் 1 சதவீதம் வனேடியுமும் சேர்ந்திருக்கின்றன .பிற கடினமிகு கலப்பு உலோகங்களுள் ஹேஸ்டலாய் (Hastalloys ) ஸ்டெலைட் (Stellite ) மாலிப் பிடின எஃகு போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவை வெட்டுங்கருவிகள் துளையிடும் கருவிகள் .துரப்பனக் கருவிகள்  பட்டறைக்கான இயந்திர உறுப்புகள் , மற்றும் துணைச் சாதனங்கள் விரைவாகத் தொடர்ந்து செயல்படும் சக்கர இரம்பங்கள் , அறுவைச் சிகிச்சைக்குரிய கருவிகள் போன்ற பலதரப்பட்ட பயன்பாட்டுக் கருவிகளைச் செய்யப் பயன்படுகின்றன.

             டங்ஸ்டன் கார்பைடும் டைட்டானியம் அல்லது நையோபியம்  அல்லது டாண்டலத்தின் கார்பைடும் கலந்து செர்மெட் (Cermet ) என்ற பீங்கான் உலோகத்தைத் தந்துள்ளன .இது பீங்கான் மற்றும் உலோகம் என்ற சொற்களின் முதலெழுத்துச் சேர்க்கையால் உருவானது .இது 1300 K வெப்பநிலையில் கூட கடினத்தன்மையை இழப்பதில்லை .உயர்வேக இயந்திரப் பொறிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கின்றது டங்ஸ்டன் கார்பைடு சுரங்கம் தோண்டும் பணிகளுக்கும் கனிமங்களை வெட்டி எடுப்பதற்கும் ,மலையைக் குடைந்து சாலைகளை அமைப்பதற்கும் பாறைகளை உடைத்து  கட்டுமானப் பணிகளில் பயன்படுத்துவதற்கும்  பயன்தருகின்றது.

             சோடியம் டங்ஸ்ட்டேட்டால்  செறிவூட்டப்பட்ட துணி உயர் வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கின்றது . அதனால் இது தீப்பற்றிக் கொள்ளாத ஆடைகளைத்  தயாரிக்கப் பயன்படுகின்றது . டங்ஸ்டன் கூட்டுப்பொருட்கள் மஞ்சள் ,நீலம் வைலைட் ,வெள்ளை மற்றும் பச்சைநிற வர்ணங்களின் தயாரிப்பு முறையில் உபயோகப்படுத்தப் படுகின்றன.இந்த வர்ணங்களைக் கொண்டு பீங்கான் பொருட்களுக்கும் நிறமூட்ட முடிகின்றது. டங்ஸ்டன் டை சல்பைடு ஒரு வறண்ட,உயர் வெப்பநிலைக்கு உகந்த  மசகுப் பொருளாகும் .இது 775 K  வரை வெப்பநிலையைத் தாக்குப்பிடிக்கின்றது. குழல் விளக்குகளில் ஊதா நிற ஒளியைப் பெற கால்சியம் டங்ஸ்டேட்டும் வெளிர் ஊதா நிற ஒளிக்கு மக்னீசியம் டங்ஸ்டேட்டும்  பயன்படுகின்றன

                மின்பொறி பிளாஸ்மா (arc plasma ) மூலம் டங்ஸ்டன் கார்பைடு என்ற  வைரத்தை ஒத்த கடினத்தன்மை கொண்ட பொருளைப் படிகமாக வார்க்க முடியும். உலோகப் பரப்பிற்கு வழவழப்பும், பளபளப்பும்தர இதை ஒரு தேய்ப்புப்பொருளாகப் பயன்படுத்து கின்றார்கள் . நகைகளில் வைரங்களுக்குப் போலியாகவும் இதைப் பயன்படுத்துகின்றார் கள். டங்ஸ்டன்-மந்த வளிமம் மின்பொறி பற்றிணைப்பு முறை உலோகங்களைப் பற்றவைத்துப் பொருத்தியிணைக்கப் பின்பற்றப்படுகின்றது .இது செம்பு ,மக்னீசியம் , எஃகு அலுமினியம் போன்றவைகளில் பயனுள்ளதாக இருக்கின்றது .அரிமானத்திற்கு உள்ளாகி விடுபட்டுப் போகக் காரணமாக  இருக்கும் இடுபொருட்களின்றியே பற்றவைக்க  முடிவது இதன் சிறப்பாகும்