Thursday, August 30, 2012

Vethith thanimangal-Chemistry


வேதித் தனிமங்கள் -ஆர்கான் (Argon )-கண்டுபிடிப்பு வளி மண்டலத்தில் உள்ள காற்று பல வளிமங்களின் கலவையாலானது. பரும அளவில் அதில் நைட்ரஜன் 78.09 % ஆக்சிஜன் 20.95 % உள்ளன. இதையடுத்து மந்த வளிமங்களுள் ஒன்றான ஆர்கான் ௦.93 % உள்ளது. கார்பன் டை ஆக்சைடு வெறும் ௦.03 % தான் உள்ளது இதைத் தொடர்ந்து நியான்,ஹீலியம்,கிரெப்பிடான் போன்ற மந்த வளிமங்கள் உள்ளன. மந்த வளிமங்களின் அணுக்களில் எலெக்ட்ரான் கூடுகள், எலெக்ட்ரான்களால் முழுமை பெற்றிருப்பதால் முழுமை பெறவேண்டி, பிற தனிமங்களை நாடி வேதி வினையாற்றுவதில்லை.அதனால் மந்த வளிமங்களின் அணுச் சேர்க்கையினால் வேதிச் சேர்மங்கள் இயல்பான சூழல்களில் இருப்பதில்லை.மந்த வளிமங்களுக்கு வளிமண்டலக் காற்றே மூலமாக இருப்பதால் அதைப் பண்டுவப்படுத்தியே மந்த வளிமங்களைப் பிரித்தெடுக்க வேண்டியதாக இருக்கிறது. 1766 ல் ஹைட்ரஜன் தனிமத்தைக் கண்டுபிடித்த ஆங்கிலேயரான ஹென்றி காவெண்டிஸ் வளிமங்களின் ஊடே மின்னிறக்கம் செய்து அதில் ஆர்கான் இருப்பதை ஒருவாறு ஊகித்தார். எனினும் அது அறிவியல் பூர்வமாக 1894 ல் இங்கிலாந்து நாட்டு இயற்பியல் வல்லுனரான லார்டு ரலே என்பாரால் கண்டுபிடிக்கப்பட்டது.ஸ்காட்லாந்து நாட்டு வேதியியலாரான வில்லியம் ராம்சே ,ஆர்கானை நிறமாலை மூலம் இனமறிந்து வெளிப்படுத்தினார். ஆர்கான் நிறமாலையில் சிவப்பு முனைப் பகுதியில் சிறப்பு வரிகளைப் பெற்றிருக்கிறது கிரேக்க மொழியில் அர்கோஸ் (அர்கோஸ்) என்றால் சோம்பேறி என்றும் மந்தம் என்றும் பொருள். அப்போது புதிதாக இனமறியப்பட்ட ஆர்கான் ,பிற தனிமங்களைப் போல வேதி வினைகளில் ஈடுபடாமல் தனித்திருந்ததால் அதற்கு அப்பெயரிட்டனர். பண்புகள் ஆர்கானின் அணுவெண் 18 அணு நிறை 39.948.இதன் உறை நிலை - 189.2 டிகிரி C ,கொதி நிலை -185.7 டிகிரி C .ஆற்கானின் கொதி நிலை நைட்ரஜனுக்கும் ஆக்சிஜனுக்கும் இடைப்பட்டதாக இருக்கிறது. வர்த்தக அடிப்படையில் காற்றை நீர்மமாக்கி,காய்ச்சி வடித்தல் மூலம் ஆர்கானைப் பிரித்தெடுக்கின்றார்கள்.இதன் அடர்த்தி ௦.166 கிகி/கமீ.ஆர்கான் நீரில் நைட்ரஜனை விட 2.5 மடங்கு கூடுதலாகக் கரைகின்றது .ஏறக்குறைய ஆக்சிஜனின் கரைதிறனுக்குச் சமமாக இருக்கிறது. ஆர்கான் வளிம, நீர்ம நிலைகளில் நிறமற்றதாகவும்,மணமற்றதாகவும் இருக்கிறது. மந்தத் தன்மை காரணமாக இது வேதிச் சேர்மங்களை ஏற்படுத்துவதில்லை என்று நீண்டகாலமாக நம்பப் பட்டது.ஆனால் 2000 ஆண்டில் பின்லாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வேதிச் சேர்மங்களை உருவாக்கிக் காட்டினார்கள்.புளூரின்,ஹைட்ரஜனுடன் சேர்ந்த ஆர்கான் கூட்டுப் பொருள் ஆர்கான் புளுரோ ஹைட் ரைடு (HArF) ஆகும் . இது தீவிரமாக உடைந்து நொருங்கக் கூடியதாகவும் -265 டிகிரி C தாழ்ந்த வெப்ப நிலையில் மட்டுமே நிலைத்திருக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.(ArKr)+,(ArXe)+,(NeAr)+ போன்ற அயனிகளை நிறமாலை மூலம் இனமறிந்துள்ளனர். ஆர்கான்,பீட்டா ஹைட்ரோ குயினோன் உடன் இணைந்து கிளாத் ரேட்டுகளை (Clathrate) உண்டாக்குகின்றன.இவை ஓரளவு கூடுதல் நேரம் நிலைத்திருக்கின்றன.எனினும் ஆர்கான் சேர்மங்களில் உண்மையான வேதிப் பிணைப்புகள் இருப்பதில்லை.வான் டெர் வால் விசை மூலம் அவ்வணுக்கள் ஒன்றிணைந்திருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். பயன்கள் புவி வளிமண்டலத்தில் செழுமை வரிசையில் மூன்றாவதாக அதிக அளவில் கிடைப்பதால்,பிற மந்த வளிமங்களை விட ஆர்கான் உற்பத்தித் துறைகளில் பயன்படுகிறது. இழை விளக்குகளில் பல்புக்குள் உள்ள காற்றை நீக்கா விட்டால்,இழை ஆக்சிஜனுடன் சேர்ந்து எரிந்து விடும் வாய்ப்பைப் பெறும்.இதனால் காற்றை நீக்கி,அதற்குப் பதிலாக ஆர்கானை இட்டு நிரப்புவார்கள்.இதனால் டங்ஸ்டன் இழை அரிமானத்திற்கு உட்படுவது பெரிதும் தவிர்க்கப் படுகிறது.ஆவியாக்கப் படுவதால் பல்பின் உட்சுவர் கருமை பூசப்படுவதும் இதனால் தடுக்கப் படுகிறது.குழல் விளக்குகளிலும் சிறிதளவு ஆர்கானைப் பயன் படுத்துகின்றார்கள் . உலோகங்களைப் பற்ற வைக்கும் வழிமுறையில் மந்த வெளிச் சூழலை ஏற்படுத்திக் கொள்ள ஆர்கான் வளிமம் பயன்படுத்தப் படுகின்றது. டைடானியம் போன்ற வீரிய மிக்க தனிமங்களின் உற்பத்தி முறையில் ஆர்கானைக் காப்புத் திரையாகப் பயன்படுத்தி தூய தனிமத்தைப் பெறுகின்றார்கள். இதே காரணத்தினால் குறைக் கடத்திக்காக உற்பத்தி செய்யப்படும் சிலிகான்,ஜெர்மானியத்தை 100 சதவீதம் தூய நிலையில் பெறமுடிகின்றது. கெய்கர்-முல்லர் எண்ணி (GM Counter) யில் ஆர்கானை இட்டு நிரப்பி ,அதன் வழியாக அயனிக்கும் ஆற்றல் படைத்த கதிர்களைச் செலுத்தும் போது ,சிறிய அளவில் ஏற்படும் மின்னிறக்கத்தை அளவிட்டு கதிர் வீச்சின் வலிமையை அறிகின்றார்கள். பழம் பாறைகளின் வயதை மதிப்பிடும் வழிமுறையில் சிதைவாக்க விளை பொருளாக ஆர்கானின் சம அணு எண்மம் (isotope)உள்ளது .பாறைகளில் 1.25 பில்லியன் ஆண்டுகள் என நீண்ட அரைவாழ்வுக் காலம் கொண்ட பொட்டாசியம்-40 என்ற அணு எண்மம் உள்ளது .இதன் சிதைவினால் ஆர்கான் விளைகிறது பொட்டாசியம் மற்றும் ஆர்கானின் செழுமையை அளவிட்டறிந்து பாறையின் வயதை மதிப்பிட முடியும் .

Wednesday, August 29, 2012

kavithai


வளமான இந்தியா வறுமையான மக்கள் ந்தியாவில் அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள் ருந்தும் நிறைவான அரசியல்தானில்லை ணத்தைக் கொடுத்து பதவியைப் பிடிப்பார்கள் தவியைக் கொண்டு பணத்தைப் பறிப்பார்கள் பிறரறியச் சொல்வதை தெரியச் செய்யமாட்டார்கள் றியாமல் செய்வதை வெளியே சொல்லமாட்டார்கள் காப்பவர் கள்வனானார் காண்பவர் கற்றுத்தேர்ந்தார் ல்லோரும் கள்வனாக இவர்களே காரணமானார் ற்றவனுக்கு பெற்ற கல்வியே தகுதி ழைப்பவனுக்கு உற்ற உடலே தகுதி னைவருக்கும் பதவிக்கு வேண்டும் ஒருதகுதி ரசியல்வாதிக்கு என்றுமில்லை சிறுதகுதி குதி இல்லாதோர் மிகுதியாகிப் போனதால் கதிகளே இங்கே சந்தனம்போல் ஆனது பாராளுமன்றத்தில் படுத்துக் கூட உறங்குவார்கள் பாமரமக்ககளை கனவில் கூட காணமாட்டார்கள் தவிக்காக ஒருவர்மிதொருவர் குற்றம் கூறுவார்கள் க்களுக்காக ஒருநாளும் நன்மை செய்யமாட்டார்கள் சேவையின்றி திட்டங்கள் பல தீட்டுவார்கள் தேவையின்றி வரிப் பணத்தை வீணாக்குவார்கள் முழுதும் செலவானாலும் முன்னேற்றம் இருப்பதில்லை ளமான இந்தியா வறுமைமக்கள் மாற்றமில்லை ந்தியாவில் அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள் ருந்தும் நிறைவான அரசியல்தானில்லை

Monday, August 27, 2012

Vethith Thanimangal-Chemistry


வேதித் தனிமங்கள்- குளோரின் -பயன்கள்
நீரில் குளோரின் கரைகிறது.அதைக் குளோரின் நீர் என்பர்.நீரைக் கொதிக்க வைத்தால் குளோரின் வெளியேறிவிடுகிறது.சூரிய ஒளியில் குளோரின் நீர் ஹைட்ரோ குளோரைடாக மாறுகிறது.அப்போது ஆக்சிஜன் வெளியேறுகின்றது . நீரில் உள்ள நோய்க் கிருமிகள்,தீமை பயக்கும் நுண்ணுயிரிகள் இவற்றைப் பேரளவில் அளிக்க குளோரின் வளிமம் பயன்படுகின்றது.இதனால் குடி நீர் விநியோக முறையிலும் ,நீச்சல் குளத்திலுள்ள நீரைத் தூய்மையூட்டுவதிலும் குளோரினைப் பயன்படுத்துகின்றார்கள் .குளோரின் நுண்ணுயிரிகளை ஓரளவு விரைவாக அழிக்கும் மலிவான பொருளாகும்.எனினும் வைரஸ் எனப்படும் சில நச்சுயிரிகளை குளோரினால் அழிக்க முடிவதில்லை.மேலும் நீரிலுள்ள சில கரிமப் பொருட்களுடன் வினை புரிந்து,புற்று நோய்க் காரணிகளுள் ஒன்றாகக் கருதப் படுகின்ற டிரைகுளோரோ மீத்தேனை உற்பத்தி செய்து விடுகிறது .இதனால் குளோரின் பண்டுவம் குடி நீருக்கு முழுமையான வழி முறை எனக் கூற முடியாது.மேலும் குளோரினால் நீரின் இயல்பான சுவை குன்றிப் போகிறது.இதனால் இன்றைக்கு குளோரினுக்குப் பதிலாக ஓசோனைப் பயன்படுத்துகின்றார்கள் குளோரின் வெளுப்பூட்டியாகச் செயல்படுகின்றது பயனுறுதிறன் மிக்க வெளுபூட்டியின் வளர்ச்சி நீண்ட காலமாக இருந்து வருகிறது. தொடக்கத்தில் குளோரின் நீரே இதற்குப் பயன்படுத்தப் பட்டது.ஆனால் உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் பருத்தி,லினன் ஆடைகளைப் பாதிக்கின்றது .இன்றைக்கு வீடுகளில் பயன்படுத்தப் படும் நீர்ம வெளுபூட்டி சோடியம் ஹைபோ குளோரைட்டின் மென் கரைசலாகும் .குளோரின் வளிமம் காகிதம்,அட்டை போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளில் வெளுபூட்டியாகப் பயன் படுகிறது.பாலி வினைல் குளோரைடு(PVC)போன்ற நெகிழ்மங்களை(Plastic) உற்பத்தி செய்யும் முறையில் குளோரின் ஒரு மூலப் பொருளாகும் .அரிமானத்திற்கு உட்படாததாலும்,எடை குறைந்ததாக இருப்பதால் கையாளுவதற்கு எளிதாக இருப்பதாலும் ,நீர் மற்றும் நீர்மங்களை எடுத்துச் செல்லும் குழாயாக இரும்பிற்குப் பதிலாக இன்றைக்கு நெகிழ்மக் குழாய்கள் பயனில் உள்ளன.கண்ணாடி போன்று நிறமற்ற நெகிழ்மங்கள் நீர்மங்களை வைத்திருக்கும் கொள்கலனாகப் பயன்படுகின்றன பல்வேறு பொருட்களின் உற்பத்தி முறையில் குளோரின் பயன்படுத்தப் படுகின்றது.சாயங்கள்,துணிகள்,பெட்ரோலியப் பொருட்கள்,மருந்துப் பொருட்கள்,நஞ்சுத் தடை மருந்துகள்,பூச்சி கொல்லி மருந்துகள்,உணவுப் பண்டங்கள்,கரைப்பான்கள்,வண்ணப் பூச்சுகள் எனப் பலதரப்பட்ட மக்கள் பயன்பாட்டுப் பொருட்களின் உற்பத்தி முறையில் குளோரினின் முக்கியம் உணரப்பட்டுள்ளது.பயன்களைத் தரும் வேறு பல வேதிப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு குளோரின் ஒரு மூலப் பொருளாகவும் உள்ளது.இவற்றுள் கார்பன் டெட்ரா குளோரைடு,குளோரோபாம் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.எண்ணெய் மற்றும் மசகுப் பொருட்களுக்கு கார்பன் டெட்ரா குளோரைடு ஒரு கரைப்பானாக உள்ளது.துணிகளை நீரில் நனைக்காமலேயே சலவை செய்ய இந்தக் கரைப்பான் பயன்படுகிறது.எனினும் ஈரலுக்கு மிகவும் நஞ்சானது என்பதால் இப் பயன்பாடு மட்டுப் படுத்தப் பட்டுள்ளது.குளோரோபாம் எளிதில் ஆவியாகக் கூடிய நீர்மம்.இது அறுவைச் சிகிச்சையின் போது மயக்கமூட்டும் மருந்தாகப் பயன்படுத்தப் படுகின்றது.இது ஈரல் மற்றும் சிறுநீரகங்களைத் தீவிரமாகப் பாதிக்கின்றது என்பதால் இதைக் கவனமாகக் கையாள வேண்டியது அவசியமாகும். குளிர் சாதனங்களில் உறைபதனப் பொருளாக (refrigerant) குளோரோ புளுரோ கார்பன் நெடுங்காலமாகப் பயன் படுத்தப்பட்டது.ஆனால் இது குளோரினின் தனிக் கூறுகளை (free radical) வெளியிட்டு வளி மண்டலத்தின் மேல் அடுக்குகளில் தங்கி பாதுகாப்புக் கவசமாக விளங்கும் ஓசோன் படலத்தைச் சிதைத்து அழிக்கின்றது என்பதால் இப் பயன்பாடு இன்றைக்குப் புறக்கணிக்கப் பட்டுள்ளது .

Kavithai


நியூட்டனின் இயக்க விதிகள் புறவிசை ஒன்று புரிதலின்றி எப்பொருளும் நிலமிசை நிலை மாற்றமின்றி நீடித்திருக்கும் இயங்கும் நிலையோ இயங்கா நிலையோ ஓய்வு நிலையோ ஓடும் நிலையோ நிலைமாற பொருளின் நிறையே தடையாகும் நியூட்டனின் முதல் இயக்கவிதி இதுவாகும். புறவிசை இன்றி அசைவிலா எப்பொருளும் அறவே இயக்கமின்றி ஓய்ந்து கிடக்கும் புறவிசை இன்றி இயங்கும் அப்பொருளும் சிறிதே மாற்றமின்றி தொடர்ந்து இயங்கும் இயக்கமாற்றம் புறவிசை இருக்குமட்டும் இதுவே இவ்விதிகூறும் பொருளாகும் வேகம் என்பது இடபெயர்ச்சி வீதமாகும் முடுக்கம் என்பது வேகமாற்ற வீதமாகும் செல்லும் திசை மாற்றமும் முடுக்கமே புறவிசைகூட அத்திசை முடுக்கம் கூடுமே புறவிசை குறைய முடுக்கமும் குறையுமே இரண்டாம் இயக்க விதி இதுவாகும் ஒரு நிறைப் பொருட்களில் புறவிசையும் ஒன்றிய முடுக்கமும் நேர்விகிதத் தொடர்பில் வேறு நிறைப் பொருட்களில் தீண்டும் ஒரே புறவிசையால் விளையும் முடுக்கம் நிறைக்கு எதிர் விகிதத்தில் இருக்கும் இதுவே இவ்விதிகூறும் பொருளாகும் விதையொன்று போட்டால் சுரையொன்று முளைப்பதில்லை வினையொன்று புரிந்தால் விளைவின்றி இருப்பதில்லை எறிந்த பந்து எம்பியே தீரும் மூன்றாம் இயக்க விதி இதுவாகும் விழுந்த பந்து வினையென்றால் எழுந்த பந்து எதிர்வினையாகும் வினையிருந்தால் விளைவிருக்கும் விளைவிருந்தால் வினையிருக்கும் வினையும் எதிர் வினையும் சமமே இதுவே இவ்விதிகூறும் பொருளாகும்

Sunday, August 26, 2012

Micro aspects of developing inherent skill-4


மாற்றம் வேண்டும்,மாற வேண்டும் மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாகவும்,உண்மையாகவும் இருக்க வேண்டும். பலர் அப்படி இருப்பதில்லை.சிகை அலங்காரத்தை மாற்றுவதாலோ,கைக் கடிகாரத்தை மாற்றுவதாலோ,பிரஞ்சு பியர்டு வைத்துக் கொள்வதாலோ,வேட்டிக் கரையை மாற்றுவதாலோ ,கும்பிடும் சாமியை மாற்றுவதாலோ ஒருவர் நினைக்கும் மாற்றங்கள் நிஜமாவதில்லை.மாற்றம் வேண்டும் என்பது ஒரு தொடக்கம்.அது தீர்மானமாய் இருக்கும் போது அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வது எளிதாகிறது.அதனால் திறந்த மனதுடன் மாற வேண்டும் என்ற ஒருவருடைய முதல் தீர்மானம் முக்கியமானதாகிறது.அதாவது இப்படி ஒரு தீர்மானம் எடுக்காமல் யாரும் மாற்றத்தின் பாதையில் அடி எடுத்து வைக்க முடியாது.வேறு எந்த மாற்றங்கள் குறிந்து எடுக்கப்படும் முடிவுகளும் செயல் நிலைக்கு வராமல் மனதிற்குள்ளேயே புதைந்து போகும். பெரும்பாலான மக்கள் தீர்மானம் மேற்கொள்ளும் நிலையைத் தாண்டி ஒருபோதும் செல்வதில்லை. மாற்றம் வேண்டும் என்று நினைத்த பலர் மாறிய நிலையை அடையாமல் போவது இதனால் தான். மாற்றங்களை எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கான விளக்கங்கள் முதலில் அம்மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்திற்குப் பிறகே வருகிறது. இத் தீர்மானம் மாற்றத்தை அடைவதற்கான வழிமுறைகளைத் தீர்மானிக்கத் தேவையான நுண்ணறிவையும் ,செயல் திறனையும் தருகின்றது இலக்கைச் சரியாகத் தீர்மானித்தவன் அதை எட்டும் வழியை எளிதாகத் கண்டுபிடித்து நடைமுறைப்படுத்தி விடுகிறான் மாற்றம் தொடர்பாக எடுக்கும் ஒரு தீர்மானம் தவறாகக் கூட இருக்கலாம் தவறான தீர்மானத்தை எடுப்பது தவறில்லை ஆனால் தீர்மானமே எடுக்காமல் இருப்பதுதான் தவறாகும் ஏனெனில் தவறான ஒரு தீர்மானத்தை பிற்பாடு திருத்திக் கொள்ள முடியும் ,இல்லாத தீர்மானத் தில் அப்படியொரு அனுகூலமில்லை. தவறுகள் அனுபவங்களினால் கற்றுக்கொள்ளும் பாடங்கள்.இந்தப் பாடத்தைப் படித்தவன் வாழ்கையில் அதுபோன்ற தவறு மீண்டும் வருவதேயில்லை.ஆனால் தவறுகளின்றி வெற்றி பெற்றவன் வாழ்கையில் தவறுகள் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது.ஏனெனில் செய்யாத தவறுகளினால் எதையுமே முழுமையாகக் கற்றுக் கொள்ள முடியாது பலர் விரிவான திட்டங்களைத் தீட்டுவார்கள் ஆனால் அதற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.அதனால் அவர்களுடைய முயற்சியில் எந்தவிதமான முன்னேற்றத்தையும் காண மாட்டார்கள்.நீண்ட காலமாகத் தொடரும் தீர்மானமின்மை அவநம்பிக்கை,சந்தேகம்,பயம் போன்ற அகத்தடைகளை ஊக்குவித்து ஒவ்வொருவரும் அவர்களாலேயே தோற்றுப் போகச் செய்யும். ஓடாத காருக்கு திசை தெரியவேண்டியதில்லை.ஆனால் அந்தக் கார் ஓடத் தொடங்கினால் அதற்கு செல்லும் திக்குத் தெரிய வழிகாட்டல்கள் கிடைக்கின்றன. அதுபோல ஓய்வாக உட்கார்ந்திருப்பவனுக்கு வழிகாட்டிகள் தேவையில்லை,அவன் எண்ணத்தில் அவைகள் தோன்றுவதுமில்லை.ஆனால் வண்டியில் பயணம் செய்து இயக்கத்திலிருப்பவனுக்கு செல்லும் திசை தெரியவேண்டும்.இலக்கை நோக்கி இயங்கத் தொடங்கியதுமே வழிநெடுக வழிகாட்டல்கள் கிடைக்கிறன.ஓய்வு நிலையிலிருந்து இயக்க நிலைக்கு மாறிக்கொள்ளும் போது இந்த வழிகாட்டுதல்கள் நமக்குள்ளே இயல்பாகத் தோன்றுகின்றன. அது மாற வேண்டும் என்ற உறுதியான தீர்மானம் தந்த ஆற்றல்.மாற வேண்டும் என்று எப்பொழுது உறுதியான,உண்மையான தீர்மானம் எடுத்துவிட்டோமோ அப்பொழுதே வெற்றி நிச்சியமாகி விடுகிறது என்று இதனால்தான் கூறுகின்றார்கள்.

Saturday, August 25, 2012

Mind without fear


மரம் -சமுதாய வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒரு பாடம் எப்பொருளும் அப்படியே தனித்திருந்தால் அப்பொருளால் யாருக்கும் பயனில்லை. யாருக்காவது பயன் தருமாறு தன்னை மாற்றிக் கொள்ளாதவரை அதற்கும் பெருமையில்லை. விதை விதையாகவே விழுந்து கிடந்தால் அதற்கும் வாழ்க்கை இல்லை அதனால் பிறருக்கும் பயன் இல்லை. அதனால் விதை வேர் விட்டு ,துளிர் விட்டு முழித்துப் பார்க்கிறது.இது யாருக்காக ? நிலத்திலிருந்து நீரையும் காற்றிலிருந்து கார்பன்டை ஆக்சைடையும் உறிஞ்சி எடுத்துக் கொண்டு வளர்கிறது.இது யாருக்காக ? பருவத்தில் பூப் பூத்து,காய் காய்த்து விளைச்சலைத் தருகிறது. இது யாருக்காக ? எல்லாம் சாகாத சமுதாயத்திற்காக,உலகில் உயிர் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் பயன் தருவதற்காக. மரத்தின் நோக்கமே மற்றவர்களுக்கு பயன் தருவதுதான் .அது வேர் விட்டு துளிர் விட்டுச் சின்னச் செடியாக இருக்கும் போதே மக்களுக்கு ப் பயன்பட வேண்டும் என்று விரைந்து செயல் பட்டிருந்தால் விளைச்சலைத் தாங்க முடியாது முறிந்து மடிந்து போயிருக்கும். தான் வழங்கும் பயன் உறுதியானதாக இருக்கவேண்டும் என்பதற்காக அது பயன் தரும் காலம் வரை தன்னை வளர்த்துக் கொள்ள பொருளை உறிஞ்சி எடுத்துக் கொண்டு தன்னைத் தகுதிப் படுத்திக் கொள்கிறது .பயனீட்டும் காலம் வந்தவுடன் பிறருக்குப் பயன் தருவதற்காக மட்டுமே பொருளை உறுஞ்சிக் கொள்கின்றது . ஆனால் மனிதர்கள் மாறுபட்டிருக்கின்றார்கள். சாகாத சமுதாயத்தை நிரந்தர நோயாளியாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் .வளரும் போது வளர்வதற்காகவும் வாழும் போது வசதிக்காகவும் பொருளை உறிஞ்சிக் கொள்கிறார்கள் .சிலர் வளரும் போதே வசதியைத் தேடுகிறார்கள் . யாரும் பிறரின் பயன்பாட்டிற்காக வளர்வதில்லை. எங்கு நோக்கினும் மரங்கள் இருந்தும் அவை மனிதர்களின் சிந்தனைத் தீண்டவில்லை என்றால் மனிதன் வழித் தடம் மாறி விட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்

Friday, August 24, 2012


சின்னச் சின்னத் தோல்விகளால் மனம் துவண்டு சிலர் வாழ்கையை வெறுத்து தற்கொலைக்கு முயல்வார்கள்.இவர்களுக்காக பெரியோர்களால் சொல்லப்பட்ட வார்த்தைகளே ' வாழ்க்கை வாழ்வதற்கே’. இது எல்லோராலும் வழக்கமாகச் சொல்லப்படும் வசனம் என்று தனித்த சொற்களாக மட்டுமே அறியப்படுவதால் அதன் உட் பொருளைப் புரிந்து கொண்டு வாழப் புறப்பட்டவர்கள் குறைவு. வாழ்க்கை என்பது பிறருக்குப் பயன் தருவதற்காக நம்மைத் தகுதிப் படுத்திக் கொள்ளும் வழி முறைதான். ஒரு இளைஞன் வாழ்கையை வெறுத்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன் தொலைவிலுள்ள ஒரு குன்றை நோக்கிச் சென்றான்.வழியில் ஒரு வயதான பெரியவரைச் சந்தித்தான். அவரிடம் தன் சோகக் கதையைச் சொல்லி தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூற அவரும்,"சரி வா,நானும் உன் கூடசாகும் வரை துணைக்கு வருகிறேன் என்று சொல்லி விட்டு அவனுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினார் அங்கிருந்த ஒரு பள்ளத்தாக்கில் ஒருவன் மண்ணை த் தோண்டி அள்ளி வண்டியில் கொட்டிகொண்டிருந்தான் . அதைப் பார்த்த பெரியவர் அந்த மண்தோண்டியைப் பார்த்து " ஏன் இந்த மண்ணை அள்ளிச் செல்கிறாய் ?" என்று கேட்டார். அதற்கு அவன் கூறினான் " இந்த மண்ணில் இரும்பு இருக்கிறது " என்றான். இதைக்கேட்ட தற்கொலைக்குத் துணிந்த அந்த இளைஞன்,"இரும்பா ,இதுவும் சாதாரண மண் போலத்தானே இருக்கிறது " என்றான். அதற்கு அந்த மண்தோண்டி " இதில் இரும்பு கலந்திருக்கிறது .மண்ணை நீக்கி விட்டு பிரித்தெடுத்தால் தூய இரும்பு கிடைக்கும்" என்றான். இளைஞனும் பெரியவரும் குன்றை நோக்கி நடையைத் தொடர்ந்தனர் வழியில் ஒரு பட்டறையில் கருமான் இரும்பைச் சுட்டு பலவிதமான பொருட்களைச் செய்து கொண்டிருந்தான். அதைக் கண்ட பெரியவர், “இரும்பைக் கொண்டு ஏன் இப்படி பொருட்களைச் செய்கிறாய்?“என்று கேட்டார் .”இரும்பைச் சுட்டால் அது வளைந்து கொடுக்கும். அதைக்கொண்டு நமக்கு வேண்டியவாறு உருமாற்றம் செய்து பொருட்களைத் தயாரிக்கலாம்” என்றான். இன்னும் கொஞ்ச தூரம் சென்ற பின் அங்கே ஒருவன் கோடாரியால் மரம் வெட்டிக் கொண்டிருந்தான், மற்றொருவன் ரம்பத்தால் மரத்தை அறுத்துக் கொண்டிருந்தான்.அருகில் சில பெண்கள் சட்டியில் உணவு சமைத்துக் கொண்டிருந்தனர். ஒருவன் வண்டியில் வெட்டிய மரங்களை ஏற்றிக் கொண்டிருந்தான். அவர்களைப் பார்த்து பெரியவர்,“இந்த இளைஞன் தற்கொலை செய்து கொள்ளப் போய்க்கொண்டிருக்கிறான் .நீங்கள் ஏன் தற்கொலை செய்து கொள்ள முயலவில்லை?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் ,எங்களுக்கு இன்னும் நிறைய வேலை இருக்கிறது.அதைப் பற்றி யோசிப்பதற்கே நேரமில்லை” என்று கூறினார்கள். பெரியவர் அந்த இளைஞனைப் பார்த்து”நிலத்தில் மடிந்து கிடந்த இரும்பே உழைக்கும் கரங்களில் வாழ நினைக்கும் போது நீ மட்டும் ஏன் சாக நினைக்கிறாய் என்று கேட்டார்.எண்களும்,எழுத்துக்களும் தனித்தே இருந்தால் யாருக்கும் யாதொரு பயனுமில்லை .அவை ஒன்று கூடி கணக்காகவும் ,சொற்களாகவும் மாறினால் தான் பயன்.பயன் தருவதற்காக உருவாக்கப் பட்டவைகளே எண்களும், எழுத்துக்களும். வாழ்க்கையின் இரகசியமும் அதுதான்.சாகாத சமுதாயத்திற்குப் பயன் தருவதற்கென்றே பிறந்தவர்களே மனிதர்கள்.நீ ஏன் இன்னும் எண்ணாகவும் எழுத்தாகவும் இருக்கிறாய். கணக்காகவும், சொல்லாகவும் மாறிப் பார் .வாழ்கையின் பொருள் விளங்கும்” என்று கூறினார் குன்றின் மீதேறிய இளைஞன் அடிவாரத்தில் சிறியதாய்த் தெரியும் பெரிய மரங்களைப் பார்த்தான்.சலசலப்புடன் அசைந்த இலைகள் அவனைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது.வாழ்கையின் பொருள் புரிந்து கொண்டவன் போல அவனும் சிரித்தான்

Vethith thanimangal - Chemistry


வேதித் தனிமங்கள்- குளோரின் -கண்டுபிடிப்பு ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானியான காரல் வில்ஹெம் ஷீலே(Carl Wilhelm Scheele) 1774 ஆம் ஆண்டில் பைரோலுசைட் என்ற கனிமத்தை ஆராய்ந்த போது குளோரினைக் கண்டுபிடித்தார். ஆனால் அப்போது இது தவறுதலாக ஆக்சிஜன் சேர்ந்த ஒரு சேர்மம் என இனமறியப்பட்டது 1810 ல் சர் ஹம்ரி டேவி இந்த வளிமத்தின் தனித் தன்மையை நிறுவினார் .இதற்கு குளோரின் என்று பெயர் சூட்டியவரும் இவரே.கிரேக்க மொழியில் குளோரோஸ்(Chloros )என்றால் மஞ்சள் கலந்த பசுமை நிறமுடைய என்று பொருள் குளோரின் இயற்கையில் தனித்துக் காணப்படுவதில்லை. ஆனால் பெருமளவு குளோரைடு உப்புக்களாக உறைந்துள்ளது. பாறை உப்புக்களிலும் கடல் நீரிலும் சோடியம் குளோரைடு பெருமளவு உள்ளது உற்பத்தி முறை ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மாங்கனீஸ் டை ஆக்சைடு போன்ற ஆக்சிஜனூட்டி மூலம் ஆக்சிஜனேற்றம் செய்து குளோரினைப் பெறலாம். சோடியம் குளோரைடு,மாங்கனீஸ் டை ஆக்சைடு மற்றும் 50 % கந்தக அமிலம் இவற்றின் கலவையைக் கொண்டும் குளோரினை உற்பத்தி செய்யலாம்.வெளுப்புக் காரத்தில் (Bleaching powder) தெவிட்டிய ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை விட்டும்,அடர் மிகு ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும்,பொட்டாசியம் பெர் மாங்கனேட்டையும் வினைபுரியச் செய்தும்,கரித் தண்டுகளாலான மின்முனை வாய்களை அடர் மிகு ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் வைத்து மின்னார் பகுப்பு செய்தும் குளோரின் வளிமத்தைப் பெறலாம் பண்புகள் Cl என்ற வேதிக் குறியீட்டைக் கொண்டுள்ள குளோரினின் அணு வெண் 17 , அணு நிறை 35.45 .வளிம நிலையில் இதன் அடர்த்தி 3.21 கிகி/கமீ.இது ஈரணு மூலக்கூறுகளால் ஆனது. நச்சுத் தன்மை கொண்டது. இதன் உறை நிலை 172.2 K,கொதி நிலை 239.1 K ஆகும். முதல் உலகப் பெரும் போரின் போது போர்க்களத்தில் குளோரின் ஒரு நச்சு வளிமமாக ஐரோப்பாவில் பயன்படுத்தப் பட்டது.சிறிதளவு குளோரினைச் சுவாசித்தாலும் அது நுரையீரலைத் தீவிரமாகப் பாதிக்கின்றது. குளோரின் நீர்மம் தோலில் எரிச்சலூட்டி புண்ணாக்குகின்றது 3.5 ppm (part per million) இருந்தால் குளோரினின் நமச்சலூட்டும் மனத்தை உணரலாம்.1000 ppm இருந்தால் ஒரு சில சுவாசித்தலில் இறக்க நேரிடும்.காற்றில் அனுமதிக்கப் பட்ட இதன் அளவு 1 ppm ஆகும். குளோரின் ,ஹாலஜன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வளிமம். இது ஆக்சிஜன் போல தீவிரமாக வினை புரிய வல்லது (ஆனால் வறண்ட குளோரின் மந்தமானது ) பெரும்பாலான உலோகங்களுடன் இணைந்து குளோரைடுகளைத் தோற்று விக்கின்றது.பாஸ்பரஸ்,கந்தகம்,சோடியம் குளோரினில் பிரகாசமாய் எரிகின்றன.பொடி செய்யப்பட்டு சூடுபடுத்தப் பட்ட ஆர்செனிக் மற்றும் ஆண்டிமணி பொடியை இவ் வளிமத்தில் தூவ நெருப்புப் பொறி மழை போலப் பொழிகிறது.செம்பு இழை இவ்வளிமத்தில் எரிகின்றது.ஆக்சிஜன்,நைட்ரஜன்,கார்பன் போன்ற உலோகமற்றவைகளுடனும் குளோரின் வினை புரிகின்றது ஹைட்ரஜனுடன் கலந்து சூரிய ஒளியில் வைத்தால் சத்தத்துடன் வெடிக்கின்றது.ஹைட்ரஜன் வளிமத்தை குளோரின் வளிமத்தில் பீச்ச அல்லது குளோரின் வளிமத்தை ஹைட்ரஜன் வளிமத்தில் பீச்ச எரிகிறது ஹைட்ரஜன் மீது குளோரின் கொண்டுள்ள நாட்டம் அளவில்லாதது. அதனால் ஹைட்ரஜனீக்கம் செய்ய குளோரின் பயன்படுகிறது. தண்ணீர், ஹைட்ரஜன் சல்பைடு,டர்பன்டைன் போன்ற வற்றிலுள்ள ஹைட்ரஜனை எளிதாக அகற்றி விடுகிறது.குளோரின் வெளியில் எரியும் மெழுகுவர்த்தி புகையை எழுப்புகிறது .

Thursday, August 23, 2012

Cartoon


கார்ட்டூன் இந்த மாதம் முழுக்க மின்சாரம் விநியோகம் இல்லையே.இன்றைக்கு மாதாந்திரப் பராமரிப்பு என்று மிதடை என செய்தி கொடுத்துள்ளீர்களே மின்சாரத்தால் பயன் தரும் கருவிகளை மக்களுக்கு மிகத் தாராளமாய் அறிமுகப் படுத்தி விட்டு இப்பொழுது மின்சாரம் பற்றாக் குறை என்று சொன்னால் மக்கள் எங்கே போய் முறையிடுவார்கள்.இப் போக்கு மின்சாரத்தில் மட்டும் இல்லை.காஸ் அடுப்பு எல்லோரும் வாங்கிய பிறகு LPG சிலிண்டர் இல்லை.கார்,மோட்டார் சைக்கிள் ,ஸ்கூட்டர் என வண்டிகள் வாங்கிய பின் ஓட்டுவதற்கு பெட்ரோல் இல்லை.மாற்று வழி முறைகளைப் பற்றியே சிந்திக்காத இந்தியா ஆற்றல் தட்டுப் பாட்டால் எதிர்காலத்தில் வன்மையாகப் பாதிக்கப் படலாம் .போக்குவரத்துக் காண ரோடுகளும் கூடுதல் வண்டிகளுக்கு எதுவாக புதிப்பிக்கப் படவில்லை.உபரி நீரை பயன்படுத்தும் வழி முறைகளும், பற்றாக்குறைக்கு கடல் நீரை குடி நீராகப் பயன்படுத்தும் வழி முறைகளும் விரிவாகப் பயன்படுத்திக் கொள்ளப் படவில்லை.தட்டுப்பாடு வரம்பு மீறிச் செல்லும் போது நம்முடைய கொஞ்ச நஞ்ச ஒற்றுமையும் காற்றோடு போய்விடும் அபாயம் இருக்கிறது .

Eluthatha Kaditham


எழுதாத கடிதம்
இந்தியா முயன்றாலும் முன்னேறுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றுதான் சொல்வேன்.முன்னேற்றம் என்பது பொது ஒழுக்கத்தோடு தொடர்புடையது.சுய ஒழுக்கத்தால் பொது ஒழுக்கம் இன்றைக்கு மிகவும் சீர்கெட்டு வருகிறது. குழந்தைகள் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவ மனைகள்,பள்ளிக் கூடங்கள்,திருவிழாக் கூட்டங்கள்,பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து குழந்தைகளைக் கடத்தி சொற்பத்தொகைக்கு விற்றுவிடுகின்றார்கள் அல்லது மறைத்து வைத்திருந்து விடுவிக்க பெரிய தொகை கேட்கிறார்கள்.தான் வாழ இந்த கடத்தல் குழந்தைகளைக் கொடுமைப்படுத்தி பிச்சை எடுக்க விடுகிறார்கள் குழந்தைத் தொழிலாளிகளுக்குப் பிறப்பிடமே இந்த கடத்தல் தான்.பாலியல் தொழிலுக்காகவும்,வீடுகளிலும் குவாரிகளிலும் அடிமைகளாய் வாழ்நாள் முழுதும் வேலை செய்வதற்காகவும், பெண்கள் மற்றும் படிக்காத சிறுவர்களை கடத்துவதும் இன்றைக்கு அதிகரித்து வருகிறது. பிச்சைக் காரர்கள் இல்லாத இயல்பு நிலையை உருவாக்க முடியாத ஆட்சியாளர்களால் இந்தியாவிற்கு உண்மையாக என்ன முன்னேற்றத்தைக் கொண்டு வரமுடியும்?
தங்கம்,வெள்ளி மற்றும் விலையுயர்ந்த பொருட்களையும்,பணத்தையும் வீடு,கடை புகுந்து கொள்ளை அடிப்பது அதிகரித்து வருகிறது.இரவில் பெண்கள் பயமின்றி தெருக்களில் நடமாடமுடிந்தால்அன்றைக்குத்தான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் என்று காந்தி அடிகள் சொன்னார்கள்.ஆனால் இன்றைக்கு பகலில் கூட ஆண்கள் பயமின்றி நடமாட முடியாத சூழல் நிலவுகிறது.கூட்டமாய் பட்டப் பகலில் வீடு புகுந்து கொள்ளையடிப்பது ,கார் மோட்டார் சைக்கிள் களில் வந்து மறித்து த்தாக்கி பொருளை அபகரிப்பது போன்ற குற்றங்கள் பெருகியுள்ளன.களவுகளில் 10 % மட்டுமே வெளியே தெரிய வருகின்றன. தெரிய வருவதில் 30 % மட்டுமே உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுகின்றார்கள் .கண்டுபிடிக்கப்பட்டாலும் இழந்ததை முழுமையாக மீட்டுப் பெற முடிவதில்லை. எங்கே இருக்கிறது நம் முன்னேற்றம் ? வேலையில்லாதவர்கள், உழைக்காமலேயே சொகுசாய் வாழ ஆசைப்படுபவர்கள்,வறுமையை விரட்ட வழி தெரியாதவர்கள், முன்னேறுவதற்கு வாய்ப்பு மறுக்கப் பட்டவர்கள், தற்பெருமைக்காக விளையாட்டாய் ஆரம்பித்து பின் அதையே தொழிலாக்கிக் கொண்டவர்கள் போன்ற கீழ்தர மக்கள் பெருகிப் போன நிலையையே இது சுட்டிக்காட்டுகிறது. வேலை வாய்ப்பு பெருகா விட்டால் இந்நிலை நிலைப்பட்டு விடுவதுடன் இன்னும் தீவிரமடையும் . பரிணாம வளர்ச்சியை ஒருபோதும் பின்னுக்கு எடுத்துச் செல்ல முடியாது என்ற அறிவியல் உண்மையை நம் அரசியல் வாதிகள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர் . நேர்மையை மூட்டை கட்டி வைத்து விட்ட வர்த்தகர்கள் புற்றீசல் போல பல்கிப் பெருகி விட்டார்கள். மக்களை அவர்கள் கண் முன்னாலே ஏமாற்றுவது இவர்கள் சாமர்த்தியம்.எடைக் குறைவாக, தரக் குறைவாக பொருட்களையும், கலப்படப் பொருட்களையும் கூடுதல் விலைக்கு விற்று பிழைக்கும் புண்ணியவான்கள்.சட்டம் கண்ணை மூடிக்கொள்வதாலும்,சட்டத்தை விலைக்கு வாங்க முடிவதாலும் இப்போக்கு பெருகி வருவதைத் தடுக்க வழி தெரியாது மக்கள் நொந்து நூலாகி விட்டார்கள். வீடு கட்டி கட்டடப் பொறியாளரிடம் ஏமாறாத மக்களே இருக்க முடியாது. அரசு அலுவலங்களில் அன்பளிப்பு கொடுக்காமல் காரியத்தை முடித்து விட்ட மனிதர்களே இல்லை. நான் சொல்வதே திட்டம் , நான் செய்வதே சேவை என்று சொல்லும் அரசியல் வாதிகளின் தற்பெருமையால் நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவதற்குப் பதிலாக சறுக்கிக் கொண்டிருக்கிறது.இந்தியர்களின் மதிப்பீட்டில் இந்தியா தரப் பட்டியலில் முன் வரிசையில் இருக்கலாம். ஆனால் நம்மைப் பற்றி மற்றவர்களின் மதிப்பீட்டில் நாம் வெகுவாகத் தாழ்ந்திருக்கிறோம் .நாமை விடத் தாழ்ந்தவர்களைப் பார்த்து நாம் திருப்பதிப் பட்டுக் கொள்வதால் இதைப் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை. உண்மையான வேலை வாய்ப்புக்களை உருவாக்கி உண்மையான முறையில் மக்களுக்கு வழங்காவிட்டால் ,அரசு அதிகாரிகள் மூலம் மக்களுக்கு எதிரான தவறுகளைக் கண்காணித்து களையாவிட்டால், மக்களுக்குத் தொண்டு செய்ய முன் வருவோர் சுய ஒழுக்கம்,கட்டுப்பாடோடு சேவை புரியாவிட்டால் அரசு-சட்டம்-காவல் இவை மூன்றும் நேர்மையாகச் செயல்படாவிட்டால் இந்திய மக்களுக்கு விடிவு காலம் என்பதே இல்லை.

Tuesday, August 21, 2012

Vethith thanimangal - Chemistry

வேதித் தனிமங்கள்-கந்தகம்-பயன்கள் கந்தகம் துப்பாக்கி வெடி மருந்தாகவும்,இயற்க்கை இரப்பரைக் கடினப்படுத்தும் வலி முறையில் ஒரு வேதிப் பொருளாகவும்,புகைப் படலத்தை ஏற்படுத்தி போராட்டக் கும்பலைக் கலைக்கவும் பயன் படுகின்றது.கந்தகஅமிலம்,சல்பேட் உரங்கள் தயாரிப்பில் கந்தகத்தின் பங்களிப்பு குறிப்பிடத் தக்கது.வறண்ட பழங்களை வெண்மையூட்டுவதற்கும்,வானவேடிக்கைக்கான வெடி பொருட்களைத் தயாரிப்பதற்கும்,தீக்குச்சிகளை உற்பத்தி செய்வதற்கும் பயன்படுகிறது.கால்சியம் பை சல்பைட்டை மரக் கூழ்களை வெண்மையூட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்கள்.பூஞ்சனம் படர்வதை கந்தகம் மட்டுப்படுத்துகிறது அதனால் மருந்து தயாரிக்கும் வழி முறையில் இது பெரிதும் நன்மை பயக்கிறது. மரத்தாலான பொருட்களைப் பாதுகாக்க மலிவான சாயங்களை கந்தகத்தைக் கொண்டு தயாரித்து பயன்படுத்துகிறார்கள் கந்தகம் உயிர்ப் பொருட்களின் வளர்ச்சிக்குத் தேவையானதாக உள்ளது. ஒவ்வொரு உயிர்ச் செல்லிலும் குறிப்பாக தோல்,நகம் மற்றும் முடிகளில் கந்தகம் உள்ளது சைஸ்டைன்(cysteine)மற்றும் மெத்தியோனைன்(Methionine)போன்ற கந்தகம் அடங்கிய அமினோ அமிலங்கள் மூலமாக புரோட்டீன் உணவுப் பொருட்களிலிருந்து கந்தகத்தை உடல் பெறுகிறது. பி வைட்டமின்களில் (தையாமின்,பண்டோதினிக் மற்றும் பயோடின்)கந்தகம் உள்ளடங்கி இருக்கிறது.வெங்காயம்,வெள்ளைப் பூண்டில் கந்தகம் ஓரளவு அடங்கி இருக்கிறது. கந்தகத்தின் முக்கியமானதொரு வர்த்தகப் பயன் இரப்பரை வலுவூட்டலாகும் (vulcanization ).
இரப்பர் மூலக்கூறுகள் கந்தக அணுக்களைக் கவரும் தன்மை கொண்டன.இரப்பரின் கடினத் தன்மை அதில் சேர்க்கப்படும் கந்தகத்தின் அளவைப் பொறுத்தது.கூடுதல் வலிமையுடைய இரப்பர் மீள் திறன் மிக்கதாக இருப்பதால் பஸ்,கார்,விமானம்,இராணுவ வண்டிகள்,கனரக வண்டிகள் இவற்றிற்கான சக்கரங்கள் செய்யப் பயன்படுகிறது .

Monday, August 20, 2012

Cartoon

cartoon அமைச்சர்: அரசே, நாட்டில் விலைவாசி உயர்ந்து வருவது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக நேற்று கூறியதைக் கேட்டு மக்கள் கொதித்துப் போயிருகின்றார்கள் . அரசன் : விவசாயிகளுக்கு க் கூடுதல் இலாபம் கிடைக்கும் என்பதற்காக அப்படிச் சொன்னேன் . நம் நாட்டில் அரசியல் தலைவர்கள் இப்படியும் சொல்லலாம் முன்னர் :பால் விலை யை உயர்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது. பின்னர் : பசு மாடுகளுக்கு கூடுதல் தீவனம் வாங்கிக் கொடுக்கலாமே என்பதற்காகச் சொன்னேன் . முன்னர்: பெட்ரோல் விலை அதிகரித்தது மன மகிழ்ச்சி யளிக்கிறது பின்னர்: அதனால் கார் வாங்குவோர் குறைய சாலை விபத்துக்களும் குறையும் என்பதற்காகச் சொன்னேன். முன்னர்: ரயில் கட்டணம் உயர்த்தியது நல்லதற்கே பின்னர்: ரயில் பெட்டிகளில் கரப்பான் பூச்சி மூட்டைப் பூச்சி இல்லாமல் சுத்தப்படுத்த பயன்படும் என்பதற்காகச் சொன்னேன். முன்னர்: மின்சாரக் கட்டணத்தை க் கூட்டியது மகிழ்ச்சியளிக்கிறது. பின்னர்: மின்சாரத்தைக் குறைவாகப் பயன் படுத்துவதால் இனி மின் கசிவால் தீ விபத்துகள் இல்லாதிருக்கும் என்பதற்காகச் சொன்னேன்.

Sunday, August 19, 2012

Vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள்-கந்தகம்-கண்டுபிடிப்பு கந்தகம் தனித்தும்,சேர்மமாகவும் பூமியில் கிடைப்பதால் இதை வேதித் தனிமமாக அறிவதற்கு வெகு காலம் முன்பே மக்கள் இதைப் பயன்படுத்தத் தெரிந்திருந்தார்கள்.கிரேக்கர்களும்,ரோமர்களும் கந்தகத்தை புகை உண்டாக்கப் பயன்படுத்தினார்கள்.வீட்டில் தொற்று நோய்க் கிருமிகளைக் கொல்ல இப் புகையை எழுப்பினார்கள்.கார்பன் போல் வான வேடிக்கைப் பொருட்களில் இதைப் பயன்படுத்தியுள்ளனர்.கந்தகம்,கரித்தூள்,சால்ட்பீட்டர்(Pottasium Nitrate) இவற்றை 1 :2 :6 என்ற விகிதத்தில் கலந்து துப்பாகிகளில் வெடிமருந்தாகப் பயன்படுத்தினர்.இது இன்றைய சேர்மான விகிதத்திலிருந்து சிறிதே மாறுபட்டிருக்கிறது . கந்தகத்தின் தனித் தன்மையை லவாய்ச்சியர் தெரியப்படுத்தினார். கந்தகம் என்ற பெயரின் மூலம் ‘சுல்வாரி’ என்ற வடமொழிச் சொல்லாகும். இதற்கு 'செம்பின் எதிரி ' என்று பொருள்.செம்பையும்,கந்தகத்தையும் சேர்த்து சூடுபடுத்தும் போது செம்பு அழிகிறது என்ற உண்மையைத்தெரிந்து வைத்துக் கொண்டு இப்பெயரிட்டனர் போலும். இது லத்தீன் மொழியில் ‘சல்பூரியம்’ எனப் பெயர் மாற்றம் பெற்றது கந்தகம் தனிமமாக எரிமலைக் குழம்பு உறைந்த பாறைகளில் கிடைக்கிறது. வியாழனின் துணைக் கோளான அயோ (Io) வில் எரிமலையிலிருந்து வெளியேறிய கந்தகப் பொருட்கள் பல நூறு கிலோமீட்டர் தூரம் வரை உறைந்துள்ளது. அதனால் அது பிரகாசமான சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்திட்டுக்களைப் பெற்றுள்ளது. பொதுவாக கந்தகம் பல தனிமங்களோடு சேர்வதால் அவற்றின் சல்பைடு மற்றும் சல்பேட்டுக்களாகக் கிடைக்கின்றது.வெப்ப நீர் ஊற்றுக்களில் கந்தக்கம் சேர்ந்திருக்கிறது. பெட்ரோலிய எண்ணெய் மற்றும் எரி வளிமத்தோடு கலந்திருக்கிறது. பண்புகள் கந்தகம் வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட,மணமற்ற,எளிதில் உடைந்து நொருங்கக் கூடிய திண்மமாகும்.இது நீரில் கரைவதில்லை என்றாலும் கார்பன் டை சல்பைடில் கரைகிறது. S என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய கந்தகத்தின் அணு எண் 16; அணு நிறை 32.06;அடர்த்தி 2070 கிகி/கமீ .இதன் உருகு நிலையும்,கொதி நிலையும் முறையே 386,717.8 K ஆகும். திண்ம,நீர்ம,மற்றும் வளிம நிலைகளில் தனிமக் கந்தகம் பல வேற்றுருக்களைக் கொண்டுள்ளது.இது அதன் வடிவங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருக்கிறது.சாய் சதுரமுகி அல்லது எண்முகி (Rhombic or octohedral) அல்லது ஆல்பா கந்தகம் என்ற வேற்றுருவைப் பெற கந்தகத்தைக் கார்பன் டை சல்பைடில் கரைத்து வடிகட்டி காற்றில் உலரவைத்துப் பெறுகின்றார்கள் . இது வெளிர் மஞ்சள் நிறப் படிகமாகவும் 2060 கிகி/கமீ என்ற அளவில் அடர்த்தி கொண்டதாகவும் 112.8 டிகிரி C உருகு நிலையும் கொண்டிருக்கிறது.இது அறை வெப்ப நிலையில் நிலையாக இருக்கிறது. ஒற்றைச் சாய்வுடைய (monoclinic) அறுங்கோணமுகி (Prismatic) அல்லது பீட்டா கந்தகம் என்ற கந்தகத்தை அதன் உருகு நிலையில் உருக்கி புறப்பரப்பு உறையுமாறு குளிர்வித்து திண்மமாய் உறைந்த பகுதியில் ஒரு சிறிய துளையிட அதன் வழியாக வெளியேறுபடி செய்வார்கள்.இது கொள்கலனின் சுவர்களில் ஊசிப் படிவுகளாகப் படியும். இதன் நிறம் சற்று அழுத்தமான மஞ்சளாக உள்ளது.அடர்த்தி சற்று குறைந்து 1960 கிகி/கமீ ஆகவும்,உருகு நிலை சற்று அதிகரித்து 119.25 டிகிரி C ஆகவும் உள்ளது . நெகிழ்மக் கந்தகம் (Plastic sulfur) அல்லது காமாக் கந்தகம் இரப்பர் போன்ற தன்மையையும் ஒளி ஊடுருவிச் செல்லக் கூடிய தன்மையையும் கொண்டுள்ளது.கந்தகத்தை உயர் வெப்ப நிலைக்கு உருக்கி திடீரென்று குளிர் நீரில் குளிர்வித்து இதைப் பெறுகின்றார்கள். இதன் அடர்த்தி 1920 கிகி/கமீ.இது பிற கந்தக வேற்றுருக்களைப் போல கார்பன் டை சல்பைடில் கரைவதில்லை.நீண்ட நேர படு நிலைக்குப் பின் கந்தகம் ஒளிபுகா,உடைந்து நொருங்கக் கூடிய வெளிர் மஞ்சள் நிறப் பொருளாக மாற்றமடைகின்றது.நெகில்மக் கந்தகத்தை கந்தகத்தின் உண்மையான வேற்றுரு இல்லை என்று சொல்வார்கள்.படிக உருவமற்றவை(amorphous),மிதமக்(colloidal)கந்தகம் எனவும் கந்தகத்தை வேறுபடுத்தியுள்ளனர்.கந்தகம் மின்சாரத்தையும்,வெப்பத்தையும் மிகக் குறைவாகக் கடத்துகிறது.இது காற்று வெளியில் நீல நிற சுவாலையுடனும் ஆக்சிஜன் வெளியில் அவுரி நீல நிற சுவாலையுடனும் எரிந்து கந்தக டை ஆக்சைடு,கந்தக ட்ரை ஆக்சைடு போன்ற வளிமங்களை வெளியேற்றுகின்றது சூடு படுத்த தங்கம்,பிளாட்டினம் மற்றும் இருடியம் தவிர்த்த பிற உலோகங்களுடன் இணைகிறது.செம்பு,இரும்புடன் சேரும்போது சுடரொளி வீசுகிறது.

Saturday, August 18, 2012

Eluthatha Kaditham

எழுதாத கடிதம் மனிதனை நல்வழிப்படுத்தி சமுதாயத்திற்கு பயன்படுமாறு செய்வதற்கு சமுதாயம் பின்பற்றும் ஒரு பொதுவான வழி கல்வி.மக்களிடையே பரவலான வளர்ச்சியைத் தூண்டி.சமுதாயத்தின் வறுமையைப் போக்க அடிப்படையாக இருப்பது இக் கல்வி மட்டுமே.அனைவருக்கும் அடிப்படைக் கல்வி என்பது நம் வளர்ச்சியை நாமே முடுக்கி விட்டுக் கொள்ளும் ஒரு முயற்சி .வேலை வாய்ப்பு அதிகமுள்ள B.E படித்து வெளிவரும் மாணவர்கள் இன்றைக்குத் தொடர்ந்து அதிகரிந்து வருகிறார்கள்.உயர் கல்வி படிக்கும் மாணவர்களும் எண்ணிக்கையால் பெருகி வருகிறார்கள்.பள்ளிக்கும்,கல்லூரிக்கும்,பல்கலைக் கழகத்திற்கும் சென்று கல்வி கற்றவர்களால் நாம் நினைத்தது நிறைவேறியதா? கற்றவர்களே மோசமாக ,கீழ்த்தரமாக,சமுதாயத்திற்கு பாதகமாக நடந்து கொள்ளும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது நம்முடைய கல்வி கற்பிக்கும் முறையிலோ கல்வி கற்கும் முறையிலோ எதோ குறைபாடு இருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது.ஒரு பத்திரம் பதிவு செய்ய வேண்டும் ,ஓட்டுனர் உரிமம் வாங்க வேண்டும் ,பட்டா வாங்கவேண்டும் சான்றிதழ் வாங்கவேண்டும் என நாம் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய ஓர் அரசு அலுவலகத்திற்குச் சென்றால் அரசுக்கு என்ன கட்டணம் செலுத்த வேண்டுமோ அதை மட்டுமே செலுத்தி விட்டு முடித்து விடமுடியாது. கூடுதலாக ப் பணம் கேட்பார்கள் அதைக் கொடுக்கா விட்டால் தட்டிக் கழிப்பார்கள்.நாம் பல மாதம் வீட்டிற்கும் அரசு அலுவலகத்திற்கும் அலைந்து கொண்டிருக்க வேண்டியதுதான்.இதனால் அரசு அலுவலங்களுக்குப் போக வேண்டி வந்தால் ,மனதில் ஒரு தயக்கமே வருகின்றது. நாம் அந்தச் செயல்களைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருவோம். அரசுக்கு உரிய கட்டணத்தைச் செலுத்தி விட்டால் அதற்குரிய பணி கூடுதல் பணம் கொடுக்கப்படாததால் மறுக்கக்கூடாது.கற்றவர்களும்,கல்லாதவர்கள் போல நடந்து கொள்கின்றார்கள். இப்பழக்கம் சமுதாயத்தை மேம்படுத்தாது,சமுதாயம் மேலும் மேலும் சீரழிந்து போகவே இது துணை செய்யும் என்பதை இவர்கள் அறிந்தும் புரியாதவர்களாக இருக்கின்றார்கள் .கற்ற கல்வியின் மீது நம்பிக்கை இல்லாதவர்களே இப்படி நடந்து கொள்வார்கள். இவர்கள் அவர்களுக்கு வாழ்வாதாரம் தந்த அரசுக்கும் துரோகம் செய்கின்றார்கள் .இதனால் காலப் போக்கில் அவர்கள் உண்மையாக உழைக்கும் பண்பை இழந்துவிடுவார்கள் .இந்நிலை புற்று நோய் போல வளர்ந்து முதல் கட்டத்தையும் கடந்து , சமுதாயம் முழுக்கப் பரவி இரண்டாம் கட்டத்தையும் தாண்டி, மறைவிடங்களில் பதுக்கி மூன்றாம் கட்டத்தையும் மீறி இன்றைக்கு கடைசிக் கட்டமான நான்காவது கட்டத்தை அடைந்து விட்டது. மக்களும் மாறாமல் ,அரசும் மாறாமல் ஒப்புக்கு பேசுவதாலும்,செயல்படுவதாலும் திட்டங்களால் பெரிதாக ஏதும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. வலிமையான நடவடிக்கை இல்லாமால் இதில் சமுதாயம் நலம் பெறுமாறு ஏதாவது செய்ய முடியுமா என்பது எனக்கு ஐயமாக இருக்கிறது.

Friday, August 17, 2012

Short story

கடவுளைத் தேடியவன்
எல்லோரும் கடவுள்,கடவுள் என்று சொல்கின்றார்களே கடவுளை எப்படியாவது சந்தித்து விடவேண்டும் என்று ஒரு மனிதன் நினைத்தான்.கோயில் குருக்கள், முனிவர்கள்,ஞானிகள்,துறவிகள் எனப் பலரையும் போய்ப் பார்த்தான்,கோயில்,புனித ஸ்தலங்கள்,அறு படைவீடு என எல்லா இடங்களுக்கும் சென்றான். ஆனால் கடைசிவரை கடவுள் என்று யாரையும் சந்திக்கவே முடியவில்லை.இமயமலையில் இருப்பதாக புராணங்களில் எப்போதோ படித்தது ஞாபகத்திற்கு வர ,நடைப்பயணமாக இமயமலைக்குப் புறப்பட்டுச் சென்றான். வழி நெடுக கடவுளைத் தேடி அலைந்தான். .இறுதியாக இமயமலையின் அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு ஒரு வயதான ஒரு துறவியைச் சந்தித்து " ஐயா,நான் கடவுளைத் தேடி 20 வருடங்களாக அலைகிறேன். அவர் எங்கிருக்கிறார் என்பதை எனக்குக் காட்டுவீர்களா?" என்று கேட்டான்.அதற்கு அந்தத் துறவி,'மகனே,இந்த சின்ன விசயத்திற்காக நீ பொன்னான காலத்தை வீணாக்கி விட்டாயே.சரி பரவாயில்லை. கடவுளை நான் இன்றைக்கே உனக்குக் காட்டுகிறேன்.இப்பொழுது நீ சோர்வாக இருக்கிறாய், இந்த அறையில் ஓய்வெடுத்துக் கொள் " என்று கூறிவிட்டுச் சென்றார்.மீண்டும் அவன் தங்கி இருந்த அறைக்குத் துறவி வந்த போது அந்த மனிதன் தூங்கிக் கொண்டிருந்தான்.துறவி ஒரு சாவியை அவன் கொண்டுவந்திருந்த பையில் ஒழித்து வைத்தார்.பின்னர் அவனை எழுப்பி கடவுளைச் சந்திக்க வருமாறு அழைத்தார். இருவரும் தொலைவிலிருந்த கோயிலுக்கு நடந்து சென்றனர்.கோயில் வீடு வந்ததும், "சாவியை நான் வரும் வழியில் எங்கோ தொலைத்து விட்டேன்.நீ தேடிக் கண்டுபிடித்துத் கொண்டுவந்தால் கடவுளைக் சந்திக்கலாம்" என்றார்.அவன் எங்கு தேடியும் சாவி கிடைக்க வில்லை.துறவியிடம் வந்து சாவி கிடைக்க வில்லை என்றான்.துறவியும் அவனைப் பார்த்து ”சாவி கிடைக்காது என்பது எனக்குத் தெரியும்.ஏனெனில் சாவி உன்னுடைய அறையில் இருக்கிறது" என்றார் “அப்படியா,இப்பொழுதே சாவியை எடுத்து வருகிறேன்,கடவுளைச் சந்திப்போம்" என்றான்."வேண்டாம்,அதற்கு அவசியமேயில்லை.உன் அறைக்குள்ளே வைத்துவிட்டு,வெளியில் தேட எப்படி சாவி கிடைக்க வில்லையோ,அது போலக் கடவுளும். நீ கடவுளை உனக்குள்ளே தேடு,நிச்சியம் வெற்றி பெறுவாய்”என்று கூறி விட்டு துறவி சிரித்தார்.அவன் ஊர் திரும்பி வந்த போது கடவுளைக் கண்டு விட்ட மகிழ்ச்சி மனதில் நிறைந்திருந்தது.

Thursday, August 16, 2012

Kavithai

மேடைப் பேச்சு மேன்மையாச்சு
சரளமாய் சதுரங்கம் விளையாட காய்களைச் சரியாய் நகர்த்தத் தெரிந்திருக்க வேண்டும் ஒலிம்பிக்கில் ஓட வேண்டுமானால் முன்னர் உனக்கு நடக்கத் தெரிய வேண்டும் -அதுபோல மேடையில் பேச வேண்டுமானால் முதலில் மொழியோடு சொல் வளம் பெறவேண்டும் படிப்படியாய் அடிப்படைகளை வளப்படுத்த பலவீனங்களும் பலமாய் மாறி வெளிப்படுமே அவையோருக்கு வணக்கம் நல்ல தொடக்கம் அவசரப் பட்டால் மனதில் புகும் கலக்கம் ஆர்வம் குன்றிப்போக அவையில் பேசவேண்டாம் ஆசைகொண்டு அதிகம் மொழிய வேண்டாம் இருக்கும் புலமையொடு சொல் அழுத்தம் மிகு இயன்ற புதுமைகளை புரியும்படி புகுத்திவிடு ஈனோர்பயனுற பொருளில் நன்மை விளையட்டும் ஈரொட்டுமங்க இலக்கியவரிகள் இழையட்டும் உண்மைச் சம்பவங்கள் உடுருவித் தோன்றட்டும் உணர்ச்சிகள் சங்கமிக்க உரையாடல் உருவாகட்டும் ஊனமின்றி உன்கருத்தைச் சொல்லப் பழகு ஊட்டம்தரும் ஊடகங்களோடு உறவாட அழகு எப்போதும் அரைத்த மாவையே அரைக்க மறுப்பு என்ன பேசவேண்டும் என்று திட்டமிட விரும்பு ஏற்புடையில்லா புள்ளிவிவரங்கள் தவிர் ஏராளப் பொன்மொழிகள் இணைக்க உயிர் ஐயம்நீங்க அவையோரை அசத்திக் காட்டு ஐயன்போல நளினமாய் நகைச்சுவை ஊட்டு ஒலியில் ஏற்ற இறக்கம் இனிமை தரும் ஒத்திகை உயர்வை உடனழைத்து வரும் ஓட்டமின்மை அரங்கை வெறுமைப்படுத்திக் காட்டும் ஓசையில்லா உடலசைவுகள் உற்சாகத்தைக் கூட்டும் ஔடதம் போல அளவாய் கொடுத்து மகிழ் ஔவை போல கனிவாய் நன்றி கூறி அமர்

Wednesday, August 15, 2012

Vethtith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள்-பாஸ்பரஸ்-வேற்றுருக்கள் (allotrope) பாஸ்பரஸ் நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட வேற்றுருக்களைக் கொண்டுள்ளது .இதை வெள்ளை,சிவப்பு,கருப்பு ,வைலெட் பாஸ்பரஸ் என்று கூறுகின்றனர்.வெள்ளை பாஸ்பரஸ்ஸை பாஸ்பரஸ் ஆவியில் 230 டிகிரி C வெப்ப நிலையில் சூடு படுத்த சிவப்பு பாஸ்பரஸ்ஸாக மாறுகிறது.இதை நீருக்குள் பொடி செய்து மாறாத வெள்ளைப் பாஸ்பரஸ்ஸை நீக்க காஸ்டிக் சோடாவில் கொதிக்க வைத்து சூடான நீரில் கழுவி நீராவியால் காய வைத்து உற்பத்தி செய்வார்கள்.இது சாக்லேட் -சிவப்பு நிறம் கொண்டது வெள்ளை பாஸ்பரஸ்ஸை விட அடர்த்தி மிக்கது [2140 கிகி/கமீ] இது தானாக ஒளிர்வதில்லை,மணத்தையும் இழந்து விடுகிறது.நச்சுத் தன்மையும் கொண்டிருப்பதில்லை.இதன் உருகு நிலை 773-873 டிகிரி K ஆக உயர்ந்து விடுகிறது.மேலும் இது 256 டிகிரி C வெப்ப நிலையில் பற்றி எரிகிறது.கார்பன் டை சல்பைடில் கரைவதில்லை.குளோரின் வளிமத்தில்சூடு படுத்தும் போது பற்றி எரிகிறது.எனினும் இந்த வேற்றுருவையும் கவனமாகக் கையாளவேண்டும் .ஏனெனில் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் சிவப்பு பாஸ்பரஸ் வெள்ளை பாஸ்பரஸ்ஸாக மாறிவிடுகிறது.சிவப்பு பாஸ்பரஸ் தீக்குச்சி செய்யப் பயன்படுகிறது. சிவப்பு பாஸ்பரஸ்ஸை உலோக ஈயத்துடன் சேர்த்து அடைக்கப்பட்ட வெளியில் 500 டிகிரி C வெப்ப நிலையில் சூடு படுத்த பாஸ்பரஸ் அதில் கரைந்து விடுகிறது.இதை குளிர்வித்து உறைய வைக்க கரைந்த பாஸ்பரஸ் பளபளப்புடன் கூடிய அவுரி நிறத்தில் படிகமாக மாறுகிறது. .இதன் அடர்த்தி 2340 கிகி/கமீ .இதன் உருகு நிலை ஏறக்குறைய 873 டிகிரி K. வெள்ளை பாஸ்பரஸ்ஸை 200 டிகிரி C வெப்ப நிலையில் உயர் அழுத்தத்திற்கு உட்படுத்த கருப்பு பாஸ்பரஸ் தோன்றுகிறது.இதன் பண்புகள் ஏறக்குறைய வைலெட் பாஸ்பரஸ் போல இருந்தாலும் இது மிகவும் சிறப்பாக வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்துகிறது. பயன்கள்
பாஸ்பரஸ்,பாஸ்பேட் உரங்களின் உற்பத்திக்கு ஒரு மூலப் பொருளாக விளங்குகிறது. பாஸ்பேட் உரங்கள் மண்ணில் பாஸ்பரஸ் சத்தை மேம்படுத்துகிறது. பாஸ்பரஸ் சோடிய ஆவி விளக்கு போன்ற சிறப்புப் பயன்களுக்கான கண்ணாடியை உற்பத்தி செய்யவும்,வெண்கல உற்பத்தி முறையிலும் பயன்படுகின்றது எலிகளைக் கொல்லும் நஞ்சாகவும்,மருந்துகள் உற்பத்தித் துறையிலும் பாஸ்பரஸ்ஸைப் பயன்படுத்துகின்றார்கள்.புகை எழுப்பும் பாஸ்பரஸ் அடங்கிய குண்டுகள் கலவரத்தை அடக்கவும்,எதிரிகளின் முன்னேற்றத்தை மட்டுப்படுத்தவும் பயன்தருகின்றன. தீக்குச்சிகளில் வெள்ளைப் பாஸ்பரஸ்ஸை பயன்படுத்த அனுமதிக்கப் படுவதில்லை. பாஸ்பரஸ் சல்பைடை இதற்காகப் பயன்படுத்து கின்றார்கள்.இது வெள்ளைப் பாஸ்பரஸ் போன்று பயன்பட்டாலும் நச்சுத் தன்மை கொண்டதில்லை.எப்பரப்பிலும் தேய்த்து எரியச் செய்யும் தீக்குச்சிகளில் ஸ்கார்லெட் பாஸ்பரஸ் (Scarlet Phosphorus)பொட்டாசியம் குளோரேட்,செவ்வீயம் போன்றவை பயன்படுகின்றன.
பாதுகாப்பான தீக்குச்சிகளில் இதே சேர்மானம் இருப்பினும் பாஸ்பரஸ் மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இதை சொரசொரப்பான வேதிப் பொருள் பூசப்பட்ட தளத்தில் எரியச் செய்ய வேண்டும். தீப்பெட்டிகளின் பக்கங்களில் இப்பரப்பு,சிவப்பு பாஸ்பரஸ்,ஆண்டிமணி டிரை சல்பைடு ,பொடி செய்யப்பட்ட கண்ணாடித் தூள் போன்றவற்றால் ஆனதாக இருக்கும்.வான வேடிக்கைக்கான வெடி பொருட்களில் பாஸ்பரஸ் பயன் தருகிறது. டிரை சோடியம் பாஸ்பேட் நீரை மென்மைப் படுத்தி கொதிகலனின் உட்சுவரில் படியும் காரைகளைத் தவிர்க்கிறது.எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் பாஸ்பரஸ் உறுதுணையாக விளங்குகிறது.உடல் நலத்திற்கு இரத்தத்திலுள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியத்தின் அளவு காக்கப்படவேண்டும்.பாஸ்பரஸ்சின் செறிவு அதிகமாகும் போது அது கால்சியத்தை வெளியேற்றி விடுகின்றது.இது இறுதியாக எலும்பு சம்பந்தமான நோய்களைத் தருகிறது.

Kavithai

மாற்றம்
எவ்வளவோ மாற்றங்கள் ஒருநாளில் அவ்வளவும் ஏற்றங்கள் மறுநாளில் மாற்றமின்றி ஏற்றமில்லை எந்நாளும் தாக்கமின்றி மாற்றமில்லை ஒருநாளும் இன்று விழுந்துகிடக்கும் கூழாங்கற்கள் இருபதாண்டானாலும் உயரச் செல்வதில்லை அருகில் சிதறிக்கிடக்கும் சிறுவிதைகள் அடுத்தநாளே முளைவிட்டுச் சிரிக்கின்றன உறங்கிய கல்லுக்கு எழுச்சியேயில்லை வீரிய விதைக்கு உயர்ச்சியே எல்லை மாற மறுத்தவன் வெறுமையானான் மாறி மலர்ந்தவன் அருமையானான்
ஓடும் ஒரு கடிகாரம் ஒருநாளில் எண்பத்தாறாயிரத்து நானூறு முறை ஓயாது உன்னை உசுப்பிக் கொண்டிருக்கிறது விழித்துக் கொள்ளாவிட்டால் வெல்வதேது? ஒருநாளில் ஒருலட்சம் முறை உன்னிதயம் தூங்காது துடிக்குது ஏழாயிரம் லிட்டர் இரத்தத்தை எக்கி எக்கித் தள்ளுது ஆயிரம் லிட்டர் இரத்தத்தைச் சுத்திகரிக்கின்றன சிறுநீரகங்கள் பத்தாயிரம் லிட்டர் காற்றை சுவாசிக்கின்றன நுரையீரல்கள் பூமிசுற்ற நாமும் நடுவரைக்கோட்டில் நாற்பதாயிரம் கிலோமீட்டர் நகர்கிறோம் இத்தோடு சூரியனைச்சுற்றி வலமாய் இரண்டரை லட்சம் கிலோமீட்டர் ஒரு நாளில் பலகோடி கிலோமீட்டர் ஊடகத்தில் ஒளி பாய்ந்து செல்கிறது ஒருநாள் மாற்றத்தில் உலகமேமாறுது வாழ்நாளில் மாற்றமின்றி இருக்கலாமோ.

Tuesday, August 14, 2012

Vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள் -பாஸ்பரஸ் -கண்டுபிடிப்பு ஜெர்மனியிலுள்ள ஒரு வியாபாரியான பிராண்ட் (H Brand) என்பார் உலோகங்களைத் தங்கமாக்கும் ஞானக்கல் (Philosopher's stone) இருப்பதாக நம்பினார். அந்த நம்பிக்கையில் மனிதர்களின் சிறுநீரை ஆவியாக்கி ஒரு தெவிட்டிய பாகுநிலை மிக்க நீர்மத்தைப் பெற்றார்.அதை காய்ச்சி வடித்து செந்நிறத்தில் ஒரு நீர்மத்தை உண்டாக்கினார். அதை அவர் சிறுநீர் எண்ணெய் என அழைத்தார்.அதை மீண்டும் காய்ச்சி வடிக்க ,கொள்கலனின் அடியில் கருப்பு நிற வீழ்படிவு தங்கியிருப்பதைக் கண்டார்.அதை நெடு நேரம் கால்சிய ஊட்டம் (Calcination)செய்ய,வீழ்படிவு வெண்ணிறத்தில் பிரகாசிக்கும் ஒரு பொருளாகக் கொள்கலனின் சுவரில் படிந்திருந்தன.இதை பிராண்ட் இரகசியமாகச் சில காலம் வைத்திருந்தார்.ஆனால் அதைக் கொண்டு உலோகங்களைத் தங்கமாக்க முடியாது போனதால்,அதைப் பிற்பாடு வெளியிட்டார்.1771 ல் ஷீலே,எலும்பின் சாம்பலிலிருந்து பாஸ்பரஸ்ஸை த் தனித்துப் பிரித்தெடுத்தார்.பாஸ்பரோஸ் (Phosphoros) என்ற கிரேக்கச் சொல்லுக்கு 'ஒளியைக் கொண்டிருக்கின்ற' என்று பொருள்.இச் சொல் உண்மையில் சூரியன் உதிப்பதற்கு முன்னால் தோன்றுகின்ற வெள்ளி என்ற கோளைக் குறிக்கின்றது.இச் சொல்லே 34 டிகிரி C வெப்ப நிலையில் காற்றில் தானாக எரியும் இத் தனிமத்திற்குப் பெயரானது . பண்புகள் பாஸ்பரஸ் இயற்கையில் சிறிதும் தனித்துக் காணப்படவில்லை.விலங்குகள் மற்றும் காய்கறிகளின் திசுக்களில் குறிப்பாக விதைகளிலும் முட்டையின் மஞ்சள் கருவிலும்,விலங்கினங்களின் எலும்புகளிலும் பாஸ்பரஸ் எதோ ஒரு வகையில் சேர்ந்திருக்கிறது.மனித எலும்புக் கூட்டில் ஏறக்குறைய 2 கிலோ பாஸ்பரஸ் இருக்கின்றது . புதிதாக உற்பத்தி செய்யப்படும் பாஸ்பரஸ் வெண்மையாகவும்,ஓரளவு ஒளி கசிந்து வெளியேறக் கூடியதாகவும்,மெழுகு போன்றதாகவும் இருக்கும்.வெள்ளைப் பூண்டின் மனம் கொண்டிருக்கும் இது ஒளிரும் போது மஞ்சள் நிறமடைவதால் அதை மஞ்சள் பாஸ்பரஸ் என்பர். மிகத் தூய்மையான பாஸ்பரஸ் நிறமற்றதாகவும் கண்ணாடி போன்று ஒளி உட்புகக் கூடியதாகவும் இருக்கும் இது நீரில் கரைவதில்லை.ஆனால் கார்பன் டை சல்பைடில் கரைகிறது.காற்றில் தானாக எரிந்து பென்டாக்சைடு வளிமத்தை உண்டாக்குகின்றது.அதனால் இதை நீரில் இட்டு வைத்திருப்பார்கள்.எரிவதற்கான தாழ்ந்த வெப்ப நிலை ஏறக்குறைய அறை வெப்ப நிலையாக இருப்பதால் இதைக் கையால் கையாளுவது ஆபத்தாகும். வெள்ளை பாஸ்பரஸ் நச்சுத் தன்மை கொண்டது. P என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய பாஸ்பரஸ்சின் அணு எண் 15.அணு எடை 30.97 அடர்த்தி 1820 கிகி/கமீ.இதன் உருகு நிலையும்,கொதி நிலையும் முறையே 317.3,552.2 K ஆகும்.மஞ்சள் பாஸ்பரஸ்சின் மூலக்கூறு எடை 123.88 .இது மிகவும் நச்சுத் தன்மை கொண்டது.0.1 கிராம் அளவு மரணத்தை அளிக்கக் கூடியது பாஸ்பரஸ் மிகவும் தீவிரமாக வினைகளில் ஈடுபடக் கூடியது.உடனடியாக ஹாலஜன்களுடன் இணைந்து தீ சுவாலையை உண்டாக்குகின்றது.குளிர் நிலையில் ஆக்சிஜனுடன் மெதுவாக இணைகிறது.கந்தகம் மற்றும் பெரும்பாலான உலோகங்களுடன் சூடுபடுத்தும் போது இணைந்து பாஸ்பைடுகளை உண்டாகுகின்றது.இது வலுவான ஆக்சிஜன் நீக்கம் செய்யும் வேதிப் பொருளாக உள்ளது. கந்தக அமிலத்தை கந்தக டை ஆக்சைடாகவும்,நைட்ரிக் அமிலத்தை நைட்ரஜன் பெராக்சைடாகவும் சுருக்குகின்றது.சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினை புரிந்து பாஸ்பீன்(phosphine -PH3) என்ற நச்சு வளிமத்தை உண்டாக்குகின்றது .

Monday, August 13, 2012

Creative thoughts-A short story

உங்களை நீங்களே நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
+ 2 படிக்கும் சேகருக்கு இன்னும் மூன்று மாதத்தில் இறுதித் தேர்வு.எதோ படித்து வந்தான் என்றாலும் படிப்பில் முழுமை இல்லை.அவன் தந்தை கோயிலில் அர்ச்சகராக இருந்தார் தாயும் பூக்கட்டி அங்கேயே ஆன்மிகப் பணி செய்து வந்தார்.சேகருக்கும் கடவுள் மீதே அளவு மீறிய அன்பிருந்தது.கடவுள் எப்போதும் தன்னைக் காப்பார் என்று நம்பினான். முதல் மாதிரித் தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண் வாங்கியதால் ஆசிரியர் அவனைக் கவனமாகப் படிக்குமாறு கடிந்து கொண்டார், அன்று கோயிலுக்குச் சென்று தான் அடுத்த முறை அதிக மதிப்பெண் பெற உதவுமாறு கடவுளிடம் முறையிட்டான் . சில நாட்களில் அடுத்த வீட்டிற்கு அவன் வகுப்பிலேயே முதல் மாணவனான சோமு வின் பெற்றோர்கள் குடி வந்தனர். சேர்ந்து படித்தாலும் கவனமின்மையால் படித்ததை நினைவிற் கொள்ள சேகரால் முடியவில்லை. தப்புத் தப்பாய் விடைகளைச் சொல்ல சோமு அவனைத் திருத்தினான்.தன் அறியாமை வெளிப்பட்டு விடும் என்று அவனோடு சேர்ந்து படிப்பதையே தவிர்த்தான் இரண்டாவது மாதிரித் தேர்விலும் சேகர் குறைந்த மதிப்பெண்ணே வாங்கினான்.மீண்டும் கோயிலுக்குச் சென்று கடவுளிடம் முறையிட்டு அழுதான் "கடவுளே நானும் என் பெற்றோர்களும் ஆன்மிகப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.நீ ஏன் எனக்கு உதவ வெறுக்கின்றாய்?" ஆலய மணி ஒலித்ததை கடவுளின் கூற்றாக எடுத்துக் கொண்டு வீடு திரும்பினான் .சில நாட்களில் அவன் வீட்டு மாடிக்கு ஒரு ஆசிரியர் குடிவந்தார்.அவனுக்கு இலவசமாக பாடங்களை கற்பித்தார்.கடவுள் தனக்கு மிகவும் அறிமுகமானவர்,அவர் வரம்பு மீறி தனக்கு எப்படியும் உதவுவார் என்று சேகர் நம்பியதால் படிப்பில் கவனம் குறைவாகவே இருந்தது.இறுதித் தேர்வும் வந்தது,தேர்வுக்கு முதல் நாள் குடிவந்த ஆசிரியர் அவனை அழைத்து சில முக்கியக் கேள்விகளையும் அதற்குரிய விடைகளையும் கொடுத்து அதையாவது முழுமையாக படிக்குமாறு கேட்டுக் கொண்டார்.இருந்தும் கடவுள் மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கையால் அதை விட்டுவிட்டு கோயிலுக்குச் சென்று கடவுள் முன் பல கேள்விகளை எழுதிப் போட்டு அதில் ஒரு சில கேள்விகளை மட்டும் தேர்வு செய்தான்.கடவுள் அதை மட்டுமே படி என்று கூறுவதாக நினைத்துக் கொண்டான். தேர்வுக்கான கேள்வித்தாள் கொடுக்கப்பட்டது.அதில் அவன் தேர்வு செய்ததில் ஒரிரு கேள்விகள் மட்டுமே வந்திருந்தன.இருந்தும் அரைகுறையாக தேர்வை எழுதிவிட்டு வந்தான். எதிர்பார்த்ததைப் போல தேர்வில் அவன் தோல்வியடைந்து விட்டான்.வருத்தத்துடன் கோயிலுக்குச் சென்று கடவுளை அழைத்து"நான் உன்னை உண்மையாக நேசித்தேனே.உலகோர் எல்லோருக்கும் உதவும் நீ எனக்கு மட்டும் ஏன் உதவ முன்வரவில்லை" என்று கேட்டான். அப்போது கடவுள் அவன் முன் தோன்றி,"பக்தனே,நான் நேரிடையாக யாருக்கும் உதவ முடியாது என் உதவியை அவரவர் மூலமாகவே நிறைவேற்ற முடியும்.உனக்கும் அப்படித்தான் செய்தேன்.அடுத்த வீட்டில் உன் வகுப்பு மாணவனையே குடி வருமாறு செய்தேன்.நீ அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.அப்புறம் உன் வகுப்பு ஆசிரியரையே உன் வீட்டிற்கே குடி வருமாறு செய்தேன். அதையும் நீ பயன் படுத்திக் கொள்ளவில்லை" என்று கூறினார். "ஆனால் உங்கள் முன் நான் தேர்வு செய்த கேள்விகளையே தேர்வில் வராது செய்து விட்டீர்களே.உங்களை பரிபூர்ணமாக நேசித்ததற்கு இதுதான் பரிசா" என்று சேகர் கேட்க அதற்கும் கடவுள் அமைதியாக பதில் கூறினார்."பக்தனே நீ என்னை நேசித்தது சரி,முதலில் உன்னை நீ நேசித்தாயா? எப்பொழுது உன்னை நீயே நேசிக்கின்றாயோ அப்பொழுதான் கடவுள் நேசிப்பின் உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொள்வாய்.ஒவ்வொருவரும் முதலில் தங்களையும் பின்னர் மற்றவர்களையும் நேசிக்கவேண்டும் என்பதற்காகவே மக்கள் என்னை நேசிக்கும் படி செய்தேன்" என்று கூறி விட்டு மறைந்தார். இதன் பொருளைப் புரிந்து கொள்ள சேகருக்கு நெடு நேரமானது.

Creative thoughts-micro aspects of developing inherent skill

micro aspects of developing inherent skill -3
பத்து ஆண்டுகளுக்குப் பிறகும் இப்பொழுது எப்படி இருக்கின்றீர்களோ அப்படியே இருப்பீர்கள் என்று நான் சொன்னால் அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? நிச்சியமாக நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்,ஏனெனில் அது உங்களை ஒரு திறமையற்றவராகப் பிறர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்வது போலாகிவிடும்.அப்படிக் குறிப்பிடுவது உங்கள் மனதை ஏன் புண்படுத்துவதாக இருக்கிறது? மாற்றம் என்பது வளர்ச்சி,முன்னேற்றத்தின் முயற்சி ,அதுவே மனதிற்கு மகிழ்ச்சி.இது இல்லாது போனால் இகழ்ச்சி. இதை நீங்கள் புரிந்து வைத்திருக்காவிட்டாலும் உங்கள் மனது அதை சரியாக அறிந்து கொண்டிருக்கிறது வாழ்க்கையோடு தொடர்புடைய ஓர் உண்மையைப் புலப்படுத்திக் காட்டுவதற்காக இப்படி விளையாட்டாகக் குறிப்பிட்டேன்.வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடமும் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களுடைய மனம் அதை இயல்பாகவே விரும்புகிறது.ஆனால் மனதின் விருப்பமும், மனிதனின் செயலும் ஒன்றாக இருப்பதில்லை. மாற வேண்டும் என்ற திடமான ஒரு முடிவை சுய விருப்பத்தோடும்,முழுமையான புரிதலோடும் மேற்கொண்டாலே இது சாத்தியமாகும் என்பதை இது தெரிவிக்கிறது. இதில் நீங்கள் ஏற்படுத்தும் கால தாமதம் நீங்கள் விரும்பும் அந்த மாற்றத்தை அடைவதில் பன்மடங்காக வெளிப்படும். மாற்றத்தின் பலனை நுகர வேண்டுமெனில் மாற வேண்டும், மாறியே ஆக வேண்டும் என்ற தீர்மானத்தை முழு மனதுடன் மேற்கொள்ள வேண்டியது முக்கியமாகும். மாற்றம் என்பது வாழ்க்கை நிலையில் ஏற்படும் முன்னேற்றமாகும்.இது திறன் வளர்ச்சி,பொருளாதார வளர்ச்சி,உயர் பதவி பெறுதல்,போட்டிகளில் வெற்றி மட்டுமின்றி வெகு இயல்பாய் வாழும் கலையை அறிதலுமாகும்.வாழ்க்கையில் நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை இடம்பெயரும் ஒரு பொருளின் நிலை மாற்றத்தோடு ஒப்பிட்டு நம் புரிதலை ஓரளவு மேம்படுத்திக் கொள்ள முடியும். ஒத்த இரு இரும்புக் குண்டுகள் -ஒன்று தரை மட்டத்தில் இருக்க மற்றொன்று கோபுரத்தின் உச்சியில் இருப்பதாகக் கொள்வோம்.
இவையிரண்டில் எது தன்னியக்கத்தால் நிலை மாற்றத்தைப் பெறும் என்று கேட்டால் ,உயரத்தில் இருக்கும் குண்டே என்று உடனடியாகச் சொல்லலாம். அதற்குக் காரணம் அக்குண்டு தன் நிலையாற்றலை வெகுவாக உயர்த்தி வைத்துக் கொண்டிருப்பதுதான். நிலையாற்றல் என்பது உள்ளே பொதிந்திருக்கும் திறன்.ஈர்ப்பு விசை பொருளின் நிறைக்கு ஏற்ப இருந்தாலும் ஈர்ப்பு முடுக்கம் எல்லாப் பொருள்களுக்கும் சமம். அதாவது சமமான நிலை மாற்றத்தையே பெறுகின்றன.ஒரே வகுப்பறையில் ஒரே ஆசிரியரிடம் கல்வி கற்ற மாணவர்கள் ஒரே அளவிலான மாற்றங்களைப் பெற்று முன்னேறுவதில்லை. சிலர் சிகரத்தைத் தொடுவார்கள், சிலர் அடி நிலையிலேயே பின் தங்கி விடுவார்கள்.நிலை மாற்றத்திற்கு ஒவ்வொருவரும் கொடுக்கும் எதிர்ப்பு வேறுபட்டிருப்பதுதான் இதற்குக் காரணம் என்பதை நிலை மாற்றத்திற்கு இரும்புக் குண்டு கொடுக்கும் நிலை மாற்றத் தடையால் (inertial resistance) அறியலாம்.இயற்கையில் ஒவ்வொரு பொருளும் தான் இருக்கும் நிலையிலேயே நீடித்திருக்க விரும்புகின்றன.அதனால் அவை நிலை மாற்றத்திற்கு ஒரு தடையை ஏற்படுத்திக் கொள்கின்றன. இது நிறைக்கு எதிர் விகிதத்தில் இருக்கிறது. அதாவது நிறை அதிகமானால் நிலை மாற்றத்திற்கான தடை குறைவு எனலாம். அதனால் தான் கனமான குண்டு முதலிலும் இலேசான குண்டு தாமதமாகவும் தரையில் விழுகின்றன. எதிர் விசை என்பது மனிதர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் மனதில் சேமித்து வைத்திருக்கும் எதிர்மறையான எண்ணங்களேயாகும். எதிர் மறை எண்ணம் குறைவாக,பலவீனமாக இருக்குமானால் நிலை மாற்றம் விரைவாக இருக்கும் என்பதையே இது தெரிவிக்கின்றது. கீழே விழுந்து கிடக்கும் பொருள் தானாக நிலை மாற்றம் பெறுவதில்லை,அதற்கு ஒரு புறத் தூண்டுதல் அவசியமாக இருக்கிறது.கீழே கிடக்கும் கல் எந்நாளும் அப்படியே இருக்கிறது. ஆனால் ஒரு விதை தன் முயற்சியால் நெடிய மரமாக வளர்கிறது. மாற்றங்கள் நிகழ வேண்டுமானால் ஒன்று நீங்கள் திறமைகளை வளர்த்து வைத்திருக்க வேண்டும்,தானாகக் கீழே விழும் குண்டைப் போல அல்லது சுயவிருப்பத்துடன் திறமைகளை வளர்த்துக் கொள்ள பிறரின் உதவிகளை எதிர்பார்த்துக் கொண்டு முனைப்புடன் செயல்படவேண்டும் கீழே கிடக்கும் விதையை போல.

Sunday, August 12, 2012

Creative thoughts-Micro aspects of developing inherent skill

Micro aspects of developing inherent skill-2 All the changes that have strong impact on your life are not always taking place slowly and step by step. Infact the process of happening may be prolonged but its root cause is so momentary and sudden. ஒரு தாக்கத்தை உண்டாக்கி வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும் மாற்றங்கள் யாவும் மெதுவாகவும்,படிப்படியாகவும் நிகழ்வதில்லை.உண்மையில் நிகழும் வழிமுறை வேண்டுமானால் நெடியதாக இருக்கலாம்.ஆனால் அதன் மூல காரணம் மனதில் நொடிப்பொழுதில் தோன்றியதாகத்தான் இருக்கின்றது. We witnessed and knew by experience that a small spark can become a big fire suddenly .Likewise, a simple positive and motivational thoughts can change the scenario completely .This is what we call ‘the turning point’. ஒரு சிறு தீப்பொறி விரைவிலேயே ஒரு பெரிய கொழுந்து விட்டெறியும் ஜுவாலையாக மாறும் என்பதை நாம் தெரிந்திருக்கிறோம்.அதை போல நேர் மறையான,தூண்டு காரணியான எண்ணங்களும் ஒருவருடைய வாழ்கையின் போக்கையே மாற்றி அமைத்து விடுகின்றன.இதைத்தான் நாம் 'திருப்பு முனை’ என்று குறிப்பிடுகின்றோம் At first a positive thought suppresses its opposite negative thought permanently sticking one’s mind and stop all the progressive steps taken for realizing the change. Most of such negative thoughts are either barrowed blindly or pasted in mind by somebody else and not gathered by learning. நேர்மையான எண்ணங்கள் அதற்கு எதிரிடையான எதிர் மறை எண்ணங்களை மனதிலிருந்து வெளியேற்றிவிடுகின்றன. இந்த எதிர் மறையான எண்ணங்கள் மனதில் எப்போது குடியேறின என்பது யாருக்கும் தெரியாது. மனதில் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டு இவை ஒருவருடைய முன்னேற்ற இயக்கங்களைப் பெரிதும் பாதிக்கின்றன. When the negative thoughts are erased out, the possibility of getting conceptual arguments does not exist. Due to which one can avoid unwanted delay in various stages of progress- choosing the right path, right decision and right plan, efficient involvement and action with full of confidence. .எதிர் மறை எண்ணங்கள் அழிக்கப்படும் போது நேர் மறை எண்ணங்களுக்கும் எதிர் மறை எண்ணங்களுக்கும் இடையே இடைவிடாது நடைபெறும் மனப் போராட்டம் இல்லாமற் போவதால் உறுதியான சிந்தனைகளினால் நிச்சியமான முன்னேற்றத்திற்கு ஒரு வழிமுறையை ஏற்படுத்திக் கொள்வதில் ஏற்படும் கால தாமதம் தவிர்க்கப்படுகின்றது. The positive thinking opens plenty of new doors for developmental activities, challenging efforts and continuous fighting. Since it is beneficial to all, it creates new relations and enhances the cordial relationship with them. As they keep on engaging by themselves, the life would be pleasant, interesting, cheerful and meaningful forever. நேர் மறையான எண்ணங்கள் புதிய மற்றும் தொடர் முயற்சிகளுக்கு வித்திடுகின்றன.மேலும் அவை எல்லோருக்கும் பாதிப்பின்றி இருப்பதுடன் பயனுள்ளதாகவும் இருப்பதால் உறவுகளை மேம்படுத்திக் கொள்ள முடிகின்றது. தொடர்ந்து செயலாற்ற அர்ப்பணித்துக் கொள்வதால் வாழ்க்கை இனிமையாகவும்,மகிழ்ச்சியாகவும்,அர்த்தமுள்ளதாகவும் அமைகின்றது. The determined efforts taken up by a mountaineer just demonstrates how the big changes could happen in the life of people with positive thinking. A mountaineer miserably failed 3 times to reach the top of the Mount Everest. By looking the peak of the mountain from its bottom, he murmured ‘ Oh! Mount Everest, you won me first time, second time and third time also. But you cannot win always, because you cannot grow hereafter, but I am not like you, I can grow’. The mountaineer may fail few more times, but ultimately he will certainly win. This is the positive thinking that brings big changes in one’s life. ஒரு மலையேறியால் தீர்மானமாய் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நேர் மறை எண்ணங்களால் சிந்திக்கப் பழக்கப்பட்ட மக்களின் வாழ்கையில் எப்படி பெரிய மாற்றங்கள் விளைகின்றன என்பதைச் சித்தரித்துக் காட்டக்கூடியதாக இருக்கிறது.எவரெஸ்ட் மலை மீது ஏறிய ஒரு மலையேறி தொடர்ந்து மூன்று முறை தோல்வி யடைந்துவிட்டார்.அவர் சோர்வடையவில்லை. மலையடிவாரத்தில் நின்று கொண்டு வெற்றி கொண்ட மலையின் உச்சியைப் பார்த்து, ”ஏ மலையே, நீ முதல் முறை, இரண்டாம் முறை மூன்றாம் முறையும் என்னை வெற்றி பெற்றிருக்கலாம்.ஆனால் எப்போதுமே நீ வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கமுடியாது, ஏனெனில் நீ இதற்கு மேல் ஒரு மில்லி மீட்டர் கூட வளர முடியாது.நான் உன்னைப் போல இல்லை, நான் இன்னும் வளருவேன், இப்பொழுது இல்லாவிட்டாலும் பின்னொரு காலத்தில் என்னால் முடியும்” என்றார். மலையேறி இன்னும் பல முறை கூட தோற்றுப் போகலாம். ஆனால் இறுதியாக அவர் வெற்றி பெறுவார் என்பதை நிச்சியமாகக் கூறலாம்.இது ஒருவருடைய வாழ்கையில் நிகழும் பெரிய மாற்றங்களுக்கு நேர் மறை எண்ணங்கள் எப்படிக் காரணமாக இருக்கின்றன என்பதைத் தெரிவிக்கக் கூடியதாக இருக்கின்றது.

Saturday, August 11, 2012

Creative thoughts-Micro aspects of developing inherent skill

Micro aspects of developing potential skill
A million dollar question may strike your mind and disappear immediately like a lightning in the distant dark sky. Since it vanishes within a fraction of second, more often you are left without any answer. You forget and you will never think again about it. மின்னி மறையும் மின்னலைப் போல வியப்பான,கவர்ச்சியான,சுவாரசியமான கேள்வி மனதில் தோன்றி உடனடியாக மறைந்து போகும் அனுபவங்களுக்கு நீ பலமுறை உள்ளகியியிருக்கின்றாய்.கணப் பொழுதில் தோன்றி மறைந்து விடுவதால் பெரும்பாலும் உன்னுடைய அந்தக் கேள்விக்கு விடை கிடைப்பதில்லை காலப் போக்கில் நீ அதை மறந்து விடுவாய்.அதைப் பற்றி நீ மீண்டுமொருமுறை கூட சிந்தித்துப் பார்ப்பதில்லை. Within the time taken by the earth to spin around once by itself, is it possible to have an amazing change in your personality, soft skill, professional excellence and other value added characters. Many people don’t believe such a huge and radical change cannot take place in a day in real life. It may be possible in Cinema. பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்றி வரும் காலத்தில் ஒருவருடைய வாழ்க்கையில் வியத்தகு மாற்றங்கள் நிகழ முடியுமா? மனிதனின் சிறப்பியல்பான பெர்சனாலிட்டி,மென் திறன்,ஆளுமைத் திறன்,செயல் திறன் மற்றும் மதிப்பூட்டும் பல்வேறு திறன்களில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தி வளர்ச்சிப் பாதையில் ஒரு புரட்சியை புலப்படுத்திக் காட்ட முடியுமா? பேரளவிலான மாற்றங்கள் சினிமாவில் நடப்பதைப் போல எப்போதும் உடனடியாக விளைவதில்லை என்று பொதுவாக எல்லோரும் நினைக்கின்றார்கள். Infact the people negatively thinking like this lose not only the cause of big changes in their lives but also resist the small changes that seldom occur spontaneously as a gift of nature. உண்மையில் இப்படி எதிர் மறையாகச் சிந்திக்கின்ற மக்கள் தங்களுடைய வாழ்கையில் பெரிய மாற்றங்களை இழந்துவிடுவதுடன்,தானாக, இயற்கையாக நிகழும் பெரிய மாற்றங்களுக்குக் காரணமாக அமையும் சிறிய மாற்றங்களையும் தடுத்துக் கொண்டு விடுகின்றார்கள். As you are accustomed to think that all the changes in your life are spontaneous and gift of nature, you always feel that you are in no way responsible for that changes to take part in your life. But it is not true. A very large change can take place within a moment and you could be responsible for that also. உன்னுடைய வாழ்கையில் நிகழும் மாற்றங்கள் எல்லாம் தன்னிச்சையாக விளைபவை என்று எண்ணுவதற்கே பழக்கப் பட்டுவிட்டதால் நிகழும் மாற்றங்களுக்கு நீ ஒருபோது காரணமாக இருப்பதில்லை என்றே நினைக்கின்றாய்.ஆனால் அது உண்மையில்லை. பெரிய அளவிலான மாற்றங்கள் குறுகிய காலத்தில் கூட நிகழக் கூடும்.அதற்கு நீயே கூட காரணமாக இருக்க முடியும். You may wonder to know what is taking place in 24 hours of a day. பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் 24 மணி நேரத்தில் இயற்கையில் என்னவெல்லாம் நிகழ்கின்றது என்பதை நீ முழுமையாக அறிந்தால் மிகவும் ஆச்சரியப் பட்டுப் போவாய் . (i) A clock ticks 86400 times (ii) Heart of an average human beats 72 times per minute,and it is 103680 times per day. Every time it pumps out 70 ml of blood for circulation.i.e.,5 litres per minute, 300 lts per hour, 7200 lts per day. This is under normal conditions. When the body involves in any work the cardiac output increases upto 25 lts per minute. It is 5 times higher than the normal. (iii) Every day 2.5 billion new red cells are produced to replace the wear out red cells. (iv) The two kidneys filter 1400 lts of blood per day and excrete 1.5 lts of urine per day as an average. (v) Breathing rate differs in accordance with situations. During lying 9 lts of air per minute is inhaled .It is 18 lts in sitting, 27 lts in walking and 56 lts in running. In a breath an average human inhales half litre of air. It means a normal man with a breathing rate of 20 per minute respires 10 lts of air per minute and in a day it amounts to 14400 lts of air. (vi) Light travels with a tremendous speed of 3 x 105 km per second. In a day it is unimaginable 2592 crore km. (vii) Earth spins round with a speed of 465 metre per second at its equator. Thus a man residing at the equator of earth travels a distance of about 40,000 km in a day. (viii) Earth revolves round the sun with a speed of 30 km/sec. It means that a man is dragged along with the earth through a distance of about 2.6 lakh km/day. (ix) Earth receives solar energy at the rate of 1400 joule/sq.m/sec. A fraction of this energy received by the earth in a day gives food for all living beings for a day. (x) Millions and millions of living beings are born in a day and approximately same number die in a day. In nature it is quite amazing, when we come to know what changes are happening within 24 hours.

Thursday, August 9, 2012

Eluthatha kaditham

எழுதாத கடிதம் உடல் நலக் கோளாறு ஏற்பட்டால் முதலில் நமக்கு நாமே சரிசெய்து கொள்ள முடியுமா என்றுதான் பார்ப்போம்.முடியாத நிலையில் மருத்துவ மனையை நாடுவோம். மருத்துவ மனை இருக்கிறது, மருத்துவர்கள் இருக்கின்றார்கள் ஆனால் மருந்துதான் இல்லை என்றால் அவர் என்ன செய்வார் ? அப்படிப் பட்ட மோசமான நிலையை மக்கள் அறியச் செய்வார் அப்பொழுதாவது நிர்வாகம் தன் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன்.இது சரி என்றால் பாபா ராம் தேவ் செய்ததும் சரிதான்.இதை ஒரு விளம்பர நாடகம் என்று சொல்வதுதான் விளம்பரம்.ஊழலை ஒழியுங்கள் ஊழலற்ற ஆட்சியை நிறுவுங்கள் என்று மக்கள் கேட்பதும்,மக்களை அப்படிக் கேட்கக் தூண்டுவதும் காலத்தின் கோலம் இன்றைக்கு தலைவர்கள்,அரசியல்வாதிகள்,அரசு அதிகாரிகளை விட சாதாரண மக்களே நாட்டுப் பற்று மிக்கவர்களாக இருக்கின்றார்கள் அவர்கள் வாழ்வதற்காகச் சம்பாதிக்கின்றார்கள் வசதிகளுக்காக வரம்பு மீறிச்சம்பாதிக்க விரும்புவதில்லை. பிள்ளைகளின் திருமணத்திற்காக சேமித்த பணத்தையெல்லாம் நேரடியாகச் செலவு செய்வார்கள், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கோடிக் கணக்கில் பணத்தை மறைமுகமாகச் செலவு செய்வார்கள் அரசியல்வாதிகள்.இச் செயலே அவர்கள் செய்து பயன் துய்த்த ஊழலை மனத் திரையில் படமாய்க் காட்டுகிறது.ஊழலை ஒழிப்பதில் தயக்கம் இருக்குமெனில் ஒன்று தனக்குத் தானே தண்டனை கொடுக்க நேரிடும் என்பதாக இருக்கலாம் அல்லது நிர்வாகத் திறமை அற்றவர்களாக இருக்கலாம்.வெளி நாடுகளுக்கெல்லாம் சென்று பார்கின்றீர்களே நம் நாடும் அப்படிப்பட்ட வளர்ச்சியைப் பெறவேண்டாமா? அதற்கு உங்களிடம் செயல் படுத்தக் கூடிய திட்டம் ஏதும் இல்லையா? மக்கட் தொகை,வறுமை,தீவிரவாதம் என்றெல்லாம் சொல்லி அந்தரத்தில் பந்தல் போடுவதே உங்களுக்கு கைவந்த கலையாகி விட்டது.வறுமையில் வாடும் இந்தியாவே நீ உண்மையான வளம் காண்பது எப்போது? ஊழலை ஒழிப்பது நாட்டுக்கு நல்லது.அதனால் நாடு நிச்சியம் வளம் பெறும்.அதில் தயக்கம் காட்டுவதே கேவலமானது.ஊழலை ஒழிக்க வேண்டுமெனில் பன்முனைத் திட்டங்களால் விரிவாகவும்,விரைவாகவும்,உறுதியாகவும் தீவிரமான கண்காணிப்புடன் ஒவ்வொரு அரசியல் வாதியும் செயல் பட வேண்டும்.தன் பங்கிற்கு ஏதாவது பேசிவிட்டுப் போவதால் ஒன்றும் பயனில்லை. .

Vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள்-சிலிகான் -பண்புகள்
சிலிகான் சூரியன் மற்றும் பல விண்மீன்களில் காணப்படுகிறது.எரோலைட்(aerolites) போன்ற எரிகற்களில் ஒரு முக்கியச் சேர்மானப் பொருளாக உள்ளது.படிக உருவற்ற சிலிகான் பழுப்பு நிறப் பொடியாக இருக்கிறது.இதை உருக்கி ஆவியாக்க முடியும்.படிக உருக்கொண்ட சிலிகான் உலோகப் பொலிவும் சாம்பல் நிறமும் கொண்டது.சிலிகானை ஒற்றைப் படிகமாக (Single crystal),படிக வளர்ச்சி முறைகள் மூலம் பெறுகின்றார்கள்.ஹைட்ரஜன் வளிம வெளியில் தூய ட்ரை குளோரோ சிலேனை வெப்பப் பகுப்பிற்கு உள்ளாக்கி மிகவும் தூய்மையான சிலிகான் படிகத்தைப் பெறுகின்றார்கள்.இது குறைக் கடத்தியாலான (semi conductor) சாதனங்களின் உற்பத்திக்கு முக்கியமான மூலப் பொருளாக விளங்குகிறது. தூய சிலிகான் உள்ளியல்பான அல்லது அகவியல்பான (Intrinsic) குறைக் கடத்தியாகும். இதன் கடத்து திறனை ஒரு சில குறிப்பிட்ட வேற்றுப் பொருட்களை (impurities) உட்புகுத்தி புறக் காரணி யொன்றால் கட்டுப்படுத்த முடியுமாறு மாற்றிக் கொள்ள முடியும்.அப்படிப் பெறப்பட்ட குறைக்கடத்தியை புறவியல்பான (extrinsic) குறைக்கடத்தி (P-type semiconductor )என்பர். சிலிகானின் பிணைதிறன்(valency)4.எனவே ஒவ்வொரு சிலிகான் அணுவும் புறச் சுற்றுப் பாதையில் நான்கு எலெக்ட்ரான்களைக் கொண்டிருப்பதால் அருகாமையில் உள்ள நான்கு சிலிகான் அணுக்களுடன் பிணைந்து இணைகின்றன. இதில் 5 பிணை திறன் கொண்ட பாஸ்பரஸ்,ஆர்செனிக்,ஆண்டிமோனி,பிஸ்மத் போன்ற தனிமங்களில் ஏதாவதொன்றைச் சேர்க்க அதில் கட்டற்ற எலெக்ட்ரான்களின் (free electron) எண்ணிக்கை அதிகரிக்கின்றது. அதனால் இதை எதிர்மின் வகைக் குறைக்கடத்தி (N -type semiconductor) என்பர் 3 பிணை திறன் கொண்ட போரான்,அலுமினியம் ,காலியம் ,இண்டியம்,தாலியம் இவற்றைச் சேர்க்க அதில் கட்டற்ற நேர் மின் துளைகளின் (hole) எண்ணிக்கை அதிகரிக்கின்றது. அதனால் இதை நேர் மின் வகைக் குறைக் கடத்தி (P -type semiconductor) என்பர்.இன்றைக்கு குறைக் கடத்தி மின்னணுவியல் துறையில் (Electronics) செய்து வரும் வியத்தகு மாற்றங்கள் கணக்கிலடங்கா .அலை பெருக்கி (amplifier),அலையியற்றி (Oscillator) அலைப்பண்பேற்றி (Modulator) ,அலைப்பண்பிறக்கி (detector),அலைபரப்பி (transmitter),அலைத்திருத்தி (rectifier),வானொலி, தொலைகாட்சி,கைபேசி போன்ற சாதனங்களால் தொழில்,போக்குவரத்து, செய்திப் பரிமாற்றம்,விண்வெளி ஆய்வு போன்ற பல துறைகள் வளர்ச்சி அடைந்துள்ளன.சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றி ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சூரிய மின் சில்லுகளை (solar cell) குறைக் கடத்திகளைக்கொண்டு உற்பத்தி செய்துள்ளனர். சிலிகான் ஓரளவு மந்தமாக வினைபுரியக் கூடியது எனினும் இது ஹாலஜன்களாலும் நீர்த்த காரங்களினாலும் பாதிக்கப் படக்கூடியது ஹைட்ரோ புளூரிக் அமிலம் தவிர்த்த பிற அமிலங்கள் சிலிகானைப் பாதிப்பதில்லை பயன்கள் சிலிகானின் முக்கியப் பயன் குறைக் கடத்தியாலான மின்னணுவியல் சாதனங்களை உற்பத்தி செய்வதாகும்.சிலிகான் தரும் மற்றொரு உற்பத்திப் பொருள் சிலிகோன்களாகும். இதன் பொதுவான வேதிக் குறியீடு R2SiO ஆகும். இதில் R என்பது ஹைட்ரோ கார்பன்களால் ஆன பகுதி மூலக்கூறைக் குறிக்கும் . பல்மயமாக்கப் பட்ட பல்ம (polymer) சிலிகோன்களை (R2SiO)n என்று குறிப்பிடுவர்.சிலிகோன் குடும்பத்தில் இன்றைக்கு நூற்றுக்கணக்கான சிலிகோன்களைக் கண்டறிந்து பயன்படுத்தி வருகின்றார்கள்.இவை நீர்த்த நீர்மத்திலிருந்து பாகு போன்ற பாய்மங்கள் (fluid) பசை போன்ற மசகு,மென்மையான திண்மம் போன்ற கூழ்மம்(Colloid),ரப்பர் போன்ற நெகிழ்மம்(Plastic),பிசின்கள் என நீண்ட நெடுக்கைக்கு உட்பட்டிருக்கிறது இவற்றின் தனிச்சிறப்புகளினால்,வழக்கமாகப் பயன்படுத்தப் பட்டு வந்த பல கனிம மற்றும் கரிம வேதிப் பொருட்களுக்கு மாற்றுப் பொருளாக்கப் பயன்படுத்தப் படுகின்றன. பொதுவாக சிலிகோன்கள் தேய்ந்து மெலிவதில்லை.தீவிரமான பருவ மாற்றங்களைத் தாக்குப் பிடிக்கின்றது.நீரை விலக்கித் தள்ளுவதால் நீர் ஒட்டுவதில்லை.செயற்கைக் கோள் ,போக்குவரத்து ஊர்திகளுக்கான உடல் பாகங்கள்,மருத்துவக் கருவிகள்,மின்னேமம் (electrical insulator) ஒட்டு நாடாக்கள்,ஒலி மற்றும் ஒளிப் பதிவு நாடாக்கள்,வண்ணப் பூச்சு,மெருகூட்டு எண்ணெய்கள்,அடைப்பு வளையங்கள்(gasket),தரை விரிப்புகள்,குடைத் துணிகள்,தார்ப்பாய்கள் என இப்பொருள் பயன்படும் துறைகள் விரிவடைந்து கொண்டே வருகின்றன.சிலிகோன்கள் பொதுவாக அகச் சிவப்புக் கதிர்களின் பெரும்பகுதியை 95 % வரை கடந்து செல்ல அனுமதிக்கின்றன. அதனால் இவை அகச் சிவப்புக் கதிர்களை ஆராயும் ஆய் கருவிகளில் பயன்படுகின்றன . மணல் மற்றும் களிமண் வடிவில் சிலிகோன்,செங்கல் தயாரிக்கப் பயன் படுகின்றது.இது கட்டுமானப் பொருளாகவும்,வெப்ப உலைகளின் உட்சுவருக்கு உகந்த பொருளாகவும் பயன்தருகிறது. சிலிகேட்டுகள் மட்பாண்டங்கள்,எனாமல் உற்பத்தி முறையிலும்,சிலிகா கண்ணாடி உற்பத்தி முறையிலும் பயன்படுகின்றன.எளிதாகக் கிடைக்கின்ற,விலை மலிவான கண்ணாடியின் இயந்திர,ஒளியியல்,வெப்பவியல் மற்றும் மின்னியல் பண்புகள் மிகவும் அனுகூலமாய் இருக்கின்றன.ஜன்னல் கதவுகள்,பல்புகள்,பாட்டில்கள்,மின்கடத்தாப் பொருள் எனக் கண்ணாடி பல பயன்களைத் தருகின்றது.சிலிகான் கார்பைடு மிகவும் கடினத் தன்மை மிக்க ஒரு பொருள்.இது தேய்ப்புப் பொருளாகப் பயன்படுகிறது.லேசர்(Laser) கருவிகளில் 4560 A ஓரியல்(Monocromatic) ஒளியை ஏற்படுத்த இது பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது .

Wednesday, August 8, 2012

Vethith thanimangal- Chemistry

வேதித் தனிமங்கள் - சிலிகான் -கண்டுபிடிப்பு ஆக்சிஜனுக்கு அடுத்தபடியாக பூமியில் அதிகமாகச் செழுமையுற்றிருக்கும் தனிமம் சிலிகான் ஆகும். பூமியின் புறவோட்டுப் பகுதியில் 28 % .இருப்பினும் இது காலங்கடந்தே கண்டறியப்பட்டது. இதற்குக் காரணம் அதன் ஆக்சைடிலிருந்து ஆக்சிஜநீக்கம் செய்து சிலிகானைத் தனித்துப் பிரிப்பதில் உள்ள இடர்பாடுகளே ஆகும்.சிலிகானை ஒரு வேதித் தனிமமாக அறிவதற்கு முன்பே அதன் சேர்மங்களைப் பற்றி பழங்காலத்திலிருந்தே தெரிந்து வைத்திருந்தார்கள்.கண்ணாடி என்பது சிலிகேட்டாகும்.இதை வெகு காலமாக மக்கள் கண்ணாடியாலான பொருட்கள் செய்வதற்கும்,கட்டடங்களின் அழகை மேம்படுத்துவதற்கான கட்டுமானப் பொருளாக்கப் பயன்படுத்துவதற்கும் அறிந்திருந்தார்கள் 18 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 'சிலிக்கா'வில் ஒரு வேதித் தனிமமம் இருக்கக் கூடும் என்று நம்பினார்கள் டேவி,மின்சாரத்தின் மூலம் சிலிகாவைப் பகுக்க முயற்சி செய்தார்.இந்த வழிமுறையால் பல கார உலோகங்கள் இனமறியப்பட்டன என்றாலும் சிலிகாவில் இது பயன் தரவில்லை. சிலிகான் ஆக்சைடை பழுக்கக் காய்ச்சி ,அதன் மீது உலோகப் பொட்டாசிய ஆவியை பீச்சிச் செய்த முயற்சியும் பலிக்கவில்லை.1811 -ல் கே.லூசாக் (L.J.Gay Lussac) மற்றும் தென்னார்டு (L.Thenard)சிலிகான் டெட்ரா புளுரைடு மற்றும் உலோகப் பொட்டாசியம் இவற்றிற்கிடையே தீவிரமான வேதி வினையை ஏற்படுத்தி செம்பழுப்பு நிறத்தில் ஒரு விளை பொருளைப் பெற்றனர். அதில் படிக உருவற்ற சிலிகான் இருப்பதாகத் தெரிவித்தனர். 1823 ல் சுவீடன் நாட்டு வேதியியலாரான பெர்சிலியஸ் (J.Berzelius) சிலிகான் ஆக்சைடு (மண்),இரும்பு மற்றும் கரித்தூள் இவற்றைக் கலந்து உயர் வெப்பநிலைக்குச் சூடுபடுத்தி ,இரும்பும் சிலிகானும் சேர்ந்த ஒரு கலப்பு உலோகத்தைப் பெற்றார் .பின்னர் கே லூசாக் மற்றும் தென்னார்டின் வழிமுறையைப் பின்பற்றி பழுப்புநிறப் பொருளைப் பெற்றார். நீரோடு செயல்படச் செய்து ஹைட்ரஜன் குமிழ்களை வெளியேற்றி ,படிக உருவற்ற சிலிகானை கரும்பழுப்பு நிறத்தில் நீரில் கரையாத ஒரு விளை பொருளைப் பெற்றார். இதில் பொட்டாசியம் சிலிகோ புளுரைடு வேற்றுப் பொருளாக இருந்தது. இதை மீண்டும் மீண்டும் நீரில் கழுவித் தூய்மைப்படுத்தி தூய சிலிகானைப் பெற்றார்.டிவில்லி (de Villi),1854 ல் படிக உருவ சிலிகானை உருவாக்கிக் காட்டினார். சிலிகான் இயற்கையில் தனித்துக் காணப்படவில்லை.ஆக்சைடாகவும், சிலிகேட்டாகவும் உள்ளது.மணல்,குவார்ட்ஸ் (Quartz ) பாறைப் படிகங்கள் ,அகேட்மற்றும் சில வகையான இரத்தினக் கற்களில்ஆக்சைடாகவும்,கிரானைட்,அஸ்பெஸ்டோஸ்,களிமண்,மைக்கா போன்றவற்றில் சிலிகேட்டாகவும் சிலிகான் உள்ளது.வர்த்தக ரீதியில் சிலிகாவையும் கார்பனையும் மின்னுலையில்,கார்பன் மின் வாய்களின் துணை கொண்டு சூடுபடுத்தி உற்பத்தி செய்கின்றார்கள். சிலிகான் என்ற பெயரின் மூலம் இலத்தீன் மொழிச் சொல்லான சிலிசியமாகும் (Silicium).இது கடினமிக்க கல் என்ற பொருள்படும் சிலக்ஸ் (Silex) என்ற சொல்லிலிருந்து உருவானது.

Thursday, August 2, 2012

Vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள் -அலுமினியம் -பயன்கள் நற்கடத்தியாக விளங்குவதால் அலுமினியம் வெப்பம் உணர் கருவிகளுக்குத் தேவையான வெப்பக்கடத்தியாகவும்,மின்சாரத்தை எடுத்துச் செல்ல மின்கம்பியாகவும் பயப்படுகிறது மின்சாரத்தை நெடுந் தொலைவு எடுத்துச் செல்லும் கம்பியாக அலுமினியத்தைப் பயன்படுத்தும் போது தடித்த கம்பிகளாக்கி மின்தடையைப் போதிய அளவு தாழ்த்திக் கொள்ள மின் இழப்பு பெருமளவு குறைக்கப் படுகிறது.பிற மின்கம்பிகளை விட எடையும் குறைவு . அலுமினியத்தின் வெப்பங் கடத்தும் திறன் அதை சமையல் பாத்திரங்களாகப் பயன்படுத்த ஏற்றதாக இருக்கிறது.கிடைக்கும் வெப்பத்தை சுற்றுப்புறத்தில் இழந்துவிடாமல் உட்புறமாகக் கடத்தி சமைக்க வேண்டிய பொருளை விரைவில் சமைத்து விடுவதற்கு இது அனுகூலமாக இருக்கிறது. எனினும் சாதாரண உப்பால் அரிக்கப்படுகிறது.வெப்பங் கடத்தும் திறனும் ,வெப்ப ஏற்புத் திறனும் அதிகமாக இருப்பதால் அலுமினியம் சூரிய ஆற்றல் சேகரிப்பான் களுக்கும்,கருவிகளுக்கும் உகந்ததாக விளங்குகிறது தூய அலுமினியம் புற ஊதாக் கதிர்களுக்கு (ultra violet rays) ஒளி மின் எலெக்ட்ரான்களை (photo electrons) உமிழ்கிறது.இதனால் அலுமினியம் புற ஊதாக் கதிர்களை ஆராயும் ஆய்கருவிகளில் பயன் தருகிறது.சீதோஷ்ண மாற்றங்களைத் தாக்குப் பிடிப்பதால் கூரை வேயப் பயன்படும் குழவுத் தகடுகள் செய்ய முடிகிறது.அலுமினியப் பொடியை எண்ணையோடு கலந்து,நீராவிக் குழாய்,எண்ணெய் மற்றும் பெட்ரோல் கிடங்கு, இயந்திரங்களின் வெப்ப ஆற்றி (radiator) போன்றவைகளில் மேற்பூச்சிடுகிறார்கள் அலுமினியப் பூச்சு இரும்பு துருப் பிடிக்காமல் பாதுகாக்கிறது உலோகவியல் துறையில் அலுமினியம் ஆக்சிஜன் நீக்கியாகப் பயன் படுத்தப்பட்டு குரோமியம்,மாங்கனீஸ் போன்ற உலோகங்கள் தனித்துப் பிரிக்கப்படுகின்றன.உருகிய எக்கில் அலுமினியம் வளிமங்களுடன் சேர்வதால் உட்புழை ஏதுமின்றி எக்கை வார்க்க முடிகிறது. அலுமினியம் மிகவும் இலேசான உலோகம்.அதனால் அது வானவூர்திகளை வடிவமைக்க இணக்கமாய் இருக்கிறது. தேவையான கட்டுறுதியை அலுமினியக் கலப்பு உலோகங்கள் மூலம் பெறுகின்றார்கள் .இவற்றுள் முக்கியமானது டூராலுமின்(Duralumin),நிக்கலாய் (Nickaloy) மற்றும் சிலுமின் (Silumin)ஆகும்.ஹிந்தாலியம் என்ற அலுமினியக் கலப்பு உலோகம் 'பிரஷர் குக்கர்‘ செய்யப் பயன்படுகிறது.இக்கலப்பு உலோகங்கள் நீர் மூழ்கிக் கப்பல்,செயற்கைக் கோள்களின் உடல் பாகங்கள்,ஏவூர்தி மற்றும் ஏவுகணைகளின் பாகங்கள் உணர் கொம்பின் (antena) சட்டங்கள்,அலைச் செலுத்திகள் (wave guides) மின் தேக்கிகள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுகின்றன.கட்டடப் பொறியியலில் நிலைச் சட்டங்கள்,சன்னல்,படச்சட்டங்கள்,இடைத் தட்டிகள்,கைப்பிடிகள் போன்றவற்றில் அலுமினியம் இன்றைக்குப் பயன்படுகிறது. நேர் முனைப் பூச்சேமம்(anodising) மூலம் அலுமினியத்தின் மீது ஆக்சைடு மென்படலத்தை ஏற்படுத்தி புறப்பரப்பை மெருகூட்டுவதுடன் அரிமானத்திலிருந்தும் பாதுகாக்கின்றார்கள்.இதனால் ஒரு திண்மப் பரப்பை 90 சதவீதம் எதிரொளிக்கக் கூடியதாக மாற்ற முடியும்.இன்றைக்கு வானளாவிய கட்டடங்களின் முகப்பை இத்தகைய எதிரொளிப்புத் தட்டிகளினால் அலங்கரிக்கின்றார்கள் பல்வேறு சிறப்புப் பயன்களுக்கென பல்வேறு அலுமினியக் கலப்பு உலோகங்களை உற்பத்தி செய்துள்ளனர்.மக்னீலியம்(Magnelium)என்ற கலப்பு உலோகம் பற்றினைப்புக்குப் பயன் தருகிறது. அலுமினியப் பொடியையும் பெரிக் ஆக்சைடையும் கலந்த கலவையை தெர்மிட் (Thermit )என்பர்.இது எரியும் போது வெப்ப நிலை 3000 டிகிரி C வரை உயர்வதால் ,இரும்பு மிக எளிதாக உருகிவிடுகிறது.இதனால் உடைந்த பாகங்களையும் ,இரயில் தண்டவாளங்களையும் பற்றிணைக்க முடிகிறது.கலகக் காரர்கள் இதை ஏறிகுண்டாகப் பயன்படுத்துவர்.ஏனெனில் இதனால் தோன்றும் தீயை எளிதில் கட்டுப் படுத்தமுடியாது. அலுமினிய மென்னிழையாலான 0 .009 மில்லி மீட்டர் தடிப்புள்ள அஞ்சல் வில்லையை முதன் முதலாக ஹங்கேரி வெளியிட்டது. அதன் பிறகு பல நாடுகள் அ லுமினிய அஞ்சல் வில்லைகளை வெளியிட்டன மெல்லிய அலுமினியப் பூச்சிட்ட இழைகளாலான அலுமினியத் துணியை நெய்துள்ளார்கள்.இது கோடையில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்தும் குளிர் காலத்தில் குளிர்ச்சியிலிருந்தும் பாதுகாப்பளிக்கிறது.அலுமினியத்தின் மற்றொரு பயன்பாடு பலானியம் (Planium) என்ற வர்த்தகப் பொருளாகும்.இது அலுமினியத்தால் மேற் பூச்சிடப்பட்ட நெகிழ்மமாகும்(Plastic).நெகிழ்மத்தை விட 10 மடங்கு அழுத்தத்தைத் தாக்குப் பிடிக்கிறது.ஆனால் அதைப் போல நெருப்பினால் பாதிக்கப்படுவதில்லை.தானியங்கு ஊர்திகள்,குளிர் சாதனப் பெட்டி இவற்றில் உட்புறம் மற்றும் மேற்புறத் தளங்கள்,சாலைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்குத் தேவையான தற்காலியத் தடுப்புச் சுவர்கள்,கை அலம்பும் தொட்டிகள் தயாரிப்பதற்கு பலானியம் பயன்படுகிறது