Thursday, March 29, 2012

vinveliyil ulaa

நண்டு வடிவ நெபுலா


M 1 என்று மெசியர் படத் தொகுப்பில் முதலாவதாக இடம் பெற்றுள்ள நண்டு வடிவ நெபுலா, சீட்டா(ζ)டாரிக்கு மிக அருகாமையில்,ஏறக்குறைய
6500 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது.இதை டாரெஸ் A என்று
வானவியலார் குறிப்பிடுகின்றார்கள் .இந்த நெபுலாவின் விளிம்பில்
காணப்படும் வரி இழைகள், நண்டின் கால்கள் மற்றும் உணர் கொம்புகள்
போலத் தோன்றுகின்றன.அதனால் இதை நண்டு வடிவ நெபுலா(Crab
nebula) என்று அழைப்பது வழக்கமாயிற்று. இதைத் தொலை நோக்கியால்
மட்டுமே பார்க்க முடியும் .இது நீள் வட்டக் கோள வடிவில் ,விண்ணில்
தோன்றும் ஒரு சூரியக் கோளுக்கும், முழு நிலவிற்கும் இடையே இருக்குமாறு
உருவ அளவைக் கொண்டுள்ளது.இதை 1731 ல் இங்கிலாந்து நாட்டு
மருத்துவரும் பொழுதுபோக்கு வானவியலாருமான ஜான் பெவிஸ்(John Bevis)
என்பாரும், 27 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்சு நாட்டு வால்மீன் ஆய்வாளரான
சார்லஸ் மெசியரும் தனித்தனியாகக் கண்டுபிடித்தனர் .

நண்டு வடிவ நெபுலா உண்மையில் நெடுங்காலத்திற்கு முன்பு விண்மீனாக
இருந்து ஆற்றலையெல்லாம் உமிழ்ந்து ஓய்ந்தபின் ,வெடித்துச் சிதறிச் தோன்றிய எச்சம். இதற்கான ஆதாரங்களை வானவியலார் திரட்டியுள்ளனர். இது
வானவியலில் ரேடியோ வானவியல் என்று கிளை தோன்றிய பின்னரே இயலுவதாயிற்று.
தொடக்க காலத்தில் விண்வெளியை கட்புலனறி ஒளியால் மட்டுமே ஆராய்ந்து அறிந்தனர்.இதன் நடைமுறை ,இரண்டாம் உலகப் பெரும் போருக்குப் பின்னர் வியத்தகு மாற்றத்திற்கு உள்ளானது .இரண்டாம் உலகப் போர் பலத்த சேதத்தை விளைவித்தது என்றாலும் .கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கும் என்பதற்கு ஏற்ப,அதனாலும் ஒரு பயன் கிடைக்கப் பெற்றது
இரண்டாம் உலகப் போரின் போது மாற்றி யோசித்த சில விஞ்ஞானிகள்,பறக்கும்
விமானங்களைத் துப்பறியும் இராடர் என்ற சாதனத்தைக் கண்டுபிடித்தனர் .1930
களில் நியூ ஜெர்சியிலுள்ள பெல் ஆராய்ச்சிக் கூடத்தைச் சேர்ந்த காரல் ஜான்ஸ்கை
(Karl Jansky ) என்பார் விண்வெளியிலிருந்து வரும் ரேடியோ அலைகளை பூமியிலிருந்து கொண்டும் ஆராயும் வாய்ப்புகளைப் பற்றி தெரிவித்திருந்தாலும் ,
அதன் செய்முறை போர் ஓய்ந்த பின்னரே வளர்ச்சி பெற்றது.
போரின் போது வேவு பார்க்க நிர்மாணிக்கப்பட்ட இராடர் அமைப்புகளில், எவ்வளவு கவனமாக இருந்தபோதிலும் சமிக்கை அலைகளில் குறுக்கீடுகள் எப்போதும் இருந்து கொண்டே இருந்தன . இதற்கு என்ன காரணம் என்பதை அறியாது சில காலம்
குழம்பிப்போன விஞ்ஞானிகள் பின்னர் இது சூரியனிலிருந்து வரும் ரேடியோ அலைகளான இரைச்சலே இடையூறு செய்கிறது எனத் தெரிந்து கொண்டனர். இதன் பின்னரே விண்வெளியை கட்புலனுக்கு உட்படாத ரேடியோ அலைகள் மூலம் ஆராய முடியும் என்ற உண்மையை புரிந்து கொண்டனர் .1950களில் இராடர் மூலம் ,கட்புலனறி ஒளியை விடக் கூடுதல் அலை நீளமுடைய ரேடியோ அலைகளைக் கொண்டு பேரண்டத்தை அலசி ஆராயும் முறை தோன்றியது.

ரேடியோ வானவியல்,கட்புலனறி ஒளி சார்ந்த வானவியலை விட ,சில அனுகூலங்களைக் கொண்டுள்ளது .சூரிய ஒளியிலுள்ள நீல நிறம் பூமியின் வளி மண்டலத்தில் அதிகமாகச் சிதறல டைவதால், வானம் நீல நிறமாகக் காட்சி தருகிறது. என்பது ராமன் விளைவு.இதனால் விண்வெளியில் விண்மீன்கள் இருந்தாலும் பகல் பொழுதில் அவற்றைக் காண முடிவதில்லை.சூரிய ஒளியிலுள்ள சிவப்பு நிறம் ,நீல நிறம் போல சிதறலடைவதில்லை.
அதனால் சூரியன் மறையும் போது வானம் சிவப்பாகத் தோன்றுகிறது.ஆய் கருவி
நேரடியாகச் சூரியனைப் பார்க்காத வரை ,இது போன்ற ஒளிச் சிதறல் ,ரேடியோ அலை நீள நெடுக்கையில் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை .இதனால்
ரேடியோ வானவியல் மூலம் 24 மணி நேரமும் வானத்தை ஆராய முடிகிறது.

Tuesday, March 27, 2012

vinveliyil ulaa

டாரெஸ் விண்மீன் கூட்டம்


1936 இல் ஒரு முறை புறக் கூடு உருவான போது பிளியோனின் பிரகாசம் 1938 -1952 இக்கு இடையில் மங்கியது .1972 மற்றொருமுறை புறக்கூடு உருவான போது 1987 வரை பிரகாசம் மங்கியது .இந்த புறக்கூடின் நிறமாலையில் ஏற்படும் மாற்றங்கள் ஒவ்வொரு 17 அல்லது 34 ஆண்டு களுக்கு ஒருமுறை காணப்படுவதால் பிளியோன் ஒரு துணை விண்மீனைப் பெற்று இரட்டை விண்மீனாக இருக்கலாம் என்றும் இது 34 மணி நேரத்திற்கு ஒருமுறை முதன்மை விண்மீனைச் சுற்றி வருகிறது என்றும் கருதுகிறார்கள் .டாரெஸ் வட்டார விண்மீன் கூட்டத்தில் தீட்டா (Θ) டாரி சிக்மா (σ) டாரி கப்பா (κ) டாரி போன்ற ஒளியியல் இரட்டை விண்மீன்களும் லாம்டா (λ) டாரி போன்ற மறைப்பு இரட்டை விண்மீன்களும் உள்ளன .தீட்டா டாரி ,ஹயாடெஸ் தொகுப்பில் அமைந்துள்ள ஓர் அகன்ற இரட்டை விண்மீன் .கூர்ந்து நோக்கினால் இவற்றின் தோற்ற ஒளிப் பொலிவெண் (apparent magnitude) முறையே 3.8 ஆகவும் 3.4 ஆகவும்,ஒன்று பெரிய மஞ்சள் நிற விண்மீனாகவும் மற்றொன்று பெரிய வெள்ளை விண்மீனாகவும்
காட்சி தருகின்றன 158 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இவை ஹையடெஸ் தொகுப்பில் உள்ள விண்மீன்களுள் பிரகாசமிக்கதாகும்

லாம்டா டாரி சற்றேறக் குறைய பெர்சியஸ் வட்டார விண்மீன் கூட்டத்திலுள்ள
அல்கோல் போன்று மறைப்பு வகை இரட்டை விண்மீனாகும் . துணை விண்மீன் ,
முதன்மை விண்மீனைச் சுற்றி வரும்போது இடை மறைப்பதால் ,பிரகாசத்தில்
மாற்றம் ஏற்படுகிறது. இதன் தோற்ற ஒளிப் பொலிவெண் 3.4 முதல் 3.9 வரையிலானநெடுக்கையில் நான்கு நாட்கள் அலைவு காலத்துடன் மாறிமாறித் தோன்றுகிறது. இது சுமார் 370 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

அல்ஹிகா (Alheka ) எனப்படும் சீட்டா(ζ) டாரி தோற்ற ஒளிப் பொலிவெண் 2 .97 உடன் 417 ஒளி ஆண்டுகள் தொலைவிலும், எய்ன் (Ain ) எனப்படும் எப்சிலான் (ε) டாரி தோற்ற ஒளிப் பொலி வெண் 3.53 உடன் 155 ஒளி ஆண்டுகள் தொலைவிலும் சை (ξ) டாரி 3.73 என்ற தோற்ற ஒளிப் பொலிவெண்ணுடன் 222 ஒளி ஆண்டுகள் தொலைவிலும் உள்ளன .இக் கொத்து விண் மீன் கூட்டத்தில் உள்ள அட்லஸ் என்ற விண்மீன் 381 ஒளி ஆண்டுகள் தொலைவில்.தோற்ற ஒளிப் பொலி வெண்
3.62 உடன் பிளியோனுக்கு அருகில் இருக்கிறது.

Monday, March 26, 2012

arika ariviyal

மரணம் என்பது என்ன ?
மருத்துவ அறிவியலின் படி மரணம் என்பது உடலிலுள்ள உயிர்ச் செல்களின் இயக்கமின்மை என்று வரையறுக்கலாம் .
முக்கிய உறுப்புக்கள் இயக்கமின்றி செயலற்றுப் போனதையே நாம் மரணம் என்று கூறுகின்றோம்
மருத்துவ அறிவியலில் மரணத்தை இரு வகையாக விவரிக்கின்றார்கள் .அதை நாம் மருத்துவச் சாவு
(Clinical death ) என்றும் ,மூளைச் சாவு (Cerebral death ) என்றும் குறிப்பிடுகின்றோம் .
மருத்துவச் சாவு என்பது பல்வேறு காரணங்களினால் இதயம் இயங்காது நின்று போவதாகும் .அப்போது இதயத் துடிப்பு
சிறிதும் இல்லாதிருக்கும். எலெக்ட்ரோ கார்டியோ கிராமில் (electro cardiogram ) பதிவு செய்ய இதயத்தின் இயக்கம்
தொடர்பான சமிக்கை அலைகள் வெளிப்படுவதில்லை.
ஆனால் மனித மரணத்தை ஆய்வு செய்த உடற்கூறு வல்லுனர்கள் ,இதயம் நின்று விட்டாலும் மூளை இதயத்தோடு
உடன்கட்டை ஏறுவதில்லை .இதயம் நின்று போய்விட்டாலும் ,அரை மணியிலிருந்து 2 மணி நேரம் வரை இந்த
மூளை தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கிறது .
இந்த இடைக்காலத்தில் மூளையின் இயக்கத்தை பதிவு செய்யும் எலெக்ட்ரோ என்சிபலோகிராம் (electro encephalogram )
மூளை இன்னும் மூச்சு விட்டுக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்திக் காட்டியிருக்கிறது. .இக் கால வரம்பிற்குப் பிறகு
மூளையும் இயக்கமற்று செயலிழந்து விடுவதால் ,மூளையிலிருந்து சமிக்கை அலைகள் வெளிப்படுவதில்லை. .
இதையே மூளைச் சாவு என்கிறோம் . மூளைச் சாவே ஒரு மனிதனின் முடிவான சாவாகும். ஏனெனில் இதற்குப்
பிறகு உயிரை மீட்டுப் பெறவே முடியாது.
மருத்துவச் சாவிற்கும் ,மூளைச் சாவிற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு நோயாளி இரு வேறு சாவு நிலைகளுக்குமிடையே
ஊசலாடிக் கொண்டிருப்பதாகக் கூறலாம் . இக் காலத்தில் இதயத்திற்கு அதிர்ச்சி கொடுத்து அதன் இயக்க நிலையைத்
திரும்பப் பெறமுடியும் வாய்ப்பிருப்பதால் மருத்துவச் சாவை அடைந்தவர் தா உயிரை மீட்டுப் பெற முடியும் . அதற்கான
வாய்ப்பில்லாத போது ,உடலுறுப்புக்கள் அனைத்தும் செயலற்ற நிலையை படிப்படியாக அடையும் . அதனால் ,இக் கால
கட்டத்தில் சிறு நீரகம் ,கண்கள் போன்ற உடலுறுப்பக்களைத் தானமாகப் பெற்று மாற்று அறுவைச் சிகிச்சைக்குப்
பயன்படுத்துவர் .மூளைச் சாவிற்குப் பிறகு அகற்றப் படும் உடலுறுப்புக்கள் மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பயன் படுவதில்லை .
இதயம் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றலை உறுப்புகளுக்கு வழங்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது ..அது
நின்று விட்டால் ,ஆற்றல் பகிர்மானம் உடனடியாக நின்று விடுவதில்லை .இதையே lagging என்று அறிவியலில்
குறிப்பிடுகின்றனர் . இதயம் ஓய்ந்த பிறகு, பிற உடலுறுப்புக்கள் படிப்படியாக e -ன் அடுக்குச் சரிவில் (exponential )
ஓய்வடைகின்றன.