Tuesday, December 26, 2023

பிள்ளையார் நோன்பு

 பிள்ளையார் நோன்பு

திருக்கார்த்திகை முடிந்து 21 நாள் கழித்து மார்கழி மாதத்தில் சஷ்டியும் சதயமும் கூடிய நாளில் பிள்ளையார் நோன்பு வரும். பிள்ளையார் நோன்பு என்பது நகரத்தார்களுக்கு மட்டுமே உரிய ஒரு பண்டிகை

பிள்ளையார் நோன்பு அன்று  காலையில் சாமி வீட்டில் கோலம்போட்டு பிள்ளையார் படம் அல்லது சிலை யொன்றை வைக்க வேண்டும் . நெல்லுப் பொரி , எள்ளுப்பொரி  சோளப்பொரி கம்புப்பொரி , அவல் பொரி ஆகிய 5 பொரிகளையும் தனித் தனியாக கிண்ணங்களில்  வைத்து   பிள்ளையாருக்கு முன்பு வைக்க வேண்டும். கருப்பட்டி பணியாரம் பிள்ளையார் நோன்பிற்காகச் செய்யப்படும் ஒரு பலகாரம் . பச்சரிசி மாவில் கருப்பட்டிப் பாகினை ஊற்றிப் பிசைந்து முதல் நாளே தயார் செய்யவேண்டும்  . பிள்ளையார் நோன்பன்று கருப்பட்டி மாவில் கொஞ்சம் நீரூற்றி கரைத்து பணியாரம் சுட்டு பிள்ளையாருக்குப் படைத்தது  இழை எடுத்துக்கொண்ட பின் சாப்பிடவேண்டும். இத்துடன் வடையையும் சேர்த்துக்கொள்ளலாம்   

இழை எடுத்துக்கொள்வதற்காக கருப்பட்டி மாவில் கொஞ்சம் தனியாக எடுத்து    வைத்துக் கொள்ளவேண்டும். பிள்ளையாரை வணங்குவதற்கு முன் தனியாக எடுத்துவைத்திருக்கும் கருப்பட்டி மாவைக் கிள்ளி சிறு சிறு வடிவங்களாகப் [பிள்ளையார் வடிவில் (கூம்பு வடிவில்)] பிடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.21 மெல்லிய நூல் இழைகள் கொண்ட திரியை அந்த இழையில் வைக்க வேண்டும் . வீட்டில் உள்ள பெரியவர் அந்த இழை கொண்ட பிள்ளையாரை எடுத்து இழையை நெய்யில் தோய்ந்துக் கொடுக்கவேண்டும் .சிலர் அந்தத் திரியை விளக்கில் காட்டி ஏற்றிவிட்டுக் கொடுப்பார்கள் .முதல் இழை பிள்ளையார் இழை எனப்படும்.இதை எல்லோருக்கும் இழை எடுத்துக்கொடுக்கும் பெரியவரே பிள்ளையாரை வணங்கி விட்டு எடுத்துக்கொள்வார்.அதன் பிறகு மற்றவர்களுக்கு இழை எடுத்துக் கொடுப்பார் .வயதின் வரிசைப்படி  மூத்தவர்கள் முன்னாலும் இளையவர்கள் பின்னாலும் இழை எடுத்துக்கொள்வார்கள்.. சிலர் வெள்ளைப்பணியாரம் , திரட்டுப்பால் போன்றவைகளையும் செய்து பிள்ளையாருக்குப் படைத்துவிட்டு சாப்பிடுவார்கள் . வீடுகளில் பிள்ளையார் நோன்பு கொண்டாட முடியாதவர்கள் நகரத்தார் கோயில்களில் இழை எடுத்துக்கொள்வார்கள்.இதற்காக ஒரு நபருக்கு இவ்வளவு என்று குறிப்பிட்ட தொகையை வசூலித்து பிள்ளையார் இழை எல்லோரும் எடுத்துக்கொள்ளும்படி செய்கின்றார்கள்.கடைசியாக அந்தப்பெரியவர் தமக்குரிய இழையை எடுத்துக்கொள்ளவேண்டும் . கருவுற்ற பெண் கருவிலுள்ள பிள்ளைக்காக வும்  தாய் இழை எடுத்துக் கொள்ள வேண்டும்

பிள்ளையார் நோன்பு கொண்டாடுவதற்கு வலிமையான ஒரு காரணம் இருக்க வேண்டும். நம் மூதாதையர் பிள்ளையாரையே முழுமுதற் கடவுளாகத் தொழுதனர். அரசியல் காரணமாக இடம்பெயர்ந்தபோதும் ஆழிப்பேரலை காரணமாக இடம் பெயர்ந்தபோதும்  பொருள் இழப்போடு உயிர் இழப்பையும் சந்தித்தார்கள் .தங்கள் இனமே அழிந்துபோய்விடுமோ என்று அஞ்சினார்கள். தங்கள் இனம் விருத்தி யடையவேண்டும் என்று அனைவரும் முழுமுதற் கடவுளை வேண்டிக்கொள்ளும் நிகழ்ச்சியே பிள்ளையார் நோன்பு. அதனால்தான் கருவிலுள்ள சிசுவிற்கும் இழை எடுத்துக்கொடுக்கின்றார்கள்

.21 நூல் இழைகள் கொண்ட திரி என்பதற்கும் ஒரு நோக்கம் அடிப்படையாக இருக்கவேண்டும் . தொடக்கத்தில் வைசியர்களாக வாழ்ந்த நகரத்தார்கள் எல்லோரும் ஒரு வகையினராக இருந்து மரகத விநாயகரை வழிபட்டனர் .அரசியல் காரணமாகவும் ஆழிப்பேரலை காரணமாகவும் அவர்கள் இருமுறை புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்தனர்.சோழ நாட்டில் காவிரிப்பூம் பட்டினத்தில் வாழும் போது மூன்று வீதிகளில் வாழ்ந்து வந்தனர் .அரசியல் காரணமாகப் பலர் உயிரிழந்தனர் .பலருக்கும் திருமணம் செய்துகொள்ள அவர்கள் இனத்திலேயே பெண் இல்லாமல் இருந்தது   அரசனின் அனுமதி பெற்று வெள்ளாள இனப் பெண்களை மணந்து கொண்டனர் . சோழிய வெள்ளாளர் இனப் பெண்களை மணந்து கொண்டவர்கள் இன்றைக்கு நாட்டுக்கோட்டை நகரத்தார் என்று அழைக்கப்படுகின்றார்கள். திருமண உறவுகள் காரணமாக இவர்கள் 9 கோயில் பிரிவினராகப் பிரிந்து வாழ்ந்தனர் .அவை இளையாற்றங்குடி ,மாத்தூர், வைரவன் கோயில் ,நேமங்கோயில் , சூரைக்குடி ,இலுப்பைக்குடி ,வேலங்குடி பிள்ளையார் பட்டி, இரணியூர். இக்கோயில்களுள் இளையாற்றங்குடியார் 7 உட்பிரிவுகளோடும் , மாத்தூரார் 7 உட்பிரிவுகளோடும். திருமண உறவுகள் மேற்கொள்ளும் அடிப்படை யில் நகரத்தார்களிடையே மொத்தம் 21 பிரிவுகள் உள்ளன . இந்த 21 பிரிவினரும் ஒற்றுமையாகவும் சீரும் சிறப்போடும் உடல் நலத்தோடும் வாழ வேண்டும் என்று பிள்ளையார் ஆசிர்வதித்து இழை கொடுக்கவேண்டும் என்று 21 நூல் இழைகளை இணைத்து வைத்திருக்கின்றார்கள்

Sunday, December 17, 2023

 The rituals and ceremonies in the marriage of Nattukkottai Nagarathar.


 Topic : The rituals and ceremonies in the marriage of Nattukkottai Nagarathar. (நாட்டுக்கோட்டை நகரத்தார் வீட்டுச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் 1. பிள்ளைகளின் திருமணம்)

Publisher: Amazon KDP Digital Edition, 16 ,December 2023

Registration Number ASIN BOCQCJX1FX

Language: Tamil

Pages 50 cost 2 USD 

The only society that serves as a good example for all the people in the world to follow, is Natukottai Nagarthar in Chettinadu,India.. What gave them such excellence was their morals of life with  social prosperity. The deep  experiences of our ancestors followed year after years  are embedded in all of our rituals and ceremonies . They  can simply confirm  everyone a happy home and social life without any external effort with  physical works. Everyone's houses were full of gloom and we were living like generation after generation . There was no word of divorce . Without understanding their implications by adopting the mechanical life in the fast-paced world, we are discarding certain rituals and ceremonies. This book is written from the point of view of understanding the inner meaning of the rituals and ceremonies by everyone  and not putting them aside.When we enjoy the inherent benefits associated with our rituals and ceremonies by simply following them it provides a kind of social safeguard .

Thursday, December 7, 2023

 கழுத்தூரு வாங்கப் போதல்

மாப்பிள்ளை வீட்டாருடன்  பங்காளிகளில் ஒருவரும் சேர்ந்து  திருமணத்திற்கு முன்பு ஒரு நன்னாளில் உப்புக்கடகம்,ஏட்டோலை மற்றும் முளைப்பாரி முதலியவற்றை எடுத்துக் கொண்டு பெண் வீட்டிற்குச் செல்வார்கள் .இன்றைக்கு தேங்காய் சட்டி கொண்டு செல்கின்றார்கள். .இவர்கள் பொதுவாக வட்டுவப் பை என்ற ஒரு சிறப்புப் பையையும் கொண்டு செல்வார்கள். இதை வள்ளுவப் பை என்றும் அழைக்கின்றார்கள் இன்றைக்கு வட்டுவப் பை  காணமால் போய் வருகின்றது

பெண் வீட்டார் திருமணம் நிகழும் வளவு வீட்டிற்குள் தடுக்கில் உட்காரவைத்து வந்திருப்பவர்களிடம் கழுத்தூரு உருப்படிகளையும் தாலிச் சங்கிலிகளையும் கொடுப்பார்கள் .எல்லாவற்றையும் சிவப்புத்  துண்டில் வைத்து அதனுடன் விரலி மஞ்சள் வெற்றிலை பாக்கு மற்றும் மல்லிகைப்பூ ஆகியனவற்றையும் சேர்த்துக் கொடுப்பார்கள். உருப்படிகளை எண்ணிச் சரிபார்த்து அவற்றை வட்டுவப்பையில் வைத்து மாப்பிள்ளை வீட்டுக்கு கொண்டு வரவேண்டும் .இதை திருமணத்திற்கு முதல்நாள் மாலைப் பொழுதில் பங்காளி வீட்டு ஆண்கள் ஒன்றிணைந்து நூல் திரித்து மஞ்சள் பூசி    கழுத்தூராகக் கோர்ப்பார்கள்.

 பெண்வீட்டில் அரசாணைக் கால்  கட்டும் நிகழ்வு நடைபெறும்போது மாப்பிள்ளை வீட்டில் கழுத்தூரு கோர்க்கும் நிகழ்வு நடைபெறும்  பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் நிகழும் திருமணங்களானால்  சனிக்கிழமைகளில்   கழுத்தூரு கோர்ப்பதில்லை. எனவே ஓரிரு நாட்களுக்கு முன்பாக ஒரு நன்னாளில்  கழுத்தூரு வாங்கப்போவதையும் ,கழுத்தூரு கோர்ப்பதையும்  செய்துகொள்வார்கள்.

   கழுத்தூரு வாங்கும் போது பெண்வீட்டார் தரும் உருப்படிகள்

 திருமாங்கல்யம்-1

இலக்குமி ஏத்தனம்-1

ஏத்தனம்  -4

உரு -19

சரிமணி -2

கடைமணி -4 ஆக மொத்தம் 31 உருப்படிகள்

இவை மட்டுமே கழுத்தூராகக் கோர்க்கப்டும். இதனுடன் பின்னர் பயன்படுத்திக் கொள்ளும் குச்சி, தும்பு தூவாளை  ஒற்றைத் தும்பு ஆகிய நான்கு உருப்படிகளை.யும்  தருவார்கள் . ஆக மொத்தம் 35 உருப்படிகள் இருக்கும் என அறிக. திருமணத்தின் போது மாப்பிள்ளை மணப்பெண்ணுக்கு திருமாங்கல்யம் பூட்டிவிட்டு தாலி அணிவிக்க தாலியும் தருவார்கள் ..இதை மாப்பிள்ளை வீட்டார் மாப்பிள்ளை அழைத்துச் செல்லும் போது மாப்பிள்ளையின் தாயார் அல்லது மாப்பிளை வீட்டில் ஒரு குடும்பப் பெண் தட்டில் வைத்து கோர்க்கப்பட்ட கழுத்தூருடன் கொண்டு செல்லவேண்டும்

 

Wednesday, December 6, 2023

அரசாணைக் கால் கட்டுதல்

 அரசாணைக் கால் கட்டுதல்

 அரசன் ஆணைக் கால் என்பதே மருவி அரசாணைக்கால் என்று பொதுவழக்கில் நிலை பெற்றிருக்கின்றது .அரசன் நேரில் வந்து அனுமதி வழங்க இயலாது என்பதால் அரசாணைக் காலையே அரசன் அளிக்கும் ஆணையாகக் கொண்டு திருமணத்தை நடத்தும் பழக்கம் நகரத்தார்களிடம் மட்டுமே உண்டு . அரசாணைக் கால் கட்டுவதற்குத் தேவையான ஓரளவு நீண்ட மூக்கில் கம்பு, கிளுவைக்கம்பு, பாலைக் கம்பு ,அரசஇலை மற்றும் மாவிலைக் கொப்பு ,அவற்றை வைத்துக் கட்டுவதற்குத்  தேவைப்படும்   உறுதியான சணல் கயிறு நூல்கண்டு போன்றவற்றையும், மாவிலை தோரணம் கட்டுவதற்குத் தேவையான ஓலைக் குருத்துக் களையும்   முன்கூட்டியே ஆர்டர் செய்து திருமணநாளுக்கு முதல்நாள் காலையில் கிடைக்கும் படி வாங்கி வைத்திருக்க வேண்டும் . திருமணத்தன்று வீட்டு வாசலில் குலையுடன் கூடிய வாழைமரம் கட்டவேண்டும் .இதையெல்லாம் செய்து கொடுக்க ஊரில் சில ஆட்கள் இருக்கின்றார்கள்.நுழைவு வாயிலில் கட்ட வேண்டிய  பூமாலை மற்றும் காலஞ்சென்ற முன்னோர்களின் படங்களுக்குச் சாத்த வேண்டிய மாலைகளுக்கு பூக்காரர்களிடமே ஆடர் கொடுக்கலாம்.   

 

திருமண வீட்டிற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மனைக்கு அருகில் வீட்டுப் பெண்கள்  சங்கு ஊத பங்காளிவீட்டு ஆண்கள்  அரசாணி மேடையில் உள்ள குழியில் கொஞ்சம் பால்விட்டு , அதில் ஒரு பவளத்தை காகிதத்தில் வைத்து மடித்து போடுவார்கள்.அதன் பின் மூக்கில் கம்பின் ஒரு முனையை அக் குழியில் வைத்து செங்குத்தாக நிற்குமாறு செய்து கொள்வார்கள் அதனுடன் கிளுவை மற்றும் பாலைக் குச்சிகளை இணைத்துக் கட்டுவார்கள். மூக்கில் கம்பு சாய்த்துவிடாமல் இருக்க அதன் மேல் முனையை உத்திரம் அல்லது ஒரு நிலையான அமைப்புடன் இணைத்துக் கட்டுவார்கள். குச்சிகள் தெரியால் இருக்க அவற்றைச் சுற்றி மாவிலை களையும்  அரச இலைகளையும்  வைத்துக் கட்டுவார்கள் .உள்ளூர் திருமணமாக இருந்தால் அரசாணைக் கால் கட்டுதல் அவரவர் பங்காளிகளைக் கொண்டு இருவீட்டிலும் நிகழும். வெளியூர் திருமணமாக  இருந்தால் பெண்வீட்டில் மட்டுமே நிகழும்.  பகவணம் செய்யும் பொது புரோகிதரால் அரசாணிக் காலுக்கு மரியாதை செய்யப்படும்  திருமணம் முடிந்ததும் அரசாணைக்காலுக்குப் பொங்கல் வைப்பார்கள் .பெண்ணழைப்பு முடிந்த பின்னரே அரசாணைக் காலைப் பிரிக்கவேண்டும்.

 

 மனை போடுதல்

  கூடியாக்கி உண்ணும் நாளில் சிலர் மனை போடுவார்கள் . இன்றைக்கு இது பெரும்பாலும் திருமணத்திற்கு முதல்நாள் காலையில் நடைபெறுகின்றது .வெளியூர் தீர்மானமாக இருந்தால் பெண் வீட்டில் மட்டும் இது நிகழும். உள்ளூர் திருமணமாக இருந்தால் இருவர் வீட்டிலும் நிகழும்.வளவில் திருமண வீட்டிற்கு எதிரே பத்தியில் மனை போடுவார்கள் .அப்போது பங்காளிகள் மற்றும் உறவினர்களில் உள்ள குடும்பப் பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு செங்கலை எடுத்து வைத்து அதன் மீது குழைத்து வைத்திருக்கும் மண்ணை எடுத்துப் பூசி அதன் மீது சந்தானம் , குங்குமம் மற்றும் பூ இடுவார்கள் .பின்னர் அதன் மீது கோலமிடப்பட்ட பளிங்கு மனை வைக்கப்படும். பெண் வீட்டில் இரட்டை மனையும் மாப்பிள்ளை வீட்டில் ஒற்றை மனையும் வைப்பது மரபு . அந்த மனை மீது இரத்தினக் கம்பளத்தாலான விரிப்பு அல்லது கோலம் பின்னப்பட்ட தடுக்குகளை வைத்திருப்பார்கள். இந்த மனையில் அமர்ந்துகொண்டுதான்மணமக்கள் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள்  அப்பொழுதே பங்காளி வீட்டு மங்களப்  பெண்கள் வளவில் இருக்கும் திருமண வீட்டிலும் , வளவின் நுழைவாயிலுக்கு முன்பாகவும் அரிசி மாவினால் கோலமிடுவார்கள். சம்பந்தபுரத்தார் மாப்பிளையுடன்/ பெண்ணுடன்  அழைக்கப் பட்டு வரும் போதும் மாமவேவுக்காக மாமக்கார உறவினர்கள் வரும்போதும் அவர்களை   இவ்விடத்தில் நிற்கச் செய்து சிலேட்டு விளக்கு ஏற்றிவைத்து ஆலத்தி எடுப்பார்கள். அப்போது விபூதித் தட்டை கையில் கொண்டு முதலில் தனக்குத் தானேயும் பின்னர் மாப்பிள்ளை அழைப்பின் போது அழைத்து வரப்பட்ட மாப்பிள்ளை மற்றும் அவர்களுடைய பெற்றோர் , உடன்பிறப்புக்களுக்கும் பெண்ணழைப் பின் போது மாப்பிள்ளை பெண்ணுக்கும் விபூதி பூசிவிடவேண்டும்.

 

நடுவீட்டுக் கோலம்

தும்பு பிடித்தல் 

கோலமிட்டு முடிந்தபின்பு திருமண வீட்டின் வளவறையில்  பெண்வீட்டாரின் பெண்கள் குறிப்பாக அத்தைமார்கள் தும்பு பிடிப்பார்கள். கோலமாவு கரைத்த நீரில் ஏட்டுக் கயிற்றை நனைத்து அதைத் திருமண வீட்டின் உட்புறச்   சுவற்றின் மீது ஒருவர் விறைத்துப் பிடிக்க வீடு போன்ற தோற்றம் தருகின்ற ஒரு  கோலத்தை  சுவற்றில் பதியுமாறு மற்றொருவர் கயிற்றைத் தொட்டு அழுத்தவேண்டும்.

 


   மிஞ்சி போடுதல்

 மாப்பிள்ளையின் மாமக்காரர் மாப்பிள்ளைக்கு காலில் மிஞ்சி போட்டுவிடவேண்டும். எளிதில் கழன்று விழுந்துவிடாமல் இருக்க முறையாக மிஞ்சியை நெறுக்கிவிடவிடவேண்டும். முடிந்தால் ஆசாரியின் உதவியையும் பெறலாம். பெண் வீட்டில் பெண்ணின் மாமக்காரர் அல்லது அத்தையர் அவரவர் வீட்டு வழக்கப்படி . பெண்ணிற்கு நகைகள் போட்டுவிடுவார்கள். நகரத்தார் திருமணங்களில் தாய்மாமன் பங்கு குறிப்பிடத்தக்கது .மிஞ்சி போடுவதில் தொடங்கி பெண்ணழைப்பு முடியும் வரை அனைத்துச் சடங்குகளிலும் இவர் இடம் பெறுவார் .தாய் மாமனோ அல்லது மகனோ மாமப்பட்டு என்று அழைக்கப்படும் இரு சிவப்பு பட்டுத் துண்டை இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொண்டு இச் சடங்குகளைச் செய்வது மரபு. பெண்ணிற்கு தாய்மாமக்காரர்கள் பலர் இருப்பின் அவர்கள் விருப்பம்போல ஒருவர் மாற்றி ஒருவர் திருமணத்தின் போது மாமக்காரராக இருந்து செயல்படலாம்.