Monday, August 26, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 64

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 

(கல்வி பற்றி ...  திருக்குறள்)

கல்விக்காக தனி அதிகாரத்தைப் படைத்திருந்தாலும் கல்வியின் சிறப்பு பற்றி வள்ளுவர் தம் நூலில் பல அதிகாரங்களில் தெரிவித்துள்ளார் . அதற்கு காரணம் கல்வி வாழ்க்கையோடு  தொடர்புடைய அனைத்து ஒழுக்கங்களோடும் சம்பந்தப்பட்டிருக்கின்றது .ஒழுக்கமுடைமை ,பயனில சொல்லாமை ,ஒப்புரவு அறிதல் ,புகழ் ,வாய்மை ,அறிவுடைமை,மெய்யுணர்தல் ,கேள்வி ,தெரிந்து செயல் வகை ,வலி அறிதல் ,காலம் அறிதல் ,இடன் அறிதல் ,தெரிந்து தெளிதல் , மடியின்மை ,ஆள்வினையுடைமை ,இடுக்கண் அழியாமை அமைச்சு ,சொல்வன்மை ,வினைத்தூய்மை ,வினைத் திட்பம், குடிமை போன்ற பல அதிகாரங்களில் கல்வியின் பெருமையை  ஆங்காங்கே சுட்டிக்காட்டியுள்ளார்   கல்வியின் மேன்மை பற்றி கல்வி என்ற அதிகாரத்திலும் , கல்லாமையால் ஏற்படும் இழிவு பற்றி கல்லாமை என்ற அதிகாரத்திலும் விவரித்துக் கூறியுள்ளார்  
உலகப்பொதுமறை என உலகோர் யாவராலும் போற்றி வழங்கப்படுகின்ற திருக்குறளில் வள்ளுவப் பெருந்தகை யாவற்றையும் விட கல்வியைத்தான் செல்வம் என்று குறிப்பிடுகிறார்
“கேடில் விழுச்செல்வங் கல்வி ஒருவற்கு                                                                                    மாடல்ல மற்றை யவை”
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் பெறவேண்டிய செல்வங்களில் முதன்மையானது கல்வியே .அக்கல்வியே பிற செல்வங்களைப் பெற ஒருவனைத் தகுதியுடையவனாக்கி விடுகின்றது. அதனால் குழந்தைகளுக்குத் தேவையான கல்வியைக் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோருடைய கடமை என்றும்,  மக்களுக்குத் தேவையான கல்வியைக் கொடுப்பது நாட்டை  ஆள்பவர்களுடைய கடமை என்றும்  வள்ளுவர்   குறிப்பிடுகிறார். கல்வியைக் கொடுத்து விட்டால் ,அக்கல்வியால் தங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் அவர்களே முயன்று பெற்றுக்கொண்டு விடுவார்கள் என்பதால்   எல்லாத்  தேவைகளையும்  குழந்தைகளுக்குப் பெற்றோரும் , மக்களுக்கு அரசாங்கமும் செய்து கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எளிமையாகிவிடுகின்றது .
“தந்தை மகற்காற்று நன்றி அவையத்து                                                                                        முந்தி யிருப்பச் செயல்”, 
“தம்மிற்றம் மக்கள் அறிவுடைமை” 
போன்ற குறள் வரிகள் மூலம் இதை உணர்த்துகின்றார்.  பெற்றோரின்  முதற் கடமை தான் பெற்ற மக்களை ஆண், பெண் பேதமின்றி அறிவுடையவர்களாகவும் அவையிலே நல்ல அறிஞர்களாக விளங்குதற்கு தேவையான கல்வியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். 
திருக்குறளில் பொருட்பாலில் கல்வி பற்றிய செய்திகள் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லப்பட்டுள்ளன .கல்வி வெறும் பட்டங்களைப் பெறுவதற்காக மட்டுமில்லை ,பயன்படுத்திக் கொள்ளாமல் மறந்து போவதுமில்லை .  பயனீட்டிப் பயனைப் பலருக்கும் பகிர்ந்து கொடுப்பதற்கு கற்றுக்கொண்ட கல்வி நெறிப்படி   நடக்க வேண்டும். அப்படி நடந்து கொள்ளாவிட்டால் அக்கல்வியை  கற்றுக்கொண்டதாலும் கற்றுக்கொள்ளாமலிருப்பதாலும் வேறுபாடு ஏதும் இருப்பதில்லை .   
“கற்க கசடறக் கற்பவை கற்றபின்                                                                                                                                                                                          நிற்க அதற்குத்தக"
எண்ணும், எழுத்தும் மக்களுக்கு இரு கண்கள் போன்றது என்று இயம்பும் குறள் 
" எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்                                                      கண்ணென்ப வாழும் உயிர்க்கு"
எண் என்பது கணக்கு , எழுத்து என்பது மொழி .இயல் வாழ்க்கைக்கு இரண்டுமே முக்கியம் . ஒன்றில் மட்டும் தேர்ச்சி உடையவர் ஒரு கண் பார்வையை இழந்தவராவார்.
கண்ணுடையவர் என்பவர்கள் கற்றவர்கள் கல்லாதவர்கள் புண்ணுடையவர்கள் என்ற கருத்தைக் கூறுவது 
 “கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு                                                   புண்ணுடையர் கல்லாதவர்"
கண் ,காது. மூக்கு , வாய் , மெய் போன்ற ஐம்பொறிகள் பார்த்தும் ,கேட்டும், நுகர்ந்தும் ,சுவைத்தும் , உணர்ந்தும்  மெய்ப்பொருளை அறிந்து கொள்ள உதவுகின்றன . கண்ணால் இயற்கையைக் கண்டு இயல் வாழ்க்கையைப் பின்பற்ற முடிகின்றது. நூல்களைத் தேடிப் படித்து தேவையான விவரங்களைப் பெறமுடிகிறது.பிறர் உதவியின்றி சுயமாகக் கல்வி தேடுவதில் முக்கிய ப் பங்காற்றுவது கண்களே .கல்விக்காகக் கண்களை ப்  பயன்படுத்தாவிட்டால் அந்தக் கண்களால் பயனில்லை . அது முகத்திலிருக்கும் புண்ணே என்று பயன்படுத்தாத கண்ணை இழிவுபடுத்துகின்றார். 
எக்குடிப் பிறந்தவராயினும் கல்வி கற்றவர்கள் உயர்ந்தோர், கல்லாதவர்கள் தாழ்ந்தோராவர் எனக் கூறுவது 
 “உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்                                                                  கடையரே கல்லாதவர்" 
என்ற குறள் .தானும் உயர்ந்து தன் சமுதாயத்தையும் உயர்த்தும் சாமர்த்தியம் கற்றவர்களுக்கு மட்டும் உரியது . எவர் சாகாத சமுதாயத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முயல்கின்றார்களோ அவர்களே முதற்குடிமக்களாவர் .அவர்களையே சமுதாயம் போற்றும் என்று கற்றோரைச் சிறப்பிக்கின்றார். 
கற்ற கல்விக்கு ஏற்றவாறு அறிவு விரிவடையும் என்பது  
 “தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு                                                           கற்றனைத் தூறும் அறிவு"
என்ற குறள்.இட்ட கருவானது ஒரு குழந்தையாக வளர்ந்து வெளிப்படுவதைப் போல . கற்ற கல்விப் பொருளானது அறிவாக விரிவடைந்து புதுப் பொருளாகும்  வாய்ப்பைப் பெறுகின்றது. கல்வியின்றி அறிவு கிடைக்காது என்பதை மிகத் தெளிவாக முன்னுரைக்கின்றார் 
ஒரு பிறப்பில் தான் கற்ற கல்லி ஒருவற்கு ஏழு பிறப்பிற்கும் தொடரும் என்ற கருத்தைச் சொல்வது 
 “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு                                                                               எழுமையும் ஏமாப்புடைத்து’
ஒருவர் தான் கற்ற கல்வியின் பயனைச் சமுதாயத்திற்குக் கொடுக்க , அப் பயனை அச் சமுதாயம் அவருடைய மறுபிறப்பில் திருப்பிக் கொடுக்கிகின்றது . கற்றோரால் வழி காட்டப் படாத சமுதாயம் நலமிழந்து  ஒவ்வொருவருடைய மறுபிறப்பிலும் பெருந்துன்பத்தையே  தரும் என்ற உட்பொருள் மூலம் சாகாத சமுதாயத்தின் உட்கூறுகளை அறிந்துரைக்கின்றார்
 தான் பெற்ற இன்பத்தை இவ்வையகம் பெற்று மகிழவேண்டும் என்பதற்காக கற்றோர் மேலும் தொடர்ந்து கற்பார்கள் என்று கற்றோரின் இயல்பினைக் கூறும் குறள் 
 “தாமின்புறுவது உலகின் புறம் கண்டு                                                                        காமுறுவர் கற்றறிந் தார்"
ஆசிரியர்கள் ,படைப்பாளிகள் , விஞ்ஞானிகள் எல்லோரும் தான் வாழும் சமுதாயம் இன்புற்றிருக்க இடைவிடாது  முனைப்புடன் செயல்படுவது இதற்குச் சான்று கூறும்  

Sunday, August 25, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 63
தமிழ் இலக்கியங்களில் கல்வி  
கல்வியின் முக்கியத்துவத்தை தமிழ் இலக்கிய நூற்கள் மிக ஆழமாகவும் அழகாகவும் எடுத்துக் கூறியுள்ளன . அனைத்ததையும் எடுத்துக் கூறுவது இந்நூலின் நோக்கமல்ல , என்றாலும் ஒரு சிலவற்றை அறிந்து கொள்வது நம் சிந்தனைகளை நெறிப்படுத்திக் கொள்ள நன்மையளிக்கும். 
ஒரு மனிதனுக்கு அழகு ஆடையோ ஆபரணமோ இல்லை , உடல் வனப்போ , வாசனைத் திரவியமோ இல்லை   கல்வியறிவே  உண்மையான அழகாகும் என்று நாலடியார் பின்வரும் பாட்டில் குறிப்பிடுகிறது.
              “குஞ்சி யழகும் கொடுந்தனை கோட்டழகும்                                                                                                                                  மஞ்ச ளழகு மழகல்ல –நெஞ்த்து                                                                                  நல்லம்யா மென்று நடுவு நிலையால்                  கல்வி யழகே யழகு” (நாலடி)
நடுவு நிலைமை உடைய ஒழுக்க வாழ்க்கை தரும் கல்வி அழகே முதன்மை  அழகு. கல்வி கற்று அழகுமிக்கவர்களாகத் திகழும் இவர்கள் யாராயினும் அவர்களை உலகம் உள்ளளவும் போற்றும் என்பதை நாலடியார் குறிப்பிடுகிறது 
                           “கடைநிலத் தோராயினுங் கற்றறிந் தோரை                                                தலைநிலத்து வைக்கப் படும்”
கற்றவர் வாழும் போதும் , வாழ்ந்து மறைந்த பின்பும் அவர்கள்புகழை  நிலைத்திருக்கச் செய்வது கல்வியே. கல்லாமை  என்னும் கொடிய நோயை நீக்கவல்ல அருமருந்து கல்வி ஒன்றேயாகும். இதனை பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றான நாலடியார் பின்வரும் பாடல் மூலம் தெரிவிக்கின்றது .
                “இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்                                                                                              தம்மை விளக்குமால் தாமுளராக் கேடிண்றால்                                                                                                எம்மை யுலகத்தும் யாங்காணேங் கல்விபோல்                                                                                                     மம்ம ரறுக்கும் மருந்து” 
ஒருவன் தன் பிள்ளைகளுக்குச் செல்வம் எனச் சேர்த்து வைக்கத்தக்கது கல்வியே,பொன்னும் பொருளுமல்ல  என்பதை   “விச்சை மற்றல்ல பிற’ என்ற பாடல் வரி தெரிவிக்கின்றது . அறிவு செல்வத்தைவிட மேலானது. ஏனெனில் செல்வத்தை நாம் கவனிக்க வேண்டும் . அறிவோ நம்மை கவனித்துக் கொள்ளும் .செல்வம் திருடப் படலாம் . அறிவை யாரும் திருடவே முடியாது, செல்வம் செலவழிக்க குறையும் , அறிவோ பெருகும்  .செல்வத்தால் வேண்டிய கல்வியைப் பெறமுடியாது ஆனால் கல்வியால் தேவையான செல்வத்தை ஈட்டமுடியும்   .பொருளைக் கொடுத்து வாழ வைப்பதை விட  பிறர் உதவியின்றி தனக்குத் தேவையான அப்பொருளை ஈட்டி தானே வாழக் கூடிய நம்பிக்கை தரக்கூடிய கல்வியைக் கொடுப்பதே சிறந்தது.    
பழமொழி நானூறு என்ற சங்கம் மருவிய இலக்கியத்தில் கல்வி பற்றிய பல செய்திகள் தெரிவிக்கப்பெற்றுள்ளன.கல்விக்கு கரையில்லை, கல்வி என்பது  வாழ்நாள் முழுதும்  தொடரும்  உள்ளார்ந்த செயல் என்றாலும் என்றாலும் வாழ்கைக்குத் தேவையான அடிப்படைக் கல்வியை எது தீயது என்பதை இனமறியா இளம்வயதிலேயே  முடித்துவிடவேண்டும். இல்லாவிட்டால்  தீய எண்ணங்களின் ஆக்கிரமிப்பால் கல்வியின் நிறமும் தரமும் மாறிப்போய்விட வாய்ப்பு ஏற்படுகின்றது .கற்பதற்குரிய இளம் பருவத்தில் கல்வியைக் கல்லாதவன் முதுமையில் கற்று வல்லவன் ஆக முடியாது என்ற கருத்தை “சுரம் போக்கி உல்கு கொண்டாம் இல்லை’ என்ற பாடல் வரி கூறுகின்றது .   கற்கும் போது வற்றாத ஆர்வத்தால் தொடர்ந்து அறியாதனவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் . ஆர்வம் வற்றிப் போய்விட்டால்  ஏற்படும் சோர்வால் கற்பது தடைப்பட்டு போகும் . அரைகுறையான கல்வியால் நன்மையை விட தீமையே அதிகம் என்பதால் தளர்ச்சியில்லாது தான் கல்லாதவனாய் எண்ணிக் கற்க வேண்டும் என்ற கருத்தை    “கற்றொறும் தான் கல்லாதவாறு’ என்ற பாடல் வரி எடுத்துரைக்கின்றது . 
“மறுமைக்கு அணிகலம் கல்வி’  என்கிறது திரிகடுகம். மறுபிறப்பிலும் நன்மைபெற ஒருவர் இம்மையில் கற்றுச் சிறக்கவேண்டும் என்ற கருத்தை இது கூறுகின்றது.ஒரு சமுதாயம் தொடர்ந்து ஒழுக்க நெறியுடன்  வாழும் போது தான் அது சாகாத சமுதாயமாக நிலைத்து வாழ்கின்றது . அப்படி ஒரு சமுதாயம்  அமைய கற்றோரின் அறவியல் அறிவுரைகளே காவலாய் இருக்கின்றன. இறந்த பின் இயற்கையின் விதிப்படி மீண்டும் அதே சமுதாயத்தில் பிறக்கும் போது  நிலைத்த சமுதாய ஒழுக்கமே புதிய வாழ்க்கைக்கு பாதுகாப்பாய் இருக்கின்றது என்ற உட்பொருளை இது கூறுவதாய் இருக்கின்றது .
இனியவை நாற்பது கல்வி கற்றலின் இனிமையை  சுட்டிக்காட்டுகின்றது  “பிச்சை புக்காயினும் கற்றல் மிக் இனிதே’ (பிச்சை எடுத்து உண்டாயினும் கற்க வேண்டியவற்றைக் கற்றல் மிகவும் இனிதாகும்) ,  “கற்றறிந்தார் கூறும் கருமப்பொருள் இனிதே’ (கற்க வேண்டிய நூல்களைக் கற்று அவற்றின் பொருளை உணர்ந்தவர் சொல்லின் பயன்  இனிதாகும் ),  “கற்றலிற் காழினியது இல்’ (நன்மைதரக்கூடிய  நூல்களைக் கற்பது  இனியத்துள் இனியதாகும் )  போன்ற வரிகள்  கல்வியின் சிறப்பை படம்பிடித்துக் காட்டுகின்றன .
 எண்வகை ஒழுக்கங்களுள் கல்வியும் ஒன்று என்று கூறும் ஆசாரகோவை “கல்வியோடு ஒப்புரவாற்ற அறிதல்’ நலமுடையது என்றும்  தெரிவிக்கின்றது  .

Saturday, August 24, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 62

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
இளமையில் தேவையான அளவு கல்வியைக் கற்றுக் கொண்டுவிட்டால் எதிர்காலத் தேவைகள் எதுவானாலும்  அவற்றைப் பிறருடைய உதவியின்றி அந்தக் கல்வியால் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.  ஒருவர் பெறும் கல்வி அவருக்கு மட்டுமின்றி சமுதாயத்திற்கும் பயன்தரக்கூடியதாகவும்  இருக்கின்றது .என்பதால் கல்வியின் முக்கியத்துவத்தை அறிஞர்களும் ,சமுதாயச் சிற்பிகளும்  அடுத்த தலைமுறையினரின் சிந்தனைக்கு  எடுத்துரைத்திருக்கின்றார்கள். அதை நமக்கு முன் வாழ்ந்து மறைந்து போன பன்னாட்டு அறிஞர்கள் பலர் நினைவில் கொள்ளத்தக்க பொன்மொழிகளாக மக்கள் மனதில் விதைத்துச் சென்றுள்ளார்கள் .
கல்வி என்பது ஆற்றல்மிக்க ஆயுதம் . அதைக்கொண்டு ஒரு தனிமனிதன் கூட இந்த உலகில் பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் - நெல்சன் மண்டேலா 
கல்விக்காகச் செய்யும் மூலதனம்  பிற்காலத்தில் நல்ல வட்டியுடன் திருப்பிக் கிடைக்கின்றது - பெஞ்சமின் பிராங்க்ளின் 
அறிவே ஆற்றல் . கருத்துக்கள் அதை வெளிப்படுத்துகின்றன .கல்வியே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ,குடும்பத்திற்கும் முன்னேற்றத்திற்கான கருவாக இருக்கின்றது       - கோபி அனான்
உண்மையான கல்வியின் நோக்கம் அறிவுக் கூர்மையையும் , வாழ்வியல் பண்புகளையும் ஒருசேரத் தருவதாகும் - மார்ட்டின் லூதர் கிங் 
மக்கள் ஆட்சியில் உண்மையான பாதுகாப்பு கல்வி தான். கல்வியைத்தவிர வேறெதுவுமில்லை .- அரிஸ்டாட்டில் 
ஒரு தலைமுறையினரின் வகுப்பறைக் கருத்துக்கள் அடுத்த தலைமுறையில் அரசின் கொள்கையாகிவிடுகின்றது - ஆப்ரகாம் லிங்கன் 
கற்றுக் கொள்வதில் சுய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டால் ,அவருடைய  வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது - அந்தோணி ஜே ஏஞ்சலா 
கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே மேல் . ஏனெனில் அறியாமைதான் தீவினையின் மூல வேர் -பிளேட்டோ 
குழந்தைகளைச் சிந்திக்கும்படிதூண்டுவதே கல்வியின் அடிப்படைக் குறிக்கோள் - ஜான் டூபி
கல்வியின் முக்கியத்துவத்தை மனதிற்கொண்டு , பிச்சை எடுத்தாவது  இளமையில் கல்வி பயில் என்று தமிழ் சான்றோர்கள் கூறுவார்கள் 
கல்வியில் சிறந்த ஆசிரியர்களே சமுதாயத்திற்கு நல்ல மாணவர்களை உருவாக்கிக் கொடுக்கக் கூடியவராக இருக்கின்றார் .கல்வி கற்று பயிற்சி பெற்ற தொழிலாளர்களே தங்கள் வேலையை கடமை உணர்வோடும் ,பொறுப்போடும் செய்து முடிக்கின்றனர் . கல்வியில் தேர்ந்த பொறியாளர் , கட்டுமானப் பணிகளை தரமாகச் செய்யும் தன்மை யுள்ளவராக இருக்கின்றார் . கல்வி கற்ற மக்களே நல்ல பண்பாளர்களாகவும் குடிமக்களாகவும் இருக்கின்றார்கள் . நல்ல ஆட்சியாளர்களே நாட்டின் வளத்தை மேம்படுத்த முடியும். கல்வி கற்ற அரசியல்வாதிகளே மக்களின் மனதை வாசித்தறிந்து  அவர்களுடைய நியாமான தேவைகளை பூர்த்தி செய்யும் எண்ணம் கொண்டவராக இருப்பார்கள். கல்வியே நல்ல மனிதனை , நல்ல குடும்பத்தை , நல்ல சமுதாயத்தை , நல்ல நாட்டை உருவாக்க உள்ளார்ந்த காரணமாக இருக்கின்றது 

Friday, August 23, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 61

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
ஒரு குழந்தை வீட்டில் சிறந்த மாணவனாக வளர்வதற்கும் , நாட்டில் சிறந்த குடிமகனாக ஆவதற்கும் கல்வியே முழுமுதல் காரணமாக இருக்கின்றது.  வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிப்பதில் கல்வியே  முக்கியப் பங்கு   வகிப்பதால் எல்லோருடைய வாழ்க்கையிலும் கல்வி ஒரு பகுதியாக இருக்கின்றது .இளம் வயதில் பெறும் கல்வி எதிர்காலத்தை தீர்மானிப்பதிலும் அதைத் தொடர்ந்து பெறும் உயர் கல்வி சுய திறமையை வளர்த்துக் கொண்டு பயனீட்டுவதிலும் முக்கியத்துவம் கொண்டுள்ளன .வாழும் போது விருப்பமான  மகிழ்ச்சிக்கும் வளத்திற்கும்  உறுதியளிப்பது கல்வியே .பிறர் உதவியின்றித் தன் கையை நம்பித் தானே வாழ்வதற்கான நம்பிக்கையை ஊட்டுவதும் கல்வியே.ஒவ்வொருவரும் அவர்களுக்குரிய வாழ்வாதாரத்தைத் தேர்வு செய்ய கல்வியே வழிகாட்டுகின்றது.  
உண்மையான கல்வியே எண்ணங்களைத் தூய்மைப்படுத்தி நல்ல சிந்தனைகளை மேற்கொள்ளத் தூண்டுகின்றது. கலப்படமற்ற தூய எண்ணங்கள் சமுதாயத்திற்கு நல்ல செயல்களை மட்டுமே செய்ய  வழிப்படுத்துகின்றன. தோல்வியையும் ,தொடரும் துன்பங்களையும் நீக்கி வெற்றிகளையும் , நிறைவான இன்பங்களையும் துய்க்க இந்தக் கல்வியே உறுதுணையாக இருக்கின்றது .. சுய தொழிலில் ஈடுபட கல்வியே நம்பிக்கையூட்டுவதால் , வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க பங்களிப்பு செய்ய முடிகின்றது .ஊழல் , ஏமாற்றுதல் ,கையாடல் ,களவு , போன்ற  குற்றங்களை  சமுதாயக் கேடுகளாக  மனதளவில் ஒப்புக் கொள்வதால் அப்படிப்பட்ட குற்றங்களில் ஈடுபட கல்வி அனுமதிப்பதில்லை . அதாவது கல்வி ஒரு சமுதாயத்தில் நல்ல குடிமக்கள் பெருகி வருவதை பாதுகாக்கின்றது. 
தனிமனிதனின் வாழ்க்கையும் பொருளாதார நிலையும் பெருமளவு அவனுடைய கல்வியைச் சார்ந்திருக்கிறது . அதனால் கல்வி என்பது ஒருவர் தன்னுடைய எதிர்கால வாழ்க்கைக்காகச் செய்யும் மூலதனம் என்று கூறுவார்கள் . கல்வியின் வளர்ச்சி சமுதாயத்தில் ஆசிரியர்கள், தொழில் முனைவோர்கள், ,மருத்துவர்கள் , பொறியாளர்கள் , கலைஞர்கள் , ஆராச்சியாளர்கள், ,நிர்வாகிகள்  போன்ற பல்துறை வல்லுநர்கள்  உருவாகக்  காரணமாக இருக்கின்றது . இவர்களின் பெருக்கம் காலப் போக்கில் வளமான நாட்டை உருவாக்கிவிடுகிறது .
  கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்கள்  மட்டுமின்றி பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , ஆட்சியாளர்கள் .குடிமக்கள் என எல்லோரும் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும். அப்பொழுது தான் கல்வியால் சமுதாயம் மற்றும் நாட்டின் வளத்தையும் ,நலத்தையும் மேம்படுத்துவத்தில் ஒவ்வொருவரும்  தங்கள் பங்களிப்பைச் செய்யமுடியும் 

Saturday, August 10, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 60

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
இலக்கு இதுதான் என்று முடிவுசெய்து அதை நோக்கிப் பயணிக்கத் தெரியாத நிலையில் ஒருவர் பல இலக்குகளை மனதிற் கொண்டு  பல்துறை சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு கொள்வார் .ஒன்றாவது கைகொடுக்காதா என்ற நம்பிக்கை அவரது திறமையில் கொண்டுள்ள அவநம்பிக்கையையே  சுட்டிக் காட்டுகின்றது ஏதாவது ஒரு துறையில் உயர் நிலையை அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கை திறமையை விட அதிர்ஷ்டத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே .திறமை என்பது சுய முயற்சி, நூறு சதவீதம் பலன் தரும்  , அதிருஷ்டம் என்பது  நல்வாய்ப்பு இதன் பலன் சுழி முதல் நூறு சதவீதத்தில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் . இருக்கும் திறமையைப் புறக்கணித்துவிட்டு உறுதியில்லாத  நல்வாய்ப்புக்களைத் தேடிக்கொண்டே இருப்பவர்கள் புதிய முயற்சிகளைப் பற்றி சிந்திப்பதேயில்லை. அதனால் எட்டக்கூடிய வெற்றிவாய்ப்பை  நழுவ விட்டுவிடுகிறார்கள் .ஒரே சமயத்தில் பல செயல்களில் காட்டும் ஆர்வம் பொதுவாக ஒரு குறிப்பிட்ட துறையில் கவனக் குறைவை ஏற்படுத்தக் காரணாமாகிவிடுகின்றது இது திறமையில் உள்ள நம்பிக்கையை அதிர்ஷ்டத்தின் பக்கம் திருப்பிவிடுகின்றது 
உடல் நலக் குறைவு முயற்சியைத் தொடர விடாமல் செய்து விடுகின்றது .உடல் நலம் என்பது உடற் பயிற்சியை மட்டும் சார்ந்ததில்லை உண்ணும் உணவையும் பொறுத்தது . அதிக உணவை விட சத்தான உணவு உடல் நலத்தை சீராக வைத்திருக்க உதவும் . எனவே முழுமையான வெற்றிக்கு அடிப்படையான உடல் நலத்தை  உடற் பயிற்சி மற்றும் சரிசமவிகித் உணவு மூலம் பேணிப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும் . 
இலக்கை முறையாகத் தீர்மானிக்கத் தெரியாத சிறுவர்கள் , அவர்களிடம் தன் விருப்ப இலக்கைத்  திணிக்க முயலும் பெற்றோர்கள்  மற்றும் நண்பர்களின் தூண்டுதலால் செய்யும் முயற்சியை அடிக்கடி மாற்றிக் கொள்வதாலும், சுய விருப்பமின்றி ஈடுபாடு காட்டுவதாலும் முயற்சிகளின் பயனை முழுமையாக ப் பெறுவதில்லை 

Friday, August 9, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 59

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
முயற்சியை இடையிலேயே விட்டுவிடுவதற்கு நூறு சாதாரணக் காரணங்கள் இருக்கலாம் , ஆனால் அதைத் தொடர்வதற்கு ஐந்து வலிமையான  காரணங்கள்  தான் இருக்கின்றன . சோம்பேறித்தனம் , உழைப்பின்றி சுகத்தை மட்டும் அனுபவிக்க நினைக்கும் மனம், அறியாமை , மறதி, பலவற்றில் காட்டும் ஆர்வத்தால் ஏற்படும் கவனக் குறைவு , உடல் நலக் குறைவு . புறத் தூண்டுதலால்  ஏற்படும் நிலை மாற்றம் , போன்ற காரணங்கள் கௌரவர்கள் போலவும் , சுய முன்னேற்றம் , குடும்ப முன்னேற்றம் , சமுதாய முன்னேற்றம், நாட்டு முன்னேற்றம் , உலக முன்னேற்றம்  போன்ற காரணங்கள் பாண்டவர்கள் போலவும்  இருந்து கொண்டு  சுய சிந்தனையை தன்வசப்படுத்த முயலுகின்றன . ஒருவருக்கும் தெரியாமல் உள்ளுக்குள்ளே  கத்தியின்றி,ரத்தமின்றி எண்ணங்களுக்குள் நடக்கும் அந்தப் போரில்  ஒருவரே   தனக்குத் தானே எதிரியாக இருந்து கொண்டு சண்டை போடும்போது தோற்றுவிட்டால் தோற்றுவிட்டோம் என்று ஒருபோதும்  நினைப்பதில்லை  . 
உழைத்துப் பெற்று மகிழவேண்டிய சுகத்தை உழைக்காமலே அனுபவிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலோ அல்லது  திருத்தாமல் அனுபவிக்க விட்டுவிட்டாலோ சோம்பேறித்தனம் உடலுக்குள்  வேண்டாத  விருந்தாளியாகக்     குடி கொண்டு விடுகின்றது .அப்புறம் அந்த வேண்டாத விருந்தாளியை வீட்டை விட்டு வெளியேற்ற சுய விருப்பமில்லாது போய்விடுகின்றது . காலம் தாழ்த்த தாழ்த்த அந்த விருந்தாளியை வீட்டை ஆளும் உரிமையாளராகின்றார். சோம்பேறித்தனம் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வளரவிடாமல் தடுத்துவிடுவதால் பகுத்தறிவையும் ,  ஆக்கப்பூர்வமான  செயல்களை செய்யவிடாமல் தடுப்பதால் சமுதாய நலம் சார்ந்த சுய முன்னேற்றத்தையும் இழக்கநேரிடும் . 
சமுதாய நலத்திற்காக தன்நலத்தை பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஒவ்வொருவரும் சுயமாக சம்பாதிக்க வேண்டும் ,சுகங்களை அனுபவிப்பதற்காக மட்டும் இல்லை என்பதை புரிந்து கொள்ளாதவர்களே  உண்மையாய் உழைத்து உலக சுகங்கள் அனைத்தையும் தன் வாழ்நாளில் அனுபவிக்க முடியாது என்று எண்ணி உழைக்காமலே சுகங்களை அனுபவிக்கும் வழி முறைகளில் நட்புக் கொள்கின்றார்கள்.தகுதிக்கு மீறிய சுகங்கள் அளவுக்கு மீறிய அமிர்தம் போன்றது . இரண்டும் உயிர் வாழும் உடலுக்கு தீங்கிழைக்கக் கூடியவையே. 
எல்லாவற்றிலும் எல்லோரை விடவும் தான் ஒரு படி உயர்வாய்  இருக்கவேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைப்பதால் , ஒரு போட்டி மனப்பான்மை இயல்பாகவே தூண்டப்படுகிறது. இந்த போட்டி மனப்பான்மை சுய முன்னேற்றத்தை மட்டுமின்றி சமுதாய முன்னேற்றத்தையும் பாதுகாக்கு மாறு இருக்கவேண்டும் .சமுதாய முன்னேற்றத்தை மறந்தவர்கள் , சுய முன்னேற்றத்தை சுகத்திற்காக மட்டுமே மேற்கொள்வார்கள் .  அவர்களே  உழைக்காமலேயே சுகம் தேடுவார்கள்.இவர்கள்  சமுதாயத்திற்கு ஒரு தவறான வழிகாட்டிகளாக இருப்பது  சமுதாயத்தின் ஊமைக் காயமாகும்   
 நெறிமுறையோடு கூடிய வழிமுறையை முன்கூட்டியே அறிந்து கொள்ள அறிவும் அனுபவமும் தேவை . அறியாமையால் இவை தெரியாததால் , செயலின்மை  நிலைப்படுகின்றது . அறிவைத் திரட்டி வைத்துக்கொள்ளவே ஒரு முயற்சி வேண்டும். அந்த முயற்சி முழுமையில்லாத போது பயனுள்ள அறிவைவிட  பயனிலா அறிவு மிகுந்து விடுகின்றது .சரியான நேரத்தில் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதே பயனுள்ள அறிவு . மற்றவை பயனிலா அறிவு . மறதி சில நேரங்களில் பயனுள்ள அறிவைக் கூட பயனிலா அறிவாக்கிவிடுகின்றது. பயனில்லாத அறிவு எப்போதும் தோல்வியைத் தந்து சோர்வை ஏற்படுத்தும் 

Thursday, August 8, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 58

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
முயற்சி திருவினையாக்கும்,முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் ,முடிவிலா முயற்சி மட்டிலா மகிழ்ச்சி ,முயற்சி முன்னேற்றத்தின் மூலதனம் , பயிற்சியும் ,முயற்சியும் முன்னேற்றத்தின் இரு கண்கள்   என்று தமிழ் உலகச் சான்றோர்கள் கூறுவார்கள், செய்யும் எந்தச் செயலையும் செய்து முடிக்க முயற்சி தேவை. செயலைச் செய்து முடிக்கும் வரை எடுத்துக் கொள்ளும் ஈடுபாடே முயற்சி . முயற்சி இடைநிலைத் தோல்விகளால் முடங்கிப் போகாமல் புதிய புதிய வழிகளை ஆராய்ந்து  தொடர்ந்து செயலில் ஈடுபடுவதாகும். தொடர்ந்து செயலில் ஈடுபடுவதற்கு வழி தெரியாதவர்களே முயற்சி செய்யத் தவறுகிறார்கள் 
முயற்சியை கடின உழைப்பு என்றும் கூறலாம். முயற்சிப்பருக்கு  அனுபவமும்  அறிவும் துணை நிற்கின்றன . முன்னோர்கள் செய்த முயற்சிகளை அறிந்து கொண்ட அனுபவத்தின் வாயிலாக  செயலை த் தொடர்வது எளிது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப அதில் மாற்றங்களை ஏற்படுத்த அறிவு தேவை . அவை தெரியாத நிலையில் முயற்சி ஒரு நிலையில் தடைப்பட்டுப் போகின்றது .முயற்சியில்  ஆர்வத்துடன் ஈடுபடுவதற்கு உடலில் இருக்கும் உறுப்புக்கள் எல்லாம் முழுமையான நலத்துடன் செயல்படக்கூடியனவாக இருக்க வேண்டும்.   இந்த உறுப்புக்களின் ஒருங்கிணைந்த செயல்பாடே ஒரு மனிதனின் செயல் திறனைத் தீர்மானிக்கின்றது .புறத் தூண்டுதலின்றி வெகு இயல்பாக முயற்சியில் ஒரு மாணவன் ஈடுபடுவதற்கு உடல் உறுப்புக்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டைத் தூண்டக்கூடிய வலிமை யைப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு  யோகா முழுமையான பயன் தருகின்றது . பகவத் கீதை கடின உழைப்பையே யோகம் என்றும் யோகத்தால் கடின உழைப்பைச் செய்யும் ஆற்றலைப் பெறமுடியும் என்றும்  குறிப்பிடுகின்றது. சுய முயற்சி என்பது கண்ணை மூடிக்கொண்டு காரியத்தில் ஈடுபடுவதில்லை. அதற்கு முன் அது தொடர்பான சிந்தனைகள்  மூலம் சரியாகத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் . செயல் , வழி முறை , காலம் , பயன்பாடு , இடைத்தடைகள் , மற்றும் அவற்றை நீக்கிக் கொள்ள இருக்கும் வாய்ப்புக்கள் , செய்து முடிக்க மேற்கொள்ள வேண்டிய துணைச் செயல்கள்  போன்ற வற்றை ஆராய்ந்து செய்ய அறிவு வேண்டும் .