Monday, January 30, 2012

vinveliyil ulaa

பிளியாடெஸ்


பிளியாடெசின் முக்கிய விண்மீன்களுக்கு கிரேக்க புராணத்தில்
வரும் கதாபாத்திரங்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளன .அட்லஸ்
மன்னனுக்கும் பிளியோன் என்ற ராணிக்கும் பிறந்த
7 மகள்கள் இதில் வைரமாலையில் உள்ள வைரங்கள் போல
வரிசையாக உள்ள 7 விண்மீன்களைக் குறிப்பிடுவதாகக் கற்பிக்கப் பட்டுள்ளது .இளவரசிகளின் பெயர்களே

- அல்சியோன் ,டைகெட்டா ,மெரோப்,சிலானோ ,எலெக்ட்ரா ,
அஸ்ட்ரோப்,மற்றும் மாயா -

அந்த விண்மீன்களின் பெயர்களாயின.டாரஸ் வட்டார விண்மீன்
கூட்டத்தில் மங்கலாக ஒளிரும் ஏழு அழகான விண்மீன்களாக இவை அமைந்துள்ளன .இது பற்றி பைபிளில் ஓரிடத்தில் கூறப்பட்டுள்ளது.பிளியாடெஸ் என்றால் கிரேக்க மொழியில் கூட்டு
என்று பொருள் தமிழர்கள் இதை கிருத்திகா என்றும் சப்த கன்னிகள்
என்றும் கூறுவார்கள்.ஒரு காலத்தில் பிளியாடெசில்
உள்ள ஏழு விண்மீன்களும் சமமான பிரகாசத்துடன்
ஒளிர்ந்தன என்றும் ,பின்னர் மெரோப்,நோயாளியாக இறந்து
போகக் கூடிய நிலையில் இருந்த ஒரு மனிதனை மணந்து
கொண்டதால்,இந்த விண்மீன் மட்டும் மங்கியது
என்றும் காரணக் கதை கூறுவார்கள் .
ஒருவரின் கண்பார்வையின் கூர்மையை பரிசோதித்துப் பார்பதற்கு
பிளியாடெஸ் ஓர் இயற்கை சாதனமாக உள்ளது. பார்வைக் கூர்மையை அறிய ,பிளியாடெசில் எவ்வளவு விண்மீன்கள் இருக்கின்றன என்று
கணக்கிடச் சொல்வார்கள் .6 அல்லது 7 என்று எண்ண முடிந்தால்
அவருக்கு இயல்பான கண்பார்வை உள்ளது என்று
கூறலாம். இதை விடக் கூடுதலாக எண்ணிச் சொன்னால் அவருக்கு கூர்மையான பார்வை உள்ளது என்று கூறலாம்.அபரிதமான கண்பார்வை உடைய சிலர் இதில்10 விண்மீன்கள் வரை எண்ண முடியும். கலிலியோ தன்னுடைய கண்டுபிடிப்பான தொலைநோக்கி மூலம் இதில் மொத்தம் 36 விண்மீன்கள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளார் .

M .45 என்று பதிவு செய்யப்பட்டுள்ள பிளியாடெசில் பிரகாசமான
விண்மீன்கள் மெல்லிய நீல நிறத்துடன் ஈட்டா டாரி எனப்படும்
அல்சியோன் என்ற விண்மீன்தான். இது சற்றேறக் குறைய 368
ஒளி ஆண்டுகள் தொலைவில் தோற்ற ஒளிப்பொலிவெண் 2.85
உடன் காணப்படுகிறது. எலெக்ட்ரா ,371 ஒளி ஆண்டுகள்
தொலைவில் 3 .72 என்ற தோற்ற ஒளிப்பொலிவெண்ணுடனும்,
மாயா 360 ஒளி ஆண்டுகள் தொலைவில் 3 87 என்ற தோற்ற
ஒளிபொலிவெண்ணுடனும் காணப்படுகின்றன.
பிளியாடெஸ் கொத்து விண்மீன் கூட்டத்தில் 7 வது பிரகாசமான
விண்மீன் பிளியோன் ஆகும். இதை 28 டாரி என்று குறிப்பிட்டுள்ளனர்.
387 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதன்தோற்ற
ஒளிப்பொலிவெண் 5.05 ஆகும். இது இன்னும்
முதன்மைத் தொடர் (Main sequence) விண்மீனாக உள்ளது.
காமா கசியோப்பியா போல இதுவும் Be வகை விண்மீனாக உள்ளது
இந்த விண்மீன் விண்ணியார்பியலாரையும்,வானவியலாரையும்
வெகுவாகக் கவர்ந்துள்ளது. இது மிக விரைவாகத் தற்சுழலும் ஒரு
விண்மீனாக விளங்குகிறது .நடுவரைக் கோட்டுப் பகுதியில் இதன் சுழற்சி வேகம் 330 கிமீ/வி என்ற அளவில் உள்ளது.
வெப்ப மிக்க வளிமத்தால் வளையத்தை உருவாக்கி .ஒரு புறக்
கூடுடைய விண்மீனாகத் தோற்றம் தருவதால் ,இது மிக அரியதொரு விண்மீனாகக் கருதப்படுகிறது.1888 முதல் பிளியோன் மூன்று வளிமக் கூடுகளாலான வளையங்களை இது போல உருவாக்கியுள்ளது. வளிமத்தை உமிழ்ந்து புறக் கூட்டை உருவாக்கும் ஒவ்வொரு முறையிலும் முதலில் பிரகாசமாக ஒளிர்ந்து பின்னர் பல மடங்கு பிரகாசம் மங்கிப் போனது .
அப்போது அதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 5.5 ஆக ,
இயல்புத் தோற்ற ஒளிப்பொலிவெண்ணைவிடத்
தாழ்ந்திருந்தது. இதற்குக் காரணம் விண்மீனால் உமிழப்படும் ஒளி புறக் கூடுகளினால் உட்கவரப்படுவதேயாகும் .பிரகாசத்தில் ஏற்படும் ஏற்றத்
தாழ்வு பிளியோனை ஒரு மாறோளிர் விண்மீனாக்கியுள்ளது

Friday, January 27, 2012

vinveliyil ulaa

பிளியாடெஸ்


பிளியாடெஸ், ஹயாடெஸ்ஸை விட உருவ அளவில் சற்று பெரியது .
பிளியாடெஸ்ஸில் சிறிதும் பெரிதுமாக 280 விண்மீன்கள் கலந்து
காணப்படுகின்றன .ஹையதேஸ்க்கு அதைச் சுற்றி போர்வை போல
நெபுலா இல்லை. ஆனால் பிளி யாடெஸ்ஸில் இது தெளிவாகத்
தெரிகிறது. பிளியாடெஸ் விண்மீன் கூட்டம் சராசரியாக 125 பார்செக்
(Parsec ) அல்லது 390 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இவ்வளவு
தொலைவில் இருந்தாலும் வெறும் கண்களால் இதைக் காண முடிகிறது .
விண்வெளியில் இது முழு நிலவின் பரப்பைப் போல நான்கு மடங்கு
பரப்பில் விரிந்திருக்கிறது. மேலும் இதிலுள்ள விண்மீன்கள் விண்வெளியில்
22 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள எல்லாத் திசைகளிலும் பரவி
இருக்கின்றன .பிற தனிக் கொத்து விண்மீன் கூட்டத்திலுள்ள விண்மீன்கள்
போல , பிளி யாடெஸ்ஸில் உள்ள விண்மீன்கள் யாவும் விரைந்து நகர்ந்து
கொண்டிருக்கின்றன .இவையாவும் ஏறக்குறைய சமமான வேகத்தில்
ஒரு குவியத்தை நோக்கி நகர்வது போலத் தோற்றம் தரும்
ஹயாடெஸ் போல இதில் இயக்கம் தெளிவாக இல்லை.

நிறமாலைப் படி "O " வகையைச் சேர்ந்த விண்மீன் களான கொந்து
விண்மீன்கள் மிக நெருக்கமாக அமைந்திருக்கும். பிளியாடெஸ்ஸில்
உள்ள விண்மீன்கள் இதை விட நெருக்கமாக உள்ளன என்றாலும்
'O " வகை விண்மீன்களைப் போல அவ்வளவு வயதானதாக இல்லை.
பிளியாடெஸ்ஸின் வயது 2 .5 மில்லியன் ஆண்டுகள் என
மதிப்பிட்டுள்ளனர் .இது உண்மையானால் ,அதன் வயதும் ,
பூமியில் மனித இனம் தோன்றிய காலமும் ஒன்று எனக் கூறலாம் .

மெலிதான ,ஒளி உட்புகக் கூடியவாறு, மூடுபனி போன்ற ஒரு படலம்
பிளியாடெஸ்ஸைச் சுற்றி எங்கும் வியாபித்துள்ளது .ஆனால் ஓரியன்
நெபுலா போல இது ஒளியைச் சுயமாக உமிழக் கூடியதாக இல்லை
இது பிளியாடெஸ்ஸில் உள்ள விண்மீன்கள் உமிழ்ந்த ஒளியை
எதிரொளிப்புச் செய்கிறது .இது டாரஸ் வட்டார விண்மீன் கூட்டத்திற்கு
சற்று விலகி மேற்காக ஏரிசுக்கும் டாரசுக்கும் இடையில் உள்ளது.

Eluthaatha Kaditham

"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1948 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1949 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1950 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1951 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1952 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1953 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1954 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1955 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1956 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1957 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1958 ஜனவரி
இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1959ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1960ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1961 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1962 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1963 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1964 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
1965 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
......
...........................................................
2012 ஜனவரி
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "

இது இனி வரும் ஆண்டுகளிலும் மாற்றமின்றி தொடரும்

இந்திய சுதந்திரம் பெற்று குடியரசை நிறுவிய 1947 ,26 ஜனவரி திங்கள்
அன்று நாட்டுத் தலைவர்கள் சொன்னார்கள்
"இந்தியாவை வளமான ,வலிமையான நாடாக உருவாக்குவோம் "
இந்தியக் குடியரசு உருவாவதற்கு வெகு காலத்திற்கு முன்பிருந்தே
இந்தியாவில் வளம் குவிந்திருந்தது. அதனால் தான் வேற்று நாட்டினர்
இந்தியாவில் படையெடுத்து போர் செய்து வளத்தையெல்லாம்
அள்ளிச் சென்றனர் .உலகில் அதிகம் படையெடுப்பிற்கு உள்ளான
நாடு இந்தியாதான் .
இந்தியாவில் வளம் இருக்கிறது. அதைப் பாதுகாக்கத்தான் வலிமை இல்லை.
இருக்கும் வலிமையும் ஒற்றுமை யின்மையால் பலவீனப் பட்டுப் போனதால்
வளத்தையெல்லாம் மாற்றான் அபகரித்துக் கொள்ள நாமே தூண்டி வருகிறோம்.

அரசியல் தலைவர்கள் தங்களைத் திருத்திக்கொண்டு சேவை மனப்பான்மையோடு
தொண்டாற்ற வில்லையெனில் இந்த நாட்டிற்கு விமோசனம் இல்லை.
வளத்தையும் வலிமையையும் வெறும் கையில் முழம் போட்டுக் கொண்டிருக்க
வேண்டியதுதான் .

Tuesday, January 24, 2012

vinveliyil ulaa

ஹயாடெஸ்
ஹயாடெஸ்,80000 ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய
சூரியனுக்கு இன்னும் அருகாமையில் இருந்தது என்றும்
அப்போது அவை இரண்டிற்கும் இடைப்பட்ட தொலைவு
சுமார் 67 ஒளி ஆண்டுகள் என்றும் 65 மில்லியன் ஆண்டுகளாக
ஹயாடெஸ் நம்மிடமிருந்து விலகிச் சென்றதால்,விண்ணில்
அதன் தோற்றப் பரப்பு முழு நிலவின் தோற்றப் பரப்பைவிடக்
குறைவாக உள்ளது.இதிலுள்ள பிரகாசமான விண்மீன் வெறும்
கண்களுக்குத் தெரியும். அதன் தோற்ற ஒளிப்பொலிவெண்
12 ஐக் கொண்ட மங்கலான வின்மீனாகும்.

ஹயாடெஸ் ஏறக்குறைய ஒரேமாதிரியான விண்மீன்களாலான
ஒரு தொகுப்பு .இதிலுள்ள விண்மீன்கள் யாவும்,குளிர்ச்சியானதாகவும்
சிறிய அளவினதாகவும் ,இளமையானதாகவும் உள்ளன. இதில்
சூரியன் போல பல விண்மீன்களும் ,ஒரு சில பெருஞ் சிவப்பு
விண்மீன்களும் இருக்கின்றன. இதன் வயது ஏறக்குறைய
ஓராயிரம் மில்லியன் ஆண்டுகள் என மதிப்பிட்டுள்ளனர் .
பொதுவாகத் தனிக் கொத்து அல்லது அக அண்டக் கொத்து
விண்மீன் கூட்டம் ஓரண்டத்தின் தட்டுப் பகுதியில் அமைந்திருக்கும்.
இதில் பத்து முதல் சில நூறு விண்மீன்கள் தளர்ச்சியாகக் கட்டுண்டு
பெரும்பாலும் சீர்மையற்ற முறையில்,50 ஒளி ஆண்டுகள்
குறுக்காக உள்ள விண்வெளியில் மேகக் கூட்டம் போல சிதறிக்
கிடக்கும் வளிமங்கள் மற்றும் தூசிகளிலிருந்து இவையாவும் ஏறக்குறைய
ஒரேசமயத்தில் உருவாகின்றன .இப்படி உருவாவதற்கு அவை பல
நூறு மில்லியன் ஆண்டு காலத்தை எடுத்துக் கொண்டுள்ளன.
உண்மையில் பல நெபுலாக்களுக்கு மத்தியில் இது போன்று தனிக்
கொத்து விண்மீன் கூட்டங்கள் உருவாவதை ஆராய்ச்சி யாளர்கள்
கண்டறிந்துள்ளனர். தனிக் கொத்து விண்மீன்கள் கூட்டம் மெதுவான
இடப்பெயர்வுக்கு உள்ளாகின்றன. அருகருகே இருப்பதால் ஏற்படும்
குறுக்கீடுகள் ,நெபுலாவிலுள்ள ஊடகப் பொருளால் ஏற்படும்
இடையீட்டுச் செயல்களால் இக் கூட்டத்திலுள்ள சில உறுப்புகள்
புற வெளிக்குத் தப்பிச் செல்வதுண்டு

இதற்கு மிகச் சரியான எடுத்துக் காட்டாய் விளங்குவது ஹயாடெஸ்
மற்றும் பிளியாடெஸ் கொத்து விண்மீன் கூட்டங்களாகும்.
முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து
முட்டை வந்ததா ? முதலில் இருந்தது மரமா அல்லது விதையா? என்று
வேடிக்கையாகச் சிலர் வினவுவார்கள் .இதற்கு ஒப்புக் கொள்ளுமாறு
மிகச் சரியான விடையை எளிதாகக் கூறமுடியாது .அது போல
விண்மீன்கள் அழிந்து நெபுலா வந்ததா அல்லது நெபுலா திரண்டு
விண்மீன்களாக மாறியதா என்று கேட்பதும் இது போன்றதே .விண்மீன்
வெடித்துச் சிதறி நெபுலாவாக மாறுவதும் ,நெபுலா குளிர்ந்து சுருங்கி
விண்மீனாக உருமாறுவதும் இப்பிரபஞ்சத்தில் தொடர்ந்து
நிகழும் ஒரு நடைமுறைதான் .இந்த வகையில் ஹயாடெஸ் ,இப் பேரண்டம்
ஆதி காலத்தில் எப்படித் தோன்றியிருக்கும் என்பதைத் தெரிவிக்கும்
ஒரு காட்சியாக உள்ளது. பேரண்டத்தின் எல்லையை வரையறுப்பதில்
இது முக்கியப் பங்கேற்றுள்ளது

Monday, January 23, 2012

arika ariviyal

கதிரியக்கம் -செயற்கையும் ,இயற்கையும்அணுக்கருக்களில் புரோட்டானும் ,நியூட்ரானும் ஒரு குறிப்பிட்ட விகித
நெடுக்கையில் இருக்கும். இதில் புரோட்டானோ அல்லது நியூட்ரானோ
அந்த விகித நெடுக்கைக்கு அப்பாற்பட்டு அதிகரிக்கும் போது, ஒரு
நிலையற்ற தன்மை தூண்டப்படுகிறது .இதை அணுக்கருவிலுள்ள
நியூட்ரானுக்கும் புரோட்டானுக்கும் உள்ள தகவால் (Ratio ) குறிப்பிடுவார்கள் .
எளிய அணுக்கருக்களில் நியூட்ரானும் புரோட்டானும் சமமாக
இருப்பதால் நிலைப்புத் தன்மைமிக்கனவாக இருக்கின்றன .கனமான
அணுக்கருக்களில் நியூட்ரான்கள் அதிகரிப்பதால் ஒரு நிலையற்ற தன்மை
தூண்டப்படுகிறது.அதனால் அவை கதிரியக்கம் கொண்டுள்ளன . அப்போது
அதிகப்படியான நியூட்ரான்களுள் ஒன்று சிதைந்து எலெக்ட்ரானை
உமிழ்ந்து புரோட்டானாக மாறுகிறது .இது செயற்கை கதிரியக்கமாகும் .
கதிரியக்கத்தை நிலையான அணுக்கருக்களில் புரோட்டானையோ
அல்லது நியூட்ரனையோ உட்புகுத்தி செயற்கையாகப் பெறலாம் .
இயற்கைக் கதிரியக்கத்தில் பாசிட்ரான் (Positron ) வெளிப்படுவதே யில்லை.
செயற்கைக் கதிரியக்கத்தில் பாசிட்ரான் வெளிப்படுவது சாத்தியமானது .
ஏன் இந்த வேறுபாடு ?
நியூட்ரான், புரோட்டானாகவும் ,எலெக்ட்ரானாகவும் சிதைவுறுவது
ஆற்றல் மாறாக் கோட்பாட்டின் படி இயல்பானது.ஏனெனில் நியூட்ரானின்
நிறை ,புரோட்டான்,எலெக்ட்ரான் நிறைகளின் கூடுதலை விட அதிகமானது. .
பாசிட்ரான் உமிழ்வு ,புரோட்டான் நியூட்ரானாக மாறுவதால் ஏற்படுகின்றது .
இது நிகழ புரோட்டானுக்கு கூடுதல் ஆற்றல் தேவை .இது செயற்கைக்
கதிரியக்கத்தில் ,புறத் தாக்கத்தினால் அளிக்கப்படுவதால் ,அதில் மட்டுமே
இயலுவதாக இருக்கிறது .

Wednesday, January 18, 2012

arika ariviyal

ஹைட்ரஜன் நிறமாலை


ஹைட்ரஜன் அணுவில் ஒரே யொரு எலெக்ட்ரான் மட்டும் உள்ளது.
ஆனால் அதன் உமிழ்வு நிறமாலையில் பல வரிகள் காணப் படுகின்றன.
இது எங்ஙனம் சாத்தியமாகும் ?

அணுக கருவைச் சுற்றி வரும் எலெக்ட்ரான் வெளிச் சுற்றுப்
பாதையிலிருந்து உட் சுற்றுப் பாதைக்குத் தாவும் போது குறிப்பிட்ட
அளவு ஆற்றல் உமிழப்படுகிறது. இவ்வாறு உமிழப்படும் ஆற்றல்
கிளர்ச்சியுறுவதற்காக ஹைட்ரஜன் அணு புறத்தேயிருந்து
எடுத்துக் கொண்ட ஆற்றலேயாகும். ஹைட்ரஜனுக்கு பல
திட்டமிட்ட வட்டப் பாதைகள் உண்டு. எலெக்ட்ரான் இவ்வட்டப்
பாதையில் எதில் வேண்டுமானாலும் கிளர்ச்சியுற்று அமையலாம்..
நிறமாலை என்பது பல கிளர்ச்சியுற்ற ஹைட்ரஜன் அணுக்கள்
அடி நிலைக்கு வரும் போது உமிழப்படும் பல ஆற்றல் கற்றைகளாகும்.

Wednesday, January 11, 2012

arika ariviyal

அணுக்கருவிற்குள் எலெக்ட்ரான்கள் ஏன் இருக்க முடியாது ?
தனிமத்தின் அணுக்கள் பகுக்க முடியாதவை என்று கருதப்பட்ட
காலம் மாறி , அணுவின் கட்டமைப்பை முழுமையாக அறியும்
நிலை வந்தது. அணுவில் எதிர் மின்னூட்டம் கொண்ட
எலெக்ட்ரான்களும் நேர் மின்னூட்டம் கொண்ட புரோட்டான்களும்
இருப்பதை அறிந்தவுடன் ,முதலில் அணுக்கருவை புரோட்டான் -
எலெக்ட்ரான் சேர்க்கையால் விளக்கினர். ஆனால் எலெக்ட்ரான்கள்
அணுக்கருவிற்குள் இருக்கவே முடியாது என்று பின்னர்
நிறுவினர்.அணுக்கருவிற்குள் எலெக்ட்ரான்கள் ஏன் இருக்க
முடியாது ?புள்ளியியல் கொள்கை (Statistical Mechanics ), அணுக்கருவின் காந்தப்
பண்பு மற்றும் ஐயப்பாட்டுக் கொள்கை (uncertainty principle )
போன்ற இயற்பியல் நெறி முறைகளினால் எலெக்ட்ரான்கள்
அணுக்கருவிற்குள் இருக்க முடியாது என்று நிறுவலாம்.

எலெக்ட்ரானும் ,புரோட்டானும் பெர்மியான்கள் (fermions ) என்பதால்
அவற்றின் தற்சுழற்சி 1 /2 ஆகும். இதன் படி இரட்டை எண்ணிக்கையில்
துகள்களைப் பெற்றிருக்கும் அணுக்கரு முழு எண்ணாலான தற்சுழற்சி
யையும் ,ஒற்றை எண்ணிக்கையில் துகள்களைப் பெற்றிருக்கும்
அணுக்கரு அரை ஒற்றை எண்ணாலான தற்சுழற்சி
யையும் பெற்றிருக்கும் எனலாம். டியூட்ரானை எடுத்துக் கொள்வோம்
அதன் நிறை எண் 2 . இதில் இரு புரோட்டான்களும் ,ஓர் எலெக்ட்ரானும்
இருப்பதாகக் கருதினால் ,அது அரை ஒற்றை எண்ணாலான
தற்சுழற்சியைப் பெற்றிருக்க வேண்டும் .ஆனால் டியூட்ரானின்
தற்சுழற்சி 1 . ஒரே துகள் ஒரே சமயத்தில் இரு வேறு புள்ளியியல்
கொள்கைகளுக்கு உட்படுவதில்லை. .
எலெக்ட்ரானின் காந்தத் திருப்பு திறன் ,புரோட்டானைக் காட்டிலும்
அதிகம். எலெக்ட்ரான் அணுக்கருவில் இருப்பின் அதன் காந்தத்
திருப்பு திறன் எலெக்ட்ரானின் காந்தத் திருப்பு திறன் நெடுக்கையில்
இருக்கவேண்டும். ஆனால் அப்படி யில்லாது, மிகவும் சொற்பமாக
இருப்பதால் எலெக்ட்ரான்கள் அணுக்கருவில் இல்லை என முடிவு
செய்யலாம்

Tuesday, January 10, 2012

arika ariviyal

குறைக் கடத்திகளின் மின் கடத்துதிறன்


பொருட்களை மின் கடத்திகள், மின் கடத்தாப் பொருட்கள் ,குறைக் கடத்திகள்
என மூன்று வகைப் படுத்தலாம். மின்கடத்திகளில் கட்டற்ற தனி
எலெக்ட்ரான்கள் மற்றும் பிணை எலெக்ட்ரான்களின் ஆற்றல் நிலைகள்
ஒன்றின் மேற்பகுதியும் மற்றொன்றின் கீழ் பகுதியும் ஒன்றோடொன்று
மேற்பொருந்தியவாறான ஆற்றல் பட்டைக்குள் அடங்குகின்றன..இதனால்
பிணைவதும் ,பிரிவது எலெக்ட்ரானுக்கு எளிதாய் இருக்கின்றது. .மின்
கடத்தாப் பொருட்களில் இவ்விரு பட்டைகளுக்கு இடைப்பட்ட வெளி
அதிகமாக இருக்கிறது. குறைக் கடத்திகளில் இவை குறுகிய இடைவெளியுடன்
இருக்கின்றது. கடத்திகளின் வெப்ப நிலை அதிகரிக்க மின்தடை அதிகரிகின்றது.
அல்லது மின் கடத்து திறன் குறைகிறது. ஆனால் குறைக்கடத்திகளில்
வெப்ப நிலை அதிகரிக்க பிணை எலெக்ட்ரான்கள் அதிகம் பிரிவதால்
மின் கடத்து திறன் அதிகரிக்கிறது அல்லது மின் தடை குறைகிறது.

மிகடத்திக்கும் , மின் கடத்தாப் பொருளுக்கும் இடைப்பட்ட மின்தடை
கொண்ட குறைக் கடத்தி பெற்றிருக்கும் மின் தடை உடைய ஒரு பொருளை
மின்கடத்தி மற்றும் மின் கடத்தாப் பொருட்களைக் கலந்து பெற
முடியும்.எனினும் குறைக் கடத்தியே பயன் மிக்கதாய் இருக்கிறது.
என்ன காரணம் ?

குறைக் கடத்தியின் மின் கடத்து திறனை அல்லது மின் தடையை
புறச் செயல்களைக் கொண்டு கட்டுப்படுத்த முடிவதைப் போல
குறைந்த மின் தடை கொண்ட கலப்புப் பொருளால் செய்ய முடிவதில்லை..
நேர் மற்றும் எதிர் வகை குறைக்கடத்தி களாலான இரு முனைச்
சாதனத்தை (diode ) மின் சுற்றில் இணைக்க ,ஒரு மின்தடையும் ,
அதை முனை மாற்றி இணைக்க வேறொரு மின் தடையும் தரும்.
மேலும் செயல்படும் மின்னழுத்தத்தை மாற்றியும் மின்தடையை
மாற்றலாம். இப் பண்பினால் குறைக் கடத்திகள் எலெக்ட்ரான்
வால்வுகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

Monday, January 9, 2012

arika ariviyal

இரும்பு ,காந்தம் -இனமறிதல் எங்ஙனம் ?


எல்லா வகையாலும் ஒத்த இரு உலோகத் துண்டுகள் உள்ளன.எடை,
நிறம்,வடிவம்,அளவு எல்லாம் சமம்.ஆனால் அதிலொன்று சாதாரண
இரும்பு,மற்றொன்று காந்தம்.கையில் கருவிகள் ஏதுமில்லை.கருவிகளின்
துணையின்றி அவற்றை இனமறிதல் எங்ஙனம் ?

ஒரு தண்டில் காந்தப் பண்பு அதனிரு முனைகளில் செரிவுற்றுள்ளன.இதையே
நாம் காந்த வட,தென் முனை எனக் குறிப்பிடுகின்றோம்.காந்தத்தின் மையப்
பகுதியில் காந்தத் தன்மை புறத்தே வெளிப்பட்டுத் தெரிவதில்லை.எனவே
மேஜையில் வைக்கப்பட்டுள்ள தண்டின் இரு முனைகளோடு அதன் மையப்
பகுதியையும்,கையிலுள்ள தண்டால் கவரப்பட்டால் ,கையிலுள்ள தண்டு
காந்தமாகும்.அப்படியில்லாது இருமுனைகளை மட்டும் கவருமானால் ,
கையிலுள்ள தண்டு இரும்பாகும்.

vinveliyil ulaa

ஹையாடெஸ் மற்றும் பிளியாடெஸ்

ஹையாடெஸ்(Hyades) மற்றும் பிளியாடெஸ்(Pleiades) கொத்து
விண்மீன் கூட்டத்தில் பல விண்மீன்கள் இருந்தாலும், வெறும்
கண்களுக்குப் புலப்பட்டுத் தெரிபவை சிலவே.இவற்றைக் கிரேக்க
புராணத்தில் அட்லஸ்(Atlas) என்ற மாமன்னனுக்கும்
ராணிமார்களுக்கும் பிறந்த பெண் குழந்தைகளாகச் சித்தரிந்துள்ளனர்.
ஹையாடெஸில் உள்ள விண்மீன்களெல்லாம் அட்லஸ் மற்றும் எத்ரா
தம்பதியினருக்குப் பிறந்த மகள்களை நினைவூட்டுவதாக உள்ளன.

விண்ணில் ஹையாடெஸ் கொத்து விண்மீன் கூட்டம் காளை மாட்டின்
முகமாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது.அல்டிபாரன்(Aldebaran)
என்ற பெருஞ் சிவப்பு விண்மீன்,இரத்தம் பாய்ந்து கோபமாகக் காட்சி
தரும் காளை மாட்டின் கண்ணைக் குறிப்பிடுகின்றது. இதை நம்மவர்கள் ரோகிணி(Rohini) எனக் குறிப்பிடுகின்றார்கள்.மாட்டின் கொம்பை பீட்டா
(Beta) மற்றும் சீட்டா(zeta) டாரி விண்மீன்கள் அலங்கரிக்கின்றன.
விண்ணில் பத்து முழு நிலவுப் பரப்பில் இந்த வட்டார
விண்மீன்கள் விரவி உள்ளன.

ஹையாடெஸ்ஸில் சுமார் 200 விண்மீன்கள் கொத்தாக ,மிகவும்
நெருக்கமாக அமைந்துள்ளன.இது சராசரியாக சுமார் 135 ஒளி ஆண்டுகள்
தொலைவு நம்மிடமிருந்து விலகியுள்ளது. .இது ஏறக்குறைய 'V " என்ற
வடிவத்துடன் 33 ஒளி ஆண்டுகள் நெடுக்கையில் விரவி உள்ளது.
சிதறியவாறு இருக்கும் விண்மீன்கள் விண்வெளியில் ஒரு முழு நிலவின்
பரப்பை அடைத்துள்ளன.

அல்டிபாரனைச் சுற்றி அமைந்துள்ள ஹையாடெஸின் விண்மீன்கள்
தனித்த தன்னியக்கம்(Proper motion) கொண்டு ,விண்வெளியில் ஒரு
புள்ளியை
நோக்கியவாறு இயக்கிச் செல்வது போலத் தோன்றுகின்றன. இப் புள்ளி
ஆல்பா ஓரியானிஸ்(Orionis) வட்டார விண்மீன் கூட்டத்திலுள்ள பெரு விண்மீனான பெடல்சியூஸ்(Betelgeuse) விண்மீனுக்கு மிக அருகில் அமைந்துள்ளது .ஹையாடெஸில் உள்ள விண்மீன்களின் தனித்த
தன்னியக்கம் குறிப்பிடும்படியாக இருப்பதால்,குவியும் முனைப்
புள்ளியை எளிதாகத் தீர்மானிக்க முடிகிறது. உண்மையில்
ஹையடெஸில் உள்ள விண்மீன்கள் யாவும் விண்வெளியில் இணையான
திசையில் இயங்கிச் செல்கின்றன.அவை ஒரு புள்ளியில் குவிவது
போலத் தோன்றுவது தோற்றப் பிழையாகும். இது எப்படிப்பட்ட தோற்றப்
பிழை என்றால், இணையான இரயில் தண்டவாளங்கள் தொலைவில்
குறுகிக் கொண்டே செல்வதைப் போன்றதாகும்.

Sunday, January 8, 2012

arika iyarpiyal

திண்மக் கோளமும் உள்ளீடற்ற கோளமும்

ஒரு குறிப்பிட்ட ஆரமுடைய செம்பாலான திண்மக் கோளமும் ,அதே
ஆரமுடைய செம்பாலான உள்ளீடற்ற கோளமும் ,ஒரு குறிப்பிட்ட
வெப்ப நிலைக்கு சூடுபடுத்தப் படுகின்றன. அதன் பின் அவை
இரண்டும் ஒத்த புறச சூழலில் தானாகக் குளிரும்படி வைக்கப்
படுகின்றன. இதில் எந்தக் கோளம் விரைந்து குளிர்ச்சியுறும்?

இரு கோளங்களும் சுற்றுப் புற வெப்ப நிலையிலிருந்து சமமான
வெப்ப நிலை வேறுபாட்டையும்,சமமான புறப்பரப்பையும்
பெற்றுள்ளன.எனவே தொடக்கத்தில் இரு கோளங்களுக்கும்
குளிர்வுரும் வீதம் சமமாக இருக்கும் எனலாம்.ஆனால்
குளிர்வுரும் வீதம் = பொருளின் நிறைx சுயவெப்பம்x வெப்ப
நிலை குளிர்வுரும் வீதம் என்பதால் ,நிறை குறைந்த
உள்ளீடற்ற கோளம் வெப்பநிலைக் குறைவுறும் வீதத்தை
அதிகமாகப் பெற்றிருக்கும் எனலாம்.எனவே உள்ளீடற்ற
கோளம், திண்மக் கோளத்தை விட விரைந்து குளிர்ந்து
போகிறது.

Tuesday, January 3, 2012

arika ariviyal

அறிக அறிவியல்

அதிக உயரங்களில் வெப்ப நிலையும் செயற்கைக் கோளும்


பூமியிலிருந்து15-16 கிமீ உயரம் வரை பூமியின் நடுவரைப்
பகுதியிலும் 8-9 கிமீ உயரம் வரை துருவப் பகுதியிலும்
வளி மண்டலத்தின் முதல் அடுக்கான
அடிநிலை அடுக்கு விரிந்துள்ளது. வளி மண்டலத்தின்
மொத்தப் பரிமாணத்தில் இது மிகச் சிறியது என்றாலும் ,
மொத்தக் காற்றில் 75 சதவீதத்தை இவ்வடுக்கு
மட்டுமே கொண்டுள்ளது. நிலப்பரப்பின் சராசரி வெப்பநிலை
அருகிலுள்ள அடிநிலை அடுக்கின் வெப்பநிலையை விடக்
கூடுதலாக இருக்கிறது.இதற்குக் காரணம் அடிநிலை
அடுக்கு சூரிய ஒளியைச் சிதறலடிக்குமேயன்றி உறிஞ்சாது.
பூமியின் சராசரி வெப்ப் நிலை 300 K .அடிநிலை அடுக்கின்
உயரம் செல்லச் செல்ல ஒரு கிலோமீட்டர் உயரத்திற்கு 6.5 K
வீதம் வெப்ப நிலை குறைகிறது. இவ்வடுக்கின்
உயர் எல்லையில் வெப்பநிலை 210 K.இவ்வுயரங்களில் பறக்கும்
விமானங்களில் தக்க பாதுகாப்பு ஏற்பாடு செய்யாவிட்டால்
குளிரால் உறைந்து போக நேரிடும் .

ஆனால் இரண்டாம் நிலை அடுக்கில் உயரத்திற்கு ஏற்ப
ஏற்படும் வெப்பநிலைச் சரிவு வெப்ப ஏற்றமாக மாறுகிறது.
நூறு கிலோமீட்டருக்கு அப்பால் அயன மண்டலம்
தொடங்குகிறது. இதில் அணுக்கள் அயனிகளாகப்
பகுக்கப்பட்டு இயங்குகின்றன .
இவற்றின் இயக்க வேகம் பல ஆயிரம் செண்டிகிரேடு
வெப்ப நிலைக்குச் சமமானது .எனினும் இவ்வுயரங்களில்
பூமியைச் சுற்றிவரும் செயற்கைக் கோள்கள்
உருகுவதில்லையே ஏன் ?

இயக்கத்தின் அடிப்படையில் வெப்பநிலையை மதிப்பிடுவது
வழக்கம் என்றாலும் அதிக உயரங்களில் காற்றின் அடர்த்தி
மிகவும் குறைவு. அதனால் ஓரலகு பருமனில் உள்ள
மூலக்கூறுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் .
இவற்றின் இயக்க வேகம் அதிகமாக இருந்தாலும் குறைந்த
அளவு மூலக்கூறுகளே செயற்கைக் கோளை மோதி
ஆற்றலைப் பரிமாற்றம் செய்யும்.இது அதன் வெப்பநிலையை
உயர்த்தி உருகச் செய்வதற்குப் போதுமானதாக இல்லை.
மாறாக செயற்கைக் கோள் மோதும் மூலக்கூறுகளிலிருந்து பெரும் ஆற்றலைவிடக் கூடுதலான ஆற்றலை வெப்பக் கதிர் வீச்சு
மூலம் இழக்கிறது .
(சூரிய ஒளியால் தாக்கப்படாத நிலையில் )