Friday, September 4, 2020

God-19

God-19

சொர்க்க லோகம் போன்ற ஓரிடத்தில்  தனியறையில் ஓர் அழகான இளம் பெண்ணும் ,ஓர் இளைஞனும் மட்டும் இருக்கின்றார்கள் . அந்தப் பெண் தன் ஆடைகளை ஒவ்வொன்றாகக் கழற்றி எறிந்து விட்டு இறுதியில் முழு நிர்வாணமாக நிற்கின்றார் .மனப்போராட்டம் நடக்கின்றது. அதன் விளைவு மூன்று விதமாக இருக்கலாம். அந்த இளைஞன் காமத்தால் தூண்டப்பட்டு தவறு செய்யலாம். அல்லது கண்களை மூடிக்கொண்டு சலனப்படும் மணத்தைச் சமாதானப்படுத்தி திசை திருப்பலாம்.அல்லது கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு எதுவும் நடக்காதது போல அமைதியாக இருக்கலாம்.இந்த மனா நிலையைத்தான் தமிழ்ச் சான்றோர்கள் மூன்று மனித நிலைகளாகச் சித்தரிக்கிறார்கள். மனதை அடக்கி ஆளமுடியாதவன் கணப்பொழுது சுகங்களுக்காக ஆசைப்பட்டு தவறு செய்யத் துணிகிறான் .இவன் மனிதருள் அரக்க குலத்திச் சேர்ந்தவன்.தனக்கு உரிமையில்லாத பொருள் தன்னுடைமையாகாது என்று அந்தச் சூழ்நிலையை எதிர்கொள்ள  முடியாமல் அஞ்சி கண்களை மூடிக்கொண்டு  கவனத்தைத் திசை திருப்புபவன்  மனிதன் .நிர்வாணத்தைப் பார்த்தும் மனம் நிர்வாணமாகவே இருக்கின்றது என்றால் அவன் தேவன். இயற்கையில் ஒவ்வொரு மனிதனிடமும் இந்த மூன்று குணங்களும் விகிதாச்சார வேறுபாட்டுடன் இருக்கவே செய்கின்றது 

Wednesday, September 2, 2020

god-18

 God-18

தேவர்கள் நல்லொழுக்கமும், நல்லெண்ணமும் கொண்டு ,ஆக்கச்  செயல்களைச்  செய்யும் இயல்புடைவார்களாக இருந்ததால்  அவர்களுக்கு   சொர்க்கம் கிடைத்தது அசுரர்கள் தீயவொழுக்கமும் ,தீய எண்ணமும் கொண்டு அழிவுச் செயல்களைச் செய்யும் இயல்புடைவார்களாக இருந்ததால் அவர்களுக்கு நரகமே கிடைத்தது.சொர்க்கமும், நரகமும் கொடுக்கப்படுவவ்தில்லை, அது வாழும் முறைக்கு ஏற்ப இயல்பாக அமைவது என்பதை அறிவுறுத்தவே தேவர்களும் அசுரர்களும் கற்பனைப் பாத்திரங்களாகப் படைக்கப்பட்டார்கள் .

மனிதர்களின் நல்வாழ்விற்கு தேவ குணங்கள் உறுதியளிக்கின்றன .தனி மனிதனின்   முதன்மை நற்குணங்களான  அறநெறி ,அன்பு ,நேர்மை ,வாய்மை ஈதல்  போன்றவை முழு சமுதாயத்திற்கும் பாதுகாப்பாய்  விளங்கின. இவர்கள் மனத்தைக் கட்டுப்படுத்தி ஆண்டார்கள் .அதனால் மனம் எப்போதும் உயர்வான வாழ்க்கைக்கு வழிகாட்டியது    மனிதர்களின் தீய வாழ்க்கைக்கு அசுர குணங்கள் காரணமாயிருக்கின்றன. தனி மனிதனின்   முதன்மைத்  தீய  குணங்களான தீவினை ,வெறுப்பு ,பேராசை .பொய்மை , கயமை போன்றவை சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தன. இவர்கள் மனதால் ஆளப்படுபவர்களாக இருந்தார்கள் .மனம்போன போக்கிலே வாழ்ந்ததால் தானும் வாழாமல் பிறரை வாழவும்  விடாமல்  சமுதாயத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தனர்.

     வேண்டிய பொருளைப் பெறும் வழிமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் வேறுபட்டிருந்தது .விரும்பிய பொருளை உழைத்துப் பெறுவது தேவ குணம் அதை மற்றவரிடமிருந்து அபகரித்துக் கொள்வது அசுர குணம்,செய்யும் முயற்சியில் எவ்வளவு இடைத்தடைகள் வந்தாலும் அறநெறி பிறழாமை தேவகுணம். அறநெறி மீறுதலை இயல்பாகக் கொள்ளுதல் அசுரகுணம் .பொய் கூற அஞ்சுவது தேவ குணம், பொய் கூற அஞ்சாமை அசுரர் குணம் , எதையும் எதிர்பாராது பிறருக்கு உதவி செய்வது தேவ குணம். எதிர்பார்ப்புடன் செய்வது  அசுர குணம்.

ஒவ்வொரு மனிதனும் ஒரே மாதிரியான குணத்துடன் எல்லா  நேரங்களிலும் இருப்பதில்லை ..உணர்வுகளின் தாக்கத்தினால் மாற்றம் பெறுவதுண்டு .அதனால் தேவர்கள் சில சமயங்களில் அசுரர்களாகவும் , அசுரர்கள் சில சமயங்களில் தேவர்களாகவும் தாற்காலியமாக தோற்றம் தருவதுண்டு .சூழ்நிலைகளுக்கு ஏற்ப குணங்கள் மனதளவில் மாறிக்கொண்டே இருப்பதால் ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் தேவனும் ,அசுரனும் இருப்பதுண்டு. முழுமையான தேவனோ ,முழுமையான அசுரனோ மனிதருள்ளும்  இல்லை கடவுளிடமுமில்லை. கடவுளைக்  கடவுளாக மட்டுமே  அதாவது மனிதனுக்கு அப்பாற்பட்டவராக வர்ணிக்கும் போது  முழுமையான தேவனாகவும் , மனிதனாகக் கற்பிக்கும் போது தேவனாகவும் அசுரனாகவும் தெரிவிப்பது இதனால்தான், கடவுள்களும் சில சமயங்களில் கோபப்பட்டு சண்டை போட்டுக் கொள்வது அதைப் புலப்படுத்துவதாக இருக்கின்றது.

ஒரு நேர்மையான மனிதன் வறுமையால் அல்லலுற்றான் .வறுமையின் கொடுமை யைத் தாங்க முடியாமல் ஒரு நாள் ஒரு வருக்குச் சொந்தமான பொருளை எடுத்துக் கொள்ளலாமா என்று யோசித்தான் .அப்போது அவன் மனதிற்குள் ஒரு போராட்டம் நடக்கின்றது .திருடு அது தப்பில்லை  என்று ஒரு மனம் கத்துகின்றது திருடு ,அது தப்பில்லை என்று மற்றொரு மனம் கெஞ்சுகின்றது  ஏன் தயங்குகின்றாய் , வறுமையை விரட்ட  இது நல்ல சந்தர்ப்பம்  என்று ஒரு மனம் நச்சரிக்கும் .திருடாதே , அதனால் தண்டிக்கப்படுவாய் .ஒரு முறை கெட்ட பெயர் சம்பாதித்து விட்டால் அதை மாற்றுவது எளிதல்ல . வாழ்க்கை முழுதும் தொடரும் என மீண்டும் கெஞ்சுதல் தொடரும். போராட்டத்தின் முடிவு  மனிதன் தேவனாகவே இருக்கின்றானா அல்லது அசுரனாக இருக்கின்றானா என்பதைப் பொறுத்து அமைகின்றது .. மகாபாரதப் போர் என்பது 100 தீயவர்களுக்கும் 5 நல்லவர்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் அது  மனதிற்கும்  மனிதனுக்கும் இடையே நடக்கும் போராட்டமே . சூரசம்காரம் மனதில் குடியிருக்கும் தீய எண்ணங்களை வேரறுக்க வேண்டும் என்பதைக் கூறுவதாக இருக்கின்றது .அசுரன் ஒருவன் தாங்கமுடியாத  கொடுமைகளைச் செய்தால்  அதை எதிர்க்க ஒரு சூரன் வருவான் என்ற உண்மையை சமுதாயத்திற்கு உணர்த்துவது புராணக் கதைகள். 

ஆக்கத்தில் அழிவுமுண்டு அழிவில் ஆக்கமுமுண்டு. மேட்டில் பள்ளமுண்டு ,பள்ளத்தில் மேடுமுண்டு ,இன்பத்தில் துன்பமுண்டு , துன்பத்தில் இன்பமுமுண்டு.பொருளுக்கு எதிர்ப்பொருளுண்டு ,எதிர்பொருளுக்குப் பொருளுமுண்டு . இறுதிச் சமநிலைக்கு இவை இரண்டும் தவிர்த்துக் கொள்ள முடியாதன.  என்பதை உலகிற்கு உணர்த்துவதே கடவுள் குடும்பம் 

Tuesday, September 1, 2020

God-17

 

கடவுள்-17

மனதின் மாயத் தோற்றத்தையே கடவுளாக வர்ணித்துக் கொண்டார்கள் என்பதற்குப் புராணங்கள் ஆதராமாய் இருக்கின்றன.மனதிற்கும் ,கடவுளுக்கும் உள்ள ஒற்றுமைகள் இதற்கு உறுதியளிக்கின்றன .மனதை - தன் மனத்தைக் கூட ஒருவர் ஓர் உருவமாகக் காணமுடியாது.மனதிற்கு சுயஉருவமில்லை .மனதை ஒரு உருவமாகப் பார்க்க வேண்டுமென்று விரும்பினால்  ஒருவர் அவரையே பார்த்துக் கொள்ளவதைத் தவிர வேறு வழியில்லை. அது   மட்டுமல்ல மனதைச் சரியாகப் புரிந்து கொள்ளவும் முடியாது. புரிந்து கொள்வதற்கான தகுதியை வளர்த்துக் கொண்ட பிறகே  மனதைப்  பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொள்ள முடிகின்றது.அது போல கடவுளையும் கண்களால் காணவே முடியாது போதிய தகுதியை வளர்த்துக் கொண்டால் மட்டுமே கடவுளை உணரமுடியும். கடவுளை உயிருள்ள ஒரு உருவமாகப் பார்க்க விரும்பினால் ஒருவர் அவரையே கடவுளாக நினைத்துக் கொள்ளவேண்டும். மனம் ஒன்றைப் பலவாகும் பலவற்றை ஒன்றாகும் . கடவுளும் இயற்கை வடிவில் இதைத்தான் செய்கின்றார் . மனதின் படைப்புத் திறன் அளவற்றது. அது அனுபவங்களைப் பதிவுசெய்து வைக்கின்றது,எண்ணுகின்றது , சிந்திக்கின்றது,  உறுப்புக்களின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகின்றது, செயல்படத்  தூண்டுகின்றது .அது போல கடவுளின் படைப்புத் திறனும் மதிப்பிட முடியாத அளவிற்கு  அளவற்றது .  மனம் ஆற்றலின்றி பொருள் சமைக்கும் ,பொருளின்றி ஆற்றலை விளைவிக்கும் .கடவுளை போல எந்தவொரு வாகனமோ அல்லது ஊர்தியோ இன்றி பல ஒளியாண்டுகள் தொலைவு நினைத்த நொடியில் கடக்கும்.எதை அடைய  விரும்பி முயற்சி செய்து ஈடுபாட்டுடன்  கூடிய உழைப்பைத் தொடர்ந்தால் அதை நிச்சியமாக அடையமுடியும். ஒன்றைப் பெறுவதற்கான வழி காட்டும் மனதைப்  போல  கடவுளும் தகுதியுடைய மனிதர்களுக்கு வழிகாட்டுகிறார். மனம் முயன்று சரியாகச் செயல்பட்டால் அளவற்ற செலவத்தை எவரும் ஈட்டலாம். கடவுளிடம் வேண்டிக் கொண்டால் பொன்னும் பொருளும் அள்ளித் தருவார் என்பதைப்போல , ஒருவர் தன் மனதை வேண்டிக்கொண்டாலும் அது போல நிகழும் .

எல்லையற்ற பிரபஞ்சத்தை உருவாக்கிக் காப்பதையும் ,பேரூழியில் அழிக்கவேண்டியதை அழிப்பதையும் இடைவிடாது செய்யும் முழுமுதற் கடவுள் சிவன் என்பார்கள்.மும்மூர்த்திகளில் முதல்வன் .சைவ சித்தாந்தத்தின் தலைவன் உண்மையில் .எதுவும் அழிப்பதற்காக ஆக்கப்படுவதில்லை . புதிய இயற்கைச் சூழலுக்கு ஏற்ப ஆக்கப்படுவதற்காகவே அழிக்கப்படுகின்றன.பரிணாம வளர்ச்சியின் அடிப்படையே அதுதானே .சிவன் பொருளென்றால் பார்வதி ஆற்றல். சிவன் அறிவு என்றால் பார்வதி சக்தி. எப்படி பொருளும் ஆற்றலுமின்றி எதையும் ஆக்கமுடியதோ அது போல அறிவும் சக்தியுமின்றி  ஆக்கமுடியாது. அறிவும் சக்தியும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்பதையும், இனப்பெருக்கத்தின் மூல மந்திரத்தைச்   சுயமாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதையும்  மனிதர்களுக்கு அறிவுறுத்தவே அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளித்தார் போலும்.

இந்த அண்டத்தில் உயிர்களை உருவாக்கும் படைத்தல் தொழிலைச் செய்பவர் பிரம்மா ஆவார், ஒருவருடைய மனமே கற்பனை செய்கின்றது ,எண்ணுகின்றது ,சிந்திக்கின்றது, செயல்படுகின்றது. எதையொன்றையாவது படைக்கவேண்டும் என்றால் அதற்கான மூலம் மனமே. மனதின் படைப்புத்  திறனே பிரும்மம் ஆகின்றது. ஒன்றை உருவாக்குவதற்கு  திறமை மட்டும் போதாது அது தொடர்பான அறிவும் தேவை . பிரும்மாவும்  சரஸ்வதியும் இணையும் போது உருவாக்கம் மேம்படும் என்பதை உணர்த்துவது போல இருக்கின்றது  , அவ்வாறு படைக்கப்பட்டவற்றைப் பாதுகாக்கும் காத்தல் தொழிலைச் செய்பவர் விஷ்ணு.,. படைப்பால் பயனீட்டுவது என்பது பொருள் சேர்ப்பதும் .அதைப் பாதுகாப்பாக வைத்துக்  கொள்வதும் , பயனுள்ளவாறு செலவழிப்பதுமாகும். இது மனதின் ஆளுமைத் திறனோடு தொடர்புடையது. ஆளுமைத் திறன் என்பது நேர்மையாகப் பொருளீட்டுவது மட்டுமில்லை அதை  நேர்மையாகச் செலவழிப்பதுமாகும் .இனிய வாழ்க்கைக்கு  உகந்த இரகசியத்தை மனதறியுமாறு எடுத்துரைப்பது விஷ்ணுவும் லட்சுமியுமாகும். உலகில் தீமைகள் ஓங்கும் போது விஷ்ணு அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது மக்கள் நம்பிக்கை.. உலகம் தீமை செய்பவர்களால் அழிவதைக்காட்டிலும் .தீமை செய்பவர்களைக் கண்டும் காணாமல் இருப்பவர்களால்தான் விரைவாக அழிகின்றது என்ற உண்மையை உணர்த்துவது ஆளுமைத் திறனே . ஒவ்வொரு மனிதனும் சுமுதாயக் கேடுகளால் பாதிக்கப்படும்போது அதை எதிர்கத்  துணிவு கொள்வான் .அதையே விஷ்ணு அவதாரம் என்று குறிப்பிடுகின்றார்கள்

 மனமென்று  ஒன்று இருந்தால்தான் அங்கு படைப்புத் திறனும், ஆளுமைத் திறனும் இருக்கக் கூடும். தகுதியான  மனம், மனதின் படைப்புத் திறன், மனதின் ஆளுமைத் திறன் ஆகிய மூன்றும் இயல் வாழ்க்கையில் முதன்மைப் பொருளாகின்றன. இவற்றையே சான்றோர்கள் மும்மூர்த்திகளாக  உருவகப்படுத்தியுள்ளார்கள் . மனதின் மூலப்பொருட்கள் எண்ணங்கள் மட்டுமே.அவை நல்ல  எண்ணங்களாகவும்  இருக்கலாம் , தீய எண்ணங்களாகவும் இருக்கலாம் .வளத்தையும் நலத்தையும் கொடுக்கும் நல்ல  எண்ணங்களை தேவர்கள் என்றும் , அதைக் கெடுக்கும் தீய எண்ணங்களை அரக்கர்கள் என்றும் உருவாகப்படுத்தியுள்ளார்கள். .ஒவ்வொருவருடைய மனதிலும் இவ்விரு எண்ணங்களுக்கிடையே முடிவின்றி நடக்கும்  போராட்டத்தையே  தேவர்களுக்கும் அரக்கர்களுக்கும் நடக்கும் போராட்டமாக சித்தரித்துள்ளார்கள். இந்த அடிப்படைக் கருத்துடன் தான் புராணங்களும் ,இதிகாசங்களும் கதையாக எழுதப்பட்டுள்ளன. அதன் நோக்கமே கருத்து வேறுபாடின்றி எல்லோரும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற உயரிய சிந்தனைதான்..