Wednesday, November 30, 2022

ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே -1

 

ஏமாற்றாதே ஏமாற்றாதே  ஏமாறாதே ஏமாறாதே

மக்களை எவ்வாறெல்லாம் ஏமாற்றுகிறார்கள் மக்கள் எவ்வாறெல்லாம் ஏமாறுகிறார்கள் என்பதை மக்கள் எல்லோரும் உணரவேண்டும். மக்களிடம்  அறியாமை மிகுந்திருக்கும் போதும் ,அரசாங்கம் அதைத் தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை உண்மையாக நடைமுறைப் படுத்த முயலாத போதும்  சமூக ஆர்வலர்களாலும் .பொது ஊடங்கங்களினாலும்  மக்களிடையே ஒரு விழிப் புணர்வு தூண்டப்படவேண்டும் அப்பொழுதுதான்  சமுதாயத்தில் ஏமாற்றப் படுவதும், ஏமாறுவதும் பெருமளவு குறையும். இதனால் கட்டுப்பாடின்றி பெருகிவரும் ஊழல் தடுக்கப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது. இது மக்களிடையே நல்லொழுக்கத்தை இயல்பாக நிலைப்படுத்துகிறது. உண்மையான மனித நேயம் மலர்வதற்கு இது அடிப்படைக் காரணமாகின்றது

 

     மக்களை அரசாங்கம் ஏமாற்றுகின்றது. அதற்குக் காரணம் அரசியலில் போலி அரசியல்வாதிகளே பெருகிவருவதுதான் .ஒவ்வொரு வரி வருவாயும் மக்களுக்காகவே செலவழிக்கப்படவேண்டும்  என்பது ஒரு நாட்டின் பொதுச்  சட்டம். ஆனால் மிகக் குறைந்த சதவீதமே  மக்களுக்காகச் செலவிடப்படுகிறது. உண்மையான சேவை செய்யாமையாலும் ,தவறான செயல்கள் செய்வதாலும் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள். அதிகாரிகள் மக்களை ஏமாற்று வதும்  அதிகரித்து வருகின்றது . லஞ்சம் வாங்கி வேலை செய்யும் பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாகிவருகின்றார்கள்.இதன் மூலம் நேர்மையான  வேலை யைத் தாமதப்படுத்துவதாலும்  ,தவறான வேலையை அனுமதிப்பதாலும் நாட்டின் முன்னேற்றமும் வளர்ச்சியும் தடைப்படுகிறது   பொருள் உற்பத்தி யாளர்கள் ,மற்றும் விற்பனையாளர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். எடைக்குறைவு , கலப்படம் ,போன்றவற்றால் மக்களுக்குத் தெரியாமலேயே மக்களை ஏமாற்றுகிறார்கள். இவற்றையெல்லாம் பார்த்துப் பார்த்து மக்களும் மக்களை ஏமாற்ற ப் பழகிவருகின்றார்கள் .எல்லோரும் ஏமாற்றுக் காரர்களாக வளர்ந்து வருவார்களேயானால் ஏமாற்றுபவர்களுக்கும் ஏமாறுபவர்களுக்கும் இடையே  ஒரு நிலைத்த பகைமை உருவாகி சாகக்கூடாத சாமுதாயத்தை சாம்பலாகிவிடும் .அதற்கு முன்னர் மக்கள் பொதுநலத்தின் மேன்மை கருதி அணைத்து வர்க்கத்தினரும் திருத்த வேண்டும். அதன் அவசியத்தை உணர்ந்து இது தொடர்பான கருத்துக்களை இக் கட்டுரைத் தொகுப்பில் தொடர்ந்து எழுத நினைக்கின்றேன்.