Saturday, June 30, 2012

Eluthatha kaditham

எழுதாத கடிதம் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் நம்மையெல்லாம் காணச் சொல்லி கண்ட கனவை மெய்ப்பிக்கும் விதமாக இந்தியா உண்மையிலேயே ஒரு வல்லரசாக மாறுமா? முதலில் அவர் அப்படிச் சொன்ன போது மக்களிடையே ஒரு விழிப் புணர்ச்சி தூண்டப்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.ஒளி மயமான எதிர்காலம் மனக் கண்ணில் திரைப்படம் போல ஓடியது போட்டியான உலகில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் முன்னேறி விடும் என்ற நம்பிக்கை எல்லோர் மனதிலும் இருந்தது.ஆனால் இன்றைக்கு ஊட்டச்சத்து இல்லாமல் அந்த விழிப்புணர்ச்சி உறங்கத் தொடங்கி விட்டது. இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்? நடுவு நிலைச் சிந்தனையாளர்களால் மட்டுமே இது பற்றி ஓரளவு சரியாக முன்னுரைக்க முடியும்.கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளிடம் போய் தங்களுக்காகவும்,தங்கள் உறவினர்களுக்காகவும் வேண்டிக் கொள்வார்களே ஒழிய தாய் நாட்டிற்காக வேண்டிக் கொள்ள மாட்டார்கள்.தனி மனிதர்களின் நலம் நாட்டின் வளம் என்பதால் இது தவறில்லை.அரசியல் வாதிகள் எப்போதும் நாடு தங்களால் அபார வளர்ச்சி பெற்றுவிட்டதாகவும்,கனவு நனவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று சொல்வார்கள் உருவாக்கப்பட்ட புள்ளி விவரங்களின் பொய்மைத் தன்மை முன்பெல்லாம் ஆட்சி மாற்றத்தின் போது வெளிச்சத்திற்கு வரும்.உட்பூசலால் இப்பொழுதெல்லாம் உடனுக் குடன் தெரிய வருகின்றன. இந்தியாவின் முன்னேற்றம் தனி மனிதர்களால் திட்டமிடப்படலாம் ஆனால் அது தனி மனிதர்களால் மட்டுமே நிறைவேறி விடுவதில்லை ஒட்டு மொத்த சமுதாயமும் இணைந்து செயல்பட்டாலே அது இயல்பாக,எளிதாக,எவ்விதச் சிக்கலும் இடையூறுமின்றி நடைபெற முடியும்.எல்லோரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற நிலையில் தனி மனிதர்களின் ஆதிக்கம்,வெளிப்படைத் தன்மை இல்லாமை,ஆதாயம் தேடிக்கொள்ளுதல் போன்றவை எதிர் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.அகத்தே வளர்ந்து வரும் இப்போக்கின் பரிணாம வளர்ச்சி நமெக்கெல்லாம் பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.ஒவ்வொரு மனிதனும் மற்றவர்களை இயன்ற வழிகளில் ஏமாற்ற நினைக்கின்றான்.சுய லாபம் கருதி கண்காணிப்பை வற்புறுத்தாத ஆட்சியாளர்களின் போக்கினால் மக்கள் சுய கட்டுப்பாட்டையும் மறந்து வரம்பு மீறிச் செயல்படத் துணிந்து வருகின்றார்கள் இதன் வளர்ச்சி கட்டுக்கடங்காதவாறு பெருகி வருகிறது ஒரு மனிதன் தான் ஏமாற்றப்படுகிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமலே ஏமாற்றும் வித்தைகளில் இன்றைய சமுதாயத்தினர் கற்றுத் தேர்ந்து வருகின்றனர். அரசியவாதி மக்களை ஏமாற்றுகின்றான் மேலும் மேலும் ஏமாற்றுகின்றான்.திருந்தாத இவர்கள்,செய்த தவறுகளுக்கு வருந்தாத இவர்கள் இருந்தென்ன பயன்?அதிகாரிகளோ செய்யவேண்டிய தத்தம் பணிகளைச் செய்யாமலும் செய்யக்கூடாத செயல்களில் அதிக அக்கறை காட்டியும் வருகின்றனர்.இதற்கு வரும் மெலிதான எதிர்ப்புகள் கூட மக்களிடமிருந்துதான் வருகின்றதே ஒழிய ஆட்சியாளர்களிடமிருந்து வருவதே இல்லை. படித்தவர்கள்,திறமையானவர்களுக்கு சரியான வேலை இல்லாவிட்டாலும் கூட எதாவதொரு வேலை இல்லை.சுய தொழில் என்றாலும் மலை போன்ற முட்டுக் கட்டைகளுக்கு முன்னால் அவர்கள் விரைவிலேயே மாய்ந்து போகின்றார்கள் இதனால் மாணவர்கள் சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பமாகி பெரும்பாலும் தவறான பாதைகளில் தடம் மாறிச் சென்றுவிடுகிறார்கள்.இந்த நிலை ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு உகந்ததில்லை. இந்தியாவின் முன்னேற்றம் முன்னுக்குப் பின் முரணான தோற்றம் கொண்டிருப்பது இதனால்தான். மக்களின் பொது ஒழுக்கத்தின் தர நிலையில் மாற்றமின்றி உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவின் முன்னேற்றம் சாத்தியமில்லை.ஒழுக்கமில்லாத கல்வி ,நேர்மை இல்லாத பணி, தூமையில்லாத எண்ணம் போன்ற களைகள் அகற்றப்படாத வரை நாடு என்னும் வயலில் நல்ல விளைச்சலை யாரும் எதிர்பார்க்க முடியாது

Thursday, June 28, 2012

மக்னிசியத்தின் பயன்கள் மக்னீ சியத்தின் உறுதியை கலப்பு உலோகங்கள் மூலம் உயர்த்திக் கொண்டு அதைக் கட்டுமானப் பொருளாக பயன்படுத்துகின்றார்கள்.இதற்கு துத்தநாகம்,அலுமினியம் மற்றும் மாங்கனீஸ் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.அலுமினியமும் துத்தநாகமும் கலப்பு உலோகத்திற்கு வலுவூட்டுகின்றன. மாங்கனீஸ் உலோக அரிமானத்தை தடுக்கிறது .இக் கலப்பு உலோகத்தினால் எடை குறைவான ஆனால் வலிமை மிக்க பொருட்களை உற்பத்தி செய்ய முடிகிறது. இது தானியங்கு வண்டிகள் கனரக மற்றும் ரயில் வண்டிகள், விமானங்களின் உதிரி பாகங்கள் செய்யவும் நெசவுத் தொழில்,அச்சுத் தொழிலில் பயன்படவும் செய்கிறது உயர் வெப்ப நிலையை ஏற்கும் தன்மை(refractoriness),அடித்து கம்பியாக நீட்டக் கூடிய தன்மை (ductility)களை அதிகரிப்பதற்கும்,ஆக்சிஜனை உட்கிரகிக்கும் தன்மையைக் குறைப்பதற்கும் மக்னீசியக் கலப்பு உலோகம் பயன்படுகிறது.இரும்பு,சிலிகான் ,நிக்கல் போன்றவை மக்னீசியக் கலப்பு உலோகத்தின் பட்டறைப் பயன்பாட்டை மட்டுப்படுத்துவதுடன் அரிமானத்திற்குத் தரும் எதிர்ப்பையும் சீர்குலைத்து விடுகின்றன. உயர் வெப்ப நிலையில் ஆக்சிஜனிறக்கியாக மக்னீசியம் பல தனிமங்களின் உற்பத்தி முறையில் கொள்ளப்பட்டுள்ளது.குறிப்பாக வனேடியம் ,குரோமியம்,டைட்டானியம் போன்றவற்றைச் சொல்லலாம்.தூய சிலிகான் மற்றும் போரானை அவற்றின் நிலையான ஆக்சைடு களிலிருந்து பிரித்தெடுக்க மக்னீசியத்தின் இப் பண்பு அனுகூலமாய் யிருக்கிறது.உருகிய இரும்புக் குழம்போடு மக்னீசியத்தைச் சேர்க்க இரும்பின் பயன்பாடு மேம்படுகிறது.அதனால் இரும்பின் கட்டமைப்பு,பட்டறைப் பயன்பாடு மேலும் சிறப்படைகின்றன.மக்னாலியம் (மக்னீசியம் + அலுமினியம் ) எலெக்ட்ரான் (மக்னீசியம் + துத்தநாகம் ) போன்ற கலப்பு உலோகங்கள் இலேசானவை ஆனால் உறுதியானவை . மக்னீசியம் ஆக்சைடு,உயர் வெப்பம் தாங்க வல்ல செங்கல்,பீங்கான்,இரப்பர் இவற்றின் உற்பத்தி முறையில் பயன்படுகிறது.அணு உலைகளின் உட்சுவர்களைக் கட்டமைக்கப் பயன்படுகிறது.தூய மக்னீசியம் ஆக்சைடு,நெஞ்சரிப்பு,வயிற்றுப் புளிப்பு மற்றும் அமில நஞ்சுகளுக்கு மருந்தாகிறது. மக்னீசியம் பெர் ஆக்சைடு துணிகளை வெளுப்பூட்டப் பயன்படுகிறது.இது தொற்றுத் தடை மற்றும் நஞ்சுத் தடையாகப் பயன்தருகிறது. நீர் மூலக்கூறு ஏற்றப்பட்ட மக்னீசியம் சல்பேட்டை எப்சம் உப்பு என்பர்.இது தொழில் ஏற்படும் ஒரு சில வகை பத்துகளுக்கு (rashes) மருந்தாகப் பயன் படுகிறது மலச்சிக்கலைப் போக்கும் அரு மருந்தாகவும் இது எடுத்துக் கொள்ளப் படுகிறது. மக்னீசியம் சல்பேட் அரிகாரமாகவும்,கெட்டிச் சாயமாகவும் துணி மற்றும் காகித ஆலைகளில் பயன்படுகிறது தோல் பதனிடவும் உறுதுணையாக உள்ளது.மக்னீசியம் ஹைட்ராக்சைடு வயிற்றிலுள்ள உபரி அமிலத்தை சமப்படுத்திவிடுகிறது என்பதால் நெஞ்சரிப்புக்கு உகந்த மருந்தாகக் கொள்கின்றனர்.சர்க்கரைப் பாகிலிருந்து சர்க்கரை எடுக்கவும் இது பயன் தருகிறது.மக்னீசியம் கார்பொனேட்,பற்பசை,முகப் பவுடர் வெள்ளி மெருகேற்றி போன்றவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப் படுகிறது. உயிர் வேதியியலும் மக்னீசியமும் பிறக்கப் போகும் குழந்தை ஆணா,பெண்ணா என்று தீர்நாமிப்பதில் மக்னீசி யத்திற்குப் பங்கிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள் .பொட்டாசியம் நிறைந்த உணவைக் கூடுதலாக உட்கொண்டால் பிறக்கப் போகும் குழந்தை ஆணாகவும் ,மக்னீசியம் ,கால்சியம் அதிகமாக இருந்தால் பெண்ணாகவும் இருக்கும் என்பது இவர்களுடைய ஆய்வு முடிவு . கோழித் தீவனத்தில் மக்னீசி யத்தின் அளவு அதிகமாக இருந்தால் கோழிகள் இடும் முட்டைகள் உறுதியாக இருக்கின்றன. இதனால் உடைவதினால் ஏற்படும் இழப்பு தவிர்க்கப் படுகிறது. எளிதில் கோபப்படுபவர்களுக்கும்,உணர்ச்சி வயப்படுகின்றவர்களுக்கும் இதயத் தாக்கம் வருவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம்.இதற்குக் காரணம் கிளர்வுற்ற நிலையில் உடலில் உள்ள மக்னீசியம் எரிந்து போவதுதான் என்று கண்டுபிடித்துள்ளனர். தாவரங்களில் ஒளிச் சேர்க்கையைத் தூண்டும் குளோரோபில் என்ற பச்சையத்தில் இந்த மக்னீசியம் பங்கு பெற்றுள்ளது.
உடலின் திசுக்களின் இயக்கங்களுக்கும் என்சைம்களுக்கும் இந்த மக்னீசியம் தேவை.மக்னீசியக் குறைவு தசை இசிப்பு ,தசை முறுக்கு போன்ற பாதிப்புக்களைத் தருகிறது. எலும்புகளின் கட்டமைப்பில் மக்னீசியம் பங்கேற்றுள்ளது.நரம்புகளின் வழி சமிக்கைகளைக் கொண்டு செல்ல இது துணை புரிகிறது.
மக்னீசியம் வறண்ட அத்திப் பழம்,பருப்பு வகைகள்,பச்சை இலைக் காய்கறிகள் போன்ற வற்றில் அதிகம் உள்ளது.

Wednesday, June 27, 2012

Social awareness-Mind without fear

இது தினமலர் செய்தித் தாளில் (25 ஜூன்) வெளியான செய்தி மாணவர்களிடையே தற்கொலை நிகழ்வுகள் நடைபெறாது தடுக்கும் முயற்சிகளில் ஆசிரியர்கள் புத்துணர்வுடன் கடமை உணர்வோடும் மனித நேயத்தோடும் ஈடுபட வேண்டும் என்ற நோக்கில் அண்ணா பல்கலைக் கழகம் பல்வேறு திட்டங்கள் வகுத்து ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சியும் அளித்து வருகிறது தன் பிள்ளையைச் சான்றோன் எனக் கேட்டு மகிழவே பெற்றோர்கள் எல்லோரும் விரும்புவார்கள்.ஒரு பிள்ளை சிறந்து விளங்க வேண்டுமானால் அப்பிள்ளை தன்தூண்டலால் சுயஅறிவையும் அகஆற்றலையும் பெருக்கிக் கொள்ள ஆர்வமும் அளவில்லாத முயற்சியும் கொண்டிருக்க வேண்டும்.இவை குறைவாக இருந்தால் ஒரு புறத் தூண்டுதல் அவசியமாகிறது.இது முதலில் பெற்றோர்களாலும்,பின்னர் ஆசிரியர்களாலும்,நல்ல நண்பர்களாலும்,புற உந்தற்காரணிகளாலும் தூண்டப்பட்டு நிலைப்படுகிறது.நண்பர்கள் ஒரு சிலரையும் ஆசிரியர்கள் பல மாணவர்களையும் ஒரே சமயத்தில் கருத்தில் கொள்வதாலும்,மனம் மயங்கி சிந்தனையில் வேண்டாத எண்ணங்களை பிள்ளைகள் பதிய வைத்துக் கொண்டதாலும் தன் பிள்ளையை முழு அக்கறையோடும், ஈடுபாடோடும் கவனித்து வளர்க்கக் கடமைப்பட்ட பெற்றோர்களுக்கே இதில் முக்கியப் பங்கிருக்கிறது.மேலும் ஆசிரியர்களும் நண்பர்களும் பெற்றோர்களுக்குப் பிறகே தொடர்பு கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றார்கள் . ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்தில் எவ்வளவு உண்மையான பங்களிப்புச் செய்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே பிள்ளைகளின் முன்னேற்றம் தீர்மானிக்கப் படுகிறது.இந்த உண்மையை வெகு சில பெற்றோர்களே புரிந்து வைத்திருகின்றார்கள். . தேர்வில் தோல்வி என்றால் பிள்ளைக்கு எதிர்காலமே இல்லை என்று பெரும்பாலான பெற்றோர்கள் தவறாக முடிவு செய்கின்றார்கள் .இவர்கள் தோல்வியின் அருமை பெருமை தெரியாதவர்கள் .உண்மையில் வெற்றியை விட தோல்வியின் வலிமை மிகவும் அதிகம் தோல்விகளே நிச்சியமான வெற்றிக்கு வழிகாட்டும் உறுதியான பாடங்களாக இருக்கின்றன. . அதனால் வெற்றி பெற்றவர்களை விட தோல்விகளைச் சந்தித்து முழுமையாகப் பாடம் கற்றுக் கொண்டவர்களே வெற்றியை வெகு இயல்பாகவும் ,வெற்றிக்கு மேல் வெற்றிகளைப்பெற்று சாதனை படைப்பவர்களாகவும் விளங்குகின்றார்கள் தேர்வில் தோல்வி என்பது வாழ்க்கைக்குத் தோல்வி இல்லை என்பதை இவர்கள் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். கஜினி முகமது பலமுறை தோல்வி கண்டு 17 வது முறைதான் வெற்றி கொண்டான். தாமஸ் ஆல்வா எடிசன் என்ற விஞ்ஞானி 7000 முயற்சிகளில் 6999 முறை தோற்றுப் போன பின்பே ஒளிஇழை விளக்கை கண்டுபிடித்தார். இவர் மட்டுமல்ல எல்லா விஞ்ஞானிகளுமே தோல்விகளுக்குப் பின்னரே அவர்களுடைய முயற்சிகளில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள் நாம் கூட நடக்கப் பழகும் போதும்,சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும் போதும் கீழே விழுந்து அடிபட்டு அப்புறம் தான் முழுமையாகத் தெரிந்து கொண்டோம்.காயம் பட்டது அப்போது தோல்வியாக இருந்தால் இப்போது வீர நடை போட முடியுமா ? வேகமாக சைக்கிள் ஓட்டி வித்தைகள் காட்ட முடியுமா ? தோல்விகளைப் புரட்டிப் பார்த்தால் அவை வெற்றிகளின் பாடம் என்பது தெரியவரும் அன்பார்ந்த பெற்றோர்களே,உங்கள் பிள்ளைகள் தேர்வில் தோல்வியடையாமல் இருக்க உங்களுடைய கட்டுப்பாடோடு கூடிய அன்பும்,வழிகாட்டலும் தேவை இதையும் மீறி தேர்வில் தோல்வி அடைந்து விட்டால் அந்தத் தோல்வியையே ஒரு பாடமாக மாற்றிக் காட்டுங்கள்.மாறாக நீங்கள் வசை பாடுவதால் தோல்வி தொடர்ந்து உங்களையும் பற்றிக் கொள்ளும்.பிள்ளைக்குத் தேர்வில் மட்டும் தோல்வி ,உங்களுக்கோ பிள்ளையை இழந்ததால் வாழ்கையே தோல்வி.பிள்ளையின் தோல்வியை மீட்டுப் பெறமுடியும் ஆனால் உங்களுடைய தோல்வியால் ஏற்பட்ட இழப்பை ஒருகாலத்திலும் ஈடு செய்யவே முடியாது .

Monday, June 25, 2012

Vinveliyil ulaa

சிரியஸ் B பற்றி ... சூரியன் சிரியஸ் B இருக்குமிடத்தில் இருந்தால் அதன் பிரகாசம் 1.8 என்ற சார்பிலா ஒளிப் பொலிவெண் கொண்டதாக இருக்கும். அதாவது சிரியஸ் B யும் ஒரு பிரகாசமான விண்மீனே என ஊகிக்கலாம்.இதன் மங்கலான பிரகாசத்திற்குக் காரணம் அதன் புறப்பரப்பின் குறைந்த வெப்ப நிலையே என்றும் ஓரளவு திடமான மேற்பரப்புள்ள ஒரு குளிர்ந்த சூரியன் அது என்றும் வானவியலார் முதலில் நினைத்தனர்.ஆனால் உணர்வு நுட்பமிக்க தொலை நோக்கியால் பார்த்த போது சிரியஸ் B ஒரு மங்கலான விண்மீன் இல்லை என்பதையும் புறப்பரப்பின் வெப்ப நிலை சூரியனை விட மிக அதிகமாக உள்ள ஒரு விண்மீன் என்பதையும் தெரிந்து கொண்டனர்.எனவே மங்கலான ஒளிக்கு காரணம் அதன் தாழ்ந்த ஒளிப் பொலி வெண்ணே என்று கருதினார்கள்.இது சூரியனை விட 360 பங்குகுறைவாக இருக்க வேண்டும் அதாவது அதன் ஆரம் சூரியனைப் போல 19 மடங்கு குறைவு எனலாம் அதாவது பருமனில் சிரியஸ் B சூரியனை விட 6850 மடங்கு குறைவானது.ஆனால் நிறையில் இந்த அளவு வேறுபாடு இல்லை.ஏறக்குறைய சூரியனின் நிறைக்குக் கொஞ்சம் குறைவாக உள்ளது. இதனால் சிரியஸ் B-ன் அடர்த்தி சூரியனின் அடர்த்தியை விட 5480 மடங்கு அதிகமானது. துல்லியமான கணக்கீடுகள் சிரியஸ் B-ன் ஆரம் 20,000 கி மீ என்று தெரிவிக்கின்றன. அதாவது சூரியனின் ஆரத்தைப் போல 35 மடங்கு குறைவு. எனவே பருமன் 42875 மடங்கு குறைவு. இது அதன் அடர்த்தி இன்னும் கூடுதலாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றது. சிரியஸ் B,பூமியைப் போல மூன்று மடங்கு பெரியதாகவும்,யுரேனஸ் கோளைவிடச்சற்று சிறியதாகவும் இருக்கின்றது.இதனால் இதன் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கலாம்.சிரியஸ் B-ன் அடர்த்தி நீரின் அடர்த்தியப் போல 125,000 மடங்கு என மதிப்பிட்டுள்ளனர்.சிறிய உருவமும் கூடுதல் நிறையும் குறைந்த ஒளிர் திறனும் கொண்ட இதை குறுவெண் விண்மீன் (white dwarf) என அழைக்கின்றார்கள்.இந்தியாவில் பிறந்த இயற்பியல் விஞ்ஞானியான எஸ் .சந்திரசேகர்,ஒரு குறு வெண் விண்மீன் தன் நிறையை 1 .44 சூரிய நிறையை விடக் கூடுதலாகப் பெற்றிருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். இந்த நிறை வரம்பு சந்திரசேகர் நிறை எல்லை என அழைக்கப்படுகிறது. சிரியஸ் B ஒரு குறு வெண் விண்மீன் என்பது முழு அளவில் உண்மை இல்லை. 40 எரிடானி என்ற மும்மீனில் உள்ள ஒரு விண்மீன் வெப்ப மிக்கதாக இருந்தும் தாழ்ந்த பிரகாசம் கொண்டிருந்ததை 1910 ல் கண்டறிந்தனர். இதை யாரும் குறு வெண் விண்மீன் என்று வைகப்படுத்த வில்லை எச்.என் ரஸ்ஸல் என்பார் 40 எரிடானி ஒரு விதி விலக்கு என அறிவித்தார். சிரியஸ் B இன்னும் பிரகாசமான விண்மீன் போல இருக்கிறது.ஆனால் ஏறக்குறைய குறு வெண் விண்மீன் நிலைக்கு அருகாமையிலும் உள்ளது.குறு வெண் விண்மீன் ஆற்றலை எல்லாம் உமிழ்ந்து ஓய்ந்த நிலையில் இருப்பதால்,ஈர்ப்புச் சுருக்கத்திற்கு உள்ளாகும். அப்போது அதற்கு எதிரான உள்ளார்ந்த தடைகள் (எலெக்ட்ரான் அழுத்தம்,நியூட்ரான் அழுத்தம்) அதை ஊதிப் பெரியதாக்கி விடுகின்றன.அப்போது அது பெருஞ் சிவப்பு வின்மீனாகக் காட்சி தரும்.இது நீண்ட கால நெடுக்கையில் இனிமேல் ஏற்படப் போவதால் பழங்காலத்திய பதிவுகளுக்கு இச்செந்நிறம் காரணமாக இருந்திருக்க முடியாது. ஒரு விண்மீனிலிருந்து மற்றொரு விண்மீனுக்கு வளிம நிலை மூலப் பொருட்கள் கவரப் பட்டு பாய்ந்து செல்லும் போது இது போன்ற செந்நிறம் தோன்றுவதற்கான வாய்ப்புண்டு. நிறமாற்றத்தோடு தொடர்புடைய இது போன்ற புதிர் பெர்சியஸ் வட்டாரத்திலுள்ள அல்கோல் என்ற இரட்டை வின்மீனிலும் காணப்படுகின்றது.புவி வளி மண்டலத்தில் உள்ள தூசி மற்றும் மூலக் கூறுகளால் ஏற்படும் ஒளிச் சிதறல் மற்றும் உட்கவர்தலால் இப்படி ஏற்படலாம் என்றும் அதனால் சிரியஸ் பூமியின் அடிவானத்தில் இருக்கும் போது பலவிதமான நிறஜாலங்களை ஏற்படுத்தும் என்றும் கூறலாம்.பழங்காலத்திய வானவியலார் சிரியஸ் அடிவானத்தில் இருக்கும் போது எப்போதும் ஆய்வை மேற்கொண்டதால் அவர்கள் குழம்பி இருக்கலாம் என்று பின்னால் வந்தவர்கள் கூறினார்கள். ஐன்ஸ்டினின் பொதுச் சார்புக் கொள்கை ஒரு விண்மீனால் உமிழப்படும் ஒளி அதன் ஈர்ப்பினாலேயே பாசிக்கப்படுகிறது என்று தெரிவிக்கிறது.ஒளியை போட்டான் (photon) என்றழைக்கப்படும் ஒளித்துகள்களாகக் கருதினால் அத்துகள் விண்மீனின் பலமான ஈர்ப்பை எதிர்த்து வெளியேற வேண்டியதாக இருக்கிறது.அதற்குத் தேவையான ஆற்றலை அது தன் இயக்க ஆற்றலிலிருந்தே பெற விழைவதால் அதன் இயக்க வேகம் தாழ்வுற,அதற்கேற்ப அதன் அலை நீளமும் அதிகரிக்கின்றது. அதாவது செம்பெயர்ச்சி (Red shift)ஏற்படுகின்றது. இதனளவு ஒரு விண்மீனின் நிறை மற்றும் ஆரம் இவற்றின் தகவிற்கு நேர் விகிதத்தில் இருக்கிறது. நியூட்ரான் விண்மீன்,கருந்துளை விண்மீன் (Black hole)குறு வெண் விண்மீன் (White dwarf)போன்ற வற்றில் செம்பெயர்ச்சி குறிப்பிடும் படியாக இருக்கிறது.குறு வெண் விண்மீன்களில் செம்பெயர்ச்சியை அளவிட்டறிந்து ஐன்ஸ்டினின் பொதுச் சார்புக் கொள்கை யின் உண்மைத் தன்மையை மெய்ப்பித்துள்ளனர்.

Sunday, June 24, 2012

Eluthatha kditham

செட்டிநாட்டு நகரத்தார்கள்-இந்தியாவின் பெருமிதம் இந்தியா நகரத்தார்களால் பெருமிதம் கொள்வதற்கு முக்கியமாக மூன்று காரணங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.முதலாவது அவர்களுடைய முதாதையர்கள் தொடங்கி இன்று வரை அவர்கள் செய்து வரும் அளவில்லாத சமுதாயப் பணிகள். ஒரு மாநில அரசு மக்களுக்காகச் செய்ய வேண்டிய பணிகளையெல்லாம் தனி மனிதனாக இருந்தே சாதித்துக் காட்டியிருக்கின்றார்கள்.இரண்டாவது அவர்கள் போற்றி ஒழுகிய ஆன்மிகம்.உடலை மட்டுமின்றி உள்ளத்தையும் ஆன்மிகத்தால் தூய்மையாக வைத்திருந்தார்கள்.சாகாத சமுதாயத்திற்கு இந்த ஆன்மிகம் அவசியமானது என்பதை அன்று தொடங்கி இன்று வரை மக்களுக்கு வலிமையாக உணர்த்திக் கொண்டிருப்பவர்கள் நகரத்தார்கள்.மூன்றாவது நகரத்தார்களின் நயத்த நாகரிகமும் பண்பாடும் - கட்டுப்பாடான வாழ்க்கை முறை,நல்லுறவுகள்,நேர்மை தவறாமை,அறநெறி பிறழாமை,கடவுள் நம்பிக்கை,தான தர்மம்,ஆன்மிகம் தழைக்க கோயில் கட்டி பாதுகாத்தல்,கல்வியால் ஒழுக்கம் தழைக்க பள்ளிகளையும்,கல்லூரிகளையும்,பல்கலைக் கழகங்களையும் கட்டிக் கொடுத்தல்,சமுதாயம் நலம் பெற குளங்களும்,மருத்துவ மனைகளும் கட்டிக் கொடுத்தல் போன்ற நற்பணிகளைபிரதி பலன் கருதாது காலங் காலமாய் செய்து வருபவர்கள் இன்றைக்கும் இந்த நகரத்தார்களே. காவரிப்பூம்பட்டினத்தின் கடலோரப் பகுதியில் உப்பு வணிகத்தைத் தொடங்கி நாட்டிற்கே உப்பிட்டனர்.நகரத்தார்களுக்கு ஒருவரின் அனுபவங்களே மற்றவருக்கு கல்வியானது.செய்யும் தொழிலில் எப்போதும் முதல் நிலை வகித்து சாதனை படைத்தார்கள்.இதில் ஒருவர் ,இருவர் என்றில்லாது ஒட்டு மொத்த சமூகமே சாதனையாளர்களாக விளங்கியது.அதனால் எல்லோரிடமும் பொருள் சேர்ந்தது.அவர்களிடம் செல்வம் நிலைத்திருந்தது என்றால் அதற்குக் காரணம் அவர்கள் எல்லோரும் சிக்கனமாக வாழ்ந்து வந்ததுதான்.சேர்த்த செல்வத்தை எல்லாம் பிறருக்கும் பகிர்ந்தளிப்பதை வழக்கமாகக் கொண்டு ஒப்புரவும்,ஈகையும் செய்தனர்.தெய்வீகமான இந்தப் பகிர்வு மனப்பாமை யாருக்கும் எளிதில் வந்து விடுவதில்லை.நகரத்தார்கள் இம் மனப்பான்மையை வெகு இயல்பாகப் பெற்று வழி வழியாகச் செய்து வருகின்றனர்.பொதுவாக அவர்கள் கோயில்மற்றும் கல்விக் கூடங்களின் பராமரிப்புக்கும் ,ஏழைகளின் கல்விக்கும்,திருமணத்திற்கும் மிகத் தாராளமாகப் பொருள் உதவி செய்வார்கள் .தங்கள் வருமானத்தில் ஒரு பங்கை இப்படி தர்மம் செய்வதை உலகிற்கு எடுத்துக் காட்டியவர்கள் நகரத்தார்கள் திரைகடலோடித் திரவியம் தேடிய முதல் இந்தியர்கள் நகரத்தார்களே. போக்குவரத்தும் ,செய்தித் தொடர்பும் எளிதாக இல்லாத அந்தக் காலத்திலேயே மியான்மர் (பர்மா),ஸ்ரீ லங்கா(இலங்கை),சிங்கப்பூர்,மலேசியா,வியட்நாம்,தாய்லாந்து போன்ற கிழக்கத்திய நாடுகளுக்குச் சென்று தொழில் புரிந்து தாய் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றார்கள்.நேர்மையான வட்டித் தொழில் மூலம் அந்நாடுகளில் உள்ள தொழில் முனைவோரை உக்குவித்து தொழில் வளர்ச்சி பெற துணை புரிந்திருக் கின்றார்கள் அன்றைக்கு நகரத்தார்களின் இவ்வுதவி இல்லாது போயிருந்தால் இந்த நாடுகளெல்லாம் இன்றைய பொருளாதார நெருக்கடியில் சிக்கி நசிந்து போயிருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை .காலங் கடந்து இதை உணர்ந்து கொண்ட இந் நாடுகள் மீண்டும் நகரத்தார்கள் தங்கள் நாட்டிற்கு வருமாறு பொது அழைப்பு விடுத்திருப்பதிலிருந்து இதை உணரலாம். நகரத்தார்கள் தொழில் செய்து சேர்த்த பொருளால் சொந்த நாட்டிலும்,புகுந்த நாட்டிலும் செய்த நற்பணிகள் ஏராளம்.முறையான வரலாற்றுப் பதிவுகள் இல்லை என்பதால் அவற்றையெல்லாம் மறுத்து விடவோ,மறைத்து விடவோ முடியாது.நகரத்தார்களிடம் இன்றைக்கும் கூட வெளிப் படும் மரபு வழிப் பெற்ற இந்த உணர்வுகளே இதற்குச் சாட்சி . தாங்கள் கல்வி கற்க வில்லை என்றாலும் பிறரின் கல்விக்காக மிகத் தாராளமாக உதவி செய்தவர்கள் நகரத்தார்கள்.எழுத்தறிவிப்பதும்,எழுத்தறிவிக்க உதவுவதும் இறைப் பணிக்கு ஒப்பானது.கல்விக் கூடங்களைக் கட்டிக் கொடுத்து மாணவர்கள் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை பெற்று ஒவ்வொருவரும் வாழ்கையில் முன்னுக்கு வர வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.கல்வி வளர்ச்சிக்கு அள்ளி அள்ளிக் கொடுத் தும் திருப்திப் படாதவர்கள் நகரத்தார்கள்.வழக் கொழிந்த வடமொழி தழைக்க இந்திய அரசு இன்றைக்குப் பெரும் பொருள் செலவழித்து வருகிறது.ஆனால் நகரத்தார்கள் அன்றைக்கே வேத பாடசாலைகள் நிறுவி அந்தணர்கள் வேதம் ஓத உதவியதோடு அவர்களுக்கு தங்க இடமும்,உண்ண உணவும் கிடைக்க நிரந்தரமாக உதவி செய்தார்கள்.இன்றைக்கு பெரும் சாதனையாகப் பேசப்படும் இலவச உணவுத் திட்டத்தை முதன் முதலாக அறிமுகம் செய்தது நகரத்தார்களே. நகரத்தார்கள் கோயில் குளங்கள் கட்டி ஆன்மிகம் நலிவடையாது காத்து வருகின்றனர்.புனித தலங்களில் சத்திரங்கள் கட்டி வந்து போவோருக்கு வசதிகள் செய்து கொடுத்தனர் உணவளித்து மனித நேயத்தை வளர்த்தனர் ஆலயத் திருப்பணி,கும்பாபிசேகம் போன்றவற்றிற்காக முகம் சுளிக்காமல் இயன்ற பொருள் கொடுப்பவர்கள் இன்றைக்கு நகரத்தார்களாக மட்டுமே இருக்கின்றார்கள் இன்றைக்கு நாட்டில் எண்ணிறைந்த கோயில்கள் இன்னும் உயிர்ப்போடும்,பொலிவோடும் இருப்பதற்கு மூல காரணம் நகரத்தார்களே.நில உச்ச வரம்புச்சட்டம் வருவதற்கு முன்பே பல ஏக்கர் நன்செய் நிலங்களையும்,பூந்தோட்டங்களையும்,கோயில்களுக்கும் தர்மச் சத்திரங்களுக்கும் தானமாக வழக்கி முன் உதாரணமாய் இருந்தவர்கள் நகரத்தார்கள் "இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்து வகுத்தலும் வல்ல அரசு " நகரத்தார்களைப் பார்த்த பின் இக் குறளை வள்ளுவன் எழுதி வைத்தானோ இல்லை நகரத்தார்களுக்காக எழுதி வைத்தானோ எனக்குத் தெரியாது ஆனால் நகரத்தார்கள் எல்லோரும் இந்தியாவின் பாரத ரத்தினாக்கள்

Saturday, June 23, 2012

Vinveliyil Ulaa

விண்வெளியில் உலா சிரியஸின் சீர் குலைவுற்ற இயக்கத்திற்கு என்ன காரணம்? இதற்குக் காரணம் சிரியசுடன் ஒரு சிறிய ஆனால் நிறை மிக்க விண்ணுறுப்பு இயக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று பேசல் நிறுவினார்.எனினும் அப்போது அவருக்கு இருந்த சோதனைக் கூட வசதிகளைக் கொண்டு,இதை இனமறிந்து மெய்ப்பிக்க முடியவில்லை. அவருடைய கணக்கீடுகள்,கண்ணுக்கு எளிதில் புலப்பட்டுத் தெரியாத அதன் நிறை சூரியனின் நிறைக்குச் சமமாக இருப்பதைத் தெரிவித்தன.இந்த அளவிற்கு ஒரு கோள் நிறைமிக்கதாக இருக்க முடியாது என்பதால்அது உறுதியாக சிரியஸ்ஸைச் சுற்றி வரும் ஒரு கோள் இல்லை என்பதை அப்போது அவர் தெரிவித்தார்.இறுதியில் சிரியஸின் துணை உறுப்பு ஒரு விண்மீனாக இருக்க வேண்டும் என்று அனுமானித்தார்.எனினும் இறுதி வரை பிரகாசமிக்க சிரியசுக்கு அருகில் இருக்கும் அதைப் பற்றி ஏதும் தெரிவிக்க முடியாது போனார். அவருடைய கெட்ட நேரம்,அவர் ஆராய்ந்த காலத்தில் சிரியஸின் துணை விண்மீன்,சிரியசுக்கு மிக நெருக்கமாக இருந்தது எனினும் கணக்கீடுகளின் துணை கொண்டு,துணை விண்மீன் சிரியஸ்ஸை 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது எனத் தெரிவித்தார். பெசலின் மறைவிற்குப் பின் 1862 ல் அல்வான் ஜி கிளார்க் என்ற அமெரிக்க வானவியலார் ஒரு புதிய தொலை நோக்கியை வடிவமைத்து,சிரியசின் துணை விண்மீனைக் கண்டு பிடித்தார். இதன் பின்னர் முதன்மை விண்மீனை சிரியஸ் A என்றும் துணை விண்மீனை சிரியஸ் B என்றும் குறிப்பிடுவது வழக்கமாயிற்று.சிரியஸ் A யை நாய் என்று அழைக்கப் பட்டதால் சிரியஸ் B யை குட்டி என அழைத்தனர். சிரியஸ் B சிரியஸ் B மிகவும் மங்கலானது என்று கூறமுடியாது.இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 8.6 ஆகும். இது பிரகாசமிக்க சிரியசுக்கு அருகில் இல்லாது தனித்திருக்குமானால் அதை எளிதாக இனமறிந்திருக்க முடியும்.நெருக்கமாக இருக்கும் நிலையில்(1996) அவற்றின் கோண விலக்கம் 3 வினாடிகள் மட்டுமே.விலகிய நிலையில்(2021) இது 11.5 வினாடிகள்.இது போன்ற நிலைகள் 25 ஆண்டு கால இடைவெளியில் மாறி மாறி ஏற்படுகின்றன. பெசல் அனுமானித்தது போல சிரியஸ் B ன் நிறை கிட்டத்தட்ட சூரியனின் நிறைக்குச் சமமாக (98 சதவீதம் சூரிய நிறை )இருப்பது அறியப்பட்டது அதன் ஒளிர் திறன் குறைவாக இருந்ததால் வானவியலார் அதன் புறப் பரப்பு வெப்ப நிலையும்குறைவாக இருக்க வேண்டும் என்றும்,எனவே அது ஒரு குளிர்ச்சியான விண்மீனாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அப்படி இல்லா விட்டால்,அதன் உருவ அளவு மிகவும் சிறியதாக iருக்கும் என்றும் அப்போது அதன் அடர்த்தி நம்ப முடியாத அளவிற்கு அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.1915 ல் டபிள்யு எஸ் ஆதம்ஸ் என்பார் சிரியஸ் B ன் நிறமாலை யைப் பெற்று அதன் புறப் பரப்பு வெப்ப நிலை சூரியனை விடவும் சற்று அதிகம் எனத் தெரிவித்த போது எல்லோரிடமும் பெரு வியப்பே மேலிட்டது.ஏனெனில் அப்போது அதன் தாழ்வான பிரகாசத்திற்கு விளக்கம் அறியப் படாமல் இருந்தது. தொடரும் ...

Friday, June 22, 2012

Eluthatha kaditham

எழுதாத கடிதம். படித்தவர்கள் ,பண்புள்ளவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று மேடைகளில் அழைப்பு விடுப்பார்கள் மூத்த இந்திய அரசியல் வாதிகள். இளைஞர்கள் தீவிர அரசியலுக்கு வந்து மக்களிடையே விரைவான செல்வாக்குப் பெற்று விட்டால் அனுபவம் போதாது என்று ஓரங்கட்டப் பார்ப்பார்கள்.இவர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் அனுபவம் நெடு நாளாகியும் மக்களுக்கு குறிப்பிடும் படியான எந்த நன்மையையும் செய்யவில்லை.மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படும் போது ,அவர்கள் மாற்றி யோசிக்கத் துணிவு கொள்கின்றார்கள் அப்துல் கலாம் மக்களால் அதிகம் நேசிக்கப்படும் ஒரு மனிதர்.அவர் ஒரு விஞ்ஞானி என்றாலும் மக்களுக்கெல்லாம் ஒரு சிறந்த தலைவராக இருக்கமுடியும் என்பதை வெகு இயல்பாக எடுத்துக் காட்டியவர்.நேர்மையோடு பணியாற்றக் கூடியவர்.பதவி மீது ஆசை இல்லாதவர்,பதவியைத் தன்னுடைய நலனுக்காகவும் தன் உறவினர் நலனுக்காகவும் பயன்படுத்திக் கொள்ள மறுப்பவர் நாட்டின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்டு உருப்படியான கருத்துக்களையும் ,திட்டங்களையும் எடுத்துச் சொன்னவர். இந்தியாவை ஒரு வல்லரசாக உயர்த்தி உலகிற்கு காட்ட முடியும் என்ற கனவை இளைஞர்களின் எண்ணத்தில் விதைத்து நம்பிக்கையை வளர்த்துக் காட்டியவர். அரசுக்கு தலையாட்டிப் பொம்மை இல்லை அரசை விட மக்கள் நலம் விரும்பியாக இருக்கிறார் என்பதற்காக மக்களால் விரும்பப் படும் ஒருவரை மீண்டும் ஜனாதிபதியாக வராமல் இருப்பதற்கு செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் தடையாக இருப்பது இந்தியாவின் தூரதிர்ஷ்டமே. அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது அவர் மீண்டும் சிறந்த ஒரு ஜனாதிபதியாக இருப்பதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டார்.அவருடைய அனுபவம், அறிவு , வழிகாட்டல் நேர்மை ,இவற்றை எல்லாம் புறந்தள்ளி விட்டுவேறொருவரை போட்டியாளராக நிறுத்துவது இந்திய மக்களை ஏமாற்றுவதற்கு ஒப்பானதே. ஜனாதிபதி என்பவர் ஒரு நடு நிலையாளராக இருக்கவேண்டும் .பிரணாப் ஒரு காங்கிரஸ் வாதி. காங்கிரஸ் கட்சியால் வளர்ந்தவர். ஒருவேளை எதிர்க் கட்சி ஆட்சிக்கு வந்தால் தொடர்பு எப்படி இருக்கும். ஜனாதிபதி என்பவர் மக்கள் நலம் விரும்பியாக இருக்க வேண்டும். துண்டு விழுகிறது என்பதற்காக சேவை வரியை உயர்த்தியவர் பிரணாப் .விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்த முடியாமல் தடுமாறியவர். பண வீக்கத்திற்கு மக்களையே சுட்டிக் காட்டுபவர்.சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணத்தை முடக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட விரும்பாதவர் படித்தவர்களும் பண்புள்ளவர்களும் அரசியலுக்கு வந்தால் அது வீழ்ந்து வரும் இந்தியாவிற்கு நல்லது என்று எண்ணி வழி விடுகள்.அது நீங்கள் இந்தியாவிற்கு செய்யும் மிகப் பெரிய சேவையாக இருக்கும்.

Wednesday, June 20, 2012

Vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள் மக்னீசியம் (Magnesium ) கண்டுபிடிப்பு 1808 ல் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானியான சர் ஹம்ப்ரி டேவி என்பார் மக்னீசியம் ஆக்சைடு என்ற என்ற வெள்ளை மக்னீசியாவை மின்னார் பகுப்பிற்கு உட்படுத்தி ஒரு புதிய தனிமத்தைப் பிரித்தெடுத்தார்.இதற்கு மக்னீசியம் என்ற பெயரையும் சூட்டினார். நீர் மூலக்கூறு நீக்கப்பட்ட மக்னீசியம் குளோரைடை உருக்கி மின்னார் பகுப்பு மூலம் மக்நீசியத்தை உற்பத்தி செய்ய முடியும்.கார்பனை 2000 டிகிரி C வரை சூடு படுத்தி மக்னீசிய ஆக்சைடை ஆக்சிஜனிறக்க வினைக்கு உட்படுத்தி,வெளியேறும் மக்னீசிய ஆவியை ஹைட்ரஜன் வெளியில் சுருக்கி மக்னீசியத்தை உற்பத்தி செய்யலாம் பண்புகள் . பூமியின் மேலோட்டுப் பகுதியில் செழுமையின் வரிசையில் மக்னீசியம் 8 வது இடத்தில் உள்ளது. இது இலேசான,பளபளப்புடன் கூடிய வெள்ளி போன்ற உலோகமாகும். இது அலுமினியத்தைக் காட்டிலும் இலேசானது.இரும்பின் அடர்த்தியில் 9 ல் 2 பங்கு ,அலுமினியத்தின் அடர்த்தியில் 3 ல் 2 பங்கு. இது கடல் நீரில் அதிகம் உள்ளது.கடல் நீரில் இது மக்னீசியம் குளோரைடாகவும் மக்னீசியம் சல்பேட்டாகவும் கரைந்துள்ளது.கடல் நீரில் அதிகமுள்ள சோடியம் குளோரைடுக்கு அடுத்து அதிகமாக உள்ளது மக்னீசியம் குளோரைடும் அடுத்ததாக மக்னீசியம் சல்பேட்டும் ஆகும். பொதுவாக பூமியில் கிடைக்கும் கடின நீரில்(Hard water) இந்த மக்னீசிய உப்புக்கள் கரைந்துள்ளன.கடின நீரில் சோப்பு நுரை வளம் தருவதில்லை. மெல்லிய கடின நீர் குடிப்பதற்குச் சுவையானது.கால்சிய உப்புக்களை விட மக்னீசிய உப்புக்கள் இரும்பை அரிக்கும் தன்மை கொண்டவை.மக்னீசியம் ஓரளவு மிதமாக வினை புரியக் கூடியது. வறண்ட காற்றில் நிலையானது.ஈரக் காற்றில் மெதுவாக ஆக்சிஜனேற்றம் பெறுகிறது.இதைக் காற்றில் எரிக்கும் போடு கண்ணைப் பறிக்கும் பிரகாசத்துடன் எரிகிறது. நைட்ரஜனுடன் நேரடியாக வினை புரியும் வெகு சில தனிமங்களுள் மக்னீசியமும் ஒன்று.மக்னீசியம் பெரும்பாலான அலோகங்களுடன் வினை புரிகிறது. மக்னீசியம் ஆக்சிஜன் மீது கொண்டுள்ள நாட்டம் மிகவும் அதிகம்.அதனால் கார்பன்டை ஆக்சைடு வளிமத்தில் கூட இது தொடர்ந்து எரிகிறது.மக்னீசியத்தை எரியச் செய்ய அதைப் பற்ற வைக்க வேண்டும் என்பதில்லை.ஒரு எரியும் தீக்குச்சியை அதனருகே வைத்திருந்தாலே போதும்.குளோரின் நிறைந்த வெளியில் இது அறை வெப்ப நிலையிலேயே நிகழ்ந்து விடுகிறது. மக்னீசியம் எரியும் போது புற ஊதாக் கதிர்களையும்,வெப்பத்தையும் தருகிறது.இந்த வெப்பம் மிகவும் அதிகமானது.4 கிராம் மக்னீசியம் 250 மி.லி குளிர்ந்த நீரைக் கொதிக்க வைக்கப் போதுமானது. காற்று வெளியில் மக்னீசியம் ஆக்சிஜனேற்றம் பெறுவதால் அது பொலிவின்றி மங்கிப் போய் விடுகிறது. இந்த ஆக்சைடு படலம் மக்னீசியத்தின் உட்புறம் மேலும் ஆக்சிஜனேற்றம் பெறாமல் தடை செய்யும் ஒரு காப்பாக அமைகிறது. .இதன் வேதிக் குறியீடு Mn .இதன் அணு எண் 12,அணு நிறை 24.31,அடர்த்தி 1740 கிகி/கமீ உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 923.2 K,1373 K ஆகும்.மக்னீசியத்தின் உருகு நிலை குறைவே என்றாலும் அதை உருக்குவது மிகவும் கடினம் .ஏனெனில் உருகுவதற்கு முன்பாகவே இது எரிந்து சாம்பலாகி விடுகிறது .தாழ்ந்த அழுத்தத்தில் மந்த வளிம வெளியில் இதை உருக்கலாம் .

Tuesday, June 19, 2012

Social awareness- Mind without fear

மாணவர்களே உங்களோடு கொஞ்ச நேரம் தாத்தா,பாட்டி சொன்ன கதை ,பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் விவரித்த கதை.பாடப் புத்தகத்தில் படத்தோடு படித்து மகிழ்ந்த கதை.கதைகள் வெறும் கற்பனை என்றாலும் அதில் வாழ்க்கைக்கு வேண்டிய கருத்துகளும் உட்பொதிந்திருக்கும்.ஒரு கருத்தை கதையாகக் கூறும் போது கதையை மனது எளிதாக உள்வாங்கிக் கொள்கிறது.கருத்து சிந்தனையைத் தீண்டா விட்டாலும் கதை நீண்ட காலமானாலும் மறக்கப் படுவதில்லை .அதனால் என்றைக்காவது ஒருநாள் கதையை மனம் அசை போடும் போது அது நாள் வரை மறைந்திருந்த கருத்துகள் பிரகாசமாய்ப் பளிச்சிடுகின்றன.கதையை வாழ்க்கையோடு தொடர்பு படுத்திப் பார்க்காமல் வெறும் கதையாகவே படித்து மகிழும்போது அது கூறும் கருத்துகளை உள்வாங்கிக் கொள்ளத் தவறிவிடுகிறோம். இந்தத் தவறுதல் வாழ்க்கை முழுதும் தொடர்வதை அனுமதிப்பதால்,பல சமயங்களில் நாம் சரியானதை சரியான படித் தேர்வு செய்யத் தவறி விடுகிறோம்.இதற்கு சின்னக் குழந்தையாய் இருந்த போது நாம் கேட்டு மகிழ்ந்த ஆமை-முயல் கதையே ஓர் எடுத்துக்காட்டு. ஆமைக்கும் முயலுக்கும் நடந்தது ஓர் ஓட்டப் பந்தையம்.முயல் முதலில் விரைந்து ஓடி முந்திச் சென்றாலும் இடையிடையே ஓய்வெடுத்துக் கொண்டதால் தொடர்ந்து ஓடி,கடக்கும் தொலைவைக் குறிப்பிட்ட காலத்தில் கடந்த ஆமையை வெற்றி கொள்ள முடியவில்லை.இக் கதை ஒரு திரைப் படம் போல உங்கள் சிந்தனையில் ஓடினால் அது சொல்லும் கருத்துகள் பலவாகும் அது உண்மையில் அனைத்து வயது மாணவர்களுக்கும் கூட சுய தூண்டுதலாக இருக்கும். ஆமை மெதுவாக நகர்ந்து சென்றாலும்,வெற்றி பெறவேண்டும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து தொய்வின்றி போட்டியில் பங்கேற்றது.இதை ஆங்கிலத்தில்'slow and steady' என்பர். முயல் இடையிடையே ஓய்வெடுத்துக் கொண்டதால் குறிப்பிட்ட கால நெடுக்கைக்குள் வெற்றி இலக்கை ஆமைக்கு முன்னதாக எட்ட முடியவில்லை .செய்யும் செயலை விரைந்து செய்யும் போது உடலளவில் களைப்பும் மனதளவில் தடுமாற்றமும் ஏற்படலாம் .அவை தோல்விக்கு வழி வகுக்கும் என்பதால் செய்வது எதுவானாலும் அதை மெதுவாகவும் தொய்வின்றியும் செய்ய வேண்டும் என்ற வாழ்வியல் கருத்தை இது எடுத்தியம்புகிறது. விரைந்து ஓடும் முயல் மெதுவாக நகர்ந்து செல்லும் ஆமையைக் கூட வெற்றி கொள்ள முடியாது தோல்வி யடைந்தது. இது வாழ்க்கைப் போராட்டத்தில் எதுவும் நடக்கலாம் என்பதைத் தெரிவிக்கிறது சரியாக முன் திட்டமிட்டு நம்பிக்கையோடு செயல்பட்டால் முடியாதைக் கூட முடிக்கலாம்.அப்படிச் செய்தது ஆமை.சரியாகத் திட்டமிடாவிட்டால் முடிக்கக் கூடியது கூட முடியாது போகலாம்.அப்படி நிகழ்ந்தது முயலுக்கு. முடிவதும், முடியாததும் ஒரு மனதின் எண்ணத்தில்தான் இருக்கின்றன. ஒன்றிலிருந்து ஒன்றை எட்டுவது எளிது என்ற கருத்தையையும் இக் கதை உறைபொருளாகக் கொண்டுள்ளது . இலக்கு நோக்கிய பயணமில்லாத முயல் இலக்கை மட்டுமே நோக்கிப் பயணித்த ஆமையிடம் தோல்விகண்டது.எல்லாத் திசைகளிலும் நடந்து சென்றால் ஒரு குறிப்பிட்ட திசையில் விளையும் இடப்பெயர்ச்சி குறைவாகிப் போகும்.இலக்கு என்பது ஒன்றை மட்டுமே நோக்கிய பயணம் .இதில் எண்ணச் சிதறலோ செயலில் சிறுமையோ இருக்கக் கூடாது. நம்பிக்கையோடு ஒரு செயலைத் தொடங்கிய பின் மாற்று எண்ணம் கொண்டால் அது பெரிதளவில் மனச்சோர்வைத் தரும்.திடமான எண்ணமே மன உறுதியை வெளிப்படுத்தும். ஒரு செயல் முடிக்கப்படாமல் போவதற்கும்.வெற்றிகரமாக முடிக்கப்படுவதற்கும் இதுவே காரணமாகின்றது .ஒரு செயலைச் செய்யும் போது முடிக்கும் வரை ஓய்வெடுக்கக் கூடாது என்பது ஆமைக்குப் புரிந்த அளவுக்கு முயலுக்குத் தெரியவில்லை .முடிந்த வரை செய்தால் வெற்றி நிச்சிய மில்லை, முடிக்கும் வரை செய்வதே வெற்றி என்ற கருத்தையும் கூறுவது இக் கதையாகும் மீண்டும் இதே போட்டி நடந்தால் முன்பு செய்த அதே தவறை திரும்பச் செய்யாது முயல் ஜெயித்துக் காட்டலாம்.உலக கிரிக்கெட் கோப்பை வாங்கிய ஆஸ்திரேலியா,இந்தியா,ஸ்ரீ லங்கா போன்ற நாடுகள் கூட பங்களா தேஷ் போன்ற வலிமை குன்றிய குழுவிடம் தோற்றுப் போயிருக்கின்றன.பிற்பாடு ஜெயித்தும் இருக்கின்றன. தோல்வியும், வெற்றியும் இறுதி முடிவில்லை அவை மாறி மாறி வரும். .கேவலம் ஒரு ஆமையிடம் தோற்றுப் போனோமே என்று முயல் மனம் வெறுத்து தன்னுயிரை மாய்த்துக் கொள்ளத் துணிய வில்லை.தோல்வியால் துவண்டு போய் ஒருபோதும் தவறான முடிவெடுத்து விடாதீர்கள் என்ற கருத்தை எண்ணத்தில் பதிப்பது இக் கதை. .நாம் எப்படி இருக்க வேண்டும் என்றால் இக் கதையில் வரும் ஆமை போல நினைத்து நிஜமான முயல் போலச் செயல் படவேண்டும் .

Monday, June 18, 2012

Eluthatha kaditham

எழுதாத கடிதம் இன்று தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 520 யையும் தாண்டி அதிகரித்து வருகிறது மெக்கானிகல்,சிவில்,மின்னணு தகவல் தொழிநுட்பம்,மின்னியல் மற்றும் மின்னணுவியல்,கணினி போன்ற பாடப் பிரிவுகள் பெரும்பாலும் அனைத்துக் கல்லூரிகளிலும் உள்ளன.ஒரு சில கல்லூரிகளில் ஒரே பாடப் பிரிவில் இரு வகுப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்கின்றனர்.எப்படி இருந்த போதிலும் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் குறைந்தது 32000 மாணவர்கள் பொறியியல் பட்டதாரிகளாக உருவாக்கப் பட்டு வருகின்றார்கள்.இவர்களில் 10 சதவீத மாணவர்கள் மட்டுமே பணி புரிவதற்கான திறன்களைப் பெற்றுத் வேலைக்குத் தகுதியுள்ளவர்களாக இருக்கின்றார்கள்.இதற்குக் காரணம் என்ன? மாணவர்களுக்கு அறிவும்(Knowledge ) அறிவைச் சரியான நேரத்தில் சரியாகப் பயன் படுத்திக் கொள்ள(Intelligence ) தெரியவும் வேண்டும்.பொதுவாக இந்தியக் கல்வி முறையில் கல்வியை மட்டுமே கற்றுக் கொடுப்பார்கள் வேலை செய்வதற்கான தகுதிகளை வளர்க்கப் பயிற்சி அளிக்க மாட்டார்கள் .ஆனால் இன்றைக்கு போட்டாப் போட்டியில் ஒவ்வொரு கல்லூரியும் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள கல்வியோடு இத்தகைய பயிற்சிகளையும் அளித்துவருகின்றது Spoken English,Soft Skill,Professional Skill,Computer knowledge with computing skill,value added activities போன்ற பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். அப்படியிருந்தும் நல்ல பலன் கிட்டவில்லை என்றே சொல்லவேண்டும். மாணவர்களைச் சேர்க்கும் போட்டாப் போட்டியில் ஒவ்வொரு கல்லூரியும் கல்வித் தரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை புறம்தள்ளிவிட்டு மாணவர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. கல்விக் கட்டணச் சலுகை,இலவச லாப்டாப்,இலவச புத்தகங்கள்,சீருடைகள்,மதிய உணவு,பஸ் போக்குவரத்து தேர்வில் வாங்கும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப ஊக்கத் தொகை என நம்ப முடியாத எல்லை வரை . தான் ஒரு பொறிஞனாக வர வேண்டும் என்ற கனவு மெய்ப்பட வேண்டுமானால் அது எண்ணத்திற்கு கருவாகி,இடைவிடாது ஒவ்வொரு நிமிடமும் வளர்ந்து,காட்டும் அக்கறையால் முழு உருவம் பெற்று சமுதாயத்திற்கு நலம் பயக்கும் செயல்களாக வெளிப்பட வேண்டும்.நோக்கமும் செயல் திட்டமும் இல்லாத எல்லா மாணவர்களையும் வலுக்கட்டாயமாகப் பொறியியல் படிக்கச் சேர்க்கும் போது இதனால் சொல்லொண்ணாத் துயரம் அடைவது ஆசிரியர்களே. நோஞ்சான் மாடு பூட்டி பந்தையத்தில் வெற்றி பெறமுடியுமா?கரும்புச் சக்கையைப் பிழிந்து சக்கரையை எடுக்க முடியுமா ? அஸ்த்திவாரமே இல்லாமல் பல அடுக்கு மாடி கட்ட முடியுமா ? அடிப்படையான மொழியறிவு இல்லாமல் உயர் கல்வி கற்க முடியுமா? விதையில்லாமல் செடியா ,கரு இல்லாமல் உயிரா? கல்வியின் அருமை ,திறமை வளர்ப்பின் தேவை இவற்றைப் பற்றி ஏதும் அறியாமல் ,தினம் தினம் கல்லூரிக்கு வந்து போவதால் மட்டுமே தனக்கு B.E பட்டமும் அதிகமான சம்பளத்தில் நல்ல வேலையும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் மாணவர்களாக மாறி வருகின்றார்கள் . வர்த்தகமாகி விட்ட பொறியியல் கல்வியில்,தங்களை நிலைப் படுத்திக் கொள்ள ஒவ்வொரு கல்லூரியும் மாணவர்களின் தேர்ச்சி வீதத்தை உயர்த்திக் காட்டவும்,வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபாடு காட்டி வருகிறது .தேர்வில் தேர்ச்சி வீதம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக மாட்டு வண்டிப் பந்தையத்தில் தார்க்குச்சியால் குத்தப் பட்டு ஓடும் மாடு போல ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய சூழ் நிலை உருவாக்கி வருகிறது. குருடனுக்கு முன் ஓவியம்,செவிடனுக்கு முன் இன்னிசை கீதம், என்பது எப்படி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லையோ,அது போல கற்றுக் கொள்ளும் அடிப்படை நோக்கமில்லாத மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதும்.ஆசிரியர்களின் முயற்சி கடலில் பெய்த மழை போல வீணாகிவிடுகிறது. பொறியியல் படிக்கப் போகும் மாணவர்களே ,உங்களுக்கு உண்மையிலேயே அதில் விருப்பம் இருக்குமானால் உங்களுக்கு கற்பதும் எங்களுக்கு கற்றுக் கொடுப்பதும் எளிதாகும். அப்படி இல்லாத போது உங்களுக்கு எதில் உண்மையான விருப்பம் இருக்கின்றதோ அதில் ஈடுப்பாடு காட்டுங்கள் நிச்சியமாக அதில் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள் இந்த ஆசிரியர்களை கற்பிக்கும் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் செய்யும் நிலைக்குத் தள்ளி விடாதீர்கள் .

Sunday, June 17, 2012

Vinveliyil ulaa

விண் வெளியில் உலா சிரியஸின் நிறை சூரியனின் நிறையைப் போல 2 மடங்கிற்கும் சற்று கூடுதலாக இருப்பினும் ,அதிக அளவில் ஆற்றலை உமிழ்வதால் ஆற்றல் மூலங்களை மிக விரைவாக சூரியன் செலவிடும் வீதத்தை விட 20 மடங்கு கூடுதலாக இழந்து வருகிறது. அதனால் சூரியனின் வாழ்வில் 10 ல் 1 பங்கு மட்டுமே இது நிலைத்திருக்க வல்லது. நமது சூரியன் 4 .5 ஆயிரம் மில்லியன் ஆண்டுகள் வயதானது ,அதன் வாழ்வில் ஏறக்குறைய பாதியை மட்டுமே கடந்திருக்கிறது. சிரியஸ் இதற்கு மாறாக ஐநூறு மில்லியன் ஆண்டுகள் வாழும் எனக் கூறலாம். சிரியஸைப் பற்றி மற்றொரு புதிர் அதன் நிறஜாலம் பற்றியது .பழங் காலத்தில் மேற்கொண்ட பதிவுகளில் இதன் நிறம் வெவ்வேறாகக் கூறப்பட்டுள்ளது .இது தாமஸ் பார்கர் என்ற வானவியலாரால் 1760 ல் முதன் முதலாகக் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது .தாலமி,செனிகா ,ஹோரோஸ் மற்றும் சிசரோ போன்ற பழங் காலத்திய வானவியலார்கள் சிரியஸ்ஸை ஒரு செந்நிற விண்மீன் எனக் குறிப்பிட்டுள்ளனர். 140 AD யில் தாலமி சிரியஸ்ஸை ஆரஞ்சு மற்றும் செந்நிறமுடைய ஆர்க்டூரஸ் ,அல்டிபாரன் ,பெடல்ஜியூஸ் போன்ற விண்மீன்களின் தொகுப்போடு சேர்த்திருந்தார். பாபிலோனியர்கள் சிரியஸ் ,செம்புத் தகடு போல பளபளப் பதாகக் குறிப்பிட்டுள்ளனர். அதற்குப் பின் வந்த சிசரோ மற்றும் ஹோரோஸ் போன்றவர்கள் இவ் விண்மீனை ' செந்நிற நாய் விண்மீன் ' என்றே வர்ணித்தனர். . நீரோ மன்னனின் முக்கிய ஆலோசகராக விளங்கிய செனிகா என்பார் சிரியஸ் ,நமது செவ்வாய்க் கோளைவிடச் சிவப்பானது என்று கூறியுள்ளார். ஆனால் பிற்பாடு சிரியஸ்ஸை ஆராய்ந்தவர்கள் அது மஞ்சள் கலந்த வெண்ணிறமானது என்று தெரிவித்துள்ளனர். கிருத்து பிறப்பிற்குப் பின் வந்த அல்சூபி என்ற அரேபிய வானவியலார்,சிரியஸ்ஸை செந்நிற விண்மீன் வகைக்குள் அடக்கவில்லை. நவீன வானவியலார் பலரும் ,சிரியசின் செந்நிறத் தன்மை என்பது தவறாகக் கற்பிக்கப்பட்டு விட்டது என்று கூறினாலும் ,கண்மூடித் தனமாக பழங் காலத்திய பதிவுகள் முழுதும் தவறானவை என்று கூறுவதும் தவறே யாகும் .சுமார் 800 ஆண்டுகளில் சிரியஸ் தன் நிறத்தை மாற்றிக் கொண்டது என்றால் அதற்கான காரணம் வேண்டும்.தாலமியால் வர்ணிக்கப் பட்ட செந்நிற வகை விண்மீனானசிரியஸ் இன்று வெண் மஞ்சள் நிறங் கொண்டு விளங்குகிறது என்பதை மறுக்க முடியாது. ஏனெனில் அந்த விண்மீனின் இன்றைய நிலையும் அதுதான் என்பதால் அதை மீண்டும் மீண்டும் சோதித்து உறுதி செய்து கொள்ள முடியும். சிரியஸ் போன்ற விண்மீன் பல நூறு மில்லியன் ஆண்டுகளில் தன் தோற்றத்தையும் ,புற வெப்ப நிலையையும் ,நிறத்தையும் கூட மாற்றிக் கொள்ளலாம் விண்மீனின் பரிணாம வளர்ச்சி இதைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. இது குறுகிய கால நெடுக்கையில் நிகழ்வதற்கான வாய்ப்பில்லை .இதன் பிறகு சிரியஸ் விண்மீனை நுணுகி ஆராய்ந்தனர். அப்போது சிரியஸ் ஒரே இடத்தில் நிலையாக இல்லாது சற்று இடம் பெயர்ந்து மாறி மாறித் தோன்றியது தெரிய வந்தது. அருகில் ஏதாவதொரு விண்மீன் இருந்தால் ,ஒரு சில ஆண்டு கால நெடுக்கையில் குறிப்பிடும் படியான இடப்பெயர்வை ஏற்படுத்தும் .விண் மீனின் இவ் வியக்கத்தை தனித்த தன்னியக்கம் (Proper motion ) என்பர். .பொதுவாக ஒரு விண்மீனின் தனித்ட தன்னியக்கம் மிகவும் நுண்ணிய அளவினதாக (பெரும்பாலான விண் மீன்களுக்கு இது 1 டிகிரி கோணத்தில் 3600 ல் ஒரு பங்காக இருக்கும்) இருக்கும். மிக அருகில் இருந்தால் அதன் தனித்த தன்னியக்கம் ஓரளவு அதிகமாக இருக்குமெனலாம். ஜெர்மனி நாட்டு வானவியலாரான பிரட்ரிக் வில் ஹெல்ம் பெசல் என்பார் ஒரு விண்மீனின் அமைவிடத்தை அறிவதற்கான வழி முறையைத் தெரிவித்தார் .அதன் மூலம் பல ஆயிரக் கணக்கான தனித்த விண்மீன்களின் அமைவிடத்தை த் துல்லியமாகக் கண்டறிந்தார்..1834 ல் பெசல் சிரியசின் தனித்த தன்னியக்கத்தை ஆராய்ந்து சிரியஸ் ஓராண்டு காலத்தில் 1 .3 வினாடி கோண விலக்கம் பெறுவதாக மதிப்பிட்டார்.சிரியஸ் பற்றி மற்றொரு உண்மையையும் பெசல் கண்டறிந்தார், பெரும்பாலான விண்மீன்கள் ஒரு நேர் கோட்டிலான தனித்த தன்னியக்கத்தைப் பெற்றிருக்க ,சிரியஸ் மட்டும் அலை போன்றதொரு இயக்கப் பாதையில் இயங்குவதாகக் கண்டார் .இவர் கானிஸ் மைனரில் உள்ள பிரகாசமிக்க விண்மீனான புரோசியானிலும் இது போன்ற சீர் குலைவுற்ற இயக்கத்தையும் கண்டறிந்தார் .

Saturday, June 16, 2012

Social awareness- Mind without fear

மாணவர்களே உங்களோடு கொஞ்ச நேரம் உடலில் ஊனமிருந்தாலும் ,மனதளவில் எந்தப் பாதிப்புமின்றி இயல்பான மனிதர்களைக் காட்டிலும் வெகு சிறப்பாக வாழ்ந்து சாதனை செய்து சாதித்துக் காட்டியவர்கள் உலகில் பலருண்டு .போலியோவால் உறுதியில்லாத கால்களைக் கொண்டிருந்த வில்மா ஒலிம்பிக் போட்டிகளில் ஓடி, சக வீரர்களையும் முந்திச் சென்று பதக்கங்களைப் பெற்றார் .ஒருவேளை அவர் மற்றவர்களைப் போல உறுதியான கால்களைப் பெற்றிருந்தால் இந்த அளவு மன உறுதியை வளர்த்துக் கொள்ள தவறி வெற்றி வாய்ப்பை வெளிப்படுத்திக் காட்ட முடியாது போயிருக்கலாம் ஒரு தோல்வி,ஒரு இழப்பு பாடமாக ஏற்றுக்கொள்ளப்படும் போது அந்தத் தோல்வியை முறியடிக்கும் திறனைத் தருகிறது, இழப்பை மீட்டுப் பெறும் முறையை கற்றுக் கொடுக்கிறது.தோல்வியையே தோல்வியாக்கி விட்டால் வெற்றி கூடுதல் சிறப்புடன் வெளிப்பட்டே தீரும் என்பது இவருடைய வாழ்க்கை நமக்குக் கூறும் அறிவுரையாகும். எனவே மாணவர்களே தோல்வியால் துவண்டு போய்விடாதீர்கள்.தேர்வில் தோல்வி என்பது ஒரு நிகழ்வின் தற்காலியமான ஒரு முடிவு அதுவே வாழ்கை முழுவதையும் தீர்மானிக்கக் கூடிய இறுதித் தீர்ப்பில்லை காதல் தோல்வி கூட அப்படிப்பட்டதுதான்.ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாததும்,காதலுக்குப் பின்னால் மாறுதலாக நடந்து கொள்வதும் .காதலோடு மற்றொன்றையும் இணைப்பதும் முழுமை இல்லாத காதலாகி காதல் தோல்வியில் போய் முடிகின்றது.காதல் என்பது இருமனம் சம்பந்தப்பட்டது ,அதில் ஒரு மனம் மட்டுமே முடிவெடுக்குமானால் அது பெரும்பாலும் சரியில்லாமலும் இருக்கலாம்.ஒருவருடைய தோல்விக்குப் பல காரணங்களில் எதாவது சில காரணமாக இருக்கலாம்.அதை ஆராய்ந்து களைந்தெறிந்து வெற்றிக் கனியைச் சுவைப்பது என்பது கற்ற கல்விக்குப் பெருமை ,வாழ்க்கைக்கு இனிமை,சாகாத சமுதாயத்திற்கு வலிமை. கால்களே இல்லாத நிக் உழைக்கக் கைகளின்றி தன்னாலும் வாழ முடியும் என்று எல்லோருக்கும் எடுத்துக் காட்டாய் வாழ்ந்து வருகிறார்.உலகத்தின் பாரவையைத் தன் பக்கம் திருப்பி சிந்திக்கத் தூண்டியிருக்கிறார் .சிறுவயதில் ஒருமுறை கீழே விழுந்து தானாக எழுந்திருக்க முடியாமல் கஷ்டப்பட்டார்.யாரும் அவரை த் தூக்கி விடவில்லை.பின் அவரே கற்றுக்கொண்டார் தனக்கிருக்கும் வசதிகளைக் கொண்டு எப்படி தனக்குத் தானே எழுந்திருப்பது என்பதை.அடுத்தவர்களுடைய உதவி என்பது வேறு.ஆனால் ஒவ்வொருவரும் தங்களுடைய தேவைகளை த் தங்களாகவே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டவுடன் அவருடைய வாழ்கையில் வசந்தம் வரத் தொடங்கியது. துடுப்பே இல்லாமல் படகை ஓட்டி கரை சேர்ந்தவர்கள் இவர்கள்,துடுப்பிருந்தும் நடுக் கடலில் தடுமாறுவார்கள் மனச் சோர்வுற்ற மாணவர்கள்.கரை சேர வேண்டுமானால் துடுப்பு மட்டும் போதாது மனதில் துடிப்பும் வேண்டும்.மனத்தைக் கலகலப்பாகிக் கொள்ளுங்கள் அப்பொழுதான் உங்கள் மனம் உங்களுக்கே நண்பனாக இருக்கும்.
சோடியம் பயன்கள் (தொடர்ச்சி ) அணு இயற்பியல் துறை சார்ந்த பயன்கள் அகச் சிவப்புக் கதிர்களைச் சிதறலுக்கு உட்படுத்தி ஆராய சோடியம் குளோரைடு படிகம் பயன் படுகிறது. கதிர் வீச்சுகளுக்கு உடனொளிர்வு (Floroscence ) தரக்கூடிய பொருளாக தாலியம் சேர்ந்த சோடியம் அயோடைடு படிகம் அணுக்கதிர் ஆய் கருவிகளில் பயன் தருகிறது . அணு உலைகளில் சோடியம் ஒரு வெப்பப் பரிமாற்று ஊடகமாகக் கொள்ளப்பட்டுள்ளது .நீர் ,கன நீருக்கு அடுத்தபடியாக அனுகூலமிக்க குளிர்விப்பானாக (Coolant )இருப்பது உருகிய சொடியமே. இதிலுள்ள முக்கியக் குறைபாடு ,சோடியம், காற்று மற்றும் நீரோடு எவ்விதத்திலும் தொடர்பு கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். சோடியம்-24 என்ற அணு எண்மம் (isotope) தடங் காட்டியாக (tracer) ப் பயன்படுகிறது. உடலில் உள்ள உறுப்புகளின் பாதிப்பை அறிய இதனால் முடிகிறது. சோடியம்-24 ன் அரை வாழ்வு (half -life ) 15 மணிகள் மட்டுமே. எனவே கதிரியக்கப் பொருள் உடலுக்குள் இருப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் பெரிதும் மட்டுப் படுத்தப் பட்டு விடுகின்றன.

Friday, June 15, 2012

Eluthatha Kaditham

எழுதாத கடிதம் மதுரை ,அரவிந்த் கண் மருத்துவ மனையில் என் மனைவிக்கு கண் பரிசோதனை செய்ய அழைத்துச் சென்று டவுன் பஸ்ஸில் மாட்டுத் தாவணிக்கு வந்து கொண்டிருந்தேன்.இடையில் ஒரு நிறுத்தத்தில் ஒரு பெண்ணும் காக்கிச் சட்டை போட்ட ஒரு போலிஸ்காரரும் ஏறினர்.நடத்துனர் அந்தப் பெண்ணுக்கு மட்டும் டிக்கெட் கொடுத்து சில்லரை வாங்கினார். போலிஸ்காரரிடம் டிக்கெட் கேட்கவில்லை ஏன் அவர் அருகில் கூடச் செல்லவில்லை.பஸ்சுக்குச் சொந்தக்காரர் போல ஏறினார் இறங்கும் இடம் வந்ததும் நன்றிகூடச் சொல்லாமல் இறங்கினார். போலிஸ்காரரும்,நடத்துனரும் நடந்து கொண்ட விதம் இது வழக்கமாக நடப்பதுதான் என்பதைச் சுட்டிக் காட்டியது.இதைப் போல நான் பலமுறை பலவிடங்களில் கண்டதுண்டு. போலிஸ்காரரும் நடத்துனரும் அவரவர் கடமைகளைச் செய்யத் தவறுகின்றனர் என்பதறிந்து ஒவ்வொரு முறையும் மனம் வருந்துவேன். இந்த முறை அதைச் செய்தியாகப் பதிவு செய்கிறேன்.டிக்கெட்டை கேட்டுப் பெறவும் என்ற விளம்பரம் பஸ்ஸில் பயணம் செய்யும் சாதாரண மக்களுக்கு மட்டும் தான் போலும். ஒரு பொது இடத்தில் எல்லோருடைய கண் பார்வையில்,சட்டத்திற்கு காவலராக இருக்கும் ஒரு போலிஸ்காரர் இப்படி நடந்து கொள்வது சட்டத்தையே அவமதிப்பது போலத் தான். நடத்துனரும் ஏன் தன் கடமையைச் செய்யத் தவறுகிறார் எனத் தெரியவில்லை டிக்கெட் கேட்டால் அதை மனதில் வைத்துக் கொண்டு தன் மீது என்றைக்காவது ஒருநாள் பொய் வழக்குப் போட்டு விடுவாரோ என்று நடத்துனர் பயப்படுகின்றாரோ இல்லை நாம் யாருக்கும் தெரியாமல் செய்த குற்றங்களைக் கண்டுபிடித்து கோர்ட்டுக்கு அலைய விட்டு விடுவார் என்றோ பஸ்ஸில் இலவசமாக பயனிக்க அனுமதித்தால் இன்றில்லா விட்டாலும் என்றைக்காவது ஒருநாள் நன்றிக் கடனாக உதவுவார் என்றோ அப்படிச் செய்தாரோ .டிக்கெட் கேட்டுப் பெறாமல் இலவசமாகப் பயணம் செய்தது போலிஸ் காரர் செய்யும் தப்பு ,டிக்கெட் கொடுக்காமல் போலிஸ் காரரை பயணம் செய்ய அனுமதித்து நடத்துனர் செய்யும் தப்பு. தப்புகள் மக்கள் கண்முன்னே வளரும் போது இனிய சமுதாயம் என்பது வெறும் கனவாய்ப் போய்விடாதா . அரசுக்கு இதனால் பெரிய அளவில் இழப்பு வருமே .போக்கு வரத்துக் கழகங்கள் தான் இந்த இழப்பைக் கணக்கிட்டு அறிவிக்க வேண்டும் போக்கு வரத்துக் கழகங்கள் பயந்தால் ,அரசு சில நடவடிக்கைகள் எடுக்க முன் வரவேண்டும் . போலிஸ் காரர்களும் தங்கள் பயணத்திற்கு உரிய சீட்டு பெறவேண்டும் என்ற விளம்பரத்தை பஸ்ஸில் வைக்கலாமே .அல்லது போலிஸ் காரர்களுக்கு பல சலுகைகள் வழங்கியதைப் போல இதையும் ஒரு சலுகையாக வழங்கிவிடலாம். போலிஸ் காரர்களும் தங்கள் கண் முன்னே தவறு செய்கிறார்கள் என்று அப்போது மக்கள் நினைக்க மாட்டார்கள்.காவல் துறையும்.போலிஸ் காரர்கள் பயணம் செய்யும் போது டிக்கெட் வாங்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டும் .

Monday, June 11, 2012

Vethith Thanimangal-Chemistry

சோடியம்(பயன்கள்) கரிம வினைகளில் சோடியம் செரிவித்தலுக்கும், தொகுப்பாக்கத்திற்கும் ஆக்சிஜனிறக்கத்திற்கும் பயன் படுகிறது. பெட்ரோல் என்ஜின்களில் இயக்கத் திறனைச் செம்மைப்படுத்த உதவும் டெட்ரா ஈதைல் ஈயம் என்ற வேதிப் பொருளை உற்பத்தி செய்யும் வழி முறையில் சோடியம் பெரும் பங்கேற்றுள்ளது. சோடியம் தந்த பயன்களுள் மற்றொன்று சோடிய ஆவி விளக்காகும்.சோடிய ஒளி ஒற்றை நிறங் கொண்டது. சோடியத்தின் மஞ்சள் நிற ஒளி ,காற்றின் ஈரத்தாலும்,மூடுபனியாலும்குறைவாகவே உட்கிரகித்துக் கொள்ளப் படுவதால் நெடுந் தொலைவு ஒளி பரவுகிறது .இதனால் குளிர் மிகுந்த இரவிலும், பனி மழை பெய்யும் காலங்களிலும் சோடிய ஒளியால் தெருக்களைத் தெளிவாகப் பார்க்க முடியும்.சோடிய ஒளி விளக்குகள் சோதனைக் கூடங்களில்ஒரு படித்தர விளக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. சோடியம் ஒளி மின் விளைவினால் (Photo electric effect)ஒளி மின் எலெக்ட்ரான்களை உமிழ்கிறது.சோடியம் கட்புலனறி ஒளிக்கு மட்டுமின்றி புறஊதாக் கதிர்களுக்கும் ஒளி மின் எலெக்ட்ரான்களை உமிழ்வதால்,இது ஒளியியல் கருவிகளில் ஒளிச் செறிவை மதிப்பிடப் பயன் படுகிறது சோடியமும் பாதரசமும் சேர்ந்த இராசக் கலவை (amalgam)ஆக்சிஜனிறக்கஊக்கியாகப் பயன்படுகிறது.இதை நீரோடு சேர்க்கும் போது உடனடியாக ஹைட்ரஜனை வெளிப்படுத்துகிறது.இப் பண்பு டைட்டானியம்,ஸிர்கோனியம் போன்ற வற்றை அவற்றின் டெட்ரா குளோரைடு களிலிருந்து பிரித்தெடுக்க உறுதுணையாக விளங்குகிறது. சோடியம் கூட்டுப் பொருட்களின் பயன்கள் மஞ்சள் நிறங்கொண்ட சோடியம் பெராக்சைடு ஒரு வலுவான ஆக்சிஜனேற்ற ஊக்கியாகும்.ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன் சேர்ந்த இதன் கரைசல் துணிகளுக்கு வெளுப்பூட்டும் முறையில் பயன்படுத்தப் படுகிறது.கார்பன்டைஆக்சைடை உட்கவர்ந்து ஆக்சிஜனை விடுவிக்கிறது என்பதால் நீர் மூழ்கிக்கப்பல் மற்றும் அடைத்த ஆய்வறைகளில் உள்ள காற்றை தூய்மைப்படுத்த இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் சோடியம் ஹைட்ராக்சைடு,சோப்பு,காகிதம்,ஒளிப்படச் சுருள்,ரயான் செயற்கை இழை போன்றவற்றின் உற்பத்தி முறையில் பங்கு பெற்றுள்ளது.இதன் அடர் கரைசல் தோலை அரித் தெடுத்து விடும்.பாசம் பிடித்த தரை,கழிவு நீர் சாக்கடை போன்ற அசுத்தமான இடங்களைச் சுத்தம் செய்ய இதைப் பயன் படுத்துகிறார்கள். சோடியம் சயனைடு மிகவும் நஞ்சானது.இது தங்கம்,வெள்ளியைப் பிரித்தெடுக்கும் வழி முறையிலும்,மின் முலாம் பூச்சுத் தொழிலிலும் பயன் தருகிறது. சோடியம் அசைடு,சோடியம் குளோரேட்,சோடியம் நைட்ரேட் போன்றவை வெடி பொருட்களின் தயாரிப்பிலும்,சோடியம் பாஸ்பேட் உர உற்பத்தியிலும்,காகிதங்களுக்கு வெளுப்பூட்டுவதிலும்,சோடியம் பென்சோயேட் உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதிலும் பயன் படுகின்றன.சோடியம் ப்ளூரைடு பூச்சி கொல்லி மருந்தாகவும்,சோடியம் சிலிகேட் தீப்பற்றிக் கொள்ளாத ஆடை உற்பத்தியிலும்,சோடியம் தயோ சல்பேட் ஒளிப் படப் பதிவு முறையிலும்,சோடியம் பை கார்பனேட் தீயணைப்புக் கருவியிலும்,அமில நீக்கி மருந்தாகவும் பயன் தருகின்றன சமையலில் பயன் படுத்தும் உப்பு என்பது சோடியம் குளோரைடுதான் . உப்பினால் நமக்குக் கிடைக்கும் சோடியம் நம்உடலில் உள்ள நீர்மங்களில் ஒரு முக்கியமான சேர்மானப் பொருளாக உள்ளது. இதுவே நம் உடலில் இருக்கும் நீரின் மொத்த அளவைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கின்றது.பொட்டசியத்துடன் இணைந்து உடலில் உள்ள நீர்மங்களின் சமனிலை யைக் கட்டுப் படுத்துகிறது.அதனால் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கக் உதவுகிறது.உபரியாகச் சோடியம் உடலில் சேரும் போது சிறு நீர்ப் போக்குத் தடைப் பட்டு உடலில் நீர் அதிகமாகிறது. கால்சியத்தின் வெளியேற்றத்தை வலிமையாகத் தூண்டி விடுகிறது.இதனால் எலும்புகள் வலுவிழக்கின்றன.இதயமும்,சிறு நீரகமும் பாதிக்கப்படுகின்றன.

Sunday, June 10, 2012

Vinveliyil Ulla

விண்வெளியில் உலா கண்ணுக்குத் தெரியும் விண்வெளியின் எல்லைக்குள் மிகவும் பிரகாசமாகத் தோன்றும்.விண்மீன் சிரியஸ்ஸாகும்.பிரகாசம் மிக்க 20 விண்மீன்களுள் முதலாவதும் இதுவேயாகும்.1 யை ஒளிப் பொலி வெண்ணாகக் கொண்ட ஒரு படித்தர விண்மீனை விடசீரியஸ் 9 மடங்கு பிரகாசமானது .நீண்ட காலமாக இதன் தோற்ற ஒளிப் பொலி வெண் ணை- 1.6 எனக் குறிப்பிட்டுப் பயன் படுத்தி வந்தனர். ஆனால் துல்லியமான கணக்கீடுகள் இதன் ஒளிப் பொலி வெண் - 1.42 எனத் தெரிவித்துள்ளன. தோற்ற ஒளிப் பொலி வெண் களைக் கொண்டுஇரு விண்மீன்களின் பிரகாசங்களை ஒப்பிட முடியாது இதற்காக வானவியலார் சார்பிலாஒளிப் பொலி வெண் ணை வரையறுத்தனர். இதன் படி விண்மீன்கள் 10 பார்செக்(32.6 ஒளி ஆண்டுகள்) தொலைவில் இருக்கும் போது அவற்றின் ஒளிப் பொலி வெண் களைக் குறிப்பிடுவதாகும். சிரியஸின் சார்பிலா ஒளிப் பொலி வெண் 1 .3 ,சூரியனின் சார்பிலா ஒளிப் பொலி வெண் 4.7 ,அதாவது 10 பார்செக் தொலைவில் இவ்விரு விண்மீன்களும் இருந்தால் சூரியன் ,சிரியஸ்ஸை விட 25 மடங்கு மங்கலாகத் தெரியும் .சிரியஸின் பிரகாசம் வரம்பு மீறியதாக இல்லை. இது மிக அருகில் இருப்ப தால் கண்ணுக்குத் தெரியும் எல்லா விண்மீன்களைக் காட்டிலும் பிரகாசமானது போலக் காட்சியளிக்கிறது இது 8.6 ஒளி ஆண்டுகள் தொலைவில் வெண்மையாகத் தோன்றுகிறது.சூரியன் போல தொடுவானத்தில் நிறங் கொண்டது போலக் காட்சி தருகிறது. இது உண்மையில் நிற மாற்றத்தால் விளைவதில்லை .பூமியின் வளி மண்டலத்தில் ஏற்படும் ஒளிப் பகுப்பால் ஏற்படுவதாகும். இதனால் பழங் காலத்தில் வானவியலாருக்கு குழப்பத்தை தந்தது. சிலி நாட்டு வானவியலார் கனோபஸ் என்ற விண்மீன் சிரியஸ்ஸை விட பிரகாசமானது எனத் தவறாக முடிவு செய்தனர். இதற்குக் காரணம் அவர்களுக்கு கனோபஸ் உச்சி வானிலும் சீரியஸ் அடி வானத்திலும் காட்சி யளித்ததே யாகும். சிரியஸ்,சூரியனை விடப் பெரியது. அதன் ஆரம் சூரியனின் ஆரத்தைப் போல 1.8 மடங்கு ,அதன் நிறை சூரியனைப் போல 2.35 மடங்கு.சிரியஸின் புறப்பரப்பு வெப்பநிலை 10,௦௦௦ டிகிரி கெல்வின் நெடுக்கையில் உள்ளது. நமக்கு அருகாமையில் இருக்கும் விண்மீன் களுள் இது ஐந்தாவதாகும்.வெறும் கணகளுக்குப் புலப்பட்டுத் தோன்றும் விண்மீன் களுள் ஆல்பா சென்டாரியை அடுத்து அருகில் உள்ளது சிரியஸ்ஸே ஆகும் பூமியின் வட கோளத்தில் நடு வரைக் கோட்டிற்கு விலகியுள்ள பகுதிகளில் இருந்து கொண்டு ஆல்பா சென்டாரியைப் பார்க்க முடிவதில்லை. ஆல்பா சென்டாரியைப் போல வே சிரியசும் தனி விண்மீனில்லை .ஒரு மங்கலான துணை விண்மீனைக் கொண்ட ஓர் இரட்டை விண்மீன் .இதை சிரியஸ் A,சிரியஸ் B என அழைப்பார்கள்.சிரியஸ் B ஒரு குட்டி விண்மீன் என்றும் ,குறு விண்மீன் என்றும் அறிந்துள்ளனர். இது சிரியஸ் A யை விட 10 ,௦௦௦ மடங்கு மங்கலானது . சிரியஸின் தொலைவு அண்ட வெளியில் விண்மீன் களின் தொலைவைக் கண்டறிய முயன்ற போது, முதன் முதலாக மதிப்பீடு செய்யப் பட்டது சிரியஸ் விண்மீனின் தொலைவாகும். டச்சு நாட்டு வான வியலாரான கிருஸ்டியன் ஹைஜென்ஸ் 1660 ல் ஓர் எளிய சோதனை மூலம் இதைச் செய்து காட்டினார். பித்தளையாலான ஒரு தகட்டில் பல அளவுகளில் துளைகளை இட்டு அதைச் சூரியனுக்கு முன்னிருத்தி எத் துளை சிரியஸ் போல பிரகாசம் தருவதாக இருக்கிறது என்பதை முதல் நாள் இரவு சிரியஸ்ஸை ஆராய்ந்து பார்த்த அனுபவத்தைக் கொண்டு அறிந்தார். அத் துளை சூரியனின் தோற்ற உருவ அளவில் 28000 ல் ஒரு பங்காய் இருந்தது.அதன் மூலம் சிரியஸ் 28000 வானியல் அலகுத் தொலைவில் இருக்கிறது எனக் கணக்கிட்டு அறிந்தார்,ஒரு வானியல் தொலைவு என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட சராசரித் தொலைவு ஆகும். இது சுமார் 150 மில்லியன் கிலோமீட்டருக்கும் ௦.44 ஒளி ஆண்டுத் தொலைவிற்கும் சமம். இம் மதிப்பீட்டை,சூரியன் மற்றும் சிரியஸ் இரண்டிற்கும் சமமான உள்ளார்ந்த பிரகாசத்தைப் பெற்றுள்ளன. என்ற அடிப்படையில் பெற்றார். அவர் காலத்தில் ஸ்டீபன் விதி நிறுவப்படவில்லை என்பதால் ஒரு விண்மீன் தன் ஓரலகுப் புறப்பரப்பின் வழியாக வீசும் மொத்த ஆற்றல் ,அதன் சார்பிலா வெப்ப நிலையின் நான்காவது மடிக்கு நேர் விகிதத்தில் இருக்கிறது என்பது பற்றி அறியாதிருந்தனர். நிறமாலை ஆய்வுகள் மூலம் .சிரியஸின் புற வெப்ப நிலை 10,௦௦௦ டிகிரி கெல்வின் என்றும் சூரியனுக்கு இது 6000 டிகிரி கெல்வின் என்றும் தெரிந்து கொண்டனர். இது .சிரியஸின் ஒவ்வொரு அலகுப் பரப்பும் சூரியனை விட 7.7 மடங்கு ஆற்றலை வெளியேற்றுகிறது எனத் தெரிவிக்கிறது. இதன் ஆரத்தை 1.8 சூரிய ஆரம் எனக் கொண்டால் ,இதன் பரப்பு சூரியனை விட 3.24 மடங்கு அதிகமாக இருக்கும். எனவே சிரியஸ் சூரியனை விட 25 மடங்கு பிரகாசமிக்கது என்று கூறலாம்..இதை ஒரு திருத்தமாகக் கணக்கீட்டில் கொண்டால் சிரியஸின் தொலைவு 11 ஒளி ஆண்டுகள் என்பதைப் பெறலாம். பின்னர் ஹைஜென்ஸ் கண்ணாடித் துண்டுகளைப் பயன்படுத்தி துளையில் விழும் சூரிய ஒளியின் அளவை மட்டுப்படுத்தினார். மேலும் பகல் பொழுதின் அதிக ஒளி காரணமாக கண்மணி சுருங்கி இருப்பதால் ,அதற்காக ஒரு திருத்தத்தையும் மேற்கொண்டு 8.6 ஒளி ஆண்டுகள் என்று இன்று உறுதி செய்யப்பட்ட அதே அளவை அன்றே கண்டறிந்தார்.
கார்ட்டூன் கோடை விடுமுறையை வெட்டிப் பொழுதாய் கழித்துக் கொண்டிருந்த தன் மகனைப் பார்த்து அப்பா அப்பா: உருப்படியாக ஏதாவது செய்யக்கூடாதா ? மகன் : எப்போதும் குறையாகவே சொல்லாதிங்கப்பா .நீங்கள் என்றைக்கு என் சாமர்த்தியத்தைப் பற்றி மெச்சி இருக்கிங்க. அப்பா: அப்படி என்ன சாதித்து விட்டாய் ? மகன் : காலையில் படுக்கை விட்டு 7 மணிக்கு எழுந்தேன் .பல் துலக்கி, குளித்து தலை சீவி புத்தாடை அணிந்து கொண்டேன். அம்மா தந்ததைச் சாப்பிட்டேன் .சப்தம் போட்டால் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் வெளியில் போய் விளையாடினேன் கரண்டு பில் எகிறுடும் என்பதால மின் விசிறி ,ac கூட பயன்படுத்த வில்லை அப்பா : அன்றாடக் கடமைகளெல்லாம் சாதனையாகி விடுமா ? மறைந்திருக்கும் உண்மை : நாட்டின் தலைவர்கள் எல்லாம் இப்படித்தான் தங்கள் இயல்பான கடமைகளையெல்லாம் தியாகமாகவும் ,சாதனைகளாகவும் சொல்லிக் கொள்கின்றார்கள்.நீ பரிசுப் பொருளை வாங்கி அவர்கள் கையால் கொடுத்தால் அவர்கள் ஒளிப் படம் எடுத்துக் கொள்கிறார்கள் வீடே நாடு நாடே வீடு .

Saturday, June 9, 2012

Social awareness-Mind without fear

மாணவர்களே உங்களோடு கொஞ்ச நேரம் வில்மாவின் கதையைக் கேட்டீர்களா? சாதாரணமாக வாழ்வதற்குக் கூட எந்த நேர்மறையான அனுகூலங்களும் இல்லாமலேயே வில்மாவால் இமாலய சாதனைகளைச் சாதிக்க முடியும் போது கூடுதல் வாய்ப்புக்களையும் வசதிகளையும் பெற்றிருக்கும் நம்மால் ஏன் முடியாது.வில்மா உடல் உறுப்புக்களின் கோளாறால் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று முடிவு செய்து வாழ்க்கை முழுக்க சும்மாவே இருக்க விரும்பவில்லை வாழ்க்கையில் எதை இழந்தாளோ அதை மீட்டுப் பெறமுடியும் என்ற நம்பிக்கையை உண்மையாகவும் உறுதியாகவும் வளர்த்துக் கொண்டாள்.எல்லோரையும் போல தானும் வாழ வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் வலுவடைந்து அதுவே மனதில் நிலைப்பட்டு சுய உந்துதலுக்கு வலிமையான உந்தற் காரணியாக அமைந்துவிட்டது . வில்மா வீட்டிலிருந்த படியே படித்து பட்டங்கள் வாங்கி ஒரு ஆசிரியராகி இருக்கலாம்.அது அவளால் இயலக்கூடியதே என்றாலும் தனக்கு எது பலவீனமாக அமைந்ததோ அதையே மக்களுக்கு தன்னுடைய பலமாகக் காட்ட உறுதி கொண்டாள்.அந்த எண்ணத்தின் வெளிப்பாடே அவள் வித்தியாசமாக எடுத்த முடிவாகும் கால்கள் வலுவிழந்திருந்தாலும் ஓட்டப் பந்தைய வீராங்கனையாக தன்னை உலகத்தாருக்கு வெளிப்படுத்திக் காட்ட வேண்டும் என்று எப்போது முடிவெடுத்தாளோ அப்போதே அவள் நம் எல்லோரிடமிருந்தும் வேறுபட்டு நின்றாள். மிக உயர்வாக எண்ணுவதும் எண்ணியதைச் சொல்லுவதும் எளிது ஆனால் எண்ணியதை எண்ணியவாறு முடிப்பது எளிதில்லை. ஏனெனில் எண்ணம் என்பது கணப் பொழுது முயற்சி.அதற்கு உருவம் கொடுப்பது என்பது நாள் கணக்கில், மாதக் கணக்கில் ஏன் சில சமயங்களில் வருடக் கணக்கில் கூட ஆகலாம் முடிந்த வரை போராடுவது கூட இல்லை இது முடிக்கும் வரை போராடுவது.எண்ணத்தில் திண்மை இல்லையென்றால் அது சிதைந்து அழிந்து போகும்,சில நேரங்களில் தடம் மாறிப் போகும்.வில்மாவின் திண்மையான எண்ணம் அவள் வாழ்க்கையில் வசந்தம் வீசுவதற்குக் காரணமாக இருந்தது . உறங்கும் போது வருவதல்ல கனவு,உன்னை உறங்க விடமால் செய்வதே கனவு என்று முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கூறுவார்கள் வில்மாவின் வாழ்க்கை இந்த வாக்கியத்திற்கு சரியான விளக்கம் தரும் ஒரு விளக்கவுரையாக இருக்கிறது வில்மா தன் எண்ணத்தை மெய்ப்படுத்திக் காட்ட கடிய முயற்சிகளை மேற்கொண்டார்.விடாத பயிற்சிகள் மூலம் முயற்சிகள் முயற்சி இல்லாமல் வரும் ஏதும் உனக்கு பெருமை தருவதாக இருக்காது என்றும் எந்த வெற்றியும் அப்படி வருவதில்லை என்றும் அவர் கூறுவார் வில்மா தன் உடல் குறைபாட்டை நினைத்து நினைத்து மனச் சோர்வுற்றுதன் உயிரை மாய்த்துக் கொள்ள ஒருபோதும் எண்ணியதில்லை.அவள் உடல் குறைப்பாட்டுடனும் வெற்றிகரமாக வாழ்ந்து காட்டினாள்.உடல் குறைபாடே இல்லாதவர்கள் எதற்கு மனச் சோர்வுற்று தற்கொலையைத் தேடுகிறார்கள்.உலக மேடையில் அவர்களுக்கெல்லாம் நிஜமான எடுத்துக் காட்டு வேண்டும் என்பதற்குத் தான் இறைவன் அவளை அப்படிப் படைத்தானோ . தற்கொலைக்குத் துணிபவர்கள் வில்மாவின் வாழ்கை வரலாற்றைப் படிக்க வேண்டும்.அப்படிப் படித்தால் நிச்சியம் வெட்கப்பட்டு மனம் மாறுவார்கள்.வில்மா இன்றைக்கு நம்மிடையே இல்லை ஆனால் அசாத்தியமான சூழ்நிலையில் அவள் காட்டிய அசாத்தியமான முயற்சிகள் சாகாத சமுதாயத்திற்கு நிரந்தரமான ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்பதற்காக அமெரிக்கா அவள் படம் கொண்ட ஒரு தபால் தலையை வெளியிட்டது அவள் விட்டுச் சென்ற வாழ்வியல் எண்ணங்கள் நம் உள்ளங்களிலும் மலரட்டுமே .

Friday, June 8, 2012

Vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள். சோடியம் (sodium) கண்டுபிடிப்பு சோடியம் பூமியின் மேலோட்டுப் பகுதியில் கிடைக்கக் கூடிய தனிமங்களுள் ஆக்சிஜன்,சிலிகான்,அலுமினியம்,இரும்பு கால்சியத்திற்கு அடுத்து ஆறாவது செழுமை மிக்க தனிமமாக உள்ளது. நிறையின் அடிப்படையில் 2.83 % சோடியமாகும் இயற்கையில் சோடியம் ஒருபோதும் தனித்துக் காணப் படுவதில்லை. உப்புக்களாகவே கிடைக்கின்றது.உப்புப் பாறையாக(Rock salt) பூமியில் பல விடங்களில் கிடைக்கிறது பல உப்பு நீர் ஏரிகளிலும்,சுனை,ஊற்றுக்களிலும் கூட சோடியம் குளோரைடு மிகுதியாகக் கரைந்திருக்கிறது. 1807 ல் இங்கிலாந்து நாட்டின் சர் ஹம்ப்ரி டேவி என்பார் சோடியத்தைப் பிரித்தெடுப் பதில் வெற்றி கண்டார்.தெவிட்டிய கரைசலில் நீர்,உப்பின் சிதைவைத் தடை செய்கிறது என்பதால் மூலப் பொருள் இருந்தும் அதைப் பகுக்க முடிவதில்லை. இதனால் டேவி முதலில் நீர் மூலக்கூறு சோடாவை உருக்கி சோடியம் ஹைட்ராக்சைடைப் பெற்று,அதிலிருந்து மின்னார் பகுப்பு மூலம் சோடியத்தைப் பிரித்தெடுத்தார். சோடியம் குளோரைடை எளிதில் உருக்குவதற்கு அதனுடன் 50 % கால்சியம் குளோரைடையும் சேர்த்து,செங்கல் வரியிட்ட இரும்புத் தொட்டியில் மின்னார் பகுப்பு மூலம் சோடியத்தைப் பெறமுடியும். சோடியம் குளோரைடின் உருகு நிலை 1077 K ,கால்சியம் குளோரைடைச் சேர்ப்பதால் கலவை 853 K வெப்ப நிலையிலேயே உருகி விடுகிறது. பண்புகள் இலத்தீன் மொழியில் நாட்ரியம் என்பது ஆங்கிலத்தில் சோடாவானது. சோடாவிலிருந்து பெறப் பட்டதால் இது சோடியம் என்ற பெயர் பெற்றது. இதன் வேதிக் குறியீடு Na ஆகும். .சோடியம் புதியதாக இருக்கும் போது மென்மையாகவும் ,மெழுகு போன்ற தோற்றமும் ,வெள்ளி போன்று பளபளப்பும் கொண்ட திண்மமாக இருக்கிறது. ஆனால் காற்று வெளியில் ஆக்சிஜனேற்றம் பெற்று ஓர் ஆக்சைடு படலம் அதன் மீது படிந்து அதன் பொலிவை மங்கச் செய்து விடுகிறது. சோடியம் வறண்ட காற்று வெளியில் மிதமான வெப்ப நிலையில் நிலையானது. ஆனால் காற்றை 120 டிகிரி C வெப்ப நிலைக்குச் சூடு படுத்தும் போது சோடியம் தீப்பற்றிக் கொள்கிறது.சோடியம்,நீரோடு தீவிரமாக வினை புரிந்து தீயையும், வெடிச் சத்தத்தையும் எழுப்புகின்றது. இதனால் சோடியத்தால் ஏற்படும் தீ விபத்துகளுக்கு நீர் பாதுகாப்பளிப்பதில்லை.இதற்கு வரண்ட உப்புத் தூள் ,வறண்ட சோடா ,வறண்ட கிராபைட் தூள் போன்றவற்றை நீருக்குப் பதிலாகப் பயன் படுத்துகிறார்கள் . ஈரக் காற்று வெளியிலோ நீரிலோ சோடியம் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதால் சோடியத்தை பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் அல்லது பென்சீன் போன்ற ஆக்சிஜனற்ற நீர்மங்களில் அமிழ்த்தி வைத்திருப்பார்கள் . சோடியம் ஒரு சிறந்த வெப்பக் கடத்தியாகும் .வெப்ப ஏற்புத்திறன் நீரின் மதிப்பில் ஏறக்குறைய 3 ல் 1 பங்கு. இப் பண்பு சோடியத்தை அணு உலைகளில் ஒரு குளிர்விப்பானாக(Coolant) பயன்படுத்த அனுகூலமாக யிருக்கிறது. இதன் அணு எண் 11,அணு நிறை 22.99 ,அடர்த்தி 970 கிகி /கமீ .உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 370.9 K,1156 K ஆகும். இது ஒரு கார உலோகமாகும். இதன் இணை திறன்(Valency) 1 ஆக உள்ளது .

Thursday, June 7, 2012

social awareness -Mind without fear

மாணவர்களே உங்களோடு கொஞ்ச நேரம். வில்மா ருடோல்ப் (Wilma Rudolph) 1940 ல் பிறந்து 54 ஆண்டுகள் வாழ்ந்த இவருடைய வாழ்க்கை நமெக்கெல்லாம் ஒரு பாடமாக இருக்கிறது.இவருடைய வாழ்க்கை வரலாற்றை படிப்பீர்களேயானால் நாம் நமக்குக் கிடைத்த மேலான வாழ்க்கையை எவ்வளவு வீணாக்கி விட்டோம் என்பதை உணர்வீர்கள் . தகர்க்க முடியாத தடைகள் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து விட்டு முடியாததை முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர். உடல் ஊனமுற்றோர் பெரும்பாலும் மனச் சோர்வுற்று எதையாவது சாதிக்க வேண்டும் என்று துணிய மாட்டார்கள் . சில சமயங்களில் தவறான முடிவுகளை மேற்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிவார்கள் .உடல் ஊனமாக இருந்தாலும் இவர் தன்னை ஒரு மாற்றுத் திறனாளியாக வெளிப்படுத்திக் காட்டினார். அதற்காக அவர் வெகு இயல்பபாக எடுத்துக் கொண்ட முயற்சிகள் தவறான முடிவுகளை நாம் தவறுதலாக மேற்கொள்ளத் துணியும் போது சித்திக்கத் தூண்டுகின்றன. குறைப் பிரசவத்தில் பிறந்ததால் பிறக்கும் போதே எடை குறைவாகவும் , சரியான வளர்ச்சி யின்றியும் இருந்தார். 4 வயதில் போலியோவால் பாதிக்கப் பட்டு காலின் வலிமையை இழந்தார். நடக்கக் கூட முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். எல்லோரையும் போல பள்ளிக்குச் சென்று கல்வியும் கற்க முடியவில்லை. அவரின் தந்தை ரயில் நிலையத்தில் ஒரு கூலி தாய் ஒரு தாதி. போதிய வசதியின்மையால் முழுமையான சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியவில்லை. வலுவூட்டுவதற்காக கால்களில் இரும்பு வளையங்களைப் பொருத்தி இருந்தார்கள். அதனால் அதிகத் தூரம் நடப்பது கூடச் சிரமமாக இருந்தது. கால்கள் வளைந்திருப்பதைத் தடுப்பதற்காக கனமான ஷூ வேறு அணியவேண்டி இருந்தது . ஒரு சமயம் அவருடைய மருத்துவர் .வில்மாவால் இனி நடக்கவே முடியாது என்று தெரிவித் து அவரால் என்ன இயலுமே அதைமட்டும் வீட்டில் இருந்து கொண்டு அம்மாவின் உதவியோடு செய்யலாம் என்றார். வீட்டிற்கு வந்தவுடன் அம்மா கேட்டாள் "வில்மா நீ என்ன செய்ய விரும்புகிறாய் ?" அதற்கு வில்மா என்ன சொன்னால் தெரியுமா . "அம்மா நான் ஒரு ஓட்டப் பந்தைய வீராங்கனையாக விரும்பிகிறேன் " என்றாள்.போலியோவால் சுருக்கிப் போன கால்களுடன் இது இயலுமா என்று நாம் நகைக்கலாம் .ஆனால் அப்போது அவளுடைய அம்மா தந்த உற்சாகம் அவளுடைய தலை விதியையே மாற்றி அமைத்து விட்டது. உண்மைதான் ஒரே ஒரு வினாடி போதும் ,அதற்குள் வாழ்கையை முடித்துக் கொள்ளாலாம் என்ற எண்ணத்தை நிலைப்படுத்திக் கொள்ளலாம் அதுபோல வாழ்க்கையை மேம்படுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தையும் வலுப்படுத்திக் கொள்ளலாம் எல்லாவற்றிற்கும் மனமே காரணமாயிருகிறது.மனம் உறுதியாக இருந்தால் எதுவும் சாத்தியமே . ஏனெனில் இரு வேறுபட்ட எண்ணங்களும் ஒரே மனதிலிருந்து தான் வெளிப்படுகின்றன சரியாக நடக்கவே முடியாத வில்மா ஓடுவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டார். தன்னுடைய 16 வது வயதில் மெல்போன்.நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலாகக் கலந்து கொண்டார். அவருடைய மனம் தளராத முயற்சி அவருக்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது அத்துடன் அவர் நின்று விடவில்லை. 1960 ல் ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு 100 மீ .200 மீ ஓட்டம் ,4 x 100 மீ தொடர் ஓட்டம் என மூன்று போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார். இது உலக சாதனையாகும் .இயற்கையே தனக்கு எதிராக இருந்தும் அதை எதிர்த்து வெற்றி வாகை சூடியவர் இந்த வில்மா . சின்னச் சின்ன த் தடைகளுக் கெல்லாம் சோர்ந்து போய் சும்மாவே இருக்கும் நமக்கு இவர் ஒரு உந்தற் காரணி. . . வில்மாவின் மறக்க முடியாத பொன் மொழிகள் சில Believe me, the reward is not so great without the struggle. The trumph can’t be hard without the struggle I believe in me more than anything in the world. I don’t know why I run so fast, I just run. Never underestimate the power of dreams and the influence of the human spirit. Sometimes it takes years to really grasp what has happened to your life

Tuesday, June 5, 2012

Vinveliyil Ulaa

விண்வெளியில் உலா கானிஸ் மேஜர் (Canis Major) ஏறக்குறைய 80 விண்மீன்களடங்கிய வட்டாரம் ஒரு பெரிய நாய் போலக் கற்பனை செய்யப்பட்டுள்ளது.இது ஓரியன் வட்டாரத்தோடு தொடர்புடைய இரு நாய்களில் பெரியதைக் குறிப்பிடுகிறது. பூமி சுழல,இந்த நாய்கள் வேட்டைக்காரனைப்பின் பற்றிச் செல்வது போலத் தோற்றம் தரும்.கானிஸ் மேஜர் வட்டாரத்தில் பல பிரகாசமான விண்மீன்கள் அடங்கியுள்ளன. உருவத்தில் முதன்மையானதாக இருப்பது சீரியசாகும். இதை நாய் விண்மீன் என்றே அழைப்பர். கானிஸ் என்பது லத்தீன் மொழியில் நாயைக் குறிப்பிடும் ஒரு சொல் அதனால் இந்த வட்டாரம் கானிஸ் மேஜர் என்று பெயர் பெற்றதோடு பிரகாசமான சீரியசும் கானிகுலா (Canicula) எனப் பெயர் பெற்றது சீரியஸ் என்றால் கிரேக்க மொழியில் வெப்பத்தால் வாட்டுகின்ற என்று பொருள்.தொடக்கத்தில் சீரியஸ் விண்ணில் பிரகாசமிக்க மினுமினுக்கின்ற விண்ணுருப்புகளுக்கு ஒரு பெயரடைச் சொல்லாகச் சொல்லப் பயன்படுத்தப்பட்டது. வடமொழியில் சூரியனைச் சூர்யா என்பர் இது சீரியசிலிருந்து வருவிக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. அரேபியர்கள் சீரியஸ்ஸை சுஹைல் என்றழைப்பார்கள் இதுவும் பிரகாசமான பொருட் களுக்கான பெயரடைச் சொல்லாகும். சீரியஸ்ஸை அரேபியர்கள் அல் சிரா (Al -shira ) என்றும் அழைப்பார்கள். சீரியசுக்கான கிரேக்க,ரோமன் எகிப்து மொழிப் பெயர்கள் எல்லாம் ஒரே மூலச் சொல்லிலிருந்து பிறந்தவை போலத் தோன்றுகின்றன. சீரியசின் பெயர் எப்படி வந்தது என்பதற்கும் பலர் பலவிதமாகக் கருத்துக் கூறி வருகின்றனர். எகிப்தியர்களின் கடவுளானா ஓசிரிஸ் என்பதிலிருந்து இப் பெயர் வருவிக்கப் பட்டிருக்கலாம் என்று சிலர் தெரிவித்துள்ளனர். இதற்கு சில வலுவான காரணங்களை ஆதாரமாகக் காட்டுகின்றார்கள், பழங்காலத்தில் சீரியஸ் நைல் நதியின் விண்மீன் (Nile star )அல்லது ஐசிஸ் (Isis ) கடவுளின் விண்மீன் என மதிக்கப்பட்டது ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் இந்த விண்மீன் அதிகாலைப் பொழுதில் தோன்றுவ தினால் நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடப் போவதை முன்னறிவிப்பு செய்கிறது என்றும் இது விவசாயிகளுக்கு உதவி செய்வதாக இருக்கிறது என்றும் கூறுவார். எகிப்தியர்கள் சீரியஸ்ஸை நைல் நதியின் விண்மீனாக சிகோர் என்று பெயரிட்டுக் கடவுளாகத் தொழுதனர். அதனால் சீரியசின் பெயர் ஐசிஸியின் விண்மீன் எனப் புகழ் பெற்றிருந்தது. ஐசிஸ் என்ற பெண் கடவுள் எகிப்தியர்களின் முதன்மைக் கடவுளான ரா (Ra ) வின் மகளாகவும் ஓசிரிஸ் என்ற கடவுளின் மனைவியாகவும் கருதப்பட்டவள். கிருத்து பிறப்பிற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே சூரியன் கிழக்கில் உதிப்பதற்க்குச் சற்று முன்னதாக த் தோற்றம் தரும் சீரியஸ் விண்மீனின் விவரங்களை த் தொகுத்து வந்தனர். சீரியஸ் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 25 ல் முதன் முதலாக சூரியன் உதிப்பதற்கு முன்னர் விண்ணில் தெரியும் .இதை ஐசிஸ் கடவுளின் உயிராகக் கருதினார்கள். டெண்டரா என்னுமிடத்தில் ஐசிஸ் ஹதோர் எனும் கோயில் சீரியஸ் எழும் திசைக்கு ஏற்ப அமைந்துள்ளது. அக் கோயிலில் காணப்படும் ஒரு கல்வெட்டில் " ஐசிஸ் பெண் கடவுள் ஒவ்வொரு புத்தாண்டு தினத்திலும் இக் கோயிலின் மீது ஒழி வீசுவாள், அடிவானத்தில் அவளுடைய ஒளி அவளுடைய தந்தையான ராவின் ஒளியோடு ஒன்று கூடும் " என்று பொறிக்கப் பட்டுள்ளது. சீரியசைக் குறிப்பிடும் சுட்டுப் படமான நாய் , நைல் நதியின் பள்ளத்தாக்கு நெடுக சுவற்றில் பொறிக்கப் பட்டுள்ளது. எகிப்தியர்களின் பதிவுகளில் சீரியஸ் என்ற ஒரு விண்மீன் மட்டுமே முழுமையான விவரங்களுடன் காணப்படுகிறது பழங்காலத்தில் சீரியஸ் கெட்டதை த் தரக்கூடிய ஒரு விண்மீன் என்று நம்பினார்கள். வட்டாரத்தைச் சுட்டெரிக்கும் நாய் விண்மீன் பூமியில், பஞ்சம்,பட்டினிச் சாவும்,கொள்ளை நோயையும் ஏற்படும் காலங்களில் துயரூட்டும் ஒளியால் விண்ணில் தோன்றுகிறது. என்று நம்பினார்கள்.ஜூலை,ஆகஸ்டு ,மாதங்களில் வருத்தும் கொடுமையான வெயில் ,சூரியனோடு சீரியசும் தோன்றுவதினால்ஏற்படுகிறது என்றும் கருதினார்கள்.இக் காலத்தில் நாய் வெறிபிடித்து அலைகிறது என்றும் புனைந்து சொன்னார்கள். உண்மையில் பூமியில் கோடை காலம் என்பது சீரியஸ் மற்றும் சூரியன் இவற்றின் கூட்டு முயற்சியால் விளைவதில்லை .இந்தியாவில் சீரியஸ் நல்லதைக் கட்டியங் கூறும் ஒரு விண்ணுருப்பாகக் கருதினார்கள் .கிருத்துவர்கள்,சீரியஸ் வரப்போகும் கிருஸ்மஸ்ஸை முன்னறிவுப்புச் செய்வதாகக் கூறினார்கள். புத்தாண்டு தினத்தில் சீரியஸ் இரவு நேர வானத்தில் தலைமை விண்மீனாகப் பிரகாசித்து,மிகச் சரியாக நடுச் சாமத்தில் விண்ணில் உச்சத்தை எட்டுகிறது.

Vethith thanimangal-Chemistry

நியான் (Neon) கண்டுபிடிப்பு மந்த வளிமமான நியான் மிக அரிதாகக் கிடைக்கும் வளிமங்களுள் ஒன்று.வளிமண்டலக் காற்றில் 65000 ல் ஒரு பங்கே நியான்.ஹீலியம்,கிரப்பிடான்,செனான் போன்ற வளிமங்களின் செழுமை இதை விடக் குறைவு.வளி மண்டலக் காற்றை நீர்மமாக்கி ,பகுதிக் காய்ச்சி வடித்தல் மூலம் அதிலுள்ள கூறுகளைத் தனித்துப் பிரித்தெடுத்து விடுகின்றார்கள்.இந்த வழிமுறையை வெற்றிகரமாகச் செய்து நியான்,ஆர்கன்,கிரப்பிட்டான், செனான் போன்ற மந்த வளிமங்களை அடுத்தடுத்துக் கண்டுபிடித்தவர் சர் வில்லியம் ராம்சே என்ற இங்கிலாந்து நாட்டு அறிஞராவார். கிரேக்க மொழியில் நியோஸ் என்றால் புதிய என்று பொருள். அச் சொல்லே இதற்குப் பெயர் தந்தது . பண்புகள் Ne என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய நியானின் அணுவெண் 10,அணு எடை 20.18,அடர்த்தி 0.839கிகி/கமீ.இதன் உறை நிலையும்,கொதி நிலையும் முறையே 24.55 K,27.05 K ஆகும். இது மந்த வளிமம் என்றும் வேதி வினைகளில் ஈடுபடாது என்றும் சொல்லப்பட்டாலும் புளூரினுடன் சேர்ந்து கூட்டுப்பொருளை உற்பத்தி செய்கிறது என்பதை சோதனைக் கூடத்தில் நிரூபித்துள்ளனர். நிலையற்ற ஹைட்ரேட்டுக்களை நியான் உண்டாகுகிறது. Ne2+,(NeAr)+, (NeH)+ மற்றும்(NeHe)+ போன்ற அயனிகளை நிற மற்றும் நிறமாலை மானிகளின் ஆய்வில் அறிந்துள்ளனர் பயன்கள் வெற்றிட மின்னிறக்க குழாயில்,நியான்,சிவப்பு-ஆரஞ்சு கலந்த ஒளியைத் தருகிறது. எல்லா மந்த வளிமங்களிலும், நியான் வழி செய்யப்படும் மின்னிறக்கமே சாதாரண மின்னழுத்தம் மற்றும் மின்னோட்ட நிலையில் செறிவு மிக்க ஒளியைத் தருகிறது. இதனால் இது விளம்பரத் தட்டிகளில் பயன்படுத்த அனுகூலமிக்கதாய் இருக்கிறது. இடிதாங்கி ,உயர் மின்னழுத்தம் காட்டி (indicator ) தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற பல சாதனங்களில் நியான் வழி மின்னிறக்கம் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. நியானும் ஹீலியமும் சேர்ந்த வளிம நிலை ஊடகம் லேசராகப் பயன்தருகிறது.இதில் நியானும் ஹீலியமும் 1:10 என்ற விகிதத்தில் கலக்கப்பட்டிருக்கும்.முதலில் ஹீலியம் மின்னிறக்கக் குழாயில் வெளிப்படும் ஏலக்ட்ரான்களோடு மோதிகிளர்ச்சியுறுகிறது இது பின்னர் மீட்ச்சியிலா(inelastic)மோதலினால் நியானுக்கு கிளர்ச்சி யாற்றலை பரிமாற்றம் செய்கிறது. நியானின் கிளர்ச்சியாற்றலும் , ஹீலியத்தின் கிளர்ச்சியாற்றலும் மிக நெருக்கமாகச் சமமாக இருப்பதால்,ஆற்றல் பரிமாற்றம் முழுமையானதாக இருக்கிறது. வெளியீட்டுத்திறன் அதிகமாக இருப்பதால் இது திறந்த வெளியில் செய்திப் பரிமாற்றத்திற்கும் ,முப்பரிமான ஒளிப்படப் பதிவுகளுக்கும் (holograms) பயன்படுகிறது. நீர்ம நிலையில் பொருளாதாரச் சிக்கன மிக்க மிகச் சிறந்த குளிரூட்டியாக (refrigerants) உள்ளது. நியானின் குளிரூட்டுந்த் திறன் ஹீலியத்தை விட 40 மடங்கு அதிகமாகவும், ஹைட்ரஜனை விட 3 மடங்கு அதிகமாகவும் இருக்கிறது )

Sunday, June 3, 2012

Social awareness-Mind without fear

மாணவர்களே உங்களோடு கொஞ்ச நேரம் வகுப்பறையில் குருவாக ,கல்விக் கூட வளாகத்தில் காப்பாளராக,வெளியில் மூத்த நண்பனாக,மாணவர்களின் வளர்ச்சிக்கு உரமாக,பள்ளிவிழாக்களின் போது நிர்வாகியாக ,ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சியாளனாக ,மேடையில் சொற்பொழிவாளனாக பிரச்சனைக்கெல்லாம் சரியான தீர்வாக- ஓர் ஆசிரியன் இப்படி பன்முகத் தோற்றமுள்ளவனாக இருக்கின்றான்.இன்றைய மாணவர் சமுதாயம் ஆசிரியர்களிடமிருந்து வேறொன்றையும் எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கிறது ..உங்களுக்காக, உங்கள் நலனுக்காக கல்வி சார்ந்த தோற்றங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய முகத்தை நாங்கள் பெற்றுள்ளோம் .ஆம், அதுதான் மாணவர் மன நலங்காப்போன் (Emotional health animator) என்ற பணி. சில சமயங்களில் நீங்கள் பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியாமல் ,யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் மனதிற்குள்ளேயே அடைத்து வைத்துக் கொள்வதால் தொடரும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு தவறான முடிவுகளை எடுத்து விடுகின்றீர்கள் உங்கள் மனதிற்கு தொடர்ந்து வலியைத் தந்து கொண்டிருக்கும் அந்தப் பிரச்சனைகளுக்கு தற்கொலை ஒரு தீர்வாக இருக்கவே முடியாது. உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை, உங்கள் உயிரின் மதிப்பு தெரியவில்லை.தவறான எண்ணங்களால் தவறான முடிவை த்தான் தரமுடியும் மாற்றி யோசிக்கத் தெரியாததால் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்குப் பதிலாக உங்களையே நீங்கள் விடுவித்துக் கொள்கிறீர்கள் உங்கள் மன வலியை நாங்கள் உணருகின்றோம். அது தரும் வலியால் நீங்கள் படும் துயரத்திற்கு தக்க மருந்தாகும் ஆறுதல் வார்த்தைகள் எங்களிடம் நிறையவே உண்டு .இந்த வார்த்தைகள் சோர்ந்த மனதை துள்ளி எழச் செய்யும்.கொதிக்கும் குருதியை குளிரச் செய்யும்,தறி கேட்டு ஓடும் எண்ணங்களை வசப்படுத்தி கலங்கரை விளக்காய் வழிகாட்டும் உங்கள் உயிரின் மதிப்பை நாங்கள் அறிவோம் .மனிதர்கள் வேண்டுமானால் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மதிப்பு கொண்டிருக்கலாம் ஆனால் இறைவனுடைய படைப்பில் எல்லா உயிர்களுக்கும் ஒரே மதிப்புத்தான். நீங்கள் மற்றவர்களை விட எந்த வகையிலும் தாழ்ந்தவர்களில்லை. ஒவ்வொருவரும் தனக்குத் தானே உதவிக் கொள்ள பல உறுப்புக்களை இறைவன் அளித்திருகின்றான் வாழும் காலத்தில் எதெல்லாம் வேண்டுமோ அதையெல்லாம் பெறுவதற்குத் தேவையான கருவிகள் அனைத்தையும் மனிதன் பிறக்கும் போதே அளித்து விடுகிறார்.இவற்றை வைத்துக் கொண்டு வாழ முடியாவிட்டால் அவனுக்கு அவன் மீதே நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் .முதலில் உங்கள் மீது முழு நம்பிக்கை வையுங்கள் உங்களை வாட்டிக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் சூரிய ஒளியில் சுருங்கிய பனித் துளி போல மறைந்து போகும் நீங்கள் ஆஸ்திரேலியரான நிக்கின் (Nick Vujicic) கதையைக் கேட்டால் நான் சொல்வதை நம்புவீர்கள் .இவர் பிறவி ஊனம் Tetra amelia syndrome என்ற கோளாறால் அவருக்கு இரண்டு கைகளும் இல்லை ,இரண்டு கால்களும் இல்லை சிறு குழந்தையாக இருந்த போது மனதளவிலும் , உடலளவிலும் உணர்வளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டார் ஆனால் அவர் வளர்த்துக் கொண்டுள்ள சுயமதிப்பால் இந்தத் தடைகளை யெல்லாம் தகர்த்தெரிந்து விட்டார் . முயன்று எல்லோரும் படிக்கும் பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடங்கினார், எனினும் சக மாணவர்களின் கேலிப் பேச்சால் மனதளவில் சோர்வுற்றார் . மிகச் சரியான முடிவு எப்போதும் கண நேரத்தில் விளைவதில்லை..தற்காலியமான பிரச்சனைக்கு தற்கொலை ஒரு நிரந்தமான தீர்வு என எல்லோரையும் போல நினைத்து நிக் தன்னுடைய 8 வது வயதில் தற்கொலைக்குக் கூட முயன்றிருக்கின்றார்.இந்த தவறான எண்ணம் இரண்டு ஆண்டுகள் வரை நீடித்திருந்தது. 10 வயதிருக்கும் போது நீரில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொள்ள இருந்தார். எனினும் பெற்றோர் மீது கொண்டிருந்த அளவில்லா அன்பு அவரை அப்படிச் செய்யவிடாமல் தடுத்தது. கையும் காலும் வளர வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டு தன் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தார். ஊனமாய் இருந்தவர் அப்போது முதற்கொண்டு மாற்றுத் திறனாளியாக மாறினார். உடல் ஊனம் நம்மைப் பாதிப்பதில்லை ஆனால் மன ஊனமே பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்து கொண்டார். உடல் ஊனமுற்றோர் கூட வாழ்கையில் சாதிக்க முடியும் என்பதை பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்ட பின்னர் அவருடைய முன்னேற்றம் பெரிதும் முடுக்கப் பட்டது. ஒரு காலில் சூம்பிப் போயிருந்த இரு விரல்களைக் கொண்டு எழுதும் முறையைக் கற்றுக் கொண்டார். மற்றொரு காலால் பக்கங்களைப் புரட்டவும் .கம்பியூட்டரை இயக்கவும் ,இசைக் கருவிகளை வாசிக்கவும், தனக்கு வேண்டிய உதவிகளைத் தானே செய்து கொள்ளவும் ,போன் பேசவும் பழகிக் கொண்டார். மனமிருந்தால் எப்போதும் மார்க்கமுண்டு என்ற வாழ்வியல் உண்மைக்கு அவர் ஓர் உதாரணமாக விளங்கினார். அவருடைய அசாத்தியமான திறமைகளைக் கண்டு வகுப்பில் மாணவர் தலைவராக நியமிக்கப் பட்டார் அப்போது சோர்வுற்ற மாணவர்களுக்கு ஞான உபதேசம் , நல்ல காரியங்களுக்காக நிதி திரட்டுதல், ஊனமுற்றோர் நலக் கூட்டம் என அடுக்கடுக்காக முயற்ச்சிகளை மேற்கொண்டார் தன்னுடைய 17 வது வயதில் "life without limb " என்ற அமைப்பின் மூலம் மக்களை உற்சாகப் படுத்தும் சொற்பொழிவுகளை வழங்கினார். 24 நாடுகளில் நூற்றுக் கணக்கான சொற்பொழிவு மூலம் 3 -4 மில்லியன் ரசிகர்களை இன்றைக்குப் பெற்றுள்ளார். குறும்படங்களை எடுத்து மக்களிடையே பெரிய அளவில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். இரண்டு கையும் காலும் இல்லாமல் ஒருவர் தன் வாழ்கையில் இவ்வளவு சாதித்திருக்கும் போது நம்மால் முடியாதா என்ன ? ஊனம் உடலில் இருக்கலாம் ஆனால் மனதில் இருக்கவே கூடாது. ஊனமான மனமே தவறான முடிவுகளுக்கு முதற் காரணமாக அமைகிறது . தொடரும் ...

Saturday, June 2, 2012

Vethith thanimangal-Chemistry

புளூரின்(பயன்கள்) சோடியம் புளூரைடு வடிவில் புளூரினை பொது நீர் விநியோகத்தில் கலக்கின்றார்கள்.இது பற்சிதைவிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.ஹைட்ரோக்சி அபடைட்(hyroxyapatite) என்ற கடினமான தாதுப்பொருளால் ஆன மேற்புறப்பகுதியால் பாதுகாக்கப்படுகின்றன.இது நீரில் கரைவதில்லை ஆனால் வாயிலுள்ளநுண்கிருமிகள் உணவிலுள்ள கார்போ ஹைட்ரேட்டுடன் கூடி மென்அமிலங்களை உற்பத்தி செய்கிறது.இது பல்லோட்டிலுள்ள ஹைட்ராக்சி அபடைட்டைச் சிதைக்கிறது.தொடர்ந்து நிகழும் போது பற்சிதைவு ஏற்படுகிறது.உடலின் தற்காப்பு முறையினால் இச் சிதைவு புதுப்பித்தல் மூலம் சரி செய்யப்படுகின்றது.இப் புனராக்கம் சோடியம் புளூரைடு முன்னிலையில் புளூரோ அபடைட் மூலம் நடைபெறுகிறது.புளூரோ அபடைட்,ஹைட்ராக்சி அபடைட் போல பாதிப்பதில்லை.இதனால் பற்பசை உற்பத்தியாளர்கள் சோடியம் புளூரைடைஉற்பத்திப் பொருளுடன் சேர்க்கின்றார்கள் .
ஹைட்ரஜன் புளூரைடு தொழிற்சாலையில் ஒரு முக்கியமான மூலப் பொருளாக உள்ளது.பல கரிம,கனிம வேதிப் பொருட்களை உற்பத்தி செய்யும் வழிமுறையில் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது,அலுமினியத்தை மின்னார் பகுப்பு மூலம் பிரித்தெடுக்கும் வழிமுறையில் சோடியம் அலுமினியம் புளூரைடு மின்னார் பகுபொருளாக உள்ளது.ஹைட்ரோ புளூரிக் அமிலம் உலோகங்களைத் தூய்மைப்படுத்துவதற்கும்,பளபளப்பூட்டுவதற்கும் கண்ணாடியில் அரிப்பால் மென்கறையை(Etching) ஏற்படுத்துவதற்கும் இது பெருமளவில் பயன்படுகிறது.போரான் டிரை புளூரைடு,ஆண்டிமணி டிரை புளூரைடு போன்றவை ஹைட்ரஜன் புளூரைடு போல கரிம வினைகளில் வினையூக்கியாகச் செயல்படுகின்றன.புளூரின் ஊட்டியாக கோபால்ட் டிரை புளூரைடு ,குளோரின்டிரை புளூரைடு பயன்படுகின்றன. கந்தக ஹெக்சா புளூரைடு (sulfur hexafluoride) வளிம நிலையில் மின் கடத்தாப் பொருளாகும். மினூட்டமற்ற நியூட்ரானை இனமறிவது சற்று கடினம்.இதற்கு போரான் ட்ரை புளூரைடு வளிமம் பயன்தருகிறது. கெய்கர் முல்லர் எண்ணியை இவ்வளிமத்தால் நிரப்பி ,நியூட்ரானை உட்செலுத்த,இது போரானால் உட்கவரப்பட்டு ஆல்பாக் கதிர்களை உமிழ்கிறது. இதை இனமறிந்து இதற்குக் காரணமான நியூட்ரானை அறிய முடிகிறது.திண்ம நிலையில் போரானை இதற்காகப் பயன் படுத்துவதில் சில தொலில்நுட்பத் தடைகள் உள்ளன. அணு உலை எரி பொருளான செறிவூட்டப்பட்ட உரேனியத்தை,வளிம நிலையில் ஊடுபரவல் வழி முறை மூலம் பெறுகின்றார்கள். உரேனியம் ஹெக்சா புளூரைடு வளிமத்தில் U-235,U-238 யை விட விரைவாக ஊடு பரவுகிறது.இப் பண்பு எரி பொருளில் U-235 ன் செறிவை அதிகரிக்கப் பயன்படுகிறது.
புளூரினைக் கொண்டு பல்மமயமாக்கம் (Polymerisation) மூலம் பலம டெட்ரா புளூரோ எதிலின் (PTFE) என்ற பல்மம் உருவாக்கப் பட்டுள்ளது.இதன் வர்த்தகப் பெயர் டெப்லான் (Teflon) ஆகும்.இதிலுள்ள கார்பன்-கார்பன் பிணைப்பும்,கார்பன்-புளூரின் பிணைப்பும் வலிமையானவை.இதன் பரப்பு நேர்த்தியாகவும்,பிற பொருட்களோடு ஒட்டாமலும் இருக்கிறது. அதனால் உணவுப் பண்டங்கள் தயாரிக்கும் பாத்திரங்கள் செய்ய இது இன்றைக்குப் பயபடுத்தப்பட்டு வருகிறது. புளூரின் அணுக்கள் சுற்றியுள்ளதால்,பிற வேதிப் பொருட்களுடன் வினைபுரிய முடியாமல் கார்பன் அணுக்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன.டெப்லானின் பற்றற்ற தன்மைக்கு இதுவே காரணம். மேலும் இது பரப்பாற்றலை மிகவும் தாழ்த்தி விடுகிறது. அதனால் டெப்லான் வழுவழுப்பான தளத்தைப் பெற்றுள்ளது. திண்மப் பொருட்களிலேயே மிகவும் குறைவான உராய்வுக் குணகத்தைப் பெற்றிருப்பது டெப்லான்தான் . அரிமாணத்திற்க்கு உட்படாததால் இதை இதயத்திற்கான செயற்கை வால்வுகள் செய்ய பயன்படுத்துகிறார்கள் .
செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் கதிரியக்க அணு எண்மமான புளூரின்-18 ,பாசிட்ரான் ஊடுகதிர் படங்காட்டி (PET) யில் பயன் தருகிறது.இதன் அரை வாழ்வு 109.8 நிமிடங்கள்.இது நோயாளியின் உடம்பிலுள்ள திசுக்களை பாதிக்காமல் இருக்குமாறு அனுகூலமான அளவில் இதன் கதிர்வீச்சு இருப்பதால் இவ் வழிமுறைக்கு இதுவே சிறந்த மூலமாக இருக்கிறது. புளூரினின் சேர்க்கை ஒரு பொருளின் கட்டமைப்பு மட்டுமின்றி அதன் மின்னியியல் பண்புகளிலும் குறிப்பிடும் படியான மாற்றத்தைத் தோற்றுவிக்கின்றது.எனவே ஏற்கனவே அறியப்பட்ட உயர் வெப்ப நிலை மீக்கடத்திகளில் (Superconductors) புளூரினை ஊட்டி அதாவது புளூரினேற்றம் செய்து பெயர்ச்சி வெப்ப நிலையை மேலும் உயர்த்தலாம் Y1Ba2 CU3 F 2 O1. என்ற பீங்கான் பொருள் 155 K வெப்ப நிலையில் மீக்கடத்துவதாக அறிவித்துள்ளனர் என்றாலும் இது மறு சோதனைகள் மூலம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

social awareness- Mind without fear

உங்களோடு கொஞ்ச நேரம் மாணவர்களே. ஆசிரியர்கள் உங்கள் எதிரிகள் இல்லை.அவர்கள் உங்கள் எழுச்சிக்காக ஒவ்வொரு நிமிடமும் செலவழிக்கின்றார்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள பிணைப்பு உறுதியானது மட்டுமில்லை உண்மையானதும் கூட.சொல்லப்போனால் நீங்கள் வாழ்க்கையைத் திட்டமிடும் காலத்தில் உங்களோடு அதிகம் தொடர்புடையவர்களாக இருப்பது ஆசிரியர்கள் தான்.அந்த வகையில் மாதா,பிதாவை விட குருக்கள் முக்கியமானவர்களாக இருக்கின்றார்கள்.மாணவர்கள்-ஆசிரியர்கள் நட்பும் உறவும் எவ்வளவு உண்மையானதாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு இருவர் நலமும் உண்மையானதாக இருக்கும். நாங்கள் ஒரு மாணவன் கல்வி அறிவைப் பெற்று திறமையானவனாக வெளியேறி வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதையே விரும்புகிறோம்.உங்களுடைய நோக்கமும் அதுவாக இருந்து விட்டால் நாங்கள் எங்கள் முயற்ச்சியில் பாதி வெற்றி பெற்றது மாதிரித்தான்.அப்படி இல்லாத போது நம்முடைய உன்னதமான உறவில் விரிசல் ஏற்பட்டு விடுகிறது.அதைச் சரி செய்ய வேண்டிய கடமையும் எங்களுக்கு இருக்கிறது.அந்த நோக்கத்தில் அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் சோர்விலா மனம்(Mind without depression) என்ற பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. அதன் நோக்கத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வது நலம் தரும் என்பதால் அதுபற்றி விரிவாகப் பேச விழைகிறேன் கற்கும் கல்வியோடு வாழ்க்கையின் போக்கை எடுத்துச் செல்லும் போது நீங்கள் எதையுமே வித்தியாசமாகப் பார்ப்பதில்லை. அதனால் எந்த இடையூறும் ஏற்பட வழியில்லை.ஆனால் இதில் முரண்பாடு எழும்போது ஏமாற்றப்பட்டு விட்டோமோ என்று உணர்வீர்கள் .அப்போது நீங்கள் சோர்வினால் சொல்லொண்ணா வலியை உணர்வீர்கள். அது உங்கள் வாழ்கையில் போக்கை நிமிடத்தில் தடம் புரட்டிப் போட்டு விடுகிறது. நீங்கள் எங்களை விட்டு விலகிச் செல்வதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு நீங்களும் வேண்டும் .உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்களை நாங்கள் அறியப் புறப்பட்டு விட்டோம். மாணவர்களே உங்களுக்கு இதன் மூலம் நான் சொல்லும் முதல் அறிவுரை என்னவென்றால் Don't hold strong opinions about things you don 't understand உங்களுக்குப் புரியாதைப் பற்றி அதிகம் பேசாதீர்கள்.அப்படிப் பேசுவீர்களே ஆனால் நீங்கள் heroism என்ற தவறான வழியில் உங்களை அறியாமலேயே நடைபோடத் தொடங்கி விட்டீர்கள் என்பது உண்மையாகும். heroism என்பது உண்மையான கருத்துக்களின் வெளிப்படில்லை போலியான ஒருவரை உயர்வாக உயர்த்திப் பேசி ஆதாயம் தேடுவதும்,தன்னை ஒரு அறிவாளி என்று பிறர் நினைக்க வேண்டும் என்பதற்காக தெரியாத விசயங்களைப் பற்றி பேசுவதும், heroisam வளர்ச்சி பெறுவதற்கு தூண்டுதலாக இருக்கிறது .இது தமிழகத்தில் மக்களைப் பாதிக்கும் காரணங்களில் முதன்மையானதாக் இருக்கிறது. இதை முதலில் ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள் தொடரும் .....

Friday, June 1, 2012

eluthatha kaditham

குற்றவாளிகள் குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை,உருவாக்கப் படுகின்றார்கள் என்று சொல்வார்கள்.குற்றவாளிகளே இல்லாத ஒரு சமுதாயத்தில் ஒரு கால கட்டத்தில் எப்படி குற்றவாளிகள் உருவானார்கள்.ஒரு மனிதனைக் குற்றவாளியாக உருவாக்கியது எது? ஒருவனுடைய நல்லதற்கும் கெட்டதற்கும் அவனே காரணமாக இருக்கிறான் என்பதால் ஒருவன் கெட்டுப் போனதற்கு அவன் மனமே காரணமாக அமைகிறது.ஒருவனுடைய மனம் கெட்டுப் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.அதில் முதன்மையாக இருப்பது குற்றங்கள் பெருகும் போது அவை தவறு எனத் திருத்தத் தவறியதுதான்.குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவது சமுதாயத்தின் நலத்தைக் கட்டிக் காக்கும் முயற்சிகளில் ஒன்றாகும்.இது இன்றைக்கு கேலிக் கூத்தாகி வருகிறது என்பது தான் உண்மை.உண்மையான குற்றவாளி தண்டனையின்றி தப்பிப்பதும்,பெரிய குற்றவாளிகளை விட சிறிய குற்றவாளிகள் உடனடியாகவும்,கடுமையாகவும் தண்டனை பெறுவதும் மக்களிடையே வெட்ட வெளிச்சமாகி வருகிறது.அதனால் சமுதாயத்தின் நலன் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்பட்டு வருகிறது.இது எந்த இக்கட்டான நிலையில் போய் முடியும் என்று கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை.எண்ணத்தின் அதிர்ச்சி அலைகள் ஏற்படுத்தும் பயத்தினால் பாதியிலேயே அவைகள் மனத் திரையிலிருந்து அகன்று விடுகின்றன.குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் அதிகாரமுள்ளவர்களில் பெரும்பாலானோர் தாங்களும் மறைமுகக் குற்றவாளிகளாக இருக்கிறோம் என்ற உள்ளுணர்வுடன் செயல்படுவதால்,குற்றங்களுக்கு எதிராக முழுமனதுடன் செயல்பட முடிவதில்லை.அதனால் நாட்டில் குற்றவாளிகளே இல்லாமல் செய்ய எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் பெரும்பாலும் பயனற்றுப் போவதுடன்,மக்களின் மன நலத்தையும் பாதிக்கின்றது.இதனால் மக்கள் நேர்மையான வழிமுறைகளில் மீது கொள்ளும் நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்து வருகின்றார்கள் கிளர்ச்சியுற்ற அகமனதின் தூண்டுதல் மிக வலிமையானது. அதை எந்த வலிமையான புறச் சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாது. முடிந்த வரை அப்படிப்பட்ட நிலையை எட்டுவதை தவிர்க்க வேண்டும் அதுவே நல்ல அரசின் கடமையாக இருக்கும்.