Monday, April 29, 2019

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? - 48

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? 
நேரத்தைக் கழிப்பதற்காக மனிதர்கள் பிறப்பதில்லை . குறுகிய வாழ்நாளில் அரிய காரியங்களைச் செய்து முடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருக்க வேண்டும் .அது சமுதாயம் நிலைத்திருப்பதற்கு ஒவ்வொருவரும் கொடுக்கும் பங்களிப்பாகும்.  மண்ணில் மறைந்த பின்பும் மக்கள் மனதில் மறையாமல் வாழும் மாமனிதர்களின் பங்களிப்பு எங்ஙனம் சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி வளப்படுத்தி இருக்கின்றது என்பதையும் அதனால் நம்முடைய வாழ்க்கையில் ஏற்பட்ட பலன்களையும் எடுத்துக் கூறி  ஒவ்வொரு மனிதனும் எதாவது ஒரு வகையில் சாகாத சமுதாயத்திற்கு பங்களிப்புச் செய்ய வேண்டியதின் முக்கியத்தை வலியுறுத்திக் கூற வேண்டும். 
படிப்பு என்பது வகுப்பில் முதலிடம் பெறுவதற்காக இல்லை , வாழ்க்கையில் முதலிடம் பெறுவதற்காக என்பதை பெரும்பாலான மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே புரிந்து கொள்வதில்லை . மதிப்பெண் வகுப்பில் முதலிடத்தைத் தரலாம் . ஆனால் பயன்படுத்திக் கொள்ளும் அறிவும் தனித்த திறமைகளும் தான் ஒரு மாணவனுக்கு வாழ்க்கையில் முதலிடத்தைத் தரும். பெரும்பாலான மாணவர்கள் வகுப்பில் முதலிடம் பெறுவது என்பது வாழ்க்கையில் முதலிடம் பெற்றது போல என்று நம்புகின்றார்கள் .ஒழுக்கமும் ,உயர்ந்த நோக்கமும்  , சமுதாய நலம் சார்ந்த  கல்வியும் எண்ணத்தில் நிலைத்திருக்கும் போது  வகுப்பிலும் ,வாழ்க்கையிலும் முதலிடத்தைத் தரும்.
நல்ல பழக்கங்களைப் பின்பற்ற  சமுதாயத்தை ஒரு வழிகாட்டியாகக் கொள்ளலாம் ஆனால் தீயபழக்கங்களை கற்றுக் கொள்ள சமுதாயம் ஒரு காரணமாக இருக்கக் கூடாது . நல்ல சமுதாயமோ ,தீய சமுதாயமோ அது தானாக உருவாவதில்லை , மனிதர்களால்  மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டது.  இன்றைக்கு ஒவ்வொருவரும்  அக வொழுக்கத்தை  புறவொழுக்கத்திலிருந்து வேறுபடுத்தி மறைவொழுக்கமாகக் மேற்கொள்ளுவதால் சமுதாயம் மெல்ல மெல்லச் சீரழிந்துவருகின்றது .
தீய வழிகளில் முன்னேறிய  சமுதாயத்தை வெறுத்து அதை விட்டு தனித்துப் பிரிந்து  வாழ முடியாததால்  சமுதாயத்தைச் சீரழிக்கும் மனிதர்களைத் திருத்துவதைத் தவிர சிறந்த வழிமுறை ஏதுமில்லை . அது ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவதற்கு ஒவ்வொரு தனிமனிதனும் செய்ய வேண்டிய கடமையுமாகும் .இந்தக் கடமையின் முக்கியத்துவம் கருதி  உலகில் வாழ்ந்து மறைந்த மாமனிதர்கள் எல்லோரும் இதைத்தான் செய்தார்கள். ஏனெனில் ஒரு தீய சமுதாயத்தில் இப்பொழுது வாழ்ந்து விடலாம் ஆனால் முதிர்ந்த தீய சமுதாயத்தில்  நமக்குப் பிறகு நம் வருங்காலச் சந்ததியினர் வாழவே முடியாத சூழ்நிலையே நிலவும் .   

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?-47

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
 சாகாத சமுதாயத்திற்கு இது நல்லது , இது கெட்டது என்பதைப் பகுத்தறிந்து  நல்லனவற்றைத் தேர்வுசெய்து பின்பற்ற அறிவு தேவை .அறிவைப் பெறுவதற்கான வழிமுறைகள் பல உள்ளன , அவை ஒவ்வொன்றிற்கும் வேறுபட்ட தனிச் சிறப்புக்கள் இருந்தாலும் சுய தேவைக்கு ஏற்ப எல்லோராலும் எல்லா நிலைகளிலும் அவற்றைப் பயன்படுத்தி அறிவைப் பெறமுடியும். 
இந்த அறிவைப் பெறுவதற்கு இருக்கின்ற  முதலாவது வழியைப்  பட்டறிவு என்பர், எதையும் அனுபவப் பட்டு அறிந்துகொள்வதாகும் .  ஒருவர் தனக்குத் தானே கற்பிக்கும் ஆசிரியராகவும் , கற்றுக் கொள்ளும் மாணவராகவும் இருந்து கற்றுக் கொள்ளும் செய்முறை  வாயிலான கல்வி இது. அறிந்து கொள்ளும்போதே புரிந்தும் கொள்வதால்  ஆழமான பதிவுகளால் ஒருவர் அதைத் தன் வாழ்நாளில் மறப்பதேயில்லை. 
  நேற்றைய அனுபவம் இன்றைய ஆசிரியன் என்று சான்றோர்கள் கூறுவார்கள் .   ஆனால் வாழ்கைக்குத் தேவையான எல்லா அறிவையும் ஒருவர் வாழத் தொடங்குவதற்கு முன்பாக  தன் அனுபவத்தின் வாயிலாகவே பெறுவது என்பது  வாழ்நாள் காலத்திற்குள் இயலாததாகும்.
இரண்டாவது வகையான அறிவைப்  படிப்பறிவு   என்பர் . வாழ்க்கையில் நிறைந்த பட்டறிவினைப் பெற்ற அறிஞர்கள், ஆசிரியர்கள் , மூத்தவர்கள் எழுதிய நூல்களைப் படித்தும் பெறுவதாகும் .ஒவ்வொரு  அனுபவத்தையும் தானே பட்டறிவதற்குப் பதிலாக முன்னோர்களின் அனுபவங்களையே வழிகாட்டலாகக் கொண்டு பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்ட வாழ்க்கையைத் தொடங்குவதற்கு இது வழிவகுக்கின்றது .இதனால் கால விரயம் தவிர்க்கப்பட்டு  வாழ்க்கைப் பயணம் எளிதாகிறது .படிப்பறிவிற்காகச் செலவிடும் நேரம், தொகை , எல்லாம் நல்ல முதலீடுகளாகும். 
மூன்றாவது வகை சொல்லறிவு எனப்படும் . நூல்களைக் கற்கும் வாய்ப்பில்லாதவர்கள் , அந்நூலைக் கற்றுத் தேர்ந்த ஆசிரியர்கள் வாயிலாகக் கேட்டுப் பெறும் அறிவாகும். "கற்றிலன் ஆயினும் கேட்க " என்பது வள்ளுவம் . பட்டறிவையும் சொல்லறிவையும் பெறுவதற்கு ஒருவர் எவ்வளவு செலவு செய்கின்றாரோ அதைப்  போல பல மடங்கு  பயனீட்டமுடியும். 
பட்டறிவையும் சொல்லறிவையும் ஒரு குழந்தைத் தானாக விரும்பிச் செய்யுமாறு செய்வதற்கு சில வழிகள் இருக்கின்றன. இது நம்முடைய கல்வி முறையில் கூட பின்பற்றப்படுகின்றது . அகர வரிசையில் நன்னெறிகளைச் சொல்லும்  ஆத்திச்   சூடி , கொன்றை வேந்தனை ஆறு வயதில் படித்தாலும் நூறு வயதில் கூட மறப்பதில்லை.  புத்திசாலித்தனமான பெற்றோர்கள் இதைப் பின்பற்றி குழந்தைகளுக்கு மிக எளிதாகக் கற்றுக்கொடுக்கின்றார்கள். பாடம் எளிய பாடல் வரிகளாக இருந்தால் , எதுகை மோனையுடன் சொல்லப்பட்டால் , பட விளக்கத்தையும் காட்டினால், குழந்தைகள் மிக விரைவாகவும் விருப்பத்துடனும் கற்றுக்கொண்டு விடுகின்றன. இதற்குக் காரணம் இயலோடு இணைத்த இசையாகும். இசை மீது மனம் கொண்டுள்ள இயற்கையான பிரியத்தை கல்வி கற்பதில் பயன்படுத்தினால் இசையோடு சேர்ந்து கல்வியும் கற்றுக்கொள்ளப்பட்டு விடுகின்றது.

Sunday, April 28, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 46

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
பயன் முழுதும் தனக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று உள்ளூர விரும்புவதால் பிறருடன் இணைந்து செய்ய வேண்டிய வேலைகளையும் தனித்தே செய்ய முற்படுகின்றோம் . நாம் எப்படி பிறருக்கு விளைபயன்களைக் கொடுப்பதை விரும்பவில்லையா அது போல பிறரும் நமக்குக் கொடுப்பதை விரும்புவதில்லை . கொடுப்பதால் நமக்கு ஏற்படும் இழப்பைவிட பெறாமல் போவதால் ஏற்படும் இழப்பு அதிகம்  என்பதால் இணைந்து செயலாற்ற வேண்டிய சூழ்நிலைகளில் இணைந்து செயல்படவேண்டும். 
மேலும் இதனால் வேலைகள் பயனுறுதிறனுடன் முழுமை பெறாமல் போபவதற்கும்  கால தாமதத்துடன் முடிப்பதற்கும்  வாய்ப்பு ஏற்படுகின்றது . இணைந்து செயலாற்றும் போது நட்பு வலுப்பெறுகிறது .ஆக்கப்பூர்வமான  புதிய நட்புகளும் பயன்தருகின்றன. போலித்தனமில்லாத இந்த நட்பு  வாழ்க்கை முழுவதற்கும் இனிமையையும் மகிழ்ச்சியையும் தருகின்றது. உதவி செய்வதற்கும் உதவி பெறுவதற்கும் கூடுதல் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ள முடிகின்றது .
இணைந்து செயலாற்றுவது பல நன்மைகளைக் கொண்டுள்ளது . முதலாவது  நேரம் மிச்சமாவதால் வேறு வேலைகளைச்  செய்ய தேவையான நேரம் கிடைக்கின்றது . இரண்டாவது கூட்டு முயற்சியில் எல்லோருடைய அறிவும் திறமையும் ஒன்று திரண்டு சங்கமிக்கின்றன.அதனால் வேலையை  பிழையின்றி பயனுறுதிறனுடன் செய்து முடிக்கும்  நிலை ஏற்படுகின்றது.
வேலை தெரியாதவர்கள் இருக்கலாம் ஆனால் வேலை இல்லாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது.ஊதியத்திற்காகச் செய்வதுதான் வேலை என்பதல்ல , நாமே மேற்கொள்ளும் கடமைகளும் வேலைதான் .  பலர் செய்வதற்கு ஒரு வேலையும் இல்லை என்று பொழுதை வீணாகக் கழித்து விடுகின்றார்கள் .தன்னுடைய அறிவையும் திறமையையும் வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்புத் தேடவும் . பிறருக்கு உதவி செய்யவும்,  சமுதாயத்தின் நலத்தைப் பாதுகாக்கவும் , நாட்டின் வளத்தை மேம்படுத்தவும்  ஒவ்வொரு குடிமகனும் செய்யவேண்டிய வேலைகள் நிறையவே இருக்கின்றன .இதை இனமறிந்து கொள்ள மனம் காட்டும் தயக்கமே வேலையில்லை என்று ஒப்புக்கொள்ளச் செய்துவிடுகிறது  உண்மையில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை முழுதும் செய்வதற்கு வேலைகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. பலர்  வேலைக்காக ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் , ஓய்வுக்காக வேலைசெய்யும் நாகரீகத்தை உட்புகுத்தி வருவதால் தனிமனிதனின் கடமைகள் செய்யப்படாமலே இருக்கின்றன  .
வேலை ஏதுமில்லை என்று நினைக்கும் நேரத்தில் மாணவர்கள் தங்கள் துணைத்  திறமைகளை  வளர்த்துக் கொள்ள வேண்டும்    

Saturday, April 27, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 45

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?  
பெரும்பாலான மாணவர்கள் காலத்தை வீணாக்கி விடுகின்றோம்  என்று தெரியாமலேயே வீணடித்து விடுகின்றார்கள் . இது அவர்களே அவர்களுக்குச் செய்து கொள்ளும் தீங்கு என்பதாலும் , காலம் இலவசமாகக் கிடைக்கின்றது என்பதால் இன்றைக்கு  இழந்த காலத்தை நாளைக்குப் பெறலாம்  என்று நம்புவதாலும் இதற்காக மனம் வருந்துவதுமில்லை , திருந்துவதுமில்லை      
ஒரே நேரத்தில் பல சிந்தனைகள் , பல வேலைகள் செய்வதும் . பல நேரங்களில் ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பதும் , சரியான நேரத்தில்  தவறாகச் செய்வதும் , தவறான நேரத்தில் சரியாகச் செய்வதும் நேரத்தை வீணாக்குவதற்குச் சமமாகும். பல வேலைகளில் ஈடுபட்டு ஒருவேலையையும் முழுமையாகச் செய்யாமல் பாதிப்பயனைப் பெறுவதைவிட ஒரு நேரத்தில் ஒரு வேலையை முழுமையாகச் செய்து அதனால் கிடைக்கும்  முழுப்பயனைப்  பெறுவதும் , அப்படி எல்லா வேலைகளையும் செய்து ஒவ்வொரு வேலையின் முழுப்பயனைப் பெறுவதும்  பயனுறு திறனை அதிகரிக்கும் .
தேவையில்லாத விவாதங்களில் ஈடுபடுவது நேரத்தையும் ,ஆற்றலையும் இழப்பதாகும் . சிறிதும் பயன்தராத , எண்ணத்தையும் ,செயலையும் திசை திருப்புகின்ற விவாதங்களிலிருந்து  விடுவித்துக் கொள்வது வெற்றிக்கு பாதி வழி வகுத்த மாதிரி . நேரமில்லை என்று சொல்வது ஒருவர் தன்னை அதிகப் பரபரப்பாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக  வாய் சொல்லும்  பொய். நேரத்தைச் சரியாகத்  கையாளத் தெரியாதவர்கள் ,  புத்திசாலித்தனமாக ஒரு வேலையை குறைந்த நேரத்தில் செய்து முடிக்கத்  தெரியாதவர்கள் , சும்மா இருப்பதில் இருக்கும் விருப்பத்தைக் காட்டிக்  கொள்ள விரும்பாதவர்கள் உச்சரிக்கும்  வார்த்தையே இது  .
ஒவ்வொரு  நிமிடத்தையும் செலவிடுவதில்  கவனமாக இருந்தால் எதிர்காலத்தைப் பற்றி கவைப்பட  வேண்டாம் . அது தானாகவே சிறந்ததாக அமைந்து விடும்  நிகழ்காலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றவனுக்கு வளமான எதிர்காலம் இலவசமாகக் கிடைத்து விடுகின்றது . நிகழ்காலத்தைத் தவறவிடுகின்றவனுக்கு எதிர்காலம் என்றொன்று வருவதேயில்லை . 

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? -44

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? 
பெற்றோர்களின் கவனிப்பு , அக்கறை  மற்றும் வழிகாட்டலுடன் வளர்ந்த குழந்தைகளில் 95 சதவீதம் பேர் வாழ்க்கையில் தோற்றுப்போனதில்லை .பயனுறு திறன்மிக்க வாழ்க்கையை தன்வசப் படுத்திக் கொள்கின்றார்கள் . பெற்றோர்களால் அக்கறை காட்டப்படாத அல்லது  தவறாக அக்கறை காட்டப்பட்ட குழந்தைகள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்ததே இல்லை. இடையில் எதாவது  மாற்றம்  நிகழ்ந்தலேயொழிய அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதில்லை.பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ப் பள்ளியில் சேர்த்து விடுவதோடு சரி. அதன் பின்னர் குழந்தைகளின் கல்வித் பயணம் ஆசிரியரோடு மட்டும் தொடருகின்றது .ஒரு ஆசிரியர் பள்ளியில் பல மாணவர்களுக்கும் பொதுவானவராக இருப்பதால் தனிப்பட்ட முறையில் ஒரு மாணவரிடம் மட்டும் அக்கறை காட்டமாட்டார்.         
கவனிப்பு என்பது ஒவ்வொரு முறையும் தவறான வழியில் சென்றுவிடாமல் ,திட்டமிட்ட சரியான வழியில் மேற்கொள்ளும் முன்னேற்றத்தை க் கண்காணித்தலாகும். வழிமாறிச் செல்லும் போது  கண்டிப்பை விட அன்பான அறிவுரை அதிகப் பலன்தரும் .கடுஞ் சொற்கள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.  கண்காணிக்கின்றோம் என்பது குழந்தைகளுக்குத் தெரியாமலே கண்காணித்தல்  அவர்களுடைய சுயமதிப்பிற்கு பங்கம் ஏற்படுத்தாது .  குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோர்கள் அக்கறை கொண்டிருப்பதை அவர்கள் உணருமாறு செய்யவேண்டும் .
அக்கறை என்பது குழந்தைகளுடன் ஒவ்வொருநாளும் கொஞ்ச நேரம் இருப்பது மட்டுமில்லை , அவர்களுக்குப் புரியாத பாடங்களைச் சொல்லிக் கொடுக்கலாம், கல்வி சம்பந்தமான அறிவுரைகளை க் கொடுக்கலாம். பொது அறிவியல் பற்றி விளக்கங்களை விவரிக்கலாம் . வளர்ச்சிக்கான வாய்ப்புக்களை உருவாக்கித் தரலாம்.
இயற்கையில் ஒரு மிருகத்தின் குட்டி தன் தாயிடமிருந்து  வாழ்க்கை முழுவதற்கும் தேவையான வாழும் முறையைக் கற்றுக்கொள்கிறது . இயற்கையின் விதி அதுதான் .ஒரு தாய் மிருகம் தன் குட்டியிடம் காட்டும் அக்கறை அக்குட்டித்  தானாகத் தனித்து வாழ நம்பிக்கை பெற்று தாயை விட்டுப் பிரிந்து செல்லும்வரை தொடர்கின்றது. பிள்ளைகளை வளர்க்கும் போது தவறு செய்து  விட்டு அவர்கள் வாழும் போது வருத்தப்பட்டுக் கொள்வதால் எந்தப் பயனும் விளைவதில்லை. 
வழிகாட்டல் என்பது குழந்தை தனக்கென  ஒரு குறிக்கோளை உருவாக்கிக் கொள்வதற்கும் , அதை நிறைவேற்ற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதும் , அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள உதவுவதும் ஆகும்  

Friday, April 26, 2019

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? -43

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ?
நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இளம் வயதிலிருந்தே பழக்கத்தால் பெறவேண்டிய ஒரு திறமை  இதனால் நேரத்தின் அருமையை அவ்வப்போது குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் .இப் பழக்கத்தால் ஒவ்வொருநாளும் கூடுதல் பணி செய்ய போதிய நேரம் கிடைக்கின்றது .குறைந்த நேரத்தில் நிறைவாகச் செய்வது வேலையின் பயனுறு திறனை அதிகரிக்கச் செய்கின்றது .இது நிறுவனங்களில் பணியாற்றும் போது நிர்வாகத் திறனை மேம்படுத்துகிறது. அதனால் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் அதிகரித்து , தேவையில்லாத செலவுகள் தவிர்க்கப்பட்டு , பொருள் ஆதாயமும் அதிகரிக்கின்றது.
நேரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள உடனுக்குடன் திட்டமிட்டு தகுந்த சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ளவும் , முன்னுரிமை அளித்து செய்யவேண்டிய வேலைகளைச்  செய்யவும்  . தேவையில்லாத வேலைகளை விட்டுவிடவும்  தெரிந்து கொள்ளவேண்டும். ஆளுமைத் திறமைகளுள் நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் என்பதும் முக்கியமானது. இதை ஒருவரது இயல்பான அனுபவத்தின் மூலமே தெரிந்து கொள்ள முடியும் என்பதால் சிறப்புத் தேர்வு மூலமே இதைச் சரியாக மதிப்பிடமுடியும். ஒரு நிறுவனத்தின் செயல் திறனை அதிகரித்து பயனுறு திறனை அதிகரிக்க இது பெரிதும் உதவுகின்றது 
ஒரு குறிப்பிட்ட பணியில் இருக்கும் போது குறுக்கிடும் பிறவற்றைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குறுக்கீடு புறத்திலிருந்து மட்டும் வருவதில்லை, தனக்குத் தானே குறுக்கீடாகவும் இருக்கமுடியும். கவலைப்பட்டு பணியை த் தாமதப்படுத்துவதும், பிறருடன் குறை கண்டு கோபப் பட்டு கவனத்தை இழப்பதும் . முக்கியமான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது செல்போன் பேசுவதும்  அகக் குறுக்கீடாகும் . 

Thursday, April 25, 2019

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? -42


சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? 
பொதுவாக மாணவர்கள் எப்பொழுதும் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்காமல் என்ன செய்ய வேண்டும் என்று தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருப்பதுதான்  அவர்களை வேலை செய்யத் தூண்டாமல் சோம்பேறியாகவே வைத்திருக்கின்றது . சூழ்நிலைகளுக்கு ஏற்ப விரைந்து முடிவெடுத்து செய்யவேண்டிய செயல்களைச்  செய்வதில்லை அல்லது மிகுந்த காலதாமதத்துடன் செய்கின்றார்கள். அப்படிச் செய்யும் போது செய்யப்படும் வேலைகள் முழுமையாகச் செய்யப்படுவதில்லை . எதிகாலத்தை மேயும் அவர்கள் நிகழ் காலத்தைத் தவறவிட்டுவிடுகின்றார்கள் . இறந்த காலம் இருந்ததால் தான் நிகழ்காலம்  வருவதுபோல  நிகழ்காலம் இருந்தால்த்தான் எதிர்காலம் மலரும்.நிகழ்காலமில்லாமல் எதிர்காலமில்லை என்பதை புரிந்து கொண்டுவிட்டால் வளமான எதிர்காலத்திற்காக நிகழ்காலத்தைப்  பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்
பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் , புத்தகங்களையும் பிற பொருட்களையும்  அவர்களுக்குரிய இடங்களில் வைப்பதை வழக்கமாகக் கொள்ள  வேண்டும். பொருட்களை எடுத்த இடத்தில்  வைப்பதால்  அப்பொருளை எடுக்க நினைக்கும் போது  தடுமாற்றமின்றி உடனடியாக எடுக்க முடிகின்றது . வெவேறு இடங்களில் வைக்கும் போது மறதியின் காரணமாக அவற்றை இடமறிந்து பயன்படுத்துவதற்கு காலதாமதமாகின்றது . மாலை விளையாட்டுக்கு உகந்த நேரம்,பொழுது போக்கு க்காக   மட்டுமின்றி உடல்நலத்திற்காகவும்  விளையாட்டில் ஒரு திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகவும்  விளையாடவேண்டும். பிறகு பெற்றோர்களுடன் அல்லது நண்பர்களுடன்  கலந்துரையாடல் . அன்றைக்கு பள்ளியில் நடந்த வற்றையும் , பிற பொது விஷயங்களைப் பற்றிக்  கூறியும் கேட்டும் தெரிந்து கொள்ளலாம்.ஒவ்வொருநாளும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இருந்து பேசிக்கொண்டிருப்பது அவர்களுக்கு ஊக்கத்தையும் சுய மதிப்பையும் கொடுக்கும்.செய்தித் தாளைப் படித்து தேவையான செய்திகளைச்  சேகரிக்கலாம்.பொது நூலகங்களுக்கு ச் சென்று கல்வி தேடலைச் செய்யலாம். பின்னர் வீட்டுப் பாடங்களைச் செய்து முடிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தி ல் இரவு உணவை முடித்துக் கொண்டு  படுக்கச் செல்லலாம் . உறங்குவதற்கு முன்னர் அன்றைக்கு நடத்தப்பட்ட பாடங்களைப் பற்றி மீண்டும் நினைவுபடுத்தி புரிந்து கொண்டதின் அளவைத் தெரிந்து கொள்ளலாம் . இரவில் படுப்பதற்கு முன்னர் தொலைக்காட்சி , கைபேசியைப் பொழுதுபோக்கிற்காகப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அவற்றில் கண்டு மகிழ்ந்த காட்சிகள்  நினைவில் நிலைத்து நின்று எண்ணங்களை திசை திருப்பிவிடும்.உறக்கம் வருவதற்கும் நேரமாகலாம். இது மறுநாள் விழித்தெழுவதற்கு தாமதமாகி வழக்கமான வேலைகளை உரிய நேரத்தில் செய்வதற்கு  தடையாகிவிடுகின்றது
ஒவ்வொருநாளும் வீட்டுப் பாடங்களை அன்றைக்கே முடித்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். தள்ளிப் போடப்படும் எந்தப்பணியும் முழுமையாக முடிக்கப்படுவதே இல்லை . செய்யவேண்டாம் என்பதற்கு இடையில் வரும்  ஒரு சமாதானமே  தள்ளிப் போடுதல் என்பதை உணர்ந்தவர்கள் வேலையும் , வேலை செய்வதற்குரிய காலமும் இருக்க வேலையைச் செய்யாமல் விட்டுவிடுவதில்லை . 

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? -41

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? 
பள்ளிக்குச் செல்லும் போது அன்றைக்கு நடக்கும்  வகுப்புகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களையும் ,குறிப்பெழுதும் நோட்டுக்களையும், எழுதுவதற்குத் தேவையான பேனா ,பென்சில்களையும்  சரி பார்த்து எடுத்துச் செல்லவேண்டும் .மறந்துவிட்டோம் என்று இழப்புக்களை ஏற்றுக்கொள்ளக்க கூடாது  இது மறதியை அதிகப்படுத்தும் . மறதி என்பது கவனக் குறைவின் வெளிப்பாடே . அக்கறையின்மையும் , ஒரே சமயத்தில் பலவற்றில் அக்கறை கொள்வதும் மறதியைத் தூண்டுகின்றது . மறதிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் ,பழக்க வழக்கங்களை ஒவ்வொருமுறையும் முன்திட்டமிட்டு அதன்படி பின்பற்றிவரும் பழக்கத்தை அக்கறையுடன் மேற்கொள்ளவேண்டும்.
எப்படி வீட்டிலிருந்த பள்ளிக்குச் செல்லும் போது  புத்தகங்களையும் பிற பொருட்களையும் சரியாக எடுத்துச் செல்கின்றோமோ அது போல பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போதும் சரி பார்த்து  எடுத்துச் செல்லவேண்டும். 
வகுப்பில் அமர்வதில் கூட ஒரு ஒழுக்கம் இருக்கவேண்டும். எங்கு வேண்டுமானாலும் உட்காரலாம் என்ற சுதந்திரம் இருக்குமானால் , ஆசிரியரை கரும்பலகையில் எழுதுவதை பார்க்கக் கூடியவாறு , விளக்கிக் கூறுவதை  கேட்கக் கூடியவாறு அருகில் அமர்வது நல்லது. வெளியில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கத் தூண்டி  கவனத்தை எளிதில் சீர்குலைக்கும் அமைவிடங்களைக்  குறிப்பாக  ஜன்னலோரமாக , அல்லது கதவோரமாக  இருப்பதைத் தவிர்க்க வேண்டும். 
வகுப்பில் கவனமாக இருந்து நடத்தும் பாடங்களை ப் புரிந்து கொண்டால் , வீட்டில் திரும்பப் படிக்கும் போது முழுமையாகப் புரிந்து கொள்வது எளிதாக இருப்பதுடன் , அதற்கு  அதிக நேரமும் ஆவதில்லை .வகுப்பில் படம் நடத்தும் போதே முழுமையாகப் புரிந்து கொண்டால், வீட்டில் படிக்க வேண்டிய அவசியம் கூட இருக்காது . கல்வியில் சிறந்து விளங்க மன உறுதியுடன் அர்பணித்துக் கொண்டால்  அந்த அர்ப்பணிப்பு ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் இயல்பாகத் தோன்றி , சாதனைகளைக் கூட எளிய செயல்களாக்கிவிடும்.
வகுப்பில் கவனிக்க த்  தவறினால்  அந்தப் பாடம் புரியாமல் போகும். மீண்டும் மீண்டும் படித்துப் புரிந்து கொள்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், பிறவற்றைப் படிப்பதற்கு அல்லது பிற வேலைகளைச் செய்வதற்கு நேரம் குறைவாகும் . ஒரு பாடம் புரியாவிட்டால் , அதைத் தொடர்ந்து படிக்கும் ஆர்வம் குறையும் . அரைகுறையான கல்வி திறமையை வளர்ப்பதற்கு உதவுவதில்லை. 
கல்வியில் ஆர்வமின்மைக்கு அடிப்படையான காரணம் ஏதோவொன்று மனதில் இருக்க வேண்டும்.      
வகுப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது அருகில் அமர்ந்திருக்கும் மாணவரோடு பேசுவது, தொலைவில் அமர்ந்திருக்கும் மாணவருக்கு ஒரு துண்டுச் சீட்டில்  குறிப்பெழுதி அனுப்பிவைப்பது, பிற பாடங்களுக்கான வீட்டுப் பயிற்சியை செய்வது , வெளியில் நோட்டமிடுவது போன்ற பல காரணங்களினால் ஒரு மாணவரது கவனம் தவறிப் போகலாம் .வீட்டில் அதிக நேரம் விளையாடுவது, உறங்குவது , புரிதலின்றிப் படிப்பது , தேவையில்லாத வற்றில் அக்கறை கொள்வது போன்ற பல காரணங்களினால் கவனம் திசை மாறிப் போகலாம்.  
அடிப்படையான இந்த அகவொழுக்கத்தை ஒரு குழந்தைக்கு பெற்றோர்கள் மட்டுமே முழுமையாகக் கற்பிக்க  முடியும்     

Wednesday, April 24, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?- 40

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?
ஒரு குழந்தை வளரும் போது ஒரு வேலையும் இல்லாமல் பொழுதை வீணாகக்  கழித்துவிடாமல்  பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு உண்டு . அயல் மொழிப் பயிற்சி ,இசைப் பயிற்சி, நுண்கலைப் பயிற்சி, நீச்சல் பயிற்சி , விளையாட்டுக்களில் பயிற்சி ,யோகா பயிற்சி ,என ஓரிரு விருப்பத்   துறைகளில் பயிற்சி பெற்று சிறந்து விளங்க நல்வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் . இது குழந்தைகளின் பிற துறை சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவுவதுடன் ,ஒரு குழந்தை நேரத்தை பயனுள்ளவாறு செலவழிக்கவும் கற்றுக்கொள்கிறது .அதனால் தீய சிந்தனைகளை மேற்கொள்ளவும், தீய செயல்களைச்  செய்யவும் நேரம் கிடைப்பதில்லை. .எந்த வேலையும் இல்லாமல் சும்மாவே இருப்பவர்கள் தான் தீய செயல்களையும், தீய சிந்தனைகளையும் மேற்கொள்கொள்கின்றனர். நாட்டில் குற்றங்கள் பெருகிவருகின்றன என்றால் அதற்கு  வேலையில்லாமல் அலையும் மக்களும் ஒரு காரணம். எல்லோருக்கும் வேலைவாய்ப்பு இருக்குமானால் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடய  காலம் இல்லாமையால் சமுதாயக் குற்றங்கள் பெருமளவு இயற்கையாகவே தடுக்கப்பட்டுவிடும் . சரிசமமான சமுதாயம் என்பதும் அதுதான்
 ஒரு குழந்தை பிற துறைகளில் பயிற்சி மேற்கொள்ளும்  போது  மிகுந்த ஆர்வம் கொண்டு முழு நேரத்தையும் அதற்காகவே செலவிட்டு கல்வி  கற்பதை  நிறுத்தி விடக்கூடாது . கல்விக்கும்  ,பிற துறை திறமைகளுக்கும் தேவைப்படும் காலத்தை முன்கூட்டியே திட்டமிட்டு ஒரு வேலையில் சேரும்வரை  அதைப் பின்பற்றி வருமாறு செய்யவேண்டும்.  வாழ்க்கைக்குத் தேவையான சம்பாத்தியத்தைப் பெறலாம் என்ற நம்பிக்கை வரும்போது பிற துறை திறமைகளை கூடுதலாக வளர்த்துக் கொள்ள கூடுதல் நேரம் ஒதுக்கலாம்.

Tuesday, April 23, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 39

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
நல்லொழுக்கங்களின் அவசியத்தை சமுதாயத்தில் நடக்கும் உண்மை நிகழ்வுகளை க் கதை போல எடுத்துக் கூறும் போது அதன் தாக்கம் வலிமையாக இருக்கின்றது.நல்லது செய்வதினால் ஏற்படும் பயன்களையும் தீமை செய்வதினால் விளையுயம் தீங்குகளையும் எடுத்துக்காட்டாக உண்மை பேசுவதினால் விளையும் நன்மைகளையும் , பொய் பேசுவதினால் விளையும் தீமைகளையும் அவ்வப்போது தக்க உதாரணங்களுடன் எடுத்துக் கூறவேண்டும்.
நல்லொழுக்கத்தின் கட்டளைகள்  
1.உண்மையே பேசவேண்டும் ,பொய் பேசக்கூடாது 
இக்கருத்தை  மகாத்மா காந்தி சிறுவயதில் அரிச்சந்திரா நாடகம் பார்த்தபின் ஏற்படுத்திய மாற்றங்களை எடுத்துக் கூறி வலியுறுத்தலாம். நீதி மன்றத்தில் ஒரு பொய்சாட்சி எப்படி வழக்கின் போக்கை திசை திருப்பிவிடுகின்றது என்பதையும் , அதனால் குற்றவாளிகள் தப்பித்து மேலும் மேலும் சமுதாயத்தை சீரழித்து வருவதையும் விளக்கிக் கூறலாம். 
ஏற்றுக்கொள்வதற்காக ஒரு கருத்தைத் தெரிவிக்கும் போது அதற்கு முரண்பட்ட கருத்துக்களை சொல்லக் கூடாது . எடுத்துக்காட்டாக , பொய் சொல்லக் கூடாது என்பதை வலியுறுத்தும் போது நல்லது நடக்கும் என்றால் பொய்யும் சொல்லலாம் என்பதைத் தெரிவிக்கக் கூடாது . பொய் சொல்லக் கூடாது என்ற நேர்மறையான கருத்தை எண்ணத்தில் நிலைப்படுத்துவதற்கு முன்னரே எதிர்மறையான கருத்தையும் சேர்த்தே விதைக்கக் கூடாது . விதியைக் கற்றுக்கொள்வதற்கு முன்பாக விதி விலக்குகளைப் பற்றித்  தெரிவிப்பது  குழப்பத்தை ஏற்படுத்தும் . விதியைப் பின்பற்றுவதற்கு விதி விலக்கு ஒரு நிரந்தரமான குறுக்கு வழியாக அமைந்துவிடும் என்பதால் விதிமீறல்கள் அனுமதிக்கப்பட்டதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும் . விதிகளை நன்கு புரிந்து கொண்டு  மனப்பக்குவம் அடைந்த பின்னரே விதி விலக்குகளைப் பற்றி த் தெரிவிக்க வேண்டும் . அதையும் அதற்கான காரணத்தோடு விளக்கிக் கூறவேண்டும்.  
2.தன் உடைமைகளைப் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும் . அது பிறருக்குத் தேவைப்பாட்டால்  கொடுத்து உதவலாம். விருப்பமில்லை என்றால் காரணத்தோடு மறுக்கலாம் . பிறருடைய உடைமைகளில் ஆசை கொண்டு திருடக்கூடாது . எதை அடைய  விரும்பினாலும் அதை சுய முயற்சியினால் சம்பாதிக்க வேண்டுமே ஒழிய திருடி மற்றவர்களையும் திருடர்களாக்கி சமுதாயத்தைச் சீரழிக்கக் கூடாது .  எந்தத் தவறுகள் செய்வதற்குத் தனக்கு உரிமை இருக்கின்றது என்று நினைக்கின்றோமோ அதே தவறுகளைச்  செய்ய மற்றவர்களுக்கும் உரிமை இருக்கும் என்பதால் எல்லோரும் மறைமுகமாகக் குற்றவாளிகளாக வளரும் வாய்ப்பு ஏற்படும். தன் உடைமைகளைப் பிறருக்குக் கொடுத்து உதவும் மனப்பான்மையால்  நட்பையும் மனித நேயத்தையும் வளர்க்க முடியும். பிறருக்கு உதவுவதால் பிறரிடமிருந்து உதவி பெறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கின்றது .குழந்தைகள் தங்கள் உடைமைப் பொருட்களைத் சுத்தமாக வைத்துக்கொள்ளவும் , அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் எப்பவும் வைத்துப் பயன்படுத்தவும் பழக்கவேண்டும். 
3.கால முறைப்படி  கொடுக்கப்பட்ட கடமைகளைச் செய்து முடிக்க பழக்க வேண்டும் .நேரந்தவறுவதை அனுமதிக்கக் கூடாது . நாளை. நாளை என்று செய்ய வேண்டிய கடமைகளைத் தள்ளிப் போடக்கூடாது . இது காலையில் அதிக நேரம் தூங்காமல் படுக்கையில்  எழுவதிலிருந்து  தொடங்கி  இரவில் அதிக நேரம் விழித்திருக்காமல்  உறங்கப் போவது வரை உள்ளடங்கி உள்ளது .
4.பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். கோபப்பட்டு கடுஞ்சொற்களைப் பேசாமல் இனிய சொற்களையே பேசவேண்டும் . பிறர் மனம் புண்படும்படி நடந்து கொள்ளக் கூடாது . ஒருவருடைய மனத்தைப் புண்படுத்தினால், நம்  முன்னேற்றத்திற்குத் தடையாக ஒரு எதிரியை நாமே உருவாக்கிக் கொள்கின்றோம்.தவறு செய்வது மனித இயல்பு. மனித இயல்பு என்பதற்காகத் தவறுகளைச் செய்துகொண்டே இருக்கக் கூடாது . நம்மையும் அறியாமல் தவறு செய்து விட்டால் அதைப் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டு வருத்தப்பட்டு மன்னிப்பைக் கேட்டுப் பெறவேண்டும்.    

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 38

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
ஒரு குழந்தை தானாகப் படிப்பதில் ஆர்வம் கொண்டு கல்வி தேடுதலை மேற்கொள்ளும் வரை பெற்றோர்கள் கூடவே இருந்து புரியக் கற்றுக் கொள்வதற்குத் துணைபுரியவேண்டும் . 
ஒவ்வொருநாளும் ஒரு வார்த்தை  என்று வரையறுத்துக் கொண்டு மொழியைக் கற்றுக் கொடுக்கலாம். சொற்களை கற்றுக்கொடுக்கும் போது சரியான உச்சரிப்பிலிருந்து தொடங்கி , மூலச் சொல் , மூலச் சொல்லிலிருந்து விரிவடையும் துணைச் சொற்கள்.அந்தச் சொற்களுக்கு இணையான வேற்றுச் சொற்கள் , எதிர்ச் சொற்கள்,சொற்களைக் கையாளும் போது ஏற்படும் பிழைகள், குறிப்பிட்ட சொல் மற்றும் அதன் துணைச் சொற்களைப் பயன்படுத்தி சொற்றொடர்களை ஏற்படுத்துதல்  போன்ற பயிற்சிகள் மூலம் கற்பித்தால் , மொழியறிவு விரிவடைவதுடன் , அந்தக் குழந்தை தானாகா அகராதிகளைப் புரட்டிப் பார்க்கும் பழக்கத்தை மேற்கொண்டு மொழியில் ஒரு புலமையைப் பெறுவதற்கு சுயமாக ஒரு வழியைத் தேடுகின்றது .  மொழியறிவு விரிவடைய குழந்தைகளைச் சிறுசிறு கட்டுரை எழுதத் தூண்டலாம் .  மொழியை மட்டுமின்றி தேவையான விவரங்களைப் பெற கணனியைப் பயன்படுத்தும் முறையையும் இளம் வயதிலேயே கற்றுக் கொடுத்து விட்டால் , கணனியைத் தவறான பயன்களுக்குப் பயன்படுத்துவது இயல்பாகவே  தடுக்கப்பட்டுவிடுகின்றது 
அவ்வப்போது படிப்பதற்கு இலக்கியம் , பொது அறிவு ,சரித்திரம் ,சுய முன்னேற்றம் தொடர்பான நூல்களை வாங்கி க் கொடுக்கலாம். .தானாக விருப்பப்பட்டு படிக்கும் வரை கூடவே இருந்து கண்காணித்து வழிகாட்டலாம் . புத்தகக் கண்காட்சி , அறிவியல் கண்காட்சி போன்றவற்றிற்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல மறக்காதீர்கள் . குழந்தைகளுக்கு இந்த புறத் தொடர்பு  நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது . தானாக முன்னேறிச் செல்லத் தேவையான தூண்டற் காரணிகளைப் பெறுவதற்கு இது துணை செய்கின்றது.  
பொதுவாக குழந்தைகள் நூல்கள் மூலம் கல்வி கற்பதை விட விளையாட்டை அதிகம் விரும்புகின்றன . இதற்குக் காரணம் செய்முறைப் பயிற்சிகளாலான கல்வியை உட்கிரகித்துக் கொள்வது எளிதாக இருப்பதுதான் .காதை விடக் கண்களால் பெறும் கல்வி ஆழமாகப் பதிவதும் கூட ஒரு காரணமாகின்றது .எடுத்துக்காட்டாக சங்கீதம் , இசைக் கருவிகளை இசைத்தல் , படம் வரைந்து வண்ணம் தீட்டுதல் ,கலை பொருள் வடிதல் . பழுது நீக்கி சரிசெய்தல் , ரங்கோலி கோலம் போடுதல் ,சதுரங்கம் விளையாடுதல் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் .இவற்றில் ஆர்வத்தை ஏற்படுத்த வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். படிப்பும் பொழுதுபோக்கான ஓய்வும் சம அளவில் இருக்க வேண்டும். படிப்பு இல்லாத போது நேரத்தை ப் பயனுள்ளவாறு பயன்படுத்திக் கொள்ள இந்த  செய்முறைக்கு கல்வி பலன்தரும் . தவிரவும் தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டு நேரம் வீணாவதும் தவிர்க்கப்படும். 
குழந்தைகளுக்கு இளம்வயதிலேயே நன்னெறிகளை கற்பித்துவிடுங்கள். ஒளவையாரின்  ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் , நல்வழி  போன்றவற்றை  பொருத்தமான கதைகளுடன் சொல்லிக் கொடுங்கள். .ஒவ்வொருநாளும் குழந்தைகளுடன் கொஞ்ச நேரமாவது செலவிட ஒதுக்குங்கள் .
பெற்றோர்களால் முழுமையாகக் கவனிக்கப்பட்ட குழந்தை ஒருநாளும் தன் எதிர்கால வாழ்க்கையில் தோற்றுப்போவதேயில்லை 

Monday, April 22, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 37

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
ஒரு குழந்தை கல்வியையும் ஒழுக்கத்தையும்  ஒன்று சேர்த்தே கற்றுக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு ஒழுக்கத்தையும் பின்பற்றி ஒழுக கட்டாயப்படுத்தாமல்  ஏன் பின்பற்றி ஒழுகவேண்டும் என்பதற்கான காரணத்தையும் பின்பற்றாவிட்டால் ஏற்படும் விபத்துக்களையும் தெரிவித்தால்  ஒழுக்கத்தின் .  அவசியத்தை உணர்ந்து பின்பற்றுவார்கள். பொதுவாக இன்றைக்குப் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் காட்டும் அக்கறையில் சிறிதளவு கூட ஒழுக்கத்தைப் பின்பற்ற கட்டாயப்படுத்துவதில்  காட்டுவதில்லை. கல்வியில் மிகுதியான கவனிப்பும்  ஒழுக்கத்தில் கவனிப்பின்மையும் பயன்தராத ஒழுக்கமற்ற கல்வியை மட்டுமே ஊக்குவிக்கின்றது வெறும் அனுபவத்தின் மூலமாகவே கூட ஒருவர் தன் வாழ்க்கைக்குத் தேவையான கல்வியைப்  பெற்றுவிடமுடியும். ஆனால் ஒழுக்கத்தை அப்படிப் பெறமுடியாது என்பதால் கல்வியைக் காட்டிலும் ஒழுக்கமே உயர்வானது எனலாம் .
கல்வி தனி மனித வாழ்க்கையை வளப்படுத்திக்  கொள்ள பயன்தருகின்றது என்றால் ஒழுக்கம் சமுதாயத்தின் நலத்தை மேம்படுத்த துணை செய்கின்றது . அதனால் கல்வியை சமுதாய நோக்கோடு கற்றுக்கொள்ள வேண்டும்  என்று சான்றோர்கள் கூறுவார்கள் .கல்வியின் அடிப்படையான குறிக்கோளே அதுதான் என்பது பலருக்குத் தெரிவதில்லை .  
ஒரு பெற்றோருக்கு அவர்களுடைய குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதும் முக்கியக் கடமைகளுள் ஒன்றாகும். ஆணையிடுவது மட்டுமே கடமையை நிறைவேற்றிவிடாது . குழந்தையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு அதற்காக நேரம் ஒதுக்கி தனிப்பட்ட முறையில் காட்டும் கவனிப்பே நற்பயன் அளிக்கும் .
 மகிழ்வுறுகின்றன என்று பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கணனியில் , கைபேசியில் தொடர்ந்து விளையாடுவதை அனுமதிக்கிறார்கள் . தங்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி என்ற மனப்பான்மையில் இது செய்யப்படுவதால் , குழந்தைகள் இப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகின்றார்கள் . அப்புறம் அந்தப் பழக்கத்தை வேண்டாம் என்று தடுத்தாலும் , அதையும் மீறி மறைவாகப் பின்பற்றுவார்கள் . சிலர் எதிர்த்துப் போராடுவதுமுண்டு .செல்போனில் குழந்தைகள் பொழுதுபோக்காக எலக்ட்ரானிக்ஸ் விளையாட்டுக்களைக் கற்றுக்கொள்கிறார்கள். ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு மணிக்கணக்கில் விளையாடுவது உடல் நலத்தை மேம்படுத்துவதில்லை, மாறாக உடலையும் மூளையையும் சோர்வடையச் செய்கின்றது . மின்னணுக் கருவிகள் வெளிப்படுத்தும் நுண்ணலைகளின் தொடர் தாக்கம்  உடல் நலத்தைப் பாதிப்பதாகக் கண்டறிந்துள்ளார்கள். எனவே தேவையில்லாமல் செல்போனைப் பயன்படுத்துவது என்பதை  இளம்வயதிலிருந்தே  தவிர்க்க வேண்டும்.      
குழந்தைகள் மொழியையும் ஒழுக்கத்தையும் ஒன்றாகக் கற்றுக்கொள்ள நன்னெறிகளை ப் படக் கதைகளாகக் கூறும் சிறுவர்க்கான நன்னூல்களை படிக்கக் கொடுக்கலாம். படிக்கும் போது அருகில் அமர்ந்து கொண்டு இடையிடையே விளக்கங்கள் கொடுக்கலாம். உலக அனுபவங்களை எடுத்துக் கூறும் போதுதான் படிக்கும் கருத்துக்களின் உட்பொருளை ப் புரிந்துகொள்கிறார்கள் .      

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 36

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
பிறர் சொல்வதைப் புரிந்து கொள்வதற்கும் , பிறருக்குத் தன் தேவைகளைப் புரியச் சொல்லவும்  இருவருக்கும் பொதுவான ஒரு மொழியே பயன்படுகின்றது. மொழிக்கு முன்னர் வெறும் சைகைகளே செய்திப் பரிமாற்றத்திற்குப் பயன்பட்டது என்றாலும் . விரைவாகவும், கூடுதலாகவும்  பயனுறு திறன்மிக்க முறையில் செய்ய மொழி அவசியமாகின்றது . அதனால் பிறந்தவுடன் ஒரு குழந்தை வளர ஆரம்பிக்கும் போது முதலில் கற்றுக்கொள்வது தாய் மொழியைத்தான்.  ஒவ்வொரு தாயும் தன் குழந்தைகளுக்கு உயிர் வாழ பாலோடு , மொழியையையும் சேர்த்தே ஊட்டுகின்றாள். தாய்மொழியைக் கற்பிக்க இயற்கையால்  நியமிக்கப்பட்ட  முதல் ஆசிரியரே தாய் .
ஒரு குழந்தை முதலில் கற்றுக்கொள்ள கற்பிக்கப்படவேண்டியது  தாய் மொழிமட்டுமல்ல ,நல்லொழுக்கமும்தான் .  ஒரு குழந்தை உலகியல் வாழ்க்கையைத் தொடங்கும் போது எதற்கும் ஒரு வலிமையான காரணத்தைத் தேடும் . காரணம்  தெரியாமல் எந்தக் கட்டுப்பாட்டையும் குழந்தைகள் ஒத்துக் கொண்டு ஏற்றுக்கொள்வதில்லை . காரணங்களைப் புரிந்து கொள்வதற்கு தேவை என்பதால் ஒழுக்கத்திற்கும் முன்னர் மொழி அவசியமாகின்றது . மொழி மட்டுமின்றி எதையும் கற்றுக்கொள்ள ஒழுக்கம் வேண்டும் என்பதால் ஒழுக்கமும் கல்வியும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்பு  கொண்டவை.ஒழுக்கத்தைக் கற்பிக்கும் போது அதைப் பின்பற்ற வேண்டிய அவசியத்தையும் , பின்பற்றாவிட்டால் ஏற்படும் பின் விளைவுகளையும் எடுத்துக் கூறவேண்டும் . விகார எண்ணங்கள் தோன்றுவதற்கு முன்னரே விதைக்கப்படும் இந்த நல்லெண்ணங்கள் மட்டுமே நிறம் மாறாமல் நிலைத்து நின்று பயன் தருகின்றன  
ஒழுக்கமே கல்வி என்பதால் ஒழுக்கமில்லாத கல்வி கல்வியாக மதிக்கப்படுவதில்லை . ஒழுக்கமில்லாத கல்வி  கல்வி கற்றவனுக்கும்  , சமுதாயத்திற்கும் பயன்தருவதில்லை . தவறான வழியில் சென்று ஒழுக்கமின்மையால்  வாழ்க்கை முழுவதையும் தானாகவே சீரழித்துக் கொள்கின்றான் .மேலும் அவன் பிறருக்கு ஒரு தவறான முன் உதாரணமாக இருப்பதால்  சமுதாயத்தையும் தொடர்ந்து சீரழிக்கின்றான். . ஒருவன் கல்வியை இழந்தான் என்றால் அது அவனுக்கும் மட்டும் இழப்பு , ஆனால்  ஒழுக்கத்தை இழந்தான் என்றால் அது சமுதாயத்திற்கே இழப்பு. ஒழுக்கமின்மையால் ஏற்படும் இழப்பு கல்லாமையால் ஏற்படும் இழப்பை விட அதிகம் என்பதால் சுய ஒழுக்கத்தை ஒவ்வொருவரும் போற்றவேண்டும். 
ஒழுக்கம் என்பதற்கு ஒரு பொதுவான விளக்கம் கொடுக்கலாம் . எவர் மனமும் எக்காலத்திலும் புண்படாமல் ,சமுதாயத்தின் நலன் கருதி ஒவ்வொருவரும் பின்பற்றி ஒழுகவேண்டிய நெறிமுறைகளையே  ஒழுக்கம் எனலாம் . தான் மட்டுமின்றித் தன்னைப் போல  பிறரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதே இதன்  அடிப்படை,
 தான் வாழும் சமுதாயம் சாகாது பிழைத்திருக்க ஒவ்வொரு தனி மனிதனும் நல்லொழுக்கத்தை போற்றி ஒழுகவேண்டும் என்பதைத் தெரிவிக்க அறத்துப் பாலில் ஒழுக்கமுடைமை என்ற அதிகாரத்தைப் படைத்த திருவள்ளுவர்  ஒழுக்கத்தின் அவசியத்தை அதன் சிறப்புகள் மூலம் கூறியுள்ளார். உயிரைக் கூட விடலாம் ஆனால் ஒழுக்கம் தவறுவதை செய்யக்கூடாது என்பதால்  ஒழுக்கம் உயிரினும் மேலானது (குறள் 131 ),  நல்லொழுக்கம் பிறவிப் பயனைத் தரும், குடிப்பெருமையை உயர்த்தும் .(குறள் 133). பொறாமைப் படுவதை வெறுக்கும்,பிறருக்குத் தீங்கு செய்ய விரும்பாது உதவி செய்ய விரும்பும்  (குறள் 138 ), ஒற்றுமையைப் போற்றி நல்லிணக்கத்தை வளர்க்கும் (குறள்140 ) ,            

Tuesday, April 16, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 35

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
பல மாணவர்கள் தங்களிடம் இருக்கும் திறமைகளை அறியாதவர்களாகவே இருக்கின்றார்கள். எந்தத் திறமையை வளர்த்துக்கொள்ள இயல்பான ஈடுபாடு இருக்கின்றதோ அந்தத் திறமையை வளர்த்துக்கொள்ள விரும்பி முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டும் . தகுதிக்கு மீறிய திறமைகளை அடைய பலவீனமான அடிப்படையுடன் முயற்சிக்கக் கூடாது.திறமையின் தரத்திற்கு ஏற்ப முயற்சி இருக்கவேண்டும் 
தன் திறமையைத் தானே அறியாமல் இருப்பதற்குக் காரணம்  பிறருடைய திறமைகளைக் கண்டு அதற்காக ஏங்குவதும் , ஒரு சில திறமைகள் மட்டுமின்றி எல்லோரிடமும் இருக்கும் எல்லாத் திறமைகளையும் தான் ஒருவனே பெறவேண்டும் என்று பேராசைப்படுவதும் ஆகும் .இதனால் ஒரு மாணவருக்கு தன்னிடம் உள்ள திறமையை அறிந்து கொள்வதற்குக் கூட நேரம் கிடைப்பதில்லை .இவர்களுக்கு  எதிரில் இருப்பதைவிட , கண்ணுக்கு எதிரில் இல்லாதது தான் அதிகம் தெரியும் . கண்ணுக்குத் தெரிந்து கைக்கு எட்டும் பொருட்களை விட, மனக்கண்ணுக்குத் தெரியும் மாயப் பொருட்களே அதிக விருப்பமாய் இருக்கும் . கிடைத்ததை விட கிடைக்காததிற்காகவே அதிகம் ஏங்கி காலத்தையும், கிடைத்ததைப்  பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிடுவதால் திறமையையும் வீணாக்கி விடுகின்றார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற ஒரு திறமை அல்லது அதனுடன் தொடர்புடைய ஒரு சில திறமைகளில் திறமையை வளர்த்துக் கொணடாலே போதுமானது. 
ஒரு கையில்லாமல் உடல் ஊனமுற்ற ஒருவன் கராத்தே போட்டியில் வெற்றிவாகை சூடிய கதை இந்த உண்மையைத்தான் எடுத்துரைக்கின்றது .
ஒரு சிறுவன் கராத்தே வீரனாகா வரவேண்டும் என்று விரும்பினான். எதிர்பாராமல் நடந்த ஒரு சாலை விபத்தில் அவன் தன் இடது கையை இழந்த போது அவன் ஆசை நிராசையானது . மனம்தளராமல் , ஒரு குருவை அணுகி தான் விருப்பத்தைக்  கூறினான் . அவனுடைய ஆர்வத்தைக் கண்டு அவனுக்கு கராத்தே கற்றுத்தர ஒப்புக்கொண்டார். அவனுக்கு ஒரு கையால் தாக்குதல்களைத் தடுத்துக் கொள்ளும் தற்காப்பு  முறைகளைக் கற்றுக்கொடுத்து விட்டு  எதிரியைத் தாக்கும் வித்தைகளில் ஒரே ஒரு குத்துப் பயிற்சியை மட்டும்  கற்றுக் கொடுத்தார். பல மாதங்கள் தொடர்ந்து அதே பயிற்சியை மட்டும் மேற்கொண்டான். இதில் பயிற்சி போதும் வேறு வித்தைகளை கற்றுக்கொள்ள வேண்டாமா என்று கேட்ட போது . " போதாது, இன்னும் ஓரிரு மாதங்கள் இதில் சிறப்புப் பயிற்சி எடுத்துக் கொள். அது மட்டுமே போதுமானது " என்று குரு சொன்னார். அவனும் பயிற்சியை முடித்துக் கொண்டு ஊர் திரும்பினான். அந்த வருடம் அவ்வூரில் நடந்த கராத்தே போட்டியில் அவனும் கலந்து கொண்டான் .ஊனமுற்ற இவன் எப்படி வெற்றி பெறுவான் என்று எல்லோரும் கேலி செய்தனர் . இருந்தாலும் மனம் தளராமல் போட்டியில் கருப்பு  பட்டை வாங்கிய   பலசாலிகளான கராத்தே வீரர்களை வீழ்த்தி பரிசுக் கோப்பையை வென்றான்.  இது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. மறுநாள் தனக்கு கராத்தே கற்றுத்தந்த குருவிடம் சென்று இது எப்படி சாத்தியமானது என்று கேட்டான்.  "இரண்டு காரணங்கள். ஒன்று நீ வலது கையால் குத்தும் போது அதைத் தடுக்க உன் இடது கையை மடக்கிப் பிடிக்க வேண்டும் . உன்னிடம் இடது கை இல்லாததால் எதிரியால் சமாளிக்க முடியாது போனது. இரண்டாவது பொதுவாக எல்லோரும் இயல்பான சூழ்நிலைக்கு ஏற்ப தங்களைத் தயார் படுத்திக் கொள்வார்கள். இயல்பு நிலைக்கும் அப்பாற்பட்ட சூழ்நிலைகளை சமாளிக்கும் வித்தைகளை பொதுவாக யாரும் பயிற்சிக் காலத்தில் கற்றுக்கொள்வதில்லை. ஆனால் நீ அதை மட்டுமே கற்றுக் கொண்டு முழுத் தேர்ச்சி பெற்றாய். சந்திக்கும் சூழ்நிலை எதிர்பாராததாக இருந்ததால் எதிரிகள் எளிதாகத் தோற்றுப் போனார்கள்" என்றார்  குரு .   

Sunday, April 14, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 34

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
5 . புதிய பாதையை  புதிய கருத்துத் தொடர்புகளினால் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் .படிப்பு என்பது அடிப்படைத் திறமை . அதைப் பயன்படுத்துவது தொழில் வளமை  . பயன்பாட்டின் பயனுறுதிறனை அதிகரிக்க முயல்வது புதுமை, அதை வேறு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று கண்டறிவது தனித் திறமை . முதலிரு திறமைகளையும் கல்வி , சுய மதிப்பீடு மற்றும் செயல்திறன் மூலம் பெறலாம். ஆனால் புதிய பயன்பாட்டை அறிதல் என்பது சிந்தனைகளுக்கு மூலமான கருத்துத் தொடர்புகளினால் மட்டுமே இயலும்   புத்திசாலியான மாணவர்கள் படிக்கும் போதே புதிய தொடர்புகளாலான சிந்தனைகளை இயல்பாக  மேற்கொள்வார்கள் . புரிதல் அதிகரிக்கும் போது இந்த விருப்பமும் அதிகரிக்கும் . ஏன் , எதற்காக, எப்படி , என்ற கேள்விகளைத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டு அதற்கான விடையைத் தேடிக் கண்டு பிடிப்பார்கள் .  இது கல்வி தேடுதலுக்கான ஒரு வலிமையான தூண்டுகோலாக இருக்கும். புரிதலும் ,கல்வி தேடுதலும் மிகும் போது புதிய பாதைகள் தானாக உருவாகித் தென்படுவதுடன் புதிய பாதையில்  முன்னேறிச் செல்ல கலங்கரை விளக்காகவும்  இருக்கின்றன  . புதிய கண்டுபிடிப்புக்களுக்குக் காரணமாக இருந்த, இருக்கும்  விஞ்ஞானிகள் இளமைக்காலத்தில் புதிய பாதையில் பயணிக்க இப்படி ஒரு  கலங்கரை விளக்கை ஏற்படுத்திக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள் 
அறிவு மிகுந்து வர அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற உள்ளுணர்வு தூண்டப்படும். அறிவைப் பயன்படுத்த பயன்படுத்த  புதிய அறிவின் தேவைகளும் அதிகரிக்கும் . பயன்பாட்டில் ஏற்படும் நம்பிக்கையே புதிய சிந்தனைகளுக்கும்  தேவைகளுக்கும் அடிப்படையாகின்றது . விளைபயனில் கொண்டுள்ள நம்பிக்கையே செயல்களுக்கு அடிப்படையாகின்றது . அது தனக்கும் தான் வாழும் சமுதாயத்திற்கும் பயனளிக்கும்  என்ற நம்பிக்கையையே  வாழ்க்கையின் நோக்கமாகிவிடுகின்றது  இந்த நோக்கம் உறுதியாக மனதில் நிலைகொள்ளும் போது ,  இயல்பாக மேற்கொள்ளும் தொடர் முயற்சிகளினால் புதிய அறிவு தேடுதலுக்கான வாய்ப்புக்கள் இயல்பாகவே வந்து சேரும் . தற் செயலான வாய்ப்புகள் கூட தகுதியுள்ளவர்களுக்கே  அமைகின்றது .தகுதியை மேம்படுத்திக் கொள்ளாமல் வாய்ப்புக்களைத் தேடுபவர்களுக்கு  முயற்சியிலான வாய்ப்புக்கள் மட்டுமின்றி தற்செயலான வாய்ப்புக்களும் அமைவதில்லை 
லூயி பாஸ்டர்  என்ற மருத்துவ அறிஞர் ஆராய்ச்சி செய்வது சமுதாயத்திற்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டவர் . அவர் அம்மை நோய்க்கு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்து கொள்ளை நோய்க்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார் . சரியான மருந்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போன பலர்  பாஸ்டர் தன் அறிவின் திறத்தால் இதைக் கண்டு பிடிக்கவில்லை அதிருஷ்டத்தால் தற்செயலாகத்தான்  கண்டுபிடித்தார் . இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை என்று கேலி பேசினர். அதற்கு  பாஸ்டர்  " பயிற்சியால் பக்குவப்பட்ட மனம்தான் கிடைக்கும் வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் . அது தற்செயலானதில்லை " என்றார். ஆம் , அறிவு என்பது வாய்ப்புக்களைத் தேடுவதும், கிடைத்த வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளவதிலும் நிறைந்திருக்கின்றது.வாய்ப்புகள் கிடைத்தும் அவற்றைப் பயன்படுத்தத்  தெரியாமல் வீணாக்கிவிட்டு  கண்டுபிடிக்காத தவறுபவர்களும் இருக்கின்றார்கள். அவர்களே இருக்கும் அறிவைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாதவர்களாக இருக்கின்றார்கள் 

Saturday, April 13, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 33

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
4, புற அறிவு மூலங்களைப் பயன்படுத்திக்கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். புற அறிவு மூலங்கள் என்பது எங்கும் கிடைக்கும் சூரிய ஆற்றல் மாதிரி நமக்குக் கிடைக்கும் பிறருடைய அறிவின் பயனாகும் .சூரிய ஆற்றல் , நாம் பயனில் கொள்ளும் பிற ஆற்றல்களைக் காட்டிலும்  அதிகமாகவும் , இலவசமாகவும்  கிடைத்தாலும் , குறைவாகவே பயன்படுத்திக் கொள்கின்றோம் . அதைப்போலவே , பெற்றோர்கள்,நண்பர்கள், ஆசிரியர்கள்  மட்டுமின்றி , நூலகங்கள் , கணனிகள் போன்றவைகளும் நமக்கு அருகில் இருந்தாலும் , நம்முடைய அறிவு வளர்ச்சிக்கு அவற்றை அதிகம் பயன்படுத்திக் கொள்வதில்லை.    
மனப்பாடமாய்ப் படித்து அதை அப்படியே ஒப்பிப்பதும் , எழுதுவதும் தேர்வில் மதிப்பெண் பெற்றுத் தரலாம் ஆனால் வாழ்க்கைக்கு மதிப்பூட்டாது . மதிப்பூட்டப்பட்ட வாழ்க்கை என்பது மதிப்பூட்டப்பட்ட(value added) அறிவை வளர்த்துக் கொள்வதில் அடங்கியிருக்கின்றது . எனவே செயல்திறன்மிக்க மறு மதிப்பீட்டு வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றி அறிவாற்றலை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். இளமைப் பருவம் என்பது கல்வி கற்று திறமையையும் , தகுதிப்பாட்டையும் வளர்த்துக் கொள்வதற்காகவே  இயற்கையால் வகுக்கப்பட்ட பருவம் . திறமைகளை வளர்த்துக் கொள்ள இந்தப் பருவத்தில் மட்டுமே  அதிக நேரத்தை செலவிட்டு முயற்சி மேற்கொள்ள முடியும்  . குடும்பம் மற்றும் சமுதாய ப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட  பின்னர் , கற்பதற்கும் ,மறு மதிப்பீடு செய்வதற்கும் , அதன் மூலம் பயனீடுவதற்கும் கிடைக்கும் காலம்  குறைவாகவே கிடைக்கும் என்பதால் அதிக கவனம் செலுத்தமுடியாது . இளைமைப் பருவத்திலும் , பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட பின்னரும் , கிடைக்கும் பிற புற அறிவு மூலங்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும் . மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக ஆழ் கடலில் வலை வீசுவதைப் போல .ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவையான விவரங்களை பெற கூடுதல் விவரங்கள் அறிந்த ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினராக வரும் பேச்சாளர்கள் , நண்பர்களைப் பற்றிக் கொள்ள வேண்டும் . நூலகங்கள் , வலைத்தளங்களும் இன்றைக்கு  மிகுந்த பயனளிக்கின்றன. 
எடுத்துக்காட்டாக சரித்திர நிகழ்வுகளைப் பற்றி பாடத்தில் படித்து தெரிந்து கொண்டது  ஓரளவு மட்டுமே முழுமையானதாக இருக்கும் . முழுமையான விவரங்களைக் கொடுப்பதும் பாடத் திட்டங்களில்  சாத்தியமில்லை .ஒரு குறிப்பிட்ட சரித்திர நிகழ்வோடு தொடர்புடைய பிற விஷயங்களைத் தெரிந்து கொள்ள இந்த பிற அறிவு மூலங்கள் பயன்தருகின்றன . புற அறிவு மூலங்களிலிருந்து சேகரித்த விவரங்களைப் பதிவு செய்து குப்பை போல மூளையில்  அள்ளிப் போடாமல்  சரியான இடத்தில் அடுக்கி வைத்தால் , அதை எப்பொழுது வேண்டுமானாலும் நினைவு படுத்திக் கொண்டு பயனீட்ட முடியும் 

Friday, April 12, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 32

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 

 
 


3..செயல்திறன்மிக்க மறு மதிப்பீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும். படித்ததை  நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் போது  மறு மதிப்பீட்டின் அவசியம் புரியும் .  மறு மதிப்பீட்டின் நிலையை சுயமாக அறிந்துகொள்ள இந்த அறிவுப்பூர்வமான கலந்துரையாடல் பயன் தருகின்றது இது ஆழமான பதிவுக்கும் தெளிவான புரிதலுக்கும் உறுதுணையாக இருக்கின்றது . படுக்கையில் படுத்துக்கொண்டு தூங்குவதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் போதும்,  பயணத்தின் போது சும்மா இருக்கும் போதும், பணியிடை ஓய்வாக இருக்கும் போதும் , இந்த மறு மதிப்பீட்டை மேற்கொள்ளலாம் .  
படித்த ஒரு கருத்தை அல்லது ஒரு உண்மையை நீண்ட காலம் நினைவிற் கொள்ள சிலர் குறுக்கு வழிகளை அறிமுகம் செய்வார்கள் , எதை நினைவுக் கொள்ள வேண்டுமோ அதை  ஏற்கனவே நினைவிற் கொண்டனவற்றுள் அதனுடன் தொடர்புடைய ஒன்றுடன் தொடர்புபடுத்திக் கொண்டால்  பிழையின்றி மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக்கொள்ள முடிகின்றது ஒரு சில கருத்துக்களுக்கு ஒரு சில குறுக்கு வழிகள் பயன் தரலாம் . ஆனால் நினைவிற் கொள்ள வேண்டிய கருத்துக்கள் பல வற்றிற்கு  பல குறுக்கு வழிகளை ஏற்படுத்திக் கொண்டால் ,அவற்றின் குறுக்கீட்டு விளைவால்  புதிய குழப்பங்கள் ஏற்படும் அபாயமும் இருக்கின்றது .புற மூலங்களின் உதவியின்றி சுயமாக நினைவுகூர்வதே மறு மதிப்பீடாகும்   பொதுவாக புத்தகத்தை வாசிப்பதும்  , படிக்கச் சொல்லிக் கேட்பதும்  மந்தமான( Passive )  அணுகுமுறைகளாகும் . மறு மதிப்பீட்டிற்கும் , நீண்ட கால நினைவாற்றலுக்கும்   இது மிகுந்த பயனளிப்பதில்லை.  மூளையில் பதிவு செய்யப்பட்டவற்றை  மட்டும் நினைவுகூர்ந்து    படித்ததை  முழுமைப்படுத்திக் கொள்வது  செயல்திறன்மிக்க (active ) வழிமுறையாகும் . புத்திசாலியான பிள்ளைகள் செயல்திறனற்ற  மற்றும்  செயல்திறன்மிக்க வழிமுறைகளின்  வேறுபாடுகள் புரிதலிலும்,நினைவுகூர்வதிலும் ஏற்படுத்தும் தாக்கங்களை நன்கு உணர்ந்து , செயல்திறன்மிக்க மறு மதிப்பீட்டு வழிமுறையை மட்டுமே  ஒவ்வொருமுறையும் பின்பற்றுவார்கள்   
மறு மதிப்பீடு புரிதலில் ஏற்படுத்தும் நம்பிக்கை புதிய திறமைகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்புக்களைத் தருகின்றது . பாடத்திட்டத்திற்கும் அப்பால் செல்ல அனுமதிக்கின்றது .கற்றுக்கொண்டவைகள்  புரிதலினால்   ஒன்றிணையும் போது புதியன பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கின்றது .இவர்களே பிற்காலத்தில் விஞ்ஞானிகளாகின்றார்கள்  . 

Thursday, April 11, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 31


2 . மீண்டும் மீண்டும் மூளையில் செய்த பதிவுகளை அசை போடவேண்டும். மாடுகள் விரைவாகப் புற்களை மேய்ந்துவிட்டு , பின்னர் நிதானமாக அசைபோடும். அதனால் அவைகள் உட்கொண்ட உணவை முழுமையாக ஜீரணித்துக் கொள்ளுகின்றன. கற்பதற்காக கற்றுக்கொண்ட கருத்துக்களையும் இதுபோல முழுமையாக உட்கிரகித்துக் கொள்ள இக்கருத்துக்களை மீண்டும் மீண்டும் அசை போடவேண்டும் . இதனால் வேறு பல நன்மைகளும் உண்டு . திரும்பத் திரும்ப விளம்ப எழுதப்படும்  எழுத்துக்கள் அழுத்தமாகத் தெரிவதைப் போல , மீண்டும் மீண்டும் அசை போடப்படும் எண்ணங்கள் ஆழமாகப் பதியப்படுகின்றன அதனால் அவை எண்ணத்தை விட்டு அகலும் வாய்ப்பின்றி வாழ்க்கை முழுதும் பயன்தரத் தக்கதாய்  இருக்கின்றது .பின்னர் மேற்கொள்ளும் எண்ணங்களின் பதிவுகள் கூட இவற்றை அரித்தெடுப்பதில்லை . தேவையான பதிவுகளை மீண்டும் மீண்டும்  அசை போடுவதாலும் , தேவையற்ற பதிவுகளை அப்படி அசை போடுவதைத் தவிர்ப்பதாலும் பதிவுகளின் பயன்பாட்டை ஒருவர் மேம்படுத்திக் கொள்ள முடியும் . தவிரவும் படிக்கும் நேரம் முழுவதையும் பயனுள்ளதாக்கிக் கொள்ள  ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியுடன் மீண்டும் மீண்டும் அசைபோடுவது  துணை செய்கின்றது . தொடர்ந்து படிப்பதை ஒரு புரிதலுடன் செய்வதை ஊக்குவிக்கின்றது. . புரிதலுடன் படிப்பதால் படிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் வெகுவாகக் குறைகின்றது .
ஒவ்வொருநாளும் என்ன படிக்க வேண்டும் ,எவற்றை மறு மதிப்பீடு செய்யவேண்டும் என்பதை த் திட்டவட்டமாகத் தீர்மானம் செய்யும் மனப் பக்குவத்தை இது ஏற்படுத்திக் கொடுப்பதால் குழப்பத்தால் ஏற்படும் தடுமாற்றம் வருவதில்லை .
மறு மதிப்பீடு என்பது கற்றதை எவ்வளவு புரிதலுடன் கற்றோம் என்பதை அறிந்து கொள்ளும் சுய முயற்சியாகும் .ஒரு குறிப்பிட்ட பாடத்திற்கான சுய மதிப்பீடு திருப்திகரமாக இல்லாது  இருக்குமானால் அதில் எடுத்துக்கொள்ளும் அடுத்த சுய மதிப்பீடு குறுகிய கால இடைவெளியுடன் மேற்கொள்ள வேண்டும்.  சுயமதிப்பீட்டில் பிழைகள் இல்லாது திருப்திகரமாக இருந்தால் அதில் மறு மதிப்பீட்டிற்கான கால இடைவெளியை  அதிகரித்துக் கொள்ளலாம் . ஒரு சுய மதிப்பீட்டின் போது செய்யும்  பிழைகளுக்கு ஏற்ப   இந்தக் கால இடைவெளி யை  அடுத்தடுத்த சுயமதிப்பீட்டிற்கு  அதிகரித்து அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும்
இந்த மறுமதிப்பீடு என்பது ஒருவகையில் புத்தாக்க முயற்சியாகும் . இதனால் கற்றதை ஒவ்வொருமுறையும் சரியாக கூடுதல் விவரங்களுடன்  எடுத்துரைக்கவும் , எழுதவும் முடிகின்றது . நினைவாற்றல் இயல்பான வழிமுறையில் தொடர்ந்து அதிகரிக்கின்றது .
ஒத்த கருத்துடைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து படிப்பதும் , பாடசம்பந்தமாக தேர்வு வைத்துக் கொண்டு சுய மதிப்பீடு செய்வதும் , படிக்கும் பாடங்களை இயற்கையோடும் , சமுதாயத்தோடும் தொடர்புபடுத்திப் படிப்பதும், நண்பர்களுடன் அடிக்கடி கலந்துரையாடல் மேற்கொள்ளுவதும் ,புரியாத மாணவர்களுக்குப் புரியச் சொல்லிக் கொடுப்பதும்  நினைவாற்றலை வலுவூட்டக்கூடியது என்பதால் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க  கால இடைவெளியுடன் கூடிய மறு மதிப்பீட்டு முறையைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும் .   

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? -30

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
மெதுவாகப் படிப்பது இயல்பானது மட்டுமல்ல எளிமையானது. உண்மையில் இயல்பான எல்லாம் எளிமையாகவே இருக்கும் . ஒரு வேலையைச் செய்வதற்கு ப் பல வழிகள் இருக்கும் போது ஒருவர் அவற்றுள் எவ்வழி எளிமையானதாக இருக்கின்றதோ அந்த வழியையே பின்பற்றுவார். அது மனித இயல்பு . திணிக்கப்படாமல் , எளிமையாக இருக்குமாறு வழிமுறைகளை மாற்றிக் கொடுத்தால் சிறு வயதிலிருந்தே படிப்பதை விருப்பமுடன்  மாணவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.  கடினமான வழிமுறைகள் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படாததால்  கட்டாயப்படுத்தி திணிக்க வேண்டியதாகிறது . அதுவே எளிமையாக இருக்கும் போது மறுப்பின்றி  அவர்களாகவே விரும்பி ஏற்றுக்கொண்டு செய்கின்றார்கள் .மன விருப்பத்துடன் செய்யப்படும் எந்த வேலையும் சிறப்பாக அமையும்.  ஒருவருடைய இயல்புக்கு ஏற்றவாறு மெதுவாகப் படிப்பதைக் கற்றுக்கொடுத்தால் , அது வாழ்க்கை முழுதும் நற்பயனளிக்கும் .அதிக நாட்கள் எடுத்துக் கொண்டாலும் , ஒரே பணியை குறைந்த நேரத்தில் முடிக்கவும் , நிறைந்த பயனைப் பெறவும் முடிவதால்  கூடுதல் பயனுறுதிறன் மிக்கதாக இருக்கின்றது. 
மொழியில்  புலமை பெறுவது என்பது சொல்லாண்மையைப் பொறுத்தது . இன்றைக்கு மாணவர்கள் ஆங்கில  மொழி வழிக் கல்வி பயின்றாலும்  பெரும்பாலான மாணவர்களால் சரளமாக ஆங்கிலம் பேச எழுத முடிவதில்லை .இதற்குக்காரணம்புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப  எண்ணங்களை வெளிப்படுத்த குறைந்த  சொற்களின் போதாமையே. புதிய மொழிகளைக் கற்றுக்கொள்பவர்கள் , அந்த மொழியைக் குறுகிய  காலத்தில் கற்றுக்கொண்டால் குறுகிய காலப் பயனை மட்டுமே பெறுவார்கள். காலப்போக்கில் மொழியை மறந்துவிடுவார்கள்  மெதுவாக ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரம் ஒதுக்கிப் படிப்பது புதிய மொழியைக் கற்றுக் கொள்வதற்குப் பயனுள்ளது .
எல்லோரிடமும் ஆங்கில அகராதி கையிலிருக்கும் . தேவையான போது அதை புரட்டிப் பார்த்து சொற்களுக்கான அர்த்தத்தை சரிபார்த்துக் கொள்வார்கள் . தேவைக்காகப் படிக்கும் எதுவும் தேவை முடிந்தவுடன் மறந்து போகும் . மொழியை மொழிக்காகப் படிக்கவேண்டும் என்பதும்  ஒரு சொல்லைக் கற்கும் போது முழுமையாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் , சரியான உச்சரிப்பு, எழுத்துப் பிழையின்றி சொற்களின் அமைப்பு , ஒரு சொல்லிலிருந்து உருவாகும் துணைச் சொற்கள், அர்த்தம் , பயன்பாடு , சொல்லுக்கு இணையான பிற சொற்கள் , எதிர்ச் சொற்கள் என ஒரு சொல்லைப்பற்றியே  விரிவாகக் கற்றுக்கொள்வதாகும்  .திட்டமிட்டுக் கற்கும் இந்த வழிமுறையை  மெதுவாகச் செய்யும்போது மட்டுமே மீண்டும் நினைவுகூரத் தக்க வகையில் பயன்தருகின்றது 
ஒரு ஆங்கில அகராதியை  ஒரு சில நாட்களில் படித்து முடித்துவிட முடியாது .படித்தது விரைவில் மறந்து போய்விடுவதால் கற்றது பயனற்றுப் போய்விடும் . ஆனால்  ஒரு நாளுக்கு ஒரு சில வார்த்தைகள் வீதம் கற்றுக்கொண்டால் ஓராண்டு காலத்தில்  பல நூறு வார்த்தைகளைக் கையாளும் திறமையைப் பெறுவார்கள் .  

Wednesday, April 10, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி - 29

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி?  
சிறந்த மாணவனாக இருப்பது இயல்பு நிலைக்கு அப்பாற்பட்ட நிலையே இல்லை. நாம் தான் இயல்பு நிலைக்குக் கீழாக நிலைதாழ்ந்து இருந்து கொண்டு ,சிறந்த மாணவனாக உருவாவது கடினம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். இயற்கையில் இயற்கையாகவே இருக்கும் அனைத்தும் நிலையாக  நிலைத்திருப்பதுடன் ,சிறந்ததாகவும் இருக்கின்றன . நிலையாகவும் சிறந்ததாகவும் இருக்கும் எல்லாம் இயற்கையின் படைப்புக்களாக இருக்கின்றன. உயிரினங்கள் எல்லாம் இயற்கையின் படைப்புக்களே. அந்த உயிரினங்களின் வாழ்க்கை இயற்கையாக இருந்தால் வாழ்க்கையின் சிறப்புத்தன்மை இயல்பாகவே இருக்கும் என்பதே இயற்கை மனிதர்களுக்குக் கூறும் அறிவுரை . இயற்கையைப் பாதையை விட்டு விலகிச் செல்லும் எந்தச் செயலும் இயற்கையான முடிவை  அடையாததால் சிறப்படைவதில்லை . எனவே கல்வி கற்பதும்  இயல்பான முயற்சிகளின் விளைவாக இருக்கும் போது அது மிகைப்பாடான முயற்சிகளினால் சேதாரமடையாமல்  சிறப்பாக அமைகின்றது. ஒரு சிறந்த மாணவன் இயற்கையாகவே திறன்மிகு மாணவனாக இருக்கவேண்டும் என்ற அவசியமேயில்லை . சாதாரண மாணவர் இயல்பான ஈடுபாடுகளினால் ஒரு சிறந்த மாணவராக உருவாக முடியும். எவ்வித எதிர்ப்புமின்றி தன் உணர் உறுப்புக்களைக் கொண்டு கற்பதை இயல்பாகச் செய்கின்ற மாணவர்கள் எல்லோரும் சிறந்த மாணவர்களாக ஆகிறார்கள் .அதற்கான 5  கட்டளைகள் பின்வருமாறு.
1.ஒவொருநாளும் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் .  பிற அன்றாட வேலைகளைப் போல கல்வி கற்பதையும்  மேற்கொள்ள  வேண்டும். பிற வேலைகளில் காட்டப்படும் அதே அளவு ஆர்வத்தை கற்றலிலும் காட்ட வேண்டும் .  கற்றுக்கொள்வதில் இரண்டு நிலைகள் இருக்கின்றன . 
நீண்ட கால நினைவுத் தேக்கம் ,எண்ணப் பதிவிறக்கம் , போன்றவை மனப்பாடமாக கற்பதைத் மூளையில் திணித்துக் கொள்வதைவிட , அதை க் கொஞ்சம் கொஞ்சமாக  மெதுவாக , இயல்பாக கற்றுக் கொள்ளும் போது  கூடுதல் பயன்தருவதாக சிறப்பாக இருக்கின்றது. 
ஒரு மாணவன் ஒரு குறிப்பிட்ட பாடத்தை  ஒரே நாளில் மூன்று மணி நேரத்தில் , அதாவது 180  நிமிடங்களில் படித்து முடித்தான் . மற்றொரு மாணவன் அதே பாடத்தை ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்கள் வீதம் 12 நாட்களில் அதாவது 120 நிமிடங்களில் கற்றுக் கொண்டான் . இந்த இரு மாணவர்களையும் அந்த குறிப்பிட்ட பாடத்தில்  பெற்றுள்ள அறிவுத் திறனை ஆராய்ந்து பார்த்த போது விரைந்து கற்ற முதல் மாணவனை விட மெதுவாகக் கற்ற இரண்டாவது மாணவனே  சிறந்து விளங்கியது தெளிவாகியது .
இடையிடையேயான  ஓய்வுடன் கற்றுக் கொள்ளும் போது மன இறுக்கமின்றி மூளையில் பதிவேற்றம் செய்யப்படுவதால் , நீண்ட கால நினைவுகளுக்கு இயற்கையான உடல் ஒத்துழைப்பு இயல்பாகவே கிடைக்கின்றது.  படிப்பதில் காட்டப்படும் இந்த வேறுபாடே ஒரு  சாதாரண மாணவனை சிறந்த மாணவனாக்குகின்றது

Monday, April 8, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி - 28

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி  
வாழ்க்கையைத் தனித்துப் போராட இளமையில் திறமைகளை வளர்த்துக் கொள்வது அவசியாமாகும்.  கல்வி  கற்றல் மட்டுமின்றி  தொழில் ,கலை. விளையாட்டு போன்றவற்றில்  மேற்கொள்ளும் பயிற்சியும் திறமைகளை வளப்படுத்தும் . இன்றைக்கு  ஒருவனுடைய முன்னேற்றத்திற்கு சமுதாயம் முழுமையான ஒத்துழைப்பு நல்குவதை விட , அதிகமாக இடையூறுகளையே ஏற்படுத்துகின்றது . முன்னேற்றத்தடைகளை தடுத்துக்கொள்ளவும் ஒருவர் திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டியது தவிர்க்க  இயலாததாக இருக்கின்றது. இந்த இடைநிலையில் தான் ஒருவருடைய மதியும் விதியும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்கின்றன . ஆக்கப்பூர்வமான நல்ல திறமைகள்  மதி என்றால் அழிவுப் பூர்வமான தீய திறமைகள் மதியின்மையால் வரும் விதி எனலாம் . இவற்றை இனமறிந்து தவிர்த்துக் கொள்ளும் அறிவு மதியாகும். மதியற்றோர் இறுதிவரை விதி வழிச் செல்வதைத் தவிர வேறு வழி இல்லை . மதி வலிமையானதாக இருந்தால் விதியை வெல்லும் நம்பிக்கையை ப் பெறலாம் . தீய திறமைகளால் ஒருவர் சுயமுன்னேற்றம் பெறலாம் .இந்த சுய முன்னேற்றத்தை சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவரும் அடைய நினைக்கும் போது அந்தச் சமுதாயம் முற்றிலும் அழிந்து போய்விடுவதற்கான வழியில் அடியெடுத்து வைக்கின்றது .தவறான வழிகளில்  பெற்ற முன்னேற்றம் ஒருநாளும் நிலையானதாக இருப்பதில்லை . விழித்துக் கொண்ட நல்லோரால் தூண்டப்படும் சமுதாயப் போராட்டத்தில்  அவை காணாமல் கூட போய்விடலாம் .  பிறருக்கு நம்மால் சமுதாயத்துக்குக்  கிடைக்கும் சமுதாயப் பாதுகாப்பு  உண்மையானதாகவும்  நம்பிக்கையளிக்கக் கூடியதாகவும் இருக்குமானால் நமக்கு சமுதாயத்தால் கிடைக்கும் பாதுகாப்பும் அப்படியே இருக்கும் .
 மாணவர்களுடைய கல்வி எதிர்காலத்தில் ஒரு சமச்சீரான சமுதாயத்தை   ஏற்படுவதற்குத் துணைநிற்கவேண்டும் சமச் சீரான சமுதாயம் அந்தச் சமுதாயத்தில் இருக்கும் அனைவருக்கும்  பாதுகாப்பாக இருப்பதோடு ஒருவர் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதோடு இடையூறுகளைத் தருவதுமில்லை  .   

Sunday, April 7, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 27

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி? 
நல்லனவற்றை மறப்பதால் மறதி கேட்டது , தீயன வற்றை மறப்பதால்  மறதி நல்லது . எனவே மறதியை வேண்டாம் என்றோ , வேணும் என்றோ  முடிவு செய்யமுடியாது . மாணவர்களுக்கு கற்பதில் நினைவாற்றலின்றி ஏற்படும் மறதி அவர்களுடைய திறமையை மட்டுப்படுத்தி விடுகின்றது. நினைவாற்றல் மனதின் நலத்தோடு தொடர்புடையது. 
பொதுவாக  மனத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை படைத்தோரிடம்  நினைவாற்றல் அதிகம் காணப்படுகின்றது . முன் திட்டமிட்டு ஒவ்வொரு செயலையும் நிதானமாகவும் உறுதியாகவும்,அமைதியாகவும் செய்வதை வழக்கமாகக் கொண்டவர்களிடம் நினைவாற்றல் மிகுந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.அதிகம் அலட்டிக் கொள்ளாதவர்கள்,அதிகம் ஆசைப்படாதவர்களிடம் நினைவாற்றல் குறைவதில்லை . மனம் ஒரே சமயத்தில் பலவற்றை விரும்பும் போது அவற்றில் ஒன்று கூட முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாததால் , விரைவில் மறந்து போகும் நிலையே ஏற்படுகின்றது .நல்லொழுக்கங்களை சிறிதும் வழுவாமல் கடைப்பிடிப்பவர்களிடம் நினைவாற்றல் மங்கிப் போய்விடுவதில்லை .  உயிரியல் விஞ்ஞானிகள்  இதற்கு அடிப்படையான காரணத்தைக் கண்டறிந்துள்ளார்கள். மீண்டும் நினைவுபடுத்திப் பயன் பெறவேண்டிய எண்ணத்தை பயனில்லாத ,வேண்டாத வேற்று எண்ணங்களே 'வைரஸ் ' கிருமிகள் போல காலப் போக்கில் அழித்து விடுகின்றன.
நல்லறிவைப் பெற வேண்டும் என்று சொன்ன சான்றோர்கள் அறிவுரை கேட்டு திருக்குறள் ,அகராதி போன்ற பல நன்னூல்களை வாங்கி வைத்திருப்போம் .அதன் பயனை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பைத் தேடி விரும்பாத போது அந்த நூல்கள் இடம் மாறி காலப் போக்கில் மாயமாய் மறைந்து போகும் . மனதில் இருக்கும் எண்ணங்களும் இப்படித்தான்.பிற்பயன் கருதி நினைவில் பதியவைத்துக் கொண்ட நல்ல எண்ணங்களை மனத்தைக் கட்டுப்படுத்தாமல் மேற்கொள்ளப்படும் தவறான வேற்று எண்ணங்கள் பதிவைத் திருடி மெல்ல மெல்ல அழித்து விடுகின்றன .இது நினைவாற்றலை இழப்பதாகும் .நினைவாற்றலை மேம்படுத்த மேற்கொள்ளும் பயிற்சிகளுள் முக்கியமானது நம் மனதை நாமே கட்டுப்படுத்தி சரியான தேவையான எண்ணங்கள் அழிந்து போய்விடாமல் பாதுகாப்பாகப் பதிவு செய்வதாகும் ஒரு சமயத்தில் ஒன்றைப் பதிவு செய்தால்தான் வலிமையாக ப் பதிவு செய்யமுடியும் என்பதைத் தெரிந்திருந்தும் நாம் செய்யும் பெரிய தவறே இது.
வாழ்க்கையை நம்மோடும் வாழ்க்கைப் பயனைப் பிறரோடும் தொடர்பு படுத்தி வாழும் போக்கை நெறிப் படுத்திக் கொண்டால் நினைவாற்றால் மேம்படும் .மற்றவர்கள் மீது பொறாமை கொண்டு அவர்களைப் பற்றித் தவறாக நினைக்கும் போது ஒவ்வொருவரும் தங்களையே மறந்து விடுகின்றார்கள்.அவர்கள் அவர்களாக இல்லாமல் எண்ணப்படும் எந்த எண்ணங்களும் அவர்களுக்கு உதவுவதில்லை. 

Saturday, April 6, 2019

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ? -26

சிறந்த மாணவராக வளர்வது எப்படி ?
பேசுவது என்பது ஒரு கலை. எல்லோரும் விரும்பும்படி பொருளோடும் ,நகைச் சுவையோடும் பேசுவது முறையான பயிற்சியால் மட்டுமே கைகூடும். .பேசும்   போது குரலில் ஏற்றத் தாழ்வு , உடல் அசைவுகள், உணர்ச்சிகளின் வெளிப்பாடு , நம்பகத் தன்மை எல்லாம் ஒருங்கிணைந்து இருக்கவேண்டும் .அப்போதுதான் அது மற்றவர்களிடம் ஒரு குறிப்பிடும்படியான தாக்கத்தை ஏற்படுத்தும். பேசும் போது  உணர்ச்சிகளில் வேறுபாடு எப்படி இருக்க வேண்டும்  என்பது யாரிடம் பேசுகின்றோம் என்பதைப்  பொறுத்தது.      
                                                                                                                                                                                         தாயிடம்  அன்பாகப் பேசுங்கள்                                                                                                               தந்தையிடம்  பண்பாகப்  பேசுங்கள்                                                                                                   ஆசிரியரிடம்  அடக்கமாகப் பேசுங்கள்                                                                                 பெரியவர்களிடம் பணிவாகப் பேசுங்கள்                                                                                                                    சகோதரனுடன் அளவோடு பேசுங்கள்                                                                                           சகோதரியுடன் பாசத்தோடு பேசுங்கள்                                                                                 உறவினர்களுடன் பரிவோடு பேசுங்கள்                                                                                      நண்பர்களிடம் உரிமையோடு பேசுங்கள்                                                                                                                   மனைவியிடம் உண்மையாகப் பேசுங்கள்                                                                            குழந்தைகளுடன் இனிமையாகப்  பேசுங்கள்                                                                              நிறுவனத்தில் பொறுப்போடு பேசுங்கள்                                                                                                                    அதிகாரிகளிடம்  திருத்தமாகப் பேசுங்கள்                                                                                  தொழிலாளிகளிடம்  மனித நேயத்தோடு பேசுங்கள்                                                      வியாபாரிகளிடம் கராறாகப் பேசுங்கள்                                                                 வாடிக்கையாளர்களிடம் நேர்மையாகப் பேசுங்கள்                                                                                             அரசியல்வாதிகளிடம் கவனமாகப் பேசுங்கள்                                                                                             ஏழையிடம் இரக்கமாகப் பேசுங்கள்                                                                                                 இறைவனிடம் மௌனமாகப் பேசுங்கள்                                                                                        மேடைகளில்  உரக்கப் பேசுங்கள்                                                                                                       போட்டிகளில் தைரியமாகப் பேசுங்கள்                                                                                                                     சமுதாயத்தில் நல்லதை  மட்டும்  பேசுங்கள்                                                                               எல்லோரிடமும் எப்போதும்                                                                                                                                     பிறர் மனம் புண்படாதவாறு  பேசுங்கள் 

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 25

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
ஒரு நாள் சர்க்கஸ் காட்சிக்கு அரிசி ஆலை அதிபர் தன் குடும்பத்துடன் வந்திருந்தார் . காட்டு விலங்குகள் கீழ்படிந்து செய்த வேலைகள்,  ஆடவர்களும் அழகு மங்கையரும் அந்தரத்தில் செய்த வித்தைகள் என ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த போது , பலசாலியான ஒருவர் வந்து தன்திறமையைக் காட்டினார். தன் வயிற்றின் மீது ஒரு கார் ஏறிச்  செல்ல விட்டு  தூங்கி எழுவதைப் போல  எழுந்து நின்றார். பலத்த கரகோஷம் அவருக்கு உற்சாக மூட்டியது . அடுத்து அவர் பளுத்தூக்கிக் காட்டினார். 40  கிலோவில்  தொடங்கி  ஒவ்வொருமுறையும் 20 கிலோ அதிகரித்து 200 கிலோ வரை மிக எளிதாக தூக்கிக் காட்டினார். கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது . ஆலையில் வேலை செய்வோர் நெல் மற்றும் அரிசி மூட்டைகளை  ஒவ்வொரு மூட்டையாகத் தூக்குவதால் வேலையை முடிப்பதற்கு நேரமாகிறது. பிற வேலைகளைச் செய்ய அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை . அதனால் அந்த வேலைகளை ச்  செய்யாமலே விட்டுவிடுகிறார்கள்  .இந்த சர்க்கஸ் வித்தைக்காரனை வேலைக்கு அமர்த்தினால் , ஒரே சமயத்தில் இரண்டு மூட்டைகளை எளிதாகத் தூக்கி வேலையை முடிப்பான். மற்ற வேலைகளை செய்யவும் நேரம் கிடைக்கும் என்று ஆலை அதிபர் நினைத்து அந்த சர்க்கஸ் வித்தைக் காரனை வேலைக்கு அழைத்தார் . அவனும் ஒப்புக் கொண்டு வேலைக்குச் சேர்ந்தான் . சில நாட்கள் இரண்டு இரண்டு மூட்டைகளாகத் தூக்கி சுறுசுறுப்பாக வேலை செய்தான். அதன் பிறகு அவனிடம் உற்சாகம் குன்றிப்போய் , ஒரு மூட்டை தூக்குவதற்கே கஷ்டப்பட்டான் . இந்தக் கவனித்த அந்த ஆலை அதிபர்  அவனைக் கூப்பிட்டுக்  கேட்டார், " நீ சர்க்கஸில் வேலை செய்யும் போது 200  கிலோ வரை எளிதாகத் தூக்கிக் காட்டினாயே. இப்பொழுது 75  கிலோ மூட்டையை உன்னால் தூக்க முடிய விலையே . ஏன் உடல் நலமில்லையா" என்று கேட்டார். 
அதற்கு அந்த வித்தைக்காரன் " ஐயா , சர்க்கஸில் வேலை செய்யும் போது ஒவ்வொருமுறையும் மக்கள் கைதட்டி உற்சாகப்படுத்துவார்கள் . அந்த உற்சாகம் என்னை மேலும்  கடின வேலைகளைச்  செய்யத் தூண்டும். அனால் இங்கே என்னை உற்சாகமூட்ட யாருமில்லை. " என்றான். உண்மைதான் . உடல் வலிமைகோடு மன வலிமையையும் இணையும் போதுதான் ஒன்றின் தகுதிக்கு மீறிய செயல்களை செய்ய முடிகின்றது .மாணவர்களின் மன வலிமைக்கு பாராட்டு என்பது இந்த வித்தைக்காரனுக்கு கொடுக்கப்படும் உற்சாகம் போன்றது .  நல்ல காரியங்களை ச் செய்யும் ஒவ்வொரு முறையும் அல்லது முயற்சிக்கும் போதும்  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்த பாராட்டத்  தவறக்  கூடாது. பாராட்டு உண்மையானதாக இருக்கும் போது அது மனதிற்குள் ஏற்படுத்தும் மாற்றங்களும் உண்மையானதாவே இருக்கும் .    

Friday, April 5, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 24

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
ஒரு மாணவன் தன்கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமானால் , அதே நோக்கத்தில் முன்னேறிச் செல்ல ஒரு பாராட்டு  வேண்டும்.  பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , நண்பர்கள் அவ்வப்போது ஒரு நல்ல செயலுக்காக ஒருவரைப்  பாராட்ட பாராட்ட  அவர் தன் செயலில்  கொண்டுள்ள ஆர்வம் பல மடங்கு  விரிவடைகின்றது . மூன்றாவது நபர் செய்யத் தவறினால் அது போட்டி மனப்பான்மையினால் உள்ளுக்குள் வளரும் பொறாமையால் இருக்கலாம் , ஆசிரியர் செய்யத் தவறினால்  அது தனி நபர் மீது சிறப்பு அக்கறை காட்டுவதை விட அனைத்து மாணவர்கள் மீதும் காட்டப்படும் பொது அக்கறையோடு மனநிறைவு  பெறும் பழக்கத்தால் இருக்கலாம். ஆனால் தன் பிள்ளையின் முன்னேற்றத்தில் ஒரு பெற்றோர் அக்கறை கொள்ளாமல் இருக்க முடியாது . ஆனால் பல பெற்றோர்கள் தங்கள்  பிள்ளைகளைப்  பாராட்டுவதேயில்லை  , மாறாக தங்களுக்கு   உரிமை  இருக்கின்றது  என்ற  எண்ணத்தில்  திட்டித் தீர்ப்பார்கள் .  இது எதிர்மறையான ஓர் அணுகுமுறை என்பதை ஒரு சிலர் மட்டுமே அறிவார்கள் . சாதனை படைத்தால்தான் பாராட்டவேண்டும் என்பதில்லை , சாதனை படைப்பதற்கான தகுதியைப் பெறுவதற்கு உற்சாகப்படுத்தும் ஒரு முயற்சியாகக் கூட இதைச் செய்யாலாம் . உத்தமமாக இருந்தால் உண்மையாகப்  பாராட்டுங்கள் , மத்திமமாக இருந்தால் உற்சாகமூட்டும் நம்பிக்கையோடு பாராட்டுங்கள் , அதமமாக இருந்தால்  பாராட்டுவதைத் தவிருங்கள் . அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் . பின்விளைவுகளாக ஏற்படும்  இழிவுகளையும் , முன்னேற்றத் தடைகளையும் எடுத்துரைத்து மனதில் ஒரு மாற்றம் ஏற்படும் படி அறிவுரை கூறுங்கள் . உண்மையில் பிள்ளையின் சுய விருப்பமின்றி  ஒரு பெற்றோர் தன் உரிமையால்  எதையும்   திணித்து அவன் ஏற்றுக்கொள்ளுமாறு செய்யவே முடியாது . மாணவர்களுக்குப் பாராட்டு  உற்சாகமூட்டி அவர்கள் மென்மேலும் சுயமாகக் கல்வியில் ஈடுபாடு கொள்ள வலுவாகத் தூண்டுகின்றது .
பாராட்டுதல் என்பது ஒருவருடைய உள்ளத்தை உணர்ச்சிப் பூர்வமாகத் தொடும் இயல்புள்ளதால் அது உள்ளுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்களும் குறிப்பிடும்படியாகத்தான் இருக்கும் 
ஒருவரைப் பாராட்டுதல் என்பது ஒருவகையில் அவர் முன்னேற்றத்திற்காகச் செய்யும்  மனப்பூர்வமான பிரார்த்தனைதான் . ஒருவர் செய்யும் தவறான செயலுக்காகப் பலமுறை திட்டும் பலர் ஒருமுறை கூட ஒருவர் செய்யும் நல்ல செயலுக்காக ப் பாராட்டவேண்டும் என்று நினைப்பதேயில்லை . ஒரு சிறிய பாராட்டுக் கூட ஒரு உந்தர்காரணியாகி  ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்பதை ரபீந்திரநாத் தாகூரின் சுயசரித்திரம் சான்று கூறுகின்றது  .
ரபீந்திர நாத் தாகூர்  ( Rabindranath Tagore )  ( 7  மே 1861- 7  ஆகஸ்ட் 1941) இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் கல்கத்தாவில்  தேவேந்திர நாத் தாகூர் - சாரதா தேவி தம்பதியினருக்குப் பிறந்த 13 குழந்தைகளில் இளையவராவார் . இவர் சிறந்த படைப்பாளர் . எழுத்தாளர் , கவிஞர், இசை அமைப்பாளர் , நாடக ஆசிரியர் , ஓவியர் என்று பன்முகத் தன்மை கொண்டவர். கீதாஞ்சலி என்ற கவிதை நூலைப் படைத்து 1913  ல் இலக்கியத்திற்காக  ஆசியாவின் முதல் நோபல் பரிசைப் பெற்றார் .நம் நாட்டின் தேசிய கீதத்தை இயற்றியவரும் இவரே ஆவார்.  தாகூர் தனது 8 வது வயதிலிருந்தே  கவிதை எழுதத் தொடங்கினார். தனது 15 வது வயதில் பானு  சிம்ஹா (சூரிய சிங்கம் ) என்ற தலைப்பில் முதல் கவிதை நூலை வெளியிட்டார்   சாந்தி நிகேதன் மற்றும் விஸ்வ பாரதி பல்கலைக் கழகம் .போன்றவற்றை நிறுவினார் . அவரது பிரபலமான இசைதட்டுகள் அனைத்தும் ‘ரவீந்திரசங்கீத்’ என்ற பேரில் அழைக்கப்பட்டன. இவர் இயற்றிய ரவீந்திரசங்கீத் நியதியிலுள்ள இரண்டு பாடல்களான “ஜன கண மன” மற்றும் “அமர் சோனார்”,இந்தியா மற்றும் வங்காளத்தின் தேசிய கீதங்களாக உள்ளது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
 சிறுவயது முதற்கொண்டே தாகூர் கவிதை எழுதுவதில் ஆர்வர் கொண்டிருந்தார் . ஒரு முறை ஓரு கவிதையை எழுதி தன் தந்தையாரிடம் காண்பிக்க, அது நன்றாக இல்லாவிட்டாலும் மகன் உற்சாகத்தை இறந்துவிடுவான் என்று அந்தக் கவிதைக்காகப் பாராட்டி ஒரு கைக்கடிகாரத்தையும் பரிசாக அளித்தார் .இதனால் தாகூர் மேலும் மேலும் கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டு தன் திறமையை வளர்த்துக் கொண்டார். அவர் தன்னை ஒரு பெரிய கவிஞனாக வெளிப்படுத்திக் காட்ட இது ஒரு தூண்டற் காரணியாகியது .
ஒவ்வொருவருவரும் தங்கள் தனி திறமைகளை வளர்த்துக்கொள்ள ஏதாவதொரு  தூண்டற் காரணியை இனமறித்து ஏற்படுக்கொள்ள வேண்டும் .இது அகத்  தூண்டுதலாகவோ அல்லது புறத் தூண்டுதலாகவோ இருக்கலாம் . பாராட்டுக்கள் நல்ல  தூண்டற் காரணியாகும்.

Thursday, April 4, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி?-23

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?  
திறமையை வளர்த்துக் கொள்வது என்பது படிப்பதும் , படிப்பதைப் புரிந்து கொள்வதோடு மட்டும் முடிந்து விடுவதில்லை .அதற்கும் அப்பாலிருக்கும் வழிமுறைகளில் ஏற்படுத்திக் கொள்ளும் நுட்பமான வேறுபாடுகளே சிறந்த மாணவர்களுக்குள்ளும் தர நிலையில் ஒரு வேறுபாடு  ஏற்படுவதற்கு   காரணமாக இருக்கின்றன. புரிதல் என்பது கற்றுக்கொண்டதை வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ளும் திறத்தைப் பெறுவதாகும் . ஆனால் இயல்பு மீறிய புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ள கல்வியில் உள்ள புரிதல் மட்டுமே  போதாது .  புரிதலோடு , புரிதலால் புதிய படைப்பாற்றலைப் பெறுவதற்கான  விரிதலும் 
வேண்டும் . இதை   மாற்றி யோசிக்கும்  சுய சிந்தனைகளாலும் , நுட்பமான மாறுபட்ட அணுகுமுறைகளினாலும் வளப்படுத்திக் கொள்ள முடியும் . புரிதலோடு விரித்தாலும் இணையும் போது , பிறருடைய உதவியின்றிப் புதிய வழிமுறையை க் கண்டறியும் திறமை மேம்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது .விஞ்ஞானிகள்  இப்படிப்பட்ட விரியும் சிந்தனைகளால் புதிய புதிய கண்டுபிடிப்புக்களைக் கண்டறியும் திறமையை ப் பெறுகின்றார்கள் . வெறும் பாறையிலிருந்து அழகிய சிலைகளை சிற்பிகள் வடிக்கிறார்கள் . கல்லுக்குள் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் உருவங்களை இந்தக் கலைஞர்கள் தான் முதன்முதலில் பார்க்கின்றார்கள் . அழகான நவீன அடுக்குமாடிக்  கட்டடங்களை கட்டும் திறமையை பொறிஞர்கள் பெறுகின்றார்கள் . உள்ளுக்குள் விரியும் அறிவே  மதிநுட்பம் எனலாம் . மதிநுட்பம் மிக்கவர்களால் மட்டுமே ஒரு சிக்கலை த் தீர்க்க முடியும் , ஒரு பிரச்சனையின் போக்கை  மாற்றி அமைக்கமுடியும் .விதியைக் கூட வென்று காட்டமுடியும்.
கல்வியைப் புரிதலோடு கற்றவர்கள் பலர் விதியை வெல்லும் திறமையுள்ளவர்களாக இருப்பதில்லை. இல்லாத விதிக்கு இருக்கும் மதியை அடகு வைத்துவிட்டு மனம் நொந்துகொள்வார்கள் .
வாய்ப்புக்களை த் தவறவிடுதல் என்பது விதி, அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுதல் என்பது மதியின் ஒரு நிலை . மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும்  வாய்ப்புதான் என்பதை மதியால் விதியை வென்று சாதனை படைத்தவர்கள்  மட்டுமே  சான்றாக இருக்கின்றார்கள் . விதியை மதியால் வெல்லலாம் என்பதை மனம்  நொந்துபோன  ஓர் ஏழைக்குச் சொல்லப்பட்ட  கதை புரியச் சொல்லுகின்றது.
ஓர் ஏழை தொடர்ந்து  வறுமையில் உழன்று வந்தான் . .அவனுக்கு உழைப்பின் மீது வெறுப்பு வளர்ந்தது. அதற்குக்  காரணம் அவனுடைய  பல  முயற்சிகள் தோல்வியில் முடிந்ததுதான் . எந்தக் காரியம் செய்தாலும் தோல்வியே கிடைக்கும்  என்று ஜாதகம் கூறியதை அப்படியே நம்பினான் . ஒருநாள்  ஒரு மகானைச் சந்திக்கும் வாய்ப்புக்  கிடைத்தது.  அவரிடம் போய் தான் கடந்துவந்த துயரங்களை விவரித்து எல்லாம் விதியின் திருவிளையாடல்  என்று வருத்தப்பட்டான் . அந்த மகான் விதியென்று ஏதுமில்லை , மதிக்கு முன்னால் விதி ஒரு விளையாட்டுப் பிள்ளை  என்பதை ஒரு செயல் விளக்கம் மூலமாகவே விவரித்தார்.  ஒரு கல்லை மேல்நோக்கி எறிந்து விட்டு  , இந்தக் கல்லில் விதி என்ன என்று அந்த ஏழையிடம் கேட்டார். "அந்தக் கல் கீழே விழும் " என்றான் . " நான் அந்த விதியை என் மதியால் மாற்றிக் காட்டுகின்றேன் பார்"  என்று சொல்லிவிட்டு ,அந்தக் கல்லைக் கீழே விழுவதற்கு முன்பு கையால் பிடித்துக் காட்டினார் .அதற்க்கு அந்த ஏழை " இதுவும் விதிதான் " என்றான் . மகான் மீண்டும் ஒரு கல்லை மேலே தூக்கி எறிந்து விட்டு , சட்டென மற்றொரு கல்லை வீசி , கல்லோடு கல்லை மோதச் செய்து அதை வேறொரு இடத்தில் விழுமாறு செய்தார்.  அது போல மற்றொருமுறை செய்து . இரண்டுகற்களையும்  சிதறிப்போகுமாறு செய்தார் . வேறொருமுறையில் முதலில் எறிந்த கல் ஒரு மரத்தின் மீது அடைக்கலம் ஆகுமாறு செய்து காட்டினார் . இவை எல்லாம் விதி தான் என்று அந்த ஏழை மறுத்தான் . அதற்கு மகான் " இருக்கலாம் , ஆனால் இது புதிய விதி.    அதாவது இந்த விதியை உன்னால் உன் விருப்பம்போல மாற்றி யமைத்துக் கொள்ள முடியும் . விதி என்பது முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட முடிவை அப்படியே ஏற்றுக் கொள்வது , மதி என்பது அந்தத் தீர்மானம்  எது என்று முடிவு செய்வது . ஒரு தீர்மானம் ,ஒரு முடிவு என்றால் அது விதி  வழிச் செல்வது . ஒரு தீர்மானத்திற்கு பல முடிவுகளும் . ஒரு முடிவுக்கு பல தீர்மானங்களும் இருக்கும். அவற்றைப்புரிந்து கொண்டால் அது மதி. அவர்கள்   மட்டுமே விதியைத் தன் மதியால் வெல்லும் ஆற்றலைப் பெறுகின்றார்கள்         

Wednesday, April 3, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 22

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?  
ஒரு மாணவன் தன் திறமைகளை அறியாவிட்டால்  முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்புகளை இழந்துவிடுவான் என்பதை கோழிக்குஞ்சோடு சேர்ந்து பொரி க்கப்பட்ட பருந்துக் குஞ்சின் நிலை எடுத்துக் காட்டுகின்றது . 
ஒரு கோழி 9  முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது.  ஆவலில் ஒரு சிறுவன் அந்த முட்டைகளோடு ஒரு பருந்து முட்டையையும் வைத்துவிட்டான் . கோழி 10 முட்டைகளையும் அடைகாத்து குஞ்சு பொரித்தது. பருந்துக் குஞ்சும் கோழிக் குஞ்சுகளுடன் சேர்த்து   குப்பைகளைக் கிளறி  தானியங்களை கொத்திக் கொத்தி தின்று   வளர்ந்து வந்தது. அதற்குத் தானொரு பருந்துக் குஞ்சு என்பதே தெரியவில்லை . தானும் ஒரு கோழிக் குஞ்சு என்றே நினைத்துக் கொண்டிருந்தது. பருந்துகள் கோழிக் குஞ்சுகளைக் கொத்தி எடுத்துச்செல்ல பறந்து வரும் போது தாய் கோழி  வீரமாய் விரட்டி அடிப்பதைப்  பார்த்துவிட்டு   பருந்துக் குஞ்சு தானும் அந்தப்  பருந்து போல உயரப் பறக்க ஆசைப்பட்டு கோழியிடம் போய் முறையிட்டது.  அதற்கு  "பருந்துகளால் மட்டுமே  அப்படி  உயரத்தில் பறக்க முடியும். கோழியாய்ப் பிறந்த நமக்கு பருந்து போலத் திறமையில்லை .நம்முடைய திறமை குப்பையைக் கிளறி உணவு தேடுவதுதான்"  என்று கோழி சொன்னது. பருந்துக் குஞ்சும் உயர பறக்கும்  பருந்தை ஏக்கமாகப் பார்த்து விட்டு மற்ற கோழிக் குஞ்சுகளோடு தத்தித் தந்திச் சென்றது. பருந்துக் குஞ்சு தானொரு  பருந்து என்பதை உணராமல் போனதால், அது கடைசிவரை கோழியாகவே வாழ்ந்து மறைந்தது .             
  திறமைகளை வெளிப்படுத்திக் காட்டுவதற்கான வாய்ப்புக்களை வெகு இயல்பாகப் பெறுவதற்கு உங்கள் வளர்ச்சியில் உண்மையிலேயே அக்கறை கொண்டவர்களின்   நட்பை   வளர்த்துக் கொள்ளவேண்டும். நல்லொழுக்கம் , நேர்மை , மனிதநேயம் , படைப்பாற்றல் போன்ற தனித்திறமைகளால் நல்லோர்களின் நட்பைப்  பெறமுடியும். காற்றடைக்கப்பட்ட பலூன் இதைத்தான் அறிவுறுத்திக் கூறுகின்றது .
ஒரு பலூன் மேலெழும்பிச் செல்வதற்கு  அந்த பலூனின் நிறம் காரணமாக இருப்பதில்லை . சிவப்பு நிறமாக இருந்தாலும், கருப்பு நிறமாக இருந்தாலும் . சிறியதாக இருந்தாலும் , பெரியதாக இருந்தாலும் , காற்றைக்கப்பட்டால் அவை எல்லாம் மேலெழும்பிச் செல்வதை போல , நிறம், மதம், மொழி , இனம் என்ற வேறுபாடுகளின்றி எல்லா மாணவர்களும் திறமையால் முன்னேறிச் செல்லலாம். பலூன் மேலெழும்பிச்  செல்வதற்கு அதனுள் அடைக்கப்பட்ட வளிமமே காரணம்..அது மிகுதியாக இருக்கும் போது ,மிதத்தல் விதி (Laws of floatation )காரணமாக , ஒரு மேல்நோக்கு விசையைப் ( upward bouyancy) பெற்று உயரச் செல்கின்றது  மாணவர்களின் முன்னேற்றமும்  இது போன்றதே . அவர்களின் திறமை என்பது பலூனில் அடைக்கப்பட்ட வளிமம் மற்றும் அதன் அளவைப்  போன்றது .  பலூன்   மேலெழும்ப கீழ் நோக்கிச் செயல்படும் எடையை  எதிர்த்துச் செயல்படவேண்டும் . அது போல ஒரு மாணவன் முன்னேற வேண்டுமானால் அதற்குத் தடையாக இருக்கும் பிரச்சனைகளை திறமையால் எதிர்த்து சமாளிக்க வேண்டும் . கூடுதல் திறமை பிரச்சனைகளை எளிதில் தீர்வு செய்துவிடுகிறது . வளிமம் அடைக்கப்பட்டிருப்பதால் தான் பலூன் மேலெழும்பிச்  செல்ல த் தேவையான மேல் நோக்கு விசையைப் பெறுகின்றது . அதுபோல தனித் திறமைகள் இருந்தால் முன்னேறிச் செல்லத் தேவையான நம்பிக்கை மட்டுமில்லாது பிறருடைய உதவிகளும் தானாக வந்து சேரும் . 
ஒருவருடைய திறமைகள் அவருக்கே தெரியாவிட்டால் , அந்தத் திறமைகளால் அவருக்குப் பயன் ஏதுமில்லை . அவருக்கே பயன்படாத திறமைகள் மற்றவர்களுக்காகவும் பயன்படுத்த முடியாது .யாருக்கும்  பயனில்லாத ஒருவரை  சமுதாயம் மதிப்பதில்லை.  அதனால் திறமை இருந்தும் அதை வெளிப்படுத்திக் காட்டத் தெரியாத ஒருவர் , சமுதாயத்தோடு தொடர்ந்து தொடர்பு கொள்வதில் தயக்கம் காட்ட , இறுதியில்  அவருக்கு அவரே எதிரியாகி விடுகின்றார். 

Tuesday, April 2, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 21

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? 
மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளும் காலத்தில் பிற வேலைகளில் ஈடுபட்டு ,திறமையை முழுமையூட்டுவதைத் தடை செய்யக்கூடாது . திறமை  முழுமையாக இருந்தால், அதனால் வெளிப்படும் பயன்களும் பயனுறு திறன்மிக்கதாக இருக்கும்.  இதற்கு பெரியவர்கள் வளரும் மரத்தைத்தான் எடுத்துக்காட்டாய்க் கூறுவார்கள். வளரும் ஒரு சிறிய மரம் வளர்ந்து காய்க்கும் மரத்தைப் பார்த்து தானும் அப்படிக் காய்க்கவேண்டும் என்று விரும்பி ,அதைப்போல காய்ப்பதில்லை. ஏனெனில் அப்படிக் காய்த்தால் , விளைபொருட்களைத்  தாங்கமுடியாமல் அந்தச் சிறிய மரம் ஒடிந்து விழுந்துவிடும். அதனால் அந்தச் சிறிய மரம் , அப்படிக் காய்த்து வழங்குவதற்கான தன் தகுதிப்பாட்டை முழுமையாக வளர்த்துக் கொண்ட பிறகே காய்க்கத் தொடங்குகின்றது  .அதுமட்டுமன்று , பின்னாளில் காய்த்து வழங்குவதற்காகவே ஒவ்வொரு மரமும் தன்னை வளர்த்துக் கொண்டு தகுதிப்பாட்டை மேம்படுத்திக் கொள்கின்றது. ஒரு மரத்தின் முதன்மை இலக்கு அது விதையாக இருக்கும் போதே தீர்மானிக்கப்பட்டு விடுகின்றது .ஒரு மாமரம்  மாம்பழங்களைக் கொடுக்கும் நினைப்புடன் மட்டுமே வளர்கின்றது . அது ஒருபோதும் அருகிலுள்ள பிலாமரத்தைப் பார்த்துவிட்டு  தானும்  பெருசா பிலாப்பழத்தைக்  காய்க்கவேண்டும் என்று இயற்கைக்குப் புறம்பாக விரும்பியதே இல்லை. மரங்களை போல மாணவர்களும் , இயற்கையைச் சிந்தனைகளுடன் விருப்பங்களைத்  தேர்வு செய்து , அதற்கான தகுதிப்பாட்டை முழுமையாகப்  பெறும்வரை  திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். 
 அப்படி முயன்று வளர்த்துக் கொண்ட திறமைகளை வெளிப்படுத்தி பயன்கொடுத்து பயனீட்டும் வாய்ப்புக்களைத் தேடவேண்டும். பொதுவாக வாய்ப்புக்கள் எல்லோருக்கும் தானாக  வருவதில்லை .தானாக வந்தாலும், முயன்று தேடி வந்தாலும், வாய்ப்புக்கள் வருமாறான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.நமக்கே தெரியாமல் பிறரால் நமக்கு அனுகூலமாக அமையும் வாய்ப்புக்கள் தானாக வந்தது போலத். தோன்றும்.  மற்றபடி வாய்ப்புக்களை நாம் தான் தேடிச் செல்லவேண்டும். தன் திறமைகளைச் சரியாக உணர்ந்தவனால் மட்டுமே சரியான வாய்ப்புக்களைத் தேடி வெற்றி பெறமுடியும். திறமைக்கு அப்பாற்பட்ட வாய்ப்புக்களைத் தேடினால் அதன் பயன்பாடு யாருக்கும் பயனின்றிப் போகும் . கோயில் யானை இந்தக் கருத்தைத்தான் வலியுறுத்திக் கூறுகின்றது
 யானை மிகவும் வலிமையானது . 50 பேர் சேர்ந்து தூக்கும் மரக்கட்டைகளை மிகச் சாதாரணமாகத் தூக்கிச் செல்லும் . ஆனால் கோயில் யானைக்குத் தன் வலிமை தெரியாது. ஒரு சிறிய சங்கிலியால் கட்டிப்போட்டால்  அறுத்துக் கொண்டு ஓடுவதில்லை .இதற்குக் காரணம் சுயதிறமையை உணராமையே. சிறிய யானையைக் கட்டிப்போடும் போது அது அறுத்துக் கொண்டு ஓட முயற்சிக்கும் . ஆனால் சிறிய யானையால் அது முடியாமல் போகும் .பல முறை முயற்சித்து முடியாமல் போனதால் அதையே நம்பிவிடும். அதன் பிறகு அது தன் உடல் வலிமையை வளர்த்துக் கொண்ட அளவிற்கு புத்தியை வளர்த்துக் கொள்வதில்லை . திறமையிருந்தும் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத கோயில் யானையைப் போல மாணவர்கள் வளர்ந்து விடக் கூடாது.         

Monday, April 1, 2019

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ? - 20

சிறந்த மாணவனாக வளர்வது எப்படி ?  
கற்றுக் கொள்ள வேண்டியதை கஷ்டப்பட்டுக் கற்றுக் கொள்ளும் போது , இஷ்டப்பட்டுக் கற்றுக் கொள்ளக் கூடாதனவற்றையும் கற்றுக்  கொண்டுவிடுகின்றோம். இது கஷ்டப்பட்டு கற்றுக் கொண்டதை மறக்கச் செய்து விடுகின்றது.கஷ்டப்பட்டு கற்றுக் கொண்டவை தனக்கும் சாகாத சமுதாயத்திற்கும் நற்பயன் வழங்கி குறைவில்லாத மகிழ்ச்சியைக் கொடுக்கும்  ஆனால் இஷ்டப்பட்டுக் கற்றுக் கொண்ட தேவையற்றவை கணப்பொழுது மகிழ்ச்சியைக் கொடுத்து மனதை மயக்கி , மீளாத் துயரத்தை  வாழ்க்கை முழுதும் தந்துவிடும். 
  மனத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களால் மட்டுமே இப்பிரச்சனையை எளிதில் சமாளிக்க முடியும் . ஒரு நச்சுச் செடியின் விதை முளைத்துச் செடியாக வளரும் போதே அதன் பயனை முன்னுணர்ந்து பிடுங்கி எறிவது எளிது . மரமாக வளர்ந்த பின்பு அதை அகற்றுவது அவ்வளவு எளிதல்ல, வெட்ட வெட்ட அது மீண்டும் தழைத்து வளரும் . மனம் என்ற நிலத்தில் வளரும் தேவையில்லாத எண்ணங்களின் நிலைப்பாடும் இதுதான் .மனதில் தோன்றும் விகாரங்களை இளைமைக்காலத்திலேயே அழித்துவிடவேண்டும், இல்லையென்றால் தன்னுடைய வாழ்க்கையையும் கெடுத்து சமுதாய வாழ்க்கையையும் கெடுக்கும் நிலையே உருவாகும் . 
அதைப்போல கற்பதை விரைந்து கற்றுக் கொள்ள முடியாது..விரைந்து கற்றுக்கொள்ள முடியும் என்று நாம் நம்புவதற்குக் காரணம் புரிதல் இல்லாமல் தெரிந்து கொள்வதுதான் கற்பது என்று தவறாக நாம் முடிவு செய்வதுதான் 
ஒரு இளைஞன் தற்காப்புக்  கலையைக் கற்றுக்கொள்ள விரும்பி ஒரு குருவை  நாடினான்." ஐயா , இந்தக் கலையை முழுமையாகக் கற்றுக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும் ? "  என்று கேட்டான் .அதற்கு " இரண்டு வருடங்கள் ஆகும் " என்று குரு கூற, இளைஞனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. " ஐயா, அடுத்த ஆண்டு நான் வெளிநாடு செல்ல வேண்டும் , அதற்குள் கற்றுகொள்ள ஆசைப்படுகின்றேன் . முக்கியமான வற்றை மட்டும்  கற்றுக் கொடுங்கள்" 
" அப்படிக் கற்றுக் கொண்டால் அதனால் பயனில்லை . அதற்குக் கற்றுக் கொள்ளாமலேயே  இருக்கலாம் " 
" அப்படியானால் நான் தினமும் கூடுதல் நேரம் கற்றுக் கொள்கின்றேன். வேகமாகக் கற்றுக்கொண்டால் விரைந்து முடிக்கலாமே " 
குரு மெல்லச் சிரித்துவிட்டு  " அப்படிக் கற்றுக் கொண்டால் , முடிப்பதற்கு நான்கு வருடங்கள் அல்லது அதற்கும் கூடுதல் காலம் ஆகலாம் " என்றார் 
கற்று பயன்படுத்த வேண்டியதை அவசரப்பட்டு கற்றுக் கொள்ள  முடியாது.அவசரம் புரிதலின்மைக்கு  அடிப்படை.  செய்முறையில் பிழைகள் ஏற்படுவதற்கும்  , சூழ்நிலைக்கு ஏற்ப செய்முறையில் தகுந்த மாற்றத்தை உடனடியாகச் செய்யமுடியாமல் போவதற்கும் இது காரணமாக அமைகின்றது.