Sunday, June 30, 2013

Creative thoughts

Creative thoughts
மிக விரைவாக எடுக்கப்பட்ட முடிவுகள் உறுதியாக இருப்பதில்லை .மிகத் தாமதமாக எடுக்கப்பட்ட முடிவுகளும் உதவியாக இருப்பதில்லை .

பழைய வழங்கங்களுக்கு ஆணி வேர் ஆழமாக ஊடுருவியிருக்கும்.எளிதில் பட்டுப்போய் விடுவதில்லை .

தவறான கருத்துக்களிலும் கொள்கைகளிலும் காரணம் புரியாமல் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டுவிட்டால் சுயமாகச் சிந்திக்கும் திறனை காலப்போக்கில் இழந்துவிடுவோம்.மரபு வழியிலான பழக்க வழக்கங்களைக் கூட காரணமறிந்து ஏற்றுக்கொள்வது ஒருவகையில் நல்லதுதான்.
கற்பது உட்பட எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்வதற்காகத்தான் அறிந்து கொள்கின்றோம் ,புரிந்து கொள்வதற்காக இல்லை.இதுவே நம் முன்னேற்றத்திற்கு நாமே போட்டுக்கொண்ட முதல் முட்டுக்கட்டை .

உதவி கேட்டுப் பெறுவது தவறல்ல.ஆனால் ஒருவரின் இரக்கத்தையே தன்  வாழ்வாதரமாகக் கொள்ள நினைப்பதுதான் தவறு .

சாகா வரத்தை எப்படியாவது பெற்றுவிடவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தான் மனிதர்களுள் ஏராளம் .ஆனால் அப்படியொரு வரம் கொடுக்க மனிதர்களால் படைக்கப்பட்ட எந்தக் கடவுளுக்கும் சக்தியில்லை .ஒருவர் தன் மனவலிமையால் நேர்மையாக ,ஒழுக்கத்தோடும் கட்டுப்பாடோடும் வாழ்ந்து வந்தால் வாழ்நாளை கொஞ்சம் நீட்டிக் கொள்ளலாம் என்பது மட்டுமே உண்மை .

இறப்பை விரும்புகின்றோமோ இல்லையோ எல்லோரும் பிறந்தவுடன் அந்த புனிதமான முடிவை நோக்கித்தான் வாழ்கைப் பயணத்தை தொடங்குகின்றார்கள்.எவ்வளவு முறை திசை மாறிப் பயணித்தாலும் அந்தப் புனிதத்தை நோக்கியே பாதை செல்கிறது .


கடல் நீர் ஆவியாகி ,மழை மேகமாகி ,வானத்தில் உலகத்தை வலம் வந்து ,ஓங்கிய மலையில் மோதியதால் பொத்துப் போய் சுமந்து சென்ற நீரையெல்லாம் மழையாகப் பொழிந்து .,மலைச் சரிவில் வேகமெடுத்து .ஆறாய்ப் பெருகி ,நிலத்தில் நகர்வலம் வந்து,எல்லா உயிரினங்களும் இனிதே வாழ பூமியை வளப்படுத்திவிட்டு இறுதியில் கடலில் போய்ச் சேருகின்றது ,மனித வாழ்க்கைப் பயணம்போல .இயற்கையின் இந்த நீர் சுற்று மனித வாழ்கையின் மெய்ப்பொருளைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது .

Saturday, June 29, 2013

Eluthaatha Kaditham

ஒரு சிறந்த அரசுக்கு அழகு குடிமக்களின் நலனை மேம்படுத்தும் வகையிலான சிறந்த நிர்வாகம். குடியுயரத்தானே கோன் உயரும் என்று சான்றோர்கள் பலரும் கூருயிருக்கின்றார்கள்.அரசும் மக்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளன.ஆணவத்தால் இதைஇருவருமே சரியாகப்புரிந்து கொள்ளவில்லை.மக்களின் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டாத,மக்களை ஏமாற்றிப் பிழைக்க நினைக்கின்ற அரசாங்கங்கள் நிலைபெற்று வாழ்ந்ததாக சரித்திரமில்லை.
ஆட்சி புரிவது ஒரு தொழிலல்ல. அது ஒரு சமுதாயப் பணி .முன்பெல்லாம்  உடல் மற்றும் மனரீதியில் தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுத்து,அத் தகுதி பரம்பரைக்கும் பொருந்தும் எனமக்கள் நலனைக் காக்கும் பொறுப்பை அவரிடம் கொடுத்தனர். பின்னர் எல்லோருக்கும் வாய்ப்புக் கிடைத்தால் மாறுபட்ட அணுகுமுறையாலும் ,வேறுபட்ட சிந்தனைகளாலும் சமுதாய முன்னேற்றம் மேலும் முடுக்கப்படலாம்,ஆட்சி புரிவோர் வளர்த்துக் கொண்ட சர்வாதிகாரப் போக்கிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்  என்ற எண்ணத்தில் தோன்றியது மக்களாட்சி.
ஆட்சியையும் அதிகாரத்தையும் பயன்படுத்துபவர்கள் அவற்றைத் தனதாக்கிக் கொள்ள நினைக்கின்றார்கள்.இதற்குக் காரணம் அங்கே சுயநலத்தைத் தடையின்றி நிறைவேற்றிக் கொள்வதற்கு இருக்கும் வாய்ப்புக்களைத் தேடிக் கண்டுபிடித்து ஆதாயம் அடையும் வழிகள் ஏராளமாய் இருப்பதுதான்.இந்திய மக்களில் நம்பமுடியாத அளவிற்கு அபரிதமான பொருளாதார முன்னேற்றத்தைப் பெற்றவர்கள் அரசியல்வாதிகள் தான்.புள்ளிவிவங்கள் இதை வெளிப்படுத்திக் காட்டியிருக்கின்றன.
மக்களிடம் விழிப்புணர்வு ஓரளவு தூண்டப்பட்டிருக்கின்றது என்றாலும் அவர்கள் தொடர்ந்து வாழ்வதற்கு தொடர்ந்து பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருப்பதால் இதை எதிர்த்துத் தொடர்ந்து போராடமுடிவதில்லை
வரியால் மட்டுமே ஆட்சி செய்துவிடமுடியாது .ஏனெனில் இதை ஒரு அளவிற்கு மேல் உயர்த்திக்கொள்ள முடியாது.ஒரு நல்ல அரசாங்கம் பிற வழி முறைகளால் வருவாயைப் பெருக்க முயலவேண்டும். இந்த கூடுதல் வருவாய் அரசாங்கத்தின் நடப்புச் செலவுக்காக இல்லாமல் உண்மையான  மக்கள் நலத் திட்டங்களுக்கான செலவுகளாக இருக்கவேண்டும். வெறுப்புக்களை ஏற்படுத்தும் செயல்களைச் செய்யாமல் பொறுப்போடு  மக்களின் நம்பிக்கையை மேலும் மேலும் அதிகமாகப் பெறுவதற்கான செயல்பாடுகளைச் செய்வது ஆட்சியாளர்கள் இலக்கணம் .
சட்டங்கள் எல்லோரும் பொதுவானது .எல்லோராலும் எல்லோருக்குமாக இயற்றப்பட்டது .ஆட்சியாளர்களும் மக்களுக்கான அதே சட்டங்களுக்கு உட்பட்டவர்களே. அவர்களுக்கென்று தனிச் சட்டங்கள் ஏதுமில்லை.செய்யும் தவறுகளுக்கு அரசியலை ஒரு பாதுகாப்பாகக் கொள்ளக்கூடாது .

மக்களாட்சியில் மக்களுக்கான செயல் திட்டங்களை கடைசிவரை  இரகசியமாக் வைத்திருந்து  இறுதியில் நிறைவேற்ற வேண்டிய அவசியமேயில்லை .வெளிப்படைத் தன்மை எங்கும் எதிலும் இல்லாததால் அவநம்பிக்கை வெகுவாகத் தூண்டப்பட்டு வருவது தவிர்க்கயியலாததாக இருக்கிறது .