Sunday, November 29, 2015

creative thoughts

வேற்றுமையில் ஒற்றுமை
ஒன்று பலவாவது வேற்றுமை, பல ஒன்றாவது  ஒற்றுமை..ஒன்று பலவாவதும் பல                      ஒன்றாவதும்   சமுதாயத்தில்  மட்டுமில்லாமற்   இயற்கையில் எங்கும் காணப்படும்  ஒருவித திருவிளையாடல்.தான்.  ஆனால் இரண்டிற்கும் இடையே முக்கியமான வேறுபாடு உள்ளது.

இயற்கையின் ஒற்றுமை
ஒரு காலத்தில் ஒன்று திரண்டு  உருவான ஒரு பெரிய தீக் கோளம்  வெடித்துச் சிதறியதால்தான் உதறிக் கிடக்கும் இந்த பிரபஞ்சம். கோடிகோடியாய் எங்கும் சிதறிக் கிடக்கும் விண்ணுறுப்புக்கள்  எல்லாம் ஒரே மூலத்திலிருந்து வந்தவைகளே .  பூமியின் மிகப் பெரிய பள்ளங்களில் தேங்கிக் கிடக்கும் கடல்நீர் ஆவியானதால்தான் நிலமெங்கும் துளித் துளியாய் மழை  நீர். ஒன்றுதான் காலப் போக்கில் பலவானது  என்பதைத் தான் படைத்த அனைத்து உயிரினங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இயற்கை படம் பிடித்துக் காட்டும் நிகழ்வுகளே இவை .ஒன்று பலவானால் பலதும் ஒன்றாகும்  விண்ணுறுப்புக்கள்  எல்லாம் ஆற்றலை  உமிழ்ந்து  அழியும்   போது   மிகை ஈர்ப்பினால்     சிதைந்து  வளிமமாய் எங்கும் பரவிவிடுகின்றன. அவையே பின்னர் ஒன்று கூடி ஒரு விண்ணுறுப்பாக மீண்டும் உருவாகின்றது.மழைத் துளிகளே ஒன்று சேர்ந்து வெள்ளமாய் மாறுகின்றது. ஆறுகள் ஒன்று கூடும் போது கடலாய் உருவெடுக்கின்றது கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய அணுக்கள் திரண்டதால் அழகான ஒரு பொருள் உருவானது. கோடிக்கணக்கான நீர் மூலக்கூறுகளும் கார்பன் டை ஆக்சைடு மூலக்கூறுகளும் ஒன்றிணைந்து  உருவானதுதான் பெரிய மரங்கள்.. மிகச் சிறிய உற்பத்திப் பொருளாகட்டும் அல்லது மிகப் பெரிய விண்மீனாகட்டும், இயற்கையில் எங்கும் எப்போதும் ஒரே அடிப்படையான அணுமுறைதான். ஒன்றுதான் பலவானது. ஒன்றுதான் பலதாகப் பிரிந்தது. பல ஒன்று கூடி ஒன்றானதால்தான் இப்படிப் பலதாகப் பிரிய முடிகின்றது.வேற்றுமையும் ஒற்றுமையின் ஒரு மூலமே என்பதை இயற்கை தன் படைப்புகளுக்கு உணர்த்துவது போல இது இருக்கின்றது .பல ஒன்று கூடி ஒன்றாவதும் ஒன்று பலவாவதும்  ஒரு பொதுவான நன்மைக்குதான் என்பது இயற்கையின்  ஒரு நெறிமுறையாகும். ஒற்றுமையில் ஒழிந்திருக்கும் வேற்றுமையும்  வேற்றுமையில் விலகி நிற்கும் ஒற்றுமையும்  உலகளாவிய பொது  நலனைப் பாதுகாப்பதற்காகவே. இயற்கையால் பின்பற்றப்படுகின்றது. ஆனால் மனிதர்களால் புகுத்தப்படும் வேற்றுமைகள் பொதுவாகப்   பொதுநலனுக்குப் பாதகமாக இருக்கின்றன.

பேரண்டம் உருவான தொடக்க காலத்திலிருந்தே இயற்கை  தன் அணுகுமுறையின்  அடிப்படையில் எந்த  மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. பேரண்டம் வெகு காலத்திற்குப் பிறகு என்றோவொரு நாள் அழியும் என்று கூறுகின்றார்கள். அது வரைக்கும் கூட ஏன் அதற்கும் அப்பால் கூட இயற்கையின் இந்த உறுதியான நெறிமுறையில் பிழைகள் ஏற்படுவதில்லை. எந்த மாற்றமுமின்றி எது தொடர்ந்து பின்பற்றப்படுகின்றதோ அது தான் நிலையானது. வேறுபாடின்றி எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது. இதைத்தான் இயற்கை நமக்கு அது தோன்றிய தொடக்க காலத்திலிருந்தே  தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே இருக்கின்றது.இது இயற்கையின் சீர்மையில் காணப்படும் ஒரு தனிச் சிறப்பு. இயற்கையின்  இந்த நடைமுறை இரு போக்குத் தன்மையானது. அதாவது முன்னோக்கி ஒரு விளைவையும் பின்னோக்கி அதை மீட்டுப் பெறவும் இயற்கை ஒரு வட்டச் சுற்று முறையில் செயல்படக்கூடியது. எது எந்த இழப்புமின்றி வட்டச் சுற்று முறையில் செயல்படக்கூடியதோ அதன் பயனுறு திறன் வேறு எந்த வழிமுறைகளைக் காட்டிலும் அதிகம், என்பது அறிவியலார் நெடுங்காலத்திற்குப் பிறகு  அறிந்து கொண்ட உண்மையாகும்
 ஒற்றுமையே அழகு
உருவத்தால் பெரிய யானை, திமிங்கிலம் போன்ற உயிரினங்கள் எப்படி உயிர் வாழ முயலுகின்றதோ அது போலவே கொசு, ஈ போன்ற சிறிய உயிரினங்களும் தங்கள் வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொள்ள முயலுகின்றன. உருவங்கள் பலவானாலும் முயற்சி  ஒன்றுதான். ஒன்றின் உயிர் வாழ்க்கை அதன் உருவத்தைப் பொருந்து அமைவதில்லை என்பதைப் புரிந்து  கொள்ளத் தவறியவர்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால்  சமுதாயம் பிளவுற்று வேறுபட்டுக் கொண்டே வருகின்றது. வேறுபாடுகளுக்கு சாதி மதம், மொழி மட்டுமின்றி   பலப்பல புதுக் காரணங்கள்.அதனால் சமுதாயத்தின்  இந்த அவல  நிலை பெருகிக் கொண்டே வருகின்றது.

 ஒற்றுமையோடு இருப்பதுதான் ஒரு குடும்பத்திற்கு    அழகு ,ஒற்றுமையோடு வாழ்வதுதான் ஒரு சமுதாயத்திற்கு அழகு, ஒற்றுமையோடு பணியாற்றுவதுதான் ஒரு அமைப்புக்கு அழகு .ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதுதான்   ஒரு நாட்டிற்கு அழகு  .ஒற்றுமை  முன்னேற்றத்தின் அடையாளம் என்பதால் எப்போதும்  உயர்வு  தரும்.எப்போதும் இணைந்து செயலாற்றுவது என்பது எல்லோர்க்கும் சமமான நற்பயனைத் தரும்.
வேற்றுமை பின்னேற்றத்தின் அறிகுறி, முன்னேற்றத்தை தடைப்படுத்தி விடும். இந்த உண்மையைப் பலர் தெரிந்திருக்கலாம் ஆனால் புரிந்து கொள்ளாததால் பெரும்பாலானோர் தடுமாற்றமடையவே செய்கின்றார்கள்.
கடவுளும் ஒற்றுமையும்
கடவுள் தத்துவம் ஒன்றுதான் ஆனால் மனிதனால்   படைக்கப்பட்ட  கடவுள்கள் தாம் பல. கடவுள் தத்துவம் என்பது ஒற்றுமை.கடவுள் என்பது அந்த ஒற்றுமையில்  காணப்படும் வேற்றுமை.
மனிதன் இயற்கையின் படைப்பு..கடவுள் தத்துவம் மனிதனால் உண்டாக்கப்பட்டதுதான் என்றாலும் அது இயற்கையின் உண்மையான பிரதிபலிப்பு. எல்லோரும் எல்லோருக்குமாக ஒன்று சேர்ந்து நியாயப்படுத்தப்பட்ட நெறிமுறை .அதனால் கடவுள்  தத்துவம்  இயற்கை போன்றது.. காலப்போக்கில் மனிதர்கள்  இயற்கையான கடவுள் தத்துவத்தை மறந்து விட்டு செயற்கையான கடவுள் உருவங்களை மட்டுமே நினைவில்   கொள்கின்றார்கள்.

ஒற்றுமை என்பது அகம், சாதி மதம் மொழி என்பன  புறம் . மனிதர்கள்   எல்லோருக்கும்  அகம்  ஒன்றுபோலத்தான் . அதில் மனித முயற்சிகளாலான வேற்றுமைகள் மேலோங்கும் போது ஒற்றுமை காணாமற் போய்விடுகின்றது..உண்மையில் புற வேற்றுமைகள் எல்லாம் ஒற்றுமையில் உட்புகுத்தப்பட்ட வேற்றுமைகளே. அந்த வேற்றுமைகள் அடிப்படையான ஒற்றுமையை பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இயற்கை அதில் சிறிதும் தவறு செய்வதில்லை. ஆனால் மனிதர்கள் அப்படியிருப்பதில்லை.கடவுள் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் கடவுளை மட்டும் இயந்திரம் போல நேசிப்பதால் இந்நிலை நிலைப்பட்டுப் போனது.
ஒற்றுமையே உயர்வு
எப்போதும் இணைந்து செயல்லாற்றுவது எல்லோருக்கும் மிகுந்த பயனைத் தரும். ஆனால் நம்மில், பெரும்பாலானோர் பிறருடன் இணைந்து செயலாற்ற மனப்பூர்வமாக விரும்புவதில்லை. தான் எப்போதும் பிறரை விட ஒரு படி மேலே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களே இந்தச் சமுதாயத்தில் அதிகம். அதனால் தனக்குத் தெரிந்தை பிறருக்குச் சொல்லி முன்னேற விடுவதில்லை. அதனால் கிடைக்கும் பலனில் பெரும் பங்கைத் தானே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துச் செயல்படுவதால் பிறரை ஒதுக்கி விடுகின்றார்கள் அல்லது ஏமாற்றி விடுகின்றார்கள். இப்படிப்பட்ட தவறான எண்ணங்களை மனதில் குடிகொள்ள அனுமதிப்பதால் யாரும் இணைந்து செயலாற்ற முன் வருவதில்லை
ஆனால் இயற்கையில் எங்கெங்கு நோக்கினும் இணைந்து செயலாற்றும் போக்கே சாகாத சமுதாயத்திற்கு நல்லது என்ற கருத்து  நினைவூட்டப்படுகின்றது. சாதனைகளை இயற்கை எப்போதும் திறந்த வெளியில்தான் நிகழ்த்துகின்றன .எதை மறைவாகச் செய்தாலும் மறைக்க மறைக்க எதிர்ப்பு வலுக்கும் என்ற உண்மையைச் சொல்லாமல் சொல்வது இயற்கையின் பழக்கம்...
 நாம்  முன்பு பள்ளியில்  படித்த  பாடங்கள் அனைத்தும் இதைத்தான் தொடர்ந்து வலியுறுத்திக் கூறுகின்றன
.பாடங்களில் ஒற்றுமை
கணிதம்
கணிதப் பாடத்தில் ஓர் எண்ணோடு மற்றோர் எண்ணைக் கூட்ட அதன் மதிப்பு எப்போதும் கூட்டப்படும் எண்களைவிடக் கூடுதலாகவே இருக்கும் . இது நமக்கு ஒரு கருத்தை வலியுறுத்திக் கூறுவதாக இருக்கின்றது. நாம் இணைந்து வேலை செய்யும் பொது ,பயனுறு திறன் மிக அதிகமாக இருக்கும். அது தனி ஒருவனால் பெறப்படும் பயனுதிறனை விட, அவருடைய செயல்திறன் எவ்வளவு அதிகமாக இருந்த போதிலும். ,எப்போதும் அதிகமாகவே இருக்கும்.  எல்லோருடைய அறிவு நுட்பமும்  ஒன்றுபட்டுச் செயல்படும்போது தெரியாமல் செயல் தடைப்பட்டுப்போவதற்கு காரணமில்லாமற் போகும்.,அதனால் பிரச்சினைகளின்றி  கடின முயற்சிகளைக் கூட எளிதாக செய்து முடிக்க முடியும். ஒருவர் ஒரு வேலையைச் செய்ய ஐந்து நாட்கள் ஆனது. அதே வேலையை ஐவர் சேர்ந்து செய்தால் எவ்வளவு நாட்கள் ஆகும் என்று ஒரு கணக்கைப் போட்டு தேர்வில் மதிப்பெண் வாங்கினோம். ஆனால் அதே கணக்கை சமுதாய வாழ்க்கையில் போட்டுப்பார்த்து பயன் பெறத் தவறிவிட்டோம்..வெறும் வாய்ப் பேச்சினால் ஒற்றுமை வந்துவிடுவதில்லை .அது உண்மையில் மனதின் மௌன மொழிகளில் அடங்கி இருக்கின்றது
.வேதியியல்
வேதியியலில் எல்லாப் பொருட்களும் மூலக்கூறுகளால் ஆனவை. எல்லா மூலக்கூறுகளும் அணுக்களால் ஆனவை. எல்லா அணுக்களும் ஒரு சில அடிப்படைத் துகள்களால் ஆனவை.  இவையாவும் ஒரு சில குறிப்பிட்ட தனிச் சிறப்புப் பண்புகளைப் பெற்றுள்ளன. இதற்குக் காரணம் அதில் ஒன்று சேர்ந்துள்ள உட் துகள்களே ஆகும்.அதில் ஒரு துகள் இல்லாமற் போகுமானாலும் தன் தனிச் சிறப்புப் பண்புகளை இழந்து அதன் பண்புகளில் முரண்பாடுகள் தோன்றும் .முரண்பாடுகளால் ஆன வளர்ச்சியைத் தவிர்ப்பதற்காக  ஓர் எலக்ட்ரான் எதிர் மின்னேற்றம்   கொண்டிருந்தாலும்   நேர் மின்னேற்றம்  கொண்ட புரோட்டானை காதலிக்கின்றது.நுண் பொருள் உலகில் காணப்படும் இக் காதலே பேரியல் பொருள் உலகமாக ப் பிறந்திருக்கின்றது. இயற்கையின் அந்தரங்கம் நமக்கு உணர்த்தும் மகத்தான மெய்ப் பொருளே இந்த ஒற்றுமைதான் .
 உயிரியல்
உயிரியலில் உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் உயிர் வாழ்கையை நிலைப்படுத்த ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. ஒரு சிறிய உறுப்பு சிறிது நேரம் ஒத்துழைக்காமல் வேலை நிறுத்தம் செய்யுமானால் உடல் முழுதும் நலம் கெட்டுப் போவதுடன் மரணம் கூட நிகழலாம்
மனிதர்களைப் போல இந்த உடலுறுப்புக்கள் ஒருபோதும் வேலை நிறுத்தம் செய்து தன் ஒற்றுமையின்மையை வெளிக்காட்டுவதேயில்லை. உடம்பில் ஒற்றுமையுடன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே வரும் உறுப்புக்களைப் பார்த்துக்கூட நாம் ஒற்றுமையின்  அவசியத்தைப்புரிந்து கொள்ளவேயில்லை.சமுதாயத்தின் பொது நலனுக்காக நாம் ஒற்றுமையுடன் செயல் படவேண்டும் என்பதைத்தான் உடம்பின் பொது நலனுக்காக ஒற்றுமையுடன் செயல்படும் உறுப்புக்கள்.ஒவ்வொரு நாளும்  வலியுறுத்திக் கூறுகின்றன.
தாவரவியல்
தாவரவியலில் ஒரு மரம் விளை பொருளைத் தருவதற்கு அது நிலத்தடியில் உள்ள வேர் மூலம் நீரை உறிஞ்சி எடுத்து, புறவெளியில் உள்ள இலைகள் மூலம் கார்பன் டை ஆக்சைடையும்  உறுஞ்சி ,சூரிய ஒளியில் உணவுப் பொருளாய் தனக்கும் பிறருக்கும் உற்பத்தி செய்கின்றது அதன் இடைவிடாப் பணியே இந்த உலகம் உயிர்ப்புடன் வாழ உறுதுணையாக இருகின்றது அதன்.அடிமரம் வீசும் காற்றால் நிலை குலைந்து சாய்ந்து போய் விடாமல் காக்கின்றது. கிளைகளையும் இலைகளையும் உயர எடுத்துச் செல்வதால் மரம் அதிக அளவு சூரிய ஆற்றலை உட்கவருகின்றது.அதனால் மரம் இன்னும் உயர உயர வளருகின்றது.ஒற்றுமையுடன் செயல்பட்டால் மனிதன் இன்னும் உயர்வாக  வாழலாம்  என்பதைத்தான் இது அறிவிக்கின்றது
 இயற்பியல்
இயற்பியலில் ஒற்றுமையை முக்கியப்படுத்திக் கூறும் கருத்துக்கள் பல உள்ளன. ஒற்றைக் குச்சி யின் முறிவு நிலை மிகக் சொற்ப   இழுவிசையுடன் நடைபெறுகின்றது. ஆனால் அதுபோன்ற பல குச்சிகள்  ஒன்று   சேர்ந்திருக்கும் நிலையில் அதிக அளவு முறிவிசை தேவைப்படுகின்றது.பலவீனமான தனிக் குச்சிகள் பல ஒன்று சேர்ந்துவிட்டால் பலமான தாக்குதல் கூட ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிட முடியாது. பலவீனத்தை ஒரு பலமாக மாற்றிக் காட்டக் கூடிய ஒரு  மந்திரத்தை இது நித்தம் உச்சரித்தாலும் அதன் உட் பொருளை நாம் இன்னும் விளங்கிக் கொள்ளவேயில்லை.
ஒற்றை அலை ஒரு குறிப்பிட்ட அளவு சிறிய ஆற்றலைத்தான் கொண்டிருக்கும்.ஆனால் பல ஒற்றை  நிற அலைகள் ஒன்று கூடும் போது அவை ஓரின அலைக்கற்றையாகி அதன் அலைவீச்சும், ஆற்றலும் பல மடங்கு அதிகரிக்கும். அதன் செயல் திறன் மிகவும் அதிகம்.  இதைதான் லேசர் என்று நம் கூறுகின்றோம். ஒரே அலைக்கட்டங்களில் உள்ள அலைகளினால் மட்டுமே இப்படிச் செய்ய முடியும். வேறுபட்ட அலைக்கட்டங்களிலுள்ள அலைகள் ஒன்றையொன்று அழித்துக் கொள்ளும் .ஒத்த சிந்தனை உடைய மனிதர்களால் மட்டுமே திடமான முன்னேற்றத்தைத் தரமுடியும், மாறுபட்ட சிந்தனைகள் ஒத்த முடிவுக்கு வராததால் முன்னேற்றம் எப்போதும் மந்தமாகவே இருக்கும். என்ற கருத்தை இது அறிவிப்பதாக இருக்கின்றது
சூழலியல்
சூழலியலில் காட்டு விலங்குகள் கூட்டம் கூட்டமாய் கூடி வாழும்போது  அவை இயல்பாகப் பாதுகாக்கப்படுகின்றன.கூட்டம் கூட்டமாய் சேர்ந்து வாழும் போது  அவை பிற விலங்கினங்களால் தாக்கப்டுவதற்கான வாய்ப்பைக்  குறைவாகப் பெறுகின்றன.. அதனால் அவை காட்டில் திறந்தவெளியில் தொடர்ந்து வாழும் நிலையைப் பெறுகின்றன.. கூட்டத்தை விட்டு அவை தனித்துப் பிரியும் போது அவை மிக எளிதாகப் பிற விலங்கினங்களுக்கு உணவாகி விடுகின்றன  பரிணாம வளர்ச்சியில் விலங்கினங்களிலிருந்து  வேறுபட்டு உயர்ந்த மனிதன் இதையேன் மறந்து போனான். இந்த ஒற்றுமையை எங்கே போய்த் தொலைத்தான்
மின்ணணுவியல்
மின்ணணுவியலில்   ஒரு டையோடு மின் சுற்றில் ஒரு சில வேலைகளைச் செய்யும். சில டையோடுகள் ஒருங்கிணைந்து மின் சுற்றில் வேலையை செய்யும் போது அதன் செயல் திறன் பட மடங்காகும். ஒருங்கிணைந்த சிலிகான் சில்லுகள் கனணியில் வியத்தகு பணிகளை விரைந்து செய்கின்றன.குழுவாக ஒன்று கூடி வேலை செய்தால் பணிப் பளு இல்லை என்பதைத்தான்  இந்த சின்னச் சின்ன  டையோடுகள் தெரிவிக்கின்றன .
 மொழி
 மொழிப்பாடங்களும்  இக்  கருத்தை  வலியுறுத்திக்  கூறத்  தவறவில்லை.
அர்த்தமுள்ள வார்த்தைகள் ஒரு சில எழுத்துக்களின் கோர்வையல் உருவாகின்றன. சில வார்த்தைகள் சேர்ந்தால் ஒரு செய்தி ஆகின்றது. வெறும் எழுத்துக்களினால் மட்டும் ஒருவர் ஒரு செய்தியை பிறருக்குச் சொல்லவோ அல்லது கேட்கவோ முடியாது. எழுத்துக்களின்
ஒற்றுமையே மொழியின் வளம்.

நாட்டின் உண்மையான பாதுகாப்பு என்பது அரணும்,தளவாடளங்களும் அவற்றைக் கையாளும் இராணுவமும் இல்லை,நாட்டு மக்களும் அவர்களின் மன நல்லிணக்கமும்தான்.ஒற்றுமையில்லாவிட்டால் எந்தப் பாதுகாப்பும்
முழுமையாகப் பாதுகாப்புத் தருவதில்லை


No comments:

Post a Comment