நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும் - அப்துல் கலாம்
பிறப்பை எவரும் முயன்று பெறுவதில்லை. அது பெற்றோர்களின் விளையாட்டால் நிகழ்ந்தது. எவரும் தங்கள் பிறப்பை வேண்டாம் என்று மறுக்க முடியாது . அது போல இறப்பையும் வேண்டாம் என்று தடுத்துக் கொள்ள முடியாது . ஒருவருடைய பிறப்பும் இறப்பும் அவருடைய கட்டுப்பாட்டில் இல்லை ..ஆனால் இரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்க்கை அப்படியில்லை . வாழ்க்கையைப் பயனுள்ளதாக்கிக் கொள்வதும் பயனில்லாமல் கழிப்பதும் அவரவர் கையில் தான் இருக்கின்றது. ஒருவருக்குக் கிடைக்கும் பேறும் புகழும் அவருடைய வாழ்க்கையால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றது .என்பதால் வாழ்க்கையைப் பயனுள்ளதாக்கிக் கொள்ள முயலவேண்டும் என்பதே வாழ்க்கையின் அடிப்படை.
வாழ்க்கை என்பது பிறருக்குப் பயன்தருவதற்கும் அதையும் தொடர்ந்து செய்வதற்கும் தன்னைத் தானே தகுதி படுத்திக் கொள்ள இறைவன் கொடுத்த வாய்ய்பு. என்பதை வெகு சிலரே புரிந்துகொண்டிருக்கின்றார்கள் .எப்படி வாழவேண்டும் என்று தெரிந்து கொள்ளும் காலம் வரும் போது பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்துவிடுகின்றனர் . இதில் வேடிக்கை என்னவென்றால் இன்னும் வாழக் காலம் கொடுத்தாலும் சமுதாய வாழக்கையைப் புரிந்து கொள்வதேயில்லை. வாழ்க்கை வாழ்நாள் முழுக்க முழுத்திருப்தி இல்லாததாக இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் எப்படி வாழவேண்டுமோ அப்படி சிந்தித்து வாழ்வதைவிட எப்படி வாழக்கூடாதோ அப்படி சிந்திக்காமலே வாழ்வதுதான். பொதுவாக இப்படிச் சிந்திக்கின்ற போது சமுதாயத்தின் நலங் கெடுக்கும் எதிரிடையான எண்ணங்களே மனதில் இடம் பிடித்து விடுகின்றன.
பிறப்பிலிருந்து இறப்பு வரை வாழ்க்கை எண்ணங்களாலும் உணர்வுகளாலும் ஆளப்படுகிறது.வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிக்கும் இவை ஒவ்வொருவருக்கும் அகக் காரணிகளாக இருப்பதால் சமுதாய நலனுக்காக இவற்றை மேம்படுத்திக் கொள்வது அவசியம். ஏனெனில் சமுதாய நலனுக்குள் தனிமனித நலம் இலைமறைவு காய்மறைவு .
நேரத்தை யாரும் நிறுத்திவைக்க முடியாது . நேரம் பின்னோக்கிச் செல்வதுமில்லை . புதிய நொடியில் புதிய நிகழ்வைப் பெறலாமே ஒழிய பழைய நிகழ்வைப் பெறமுடியாது சும்மா இருந்தாலே நேரம் கழிந்துவிடும் .வாழ்க்கையும் அப்படிப்பட்டதுதான் பிறப்பிலிருந்து இறப்புவரை அது நேரஞ் சார்ந்தது ,நேரத்தைக் கழிப்பதற்காக நாம் பிறக்கவில்லை . குறுகிய வாழ்நாளில் அரிய காரியங்களைச் செய்து முடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கவேண்டும் பலர் தனக்காக மட்டுமே வாழ்வார்கள். சமுதாயத்தை வாழவைக்கும் போது அச்சமுதாயத்தோடு சேர்ந்து தானும் நலமாக வாழமுடியும் என்பதை உணர்ந்து சிலர் சமுதாயத்திற்காக வாழ்வார்கள். இவர்கள் மட்டுமே வாழும்போது மட்டுமின்றி வாழ்ந்து மறைந்த பின்பும் மக்களால் நினைக்கப்படுகின்றார்கள். ஐந்திலும் சாவு நூறிலும் சாவு . வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி.ஆனால் சரித்திரத்தில் நீங்கா இடம் பிடிப்பவர்கள் சமுதாயத்திற்காகச் சாதனை படைத்த மக்களே ..