Sunday, May 10, 2020

ஜவஹர்லால் நேருவின் பொன்மொழிகள்


ஜவஹர்லால்  நேருவின் பொன்மொழிகள்

அறியாமை எப்போதும் மாற்றங்களைக் கண்டு பயப்படும்

மாற்றங்கள் மட்டுமே மாற்றமின்றித் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.அது கல் தோன்றா மண் தோன்றா காலத்திற்கும் முன்னால் பிரபஞ்சம் தோன்றத் தொடங்கிய  காலத்திலிருந்தே இயற்கை பின்பற்றி ஒழுகும் வழிமுறை .பழமை வாதிகள் புதிய மாற்றங்களை விரும்புவதில்லை. அதற்குக் காரணம் புதிய மாற்றங்கள் மரபுகளை அழித்துவிடுமோ என்ற பயமும் ,பழமைவாதிகளுக்குரிய முக்கியத்துவம் போய்விடுமோ என்ற இனம் புரியாத அச்சமும் தான் . வேறு சிலர் பழமையால் தனக்கு க் கிடைத்துக் கொண்டிருக்கும் அனுகூலங்கள் இல்லாது  போய்விடுமோ என்று எதிர்ப்புக் காட்டுவார்கள் . இந்த பிரபஞ்சத்தில்  எதுவும் எப்படி இருந்ததோ அப்படியே கடைசிவரை இருப்பதில்லை அணுக்கள் ஆற்றலாக மாறுகின்றன , ஆற்றல் அணுவாக மாறுகின்றது . அணுச்  சேர்க்கையில் அணுக்கள் வேறொரு அணுவாக மாறுகின்றது . மூலக்கூறுகள் தோன்றுகின்றன . அறியாமையும் சுய நலமும் மாற்றங்களைத் தடுக்கும் . மாற்றம் வளர்ச்சிக்கு உகந்ததாக இருப்பின் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு ஏற்படும் இழப்பைக் காட்டிலும் பலருக்கு கிடைக்கும் பயன் அதிகமாக இருக்கும் போது எதிர்ப்பது முட்டாள்தனமானது .அப்படிக் கிடைக்கும் பயன் பல்கிப் பெருகுவதால் காலப்போக்கில் சமுதாயத்திற்கு அளவில்லாத வளர்ச்சியைத் தரும் என்பதை உணரவேண்டும். .

அறிவு என்பது ஒளி, நம்பிக்கை ,உற்சாகம்  விளக்கம்   அறியாமை  என்பது  மனதின் இருள் , அவநம்பிக்கை சோர்வு, கேள்வி. புலப்படாமல் ஒளிந்துகொண்டிருப்பதை  புலப்படுத்திக் காட்டுவது ஒளி . இருளில் தெரிந்ததும் கண்ணுக்குத் தெரியாது போய்விடும். .ஒளியிருந்தால் செல்லவேண்டிய பாதையில் முன்னேறிச் செல்லலாம் . இருளில் திசைமாறிப் போய்விடக்கூடிய அபாயம் இருக்கும். ஒளி தரும் பாதுகாப்பு உணர்வால் தைரியம் பிறக்கும், செயல்திறன் மிகும்  , பாதுகாப்பின்மையால்  இருளில் இனம்புரியாத அச்சம் ஏற்படும், செயல்திறன் குன்றும்   .

செயலுக்கு முன்பே விளைவுகள் பற்றி எண்ணி அஞ்சுகின்ற கோழைக்கு வெற்றி என்பது வெகுதூரம்

ஒரு இலக்கியப்பேரவைக் கூட்டம் . ஒரு சொற்பொழிவாளர் கூட்டத்தினரைப் பார்த்து யாரெல்லாம் சொர்க்கத்திற்குப் போக விரும்புகின்றீர்கள்  என்று கேட்டார் , எல்லோரும்  கையைத் தூக்கி விருப்பத்தைத் தெரிவித்தனர் ."எப்போது ?" . எல்லோரும் "இன்றைக்கே" என்று மகிழ்ச்சியின்  எல்லையில் உரக்கக் கூறினார்கள். செத்தத்தால்தான் அங்கு போக முடியும் . யாரெல்லாம் சாக விரும்புகின்றீர்கள் என்று கேட்க  ஒருவர் கூட கையைத்தூக்கி விருப்பத்தைப் பதிவு செய்ய முன்வரவில்லை .
உண்மை இதுதான் . எல்லோரும் கஷ்டப்படத் தயாராக இல்லை. எதையும் செய்யாமாலேயே பலனை மட்டுமே அனுபவிக்க ஆசைப்படுகிறார்கள். மனித நீதி மாறியிருக்கலாம். ஆனால் உழைப்பின்றி ஊதியமில்லை என்ற இயற்கையின் நீதியில் மாற்றம் ஏதுமில்லை

விளை பயனில் முதலிலேயே  ஆர்வம் கொள்பவன் அது தரும் மயக்கத்தில்  செயல்முறையில் கோட்டை விட்டுவிடுவான்.  . விளைபயனில் கொள்ளும் ஆர்வம் அதை முழுதும் தனதாக்கிக் கொள்ளும் ஆசைக்கு வித்திடும் .சமுதாயத்தின் சமநிலை பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பளிக்கும்   


அமைதி சமாதானம் இல்லாவிட்டால்  எல்லாக் கனவுகளும் பொய்த்துவிடும்  எரிந்து சாம்பலாகி மறைந்துவிடும்.

அமைதியையும் சமாதானத்தையும் விரும்பும் மனமே ஆக்கப்பூர்வமான செயல்களில் மட்டும் ஈடுபடும். அது பிறர்  நலத்தை விரும்பி ஒரு முடிவை  நோக்கிய பயணமாக இருக்கும்.. அமைதியும் சமாதானமும் இல்லாவிட்டால் எந்தப் பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வருவதில்லை என்பதோடு பகைமையும் வளர்கின்றது  ஒரு நாட்டை ஆள்பவர்கள் ஆளுங் கட்சியினருடன்  மட்டுமின்றி எதிர்கட்சியினருடனும்  அண்டை நாட்டினருடனும் சமாதானமாகப் பழகவேண்டும் .அப்பொழுதுதான் நாட்டின்  வளர்ச்சியில் பிறருடைய ஒத்துழைப்புடன் செயல்பட முடியும் . அமைதியின்மை மனதின் ஆற்றலைக் குறைத்துவிடும். அமைதியைப் பெறுவதற்கே முயற்சிகள் மேற்கொள்ள  வேண்டிய  கட்டாயம்  ஏற்படுவதால்   முன்னேற்றத்தில் கொண்டுள்ள கனவுகள் காணாமற்போய்விடும்


  உண்மைகள் எப்போதும் உண்மைதான் அது ஒருவருடைய விருப்பத்திற்கு ஏற்ப மாற்றங்கொள்வதில்லை .

உண்மைக்கு வாய்மை ,நேர்மை ,பொய் பேசாமை ,போன்ற பொருண்மைகள் உண்டு  உண்மை- அழகு ஆரோக்கியம்  ,பொய்- அசிங்கம், நோய். உண்மைக்கு எப்போதும் ஒரு முகம்தான் .பொய்க்கு பல முகங்கள் . இடம் நேரத்திற்குத் தகுந்தவாறு வெவ்வேறு வேஷம் போடும் . உண்மை பொதுநலத்தைக் காக்கும் பொய் சுயநலத்தைப் பேணும். உண்மைகளுக்கு இயற்கையே விதி .பொய்களுக்கு செயற்கையின் சதி. உண்மைகள் எல்லோருக்கும் ஒரேமாதிரித்தான், மாற்றி எழுத முடியாது பொய்கள் அப்படியில்லை . மாற்றி எழுத முடியும். உண்மை பேசுகின்றவனுக்கு அதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை. எப்பொழுது பேசினாலும் மீண்டும் அதே உண்மையே வெகு இயல்பாக வெளிப்படும். ஆனால் பொய் பேசுகின்றவன் பேசிய பல பொய்களை நினைவில் கொள்ள வேண்டும் . பொய்யையே பொய்யாகச் சொல்லவேண்டிய நிலை பொய்மையை காட்டிக் கொடுத்துவிடும்.

இன்றைக்கு ஒவ்வொரு மனிதனும் புளுகு மூட்டைகளைச் சுமந்து கொண்டே செல்வதால் சமுதாய வாழ்க்கையில் சிக்கலும் குழப்பமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது .பொய்கள் பொருளில்லா மாசுக்கள் .

சின்னச்சின்ன விஷயங்கள் கூட நெருக்கடியான நேரத்தில் மிக முக்கியமான
 தாகிவிடுகின்றன

பலர் பெரிய விஷயங்களில் கொள்ளும் கவனத்தை சின்னச் சின்ன விஷயங்களில் காட்டுவதில்லை. .அதனால் பெரும்பாலானோர்  கவனக் குறைவால்  பெறும் இழப்பு பெரிய விஷயங்களைக் காட்டிலும் சின்னச் சின்ன விஷயங்களினால் அதிகம் இருக்கின்றது,
சிறு துரும்பு இருந்தால்  பல் குத்தலாம் சிறு துரும்பு இருக்கின்றதே என்று பல்லைக் குத்திக் கொண்டேயிருக்க முடியாது . பல் குத்த நினைக்கும் போது சிறு துரும்பு  கையிலிருக்க வேண்டும் .

யாரும் பெரிய பாறைகளில் மோதிக் கொள்வதில்லை , சின்னக் கற்களால் தான் தடுக்கி விழுகின்றார்கள். மரம் காயப்படுத்துவதில்லை சின்ன முள்தான் குத்துகின்றது  கொடூரமான காட்டு விலங்குகளை விட கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளே மிகவும் ஆபத்தனாவை . இயற்கை கற்பிக்கும் இந்த ப் பாடங்கள் சின்ன விஷயம் என்றாலும் அதை அர்ப்பமாகக் கருதக்கூடாது என்பதை வலியுறுத்துகின்றன      

மிரட்டி பணிய வைக்கும் எந்தச் செயலும் வெறுக்கத்தக்கதே.
.
மிரட்டிப்  பணிய வைத்தல் என்பது அதிகாரத் துஷ்பிரயோகம்..மக்களின் ஏழ்மை ,அறியாமை யைப் பயன்டுத்திக் கொண்டு அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றார்கள் . அறியாமையைப் போக்குவதில் மூலம் ஏழ்மையைப் போக்கிவிட முடியும். மக்களுக்கும் இலவச கல்வி மற்றும் ஆலோசனைகளை வழக்கும் திட்டங்களை அரசு ஏற்படுத்தவேண்டும் .    
இன்றைக்கு இந்த மிரட்டலால் எத்துணை பேர் வீடு ,விளை நிலம், பணம் ,நகை எனத் தங்கள் சொத்துக்களை இழந்திருக்கிறார்கள் ,எத்துணை பேர் செய்யாத  குற்றங்களுக்குத் தண்டனை பெற்றிருக்கின்றார்கள் , எத்துணை பேர் அவமானப்பட்டுப் போயிருக்கிறார்கள் .

தோல்வி ஏற்படுவது அடுத்த காரியத்தைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை

எதைச் செய்தாலும் தோல்வி வருகின்றது என்று வருத்தப்படுவதில் அர்த்தமில்லை .  எதையுமே செய்யாமல் சும்மா இருப்பதுதான் பெரிய தோல்வி தோல்வி யை வெற்றியின் ஒரு மாயத் தோற்றமாகத்தான் கருதவேண்டும். மாறுவேடமிட்டு வரும் வாய்ப்புக்களைச்  சட்டெனப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டோம். அந்தச் சிறிய தவறே வெற்றியைத் தோல்வியாக மாற்றிவிட்டது வெற்றியில் ஒருவருடைய முயற்சிக்கும் பங்கிருக்க வேண்டும் என்பதற்காக வாய்ப்புக்கள் எப்போதும் மாறுவேடமிட்டே காட்சித்தருகின்றன .அவற்றைச் சரியாக  இனமறிந்து கொள்வதை மட்டும் ஒருவருடைய திறமைக்கு விட்டுவிட்டது .யாரும் தோற்பதற்காகத் திட்டமிடுவதில்லை. சரியாகத் திட்டமிடுவதில்தான் தோற்கிறார்கள் . முயற்சிகளைக் கைவிடும் வரை தோல்வி என்பதே யில்லை.

தோல்விக்கு இரண்டு காரணங்கள் . யோசிக்காமல் செய்வது , யோசித்துவிட்டு செய்யாமல் இருப்பது ..யோசிக்காமல் இருப்பது எவ்வளவு தவறோ அவ்வளவு தவறு யோசித்துக் கொண்டே இருப்பதும். யோசித்துக் கொண்டே இருப்பது  காலதாமதத்தை மட்டுமின்றி   புதிய சிக்கல்களையும் வரவழைத்துவிடும். 

வெற்றிக்கு எல்லோருக்கும் தெரிந்த  குறிக்கோள் -ஆர்வம் - தன்னம்பிக்கை - விடாமுயற்சி - உழைப்பு - நேர்மை எனப்   பல ரகசியங்கள் இருக்கின்றன.அவற்றைத் தொடர்ந்து பின்பற்றுவதில் தவறிவிடுவதால் தெரிந்த உண்மைகள் கூட காலப்போக்கில்  ரகசியங்களாகிவிடுகின்றன.
வெற்றி பெறுவது என்பது முக்கியம் அதற்கு நம்மை நாமே முழுத்,தகுதியுடையவனாக்கிக்
கொள்வது அதைவிட முக்கியம் .நமக்கு எது தேவையோ அதைப்பற்றி பேசுகின்றோம் எது தேவையில்லையோ அதைப்பற்றி அதிகம் சிந்திக்கின்றோம். இரண்டிற்கும் நடக்கும் போராட்டத்தில் தேவையை மறந்துவிடுகின்றோம். இதனால் வெற்றியை இழந்து விடுகின்றோம்

கடப்பதற்குத் தடைகளும் தீர்ப்பதற்குப் பிரச்னைகளும் இல்லை என்றால் வாழ்க்கை உப்புச்சப்பற்று போய்விடும்.

நாம் போராடுவது வாழ்க்கையைக்  கடப்பதற்காக இல்லை. வாழ்க்கையே கடந்து போவிடக்கூடாது என்பதற்காகத்தான். வேலைக்கான காரணங்கள் இருக்கும்போதுதான் வாய்ப்புகள் தேடப்படுகின்றன அப்புறம்தான் வேலை செய்யவேண்டும் என்ற ஆர்வமே ஏற்படுகின்றது . ஒரு காரணமும் இல்லாமல் வேலைகள் செய்யப்படுவதில்லை. .அது போலத்தான் வாழ்க்கையும். நேரத்தைக் கழிப்பதற்காக நாம் பிறக்கவில்லை . ஏனெனில் நாம் பிறப்பதற்கு முன்பு இந்த நேரம் கடந்து சென்றது  , இறந்த பின்பும் இந்த நேரம் கடந்து செல்லும் . உன்னிடத்தில் இயற்கையின் எதிர்பார்ப்பு எதோ இருக்கவேண்டும் . அதை இனமறிந்து கொண்டு செய்யவேண்டிய செயல்களை செய்து முடிக்கப்பார்
பிரச்சனைகளே இல்லாவிட்டால் வாழ்க்கையில் செய்வதற்கு ஏதும் வேலைகள் இல்லை .
 ஒவ்வொரு நாளும் ஒரேமாதிரியான வாழ்க்கையை ஒரு பயனுமின்றி இறுதிவரை வாழவேண்டுமென்றால் அதற்கு பிறக்காமலேயே இருந்திருக்கலாம்  

உண்மையான நம்பிக்கை மட்டும் ஒருவனுக்கு இருக்குமாயின் அந்த நம்பிக்கை மலைகளைக்கூட அசைத்துவிடும்
சலுகைகள் காலப்போக்கில்  உழைத்துப் பெறவேண்டும் என்ற நம்பிக்கையை   மனதிலிருந்து அகற்றிவிடும்
சலுகைகள் காலப்போக்கில் உரிமைகளாக மாறிவிடும் அபாயமுள்ளது . இலவசமாகக் கிடைக்கும் சலுகைகளை இழக்க யாரும் விரும்புவதில்லை. .சலுகைகள் கொடுக்கப்படும் போது அதற்கு கால எல்லை தீர்மானிக்கப்பட்ட வழங்கவேண்டும்.மக்களின் ஆதரவு தேவைப்படும் போதெல்லாம் சலுகைகள் வழங்குவது , என்ற அரசியல் பழக்கத்தால் மக்களின் வாழ்க்கை சிறப்படைவதைக் காட்டிலும் சீர்கெடுகின்றது.
சலுகைகளுக்குப் பதிலாக வாழ்வாதாரத்தை த் தருவதே புத்திசாலித்தனமான அரசாங்கத்தின் செயல். .வேலையில்லாதவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதை விட வேலை கொடுப்பது சிறந்தது .ஒரு குழந்தை கல்விக்காக பள்ளிக்கு வரவேண்டும் ,இலவச உணவிற்காக வரக்கூடாது . இலவச உணவிற்காக வருகின்றார்கள் என்றால் அவர்களுடைய பெற்றோர்களுக்கு  வாழ்வாதாரம்  கொடுக்கப்படாமல் இருந்திருக்கின்றது  என்றே அர்த்தம். .உண்மையில் எல்லோருக்கும் வேலை இருக்கின்றது . விவசாயம், புனரமைப்புப் பணிகள் , அகக் கட்டமைப்பை   மேம்படுத்துதல் ,நதி நீர் இணைப்புத் திட்டங்கள் , தூய்மைத் திட்டங்கள், சூரிய ஆற்றல் தொழிநுட்பம் ,கடல் நீரை நன்னீராக்கும் திட்டங்கள் ,  ஆலோசனை மையங்கள் , வர்த்தக மையங்கள் இப்படி இன்னும் எவ்வளவோ தொட்டும் தொடாமல் இருக்கின்றன. அரசியல் வாதிகள் அதிகமான சலுகைகளையும் வருமானத்தையும் பெறுவதால் ,ஊழியர்களுக்கும் அதிகமான சலுகைகள் ,சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கு. .கவர்ச்சித் திட்டங்களை விட்டுவிட்டு உண்மையிலேயே மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்

. அழுகின்ற பிள்ளைகளுக்கு மட்டும் பால் கொடுப்பதால் நாடு முன்னேற்றமடையாது . பால் கொடுக்க ஆரம்பித்தால் அப்புறம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். பால் கொடுப்பதற்கான நிலை ஏன் வந்தது என்று கண்டறிந்து களைய வேண்டும். பால் கொடுக்க வேண்டியவர்களால் பாலை என் கொடுக்க முடியவில்லை என்று ஆராய வேண்டும்

கழிந்ததைக் கணக்கெடுத்துக் கொண்டே இருந்தால் இருப்பதையும் காணாமல் தொலைத்துவிடுவாய்.

இழந்ததைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருக்கக் கூடாது .அது மேலும் இழப்புக்களைத் தந்துவிடும் .இருப்பதைக் காப்பாற்றிக் கொள்ள எடுத்துக் கொள்ள வேண்டிய முயற்சிகளை இது நிறுத்திவைக்கும் .ஒவ்வொரு இழப்பும் ஒரு அனுபவத்தைத் தரும்.ஏன் இழந்தோம் , எப்படி இழந்தோம் என்று ஆராய்ந்து அவற்றைப்  புரிந்து கொள்ளவேண்டும்.  

No comments:

Post a Comment