இன்னும் விடியவில்லை
நான் முதலமைச்சரானால்
......
முதல் கையெழுத்தாக
மது ஒழிப்புச் சட்டம்தான்
ஆணவக் கொலைகள்
நடைபெறாது தடுப்பேன் .
விவசாயிகளின் துயர்
துடைப்பேன்
மீனவர்களின் வாழ்வாதாரத்தைக்
காப்பதுடன் மேம்படுத்துவேன்
மாநிலத்தில் மின் வெட்டே இருக்காது
விலை வாசி உயர்வைக்
கட்டுக்குள் வைத்திருப்பேன்
குடிநீர் பிரச்னையை
ஒழிப்பேன்
இப்படி முறையான
செயல் திட்டமுமின்றி , ஆக்கப்
பூர்வமான வழி முறையுமின்றி ,மனம் போன போக்கில் ,நான் அதைச் செய்வேன்,
இதைச் செய்வேன் என்று வாக்குறுதிகளை அள்ளி அள்ளி விடுவார்கள் இந்திய அரசியல்வாதிகள். இதைத்தான் இந்திய மக்கள் ஒவ்வொரு
தேர்தலுக்கு முன்பும் கேட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். ஒரு நம்பிக்கையுடன்.
.
ஒரு நாள் நான்
செவ்வாய் கிரகத்தில் குதிப்பேன். அங்கு எல்லோருக்கும் முன்பாகக் குடியேறி விவசாயம்
பண்ணுவேன். விலை பொருட்களை இந்தியாவிற்கு கொண்டு வந்து விலை வாசியை கட்டுப் படுத்துவேன்.
துருவப் பகுதிகளில்
உறைந்துள்ள பனிப் பாறைகளை உருக்கி குடி நீர்ப் பிரச்சனையை விரைந்து தீர்ப்பேன். .இது கேட்பதற்கு தான் நன்றாக இருக்கும். ஆனால் நடைமுறையில் ஒரு பயனுமில்லை.
ஒரு துறை சார்ந்த
வல்லுனர் ஆராய்ச்சியின் அடிப்படையில் இல்லாது தன் கருத்தைச் சொல்வாரேயானால் அது வெறும்
ஊகம்தான். .இதைத்போலத்தான் இன்றைக்கு இந்திய அரசியல்
வாதிகள் தங்கள் பரப்புரையில் அர்த்தமில்லாமல் வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கின்றர்ர்கள்.
நாட்டின் பொருளாதார
வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிவது விவசாயமும்
தொழில் உற்பதியும்தான் . அவற்றைத் தொடர்ந்து செய்வதுடன் மேலும் மேலும் புதுமைப்
படுத்திக் கொள்ளவும் வேண்டும்.
இதற்கு நாட்டின்
கனிம மற்றும் ஆற்றல் வளங்களை மேம்படுத்தி பயன்
படுத்திக் கொள்ள
வேண்டும் .இதை
ஒரு சேர இயக்கிச் செல்வது கல்வியும் ஆராய்ச்சியும்தான் . இவற்றை மேம்படுத்திக் கொண்டாலே
பிற யாவும் தானாகவே வளம் பெறும்.
குறைபாடில்லாத
அணுகுமுறை உறுதியாக இருக்கும் பொழுது இது 100 % பயனளிக்கக் கூடியது.
எதிர் கால வளமான
இந்தியாவிற்கு இன்றைய இளைஞர்களைத் தயார்படுத்திக் கொள்வது ஒன்றே
மிகுந்த நம்பிக்கை
அளிப்பதாக இருக்கின்றது சமுதாயத்தில் இந்த நம்பிக்கை துளிர்த்து ஆல விருட்சமாக விரிவடைய
வேண்டுமானால் ,கண்ணியம் ,கடமை, கட்டுப்பாடு (உண்மையான ) எண்ணத்தில் தூய்மை ,பேச்சில்
வாய்மை ,செயலில் நேர்மை இவற்றோடு செயல்பட வேண்டியது அவசியமாகும். நம்முடைய பொறுப்புமாகும்.
இந்தப் பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு இன்னும் கூடுதலாக இருக்கவேண்டும் .இனியும் ஒரு
அரசியல்வாதி பொறுப்பற்று செயல் படுவதும் பேசுவதும் நாட்டின் வளர்ச்சிக்கு அழகல்ல. பொது
நலம் கருதி அதை இனியும் மக்கள் அனுமதிக்கக் கூடாது.
நான் பதவியில்
இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றைக்கும் என் பொறுப்புக்களை உணர்ந்து செயல்படுவேன்.
நான் மக்களின் சேவகனே ஒழிய முதலாளி இல்லை .
என்று யாரவது ஒரு
அரசியல்வாதி தன் பரப்புரையில் முழக்கமிடுவார் என்று எதிர்பார்த்தேன். எப்போதும் போல
ஏமாற்றம் தான். இன்னும் விடியவில்லை போலும்.